மறை சாட்சி தேவசகாயம் பிள்ளை

தொகுப்பு : பெஞ்சமின்

Martyr_Devasahayam1712 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் நாள் கன்னியாக்குமரி மாவட்டத்தில் நட்டாலம் என்ற ஊரில் தேவசகாயம் பிறந்தார். உயர்சாதி வைதீக இந்து நாயர் குடும்பத்தில் பிறந்த இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் நீலகண்டபிள்ளை. இவரது தந்தை கேரளாவில் உள்ள காயங்குளம் கிராமத்தையும், தாய் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் பகுதியையும் சேர்ந்தவர்கள். இந்து சாஸ்திரங்களின்படி துறைப்படி மத நம்பிக்கைகளையும், பாரம்பரியங்களையும் உறுதியாகப் பினபற்றும்படி கற்பிக்கப்பட்டார்.

இளம்வயதில் அரசுப் பணியில் சேர்ந்த தேவநகாயம் பிள்ளை 28ஆம் வயதில் திருவாங்கூர் அரசில் பத்மநாபபுரம் அரண்மனையில் அதிகாரியாகப் பொறுப்பேற்றார். புத்மநாபபுரத்திற்கு அருகிலுள்ள உதயகிரி கோட்டையிலிருந்த மன்னரின் இராணுவ அதிகாரி பெநேடிச்டுஸ் தே டிலனாய் என்ற ஐரோப்பியர் மூலமாக இயேசுவின் அன்பை தேவசகாயம் பிள்ளை கேள்விப்பட்டார். யாருடைய கட்டாயமும் இல்லாமல் தன் சொந்த விருப்பத்தின்படி தேவநகாயம் பிள்ளை கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார். திருமுழுக்கின் போது இவர் “லாசரு” என்று அழைக்கப்பட்டார். அப்பெயர்க்கு தமிழிலும், மலையாளத்திலும் “தேவசகாயம்” என்று அர்த்தம்.

இன்றைய நெல்லை மாவட்டத்திலுள்ள வடக்கன்குளம் கிராமத்திலுள்ள ஆலயத்தில் திருமுழுக்குப் பெற்ற தேவசகாயம் பிள்ளை அக்கிராமத்தைச் சேர்ந்த ஞானப்பூ அம்மாள் என்ற பெண்ணை மணம் புரிந்தார். இவருடைய மனைவியும் குடும்பத்தில் சிலரும் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டனர். ஆனால் சிலமதவாதசக்திகளும், அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், அவருடைய இனமக்களும் தேவசகாயம் பிள்ளை மீது பொய்க்குற்றங்களைச் சாட்டி பதவியைப் பறித்ததோடு, அன்றைய மாகாண எல்லையான ஆரல்வாய் மொழிக்கு அவரை அனுப்பிவிட்டனர்.

நான்கு ஆண்டுகளுக்குப் பின்பு மதம் மாறியதற்காகக் கைது செய்யப்பட்ட இவர் கிறிஸ்துவை மறுதலிக்கும்படி பலமுறை எச்சரிக்கப்பட்டும் இவர் கிறிஸ்துவின் அன்பைவிட்டு விலகுவதில்லை என்று உறுதியுடன் இருந்தார் . இதனால் கோபம்கொண்ட ராஜா மார்த்தாண்ட வர்மா அவரை மரண தண்டனைக்காக சிறையில் அடைத்தார். அவருடைய உடம்பில் கரும் புள்ளியும், செம் புள்ளி குத்தப்பட்டது. கைகள் பின்புறமாககட்டப்பட்டு கழுத்தில் எருக்கம் பூ மாலை அணிவிக்கபட்டு எருமை மாட்டின் மீது பின்னோக்கி அமரவைத்து அவரை கேவலப்படுத்தும் படியாகவும் கிறிஸ்தவத்திற்கு மாறினால் இப்படித்தான் மற்றவருக்கும் இருக்கும் என்பதற்கு பாடமாகவும் அவரை ஊர்ஊராக அழைத்து சென்றார்கள்.

