வானதூதர்கள்

தொகுப்பு: சகோ. ரிட்ச்சி வின்சென்ட் மற்றும் சகோ. மரியசூசை

வானதூதர்கள்

angelsஇவர்கள் இன்று கத்தோலிக்கக் கிறித்தவர்களால் மிகவும் மறக்கப்பட்டவர்களாய் இருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையாது. திருவிவிலியம் இந்த வானதூதர்களை, கடவுளையும் மனிதர்களையும் இணைக்கும் பாலங்களாக, இணைப்பாளர்களாக, தூதுவர்களாக எடுத்தியம்பியுள்ளது (சான்று: 1அரசர்கள் 19:5, யோபு 33:23, தோபித்து 5:4, 6:1, 11:14, லூக் 1:28). மேலும் இவர்கள் கடவுளின் தண்டனையை நிறைவேற்றுபவர்களாகவும் காட்டப்படுகிறார்கள் (சான்று: 2 சாமு 24:16, சீராக்கின் ஞானம் 48:21, மத் 13:39-49). முன்பெல்லாம் செபங்களில், ஆலயத்தின் திருச்சுரூபங்களில், வழிபாடுகளில், மற்றும் மறைக்கல்வியில் வானதூதர்கள் முக்கியத்துவமும், சிறப்பிடம் பெற்றிருந்தனர். சம்மனசுக்கள் என்று செல்லமாக அழைக்கப்பட்ட இந்த வானத்தூதர்கள் பற்றி இன்றைய வளரும் தலைமுறைக்கு எதுவும் தெரியவில்லை என்பதை எண்ணும்போது மனம் வலிக்கிறது. வானத்தூதர்கள் நம்முடைய கத்தோலிக்கத் திரு அவையினுடைய நம்பிக்ககையின் சிறப்பம்சம். இவர்களைப் பற்றி நம்முடைய கத்தோலிக்கத் திரு அவையின் மறைக்கல்வி கூறும் போதனைகளை இக்கட்டுரையின் வாயிலாக உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.

வானதூதர்களின் இருத்தல் ஒரு நம்பிக்கை உண்மை

நான்காம் லாத்தரன் திருச்சங்கம் (கி.பி. 1215) தனது நம்பிக்கை அறிக்கையில் இறைவன் “உலகத் தொடக்கத்திலேயே ஒன்றுமில்லாமையிலிருந்து ஆவிக்குரிய மற்றும் பருப்பொருள் சார்ந்த அதாவது விண்ணுலகம் மண்ணுலகம் சார்ந்த உலகையும், மற்றும் இந்த இரண்டு நிலைகளிலும் பங