புலியூர்குறிச்சி என்ற இடத்தலி தங்கியிருந்த இவர் முழங்கால்படியிட்டு செபித்த பாறையில் இன்றும் காணப்படும் ஒரு சிறுதுவாரத்தின் மூலமாகத் தண்ணீர் பீறிட்டு வரச் செய்து கர்த்தர் அவர் தாகத்தைத் தணித்தார் என்று கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். பெருவிளை என்ற கிராமத்தில் அவர் கட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு வேப்பமரத்தின் இலைகள் சுகவீனத்திலிருந்து மக்களை விடுவித்தாகவும் நம்பப்படுகிறது. கடும் சித்திரவதைகள், சிறைவாசம், கொடுமைகள் எதுவும் தேவசகாயம் பிள்ளையின் விசுவாசத்தை அசைக்க முடியவில்லை. ஆரல்வாய்மொழி காடுகளுக்குள் கடத்தப்பட்ட இவர் ஆழ்ந்ததியானத்தில் ஈடுபட்டார். இந்த பரிசுத்தவானைக் காண அருகிலிருந்த கிராம மக்கள் வந்தனர்.

அன்றைய சமுதாயத்தின் ஒரு பிரிவினர் இவருக்கு விரோதமாகத் திட்டம் வகுத்தனர். போர்வீரர்கள் காடுகள் நிறைந்த மலைப்பகுதிக்குள் சென்று தேவசகாயம் பிள்ளையைத் துப்பாக்கியால் சுடடுக் கொல்ல முயற்சி செய்தனர். ஆனால் அந்தத் துப்பாக்கிகள் வெடிக்காததால் அவரைக் கொல்ல முடியவில்லை. ஆனால் தேவசகாயம் பிள்ளை அத்துப்பாக்கிகளை தன் கையில் எடுத்து ஆசீர்வதித்து போர்வீரகளிடம் திருப்பி கொடுத்து “ நீங்கள் விரும்பினால் என்னை சுட்டுக் கொல்லுங்கள்” என்றாராம். போர்வீரர்கள் துப்பாக்கியை எடுத்து ஐந்து முறை அவரை நோக்கி சுட்டனர். இவ்வாறாக 1752ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதியன்று போர் வீரர்களால் தேவசகாயம் பிள்ளை சுடடுக் கொல்லப்பட்டார். தான் இறப்பதற்கு முன்பாக தன்னை சந்தித்த குருவிடமிருந்து நற்கருணை பெற்றுகொண்டார். தேவசகாயம் பிள்ளையின் உடல் நாகர்கோயிலில் உள்ள கோட்டாறு புனித சவேரியார் ஆலயத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

கிறிஸ்துவின் மேல் கொண்ட விசுவாவத்திற்காக ஒரு சிறந்த கிறித்தவர் இரத்தசாட்சியாக மரித்தார் என்று சரித்திரத்தின் பக்கங்கள் கூறுகின்றன.
கன்னியாகுமரி மாவட்டம் கோட்டறு தூய சவேரியார் பேராலயத்தின் வலது பக்கம் இவரது புனிதர் பட்டத்திற்காக மன்றாடும் வகையில் பீடம் அமைக்கப்பட்டுள்ளது.
இவருக்கு புனிதர் பட்டம் கிடைக்க நாமும் இறைவனிடம் மன்றாடுவோம்.

திருத்தந்தை பிரான்சிசு, அருளாளர் தேவசகாயம் பிள்ளையைப் புனிதர் நிலைக்கு உயர்த்துவதற்கு ஒப்புதல் தெரிவித்து அதிகாரப் பூர்வமான ஆவணத்தில் 2020ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் 21ஆம் நாள் கையெழுத்திட்டார்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு புனிதர்கள்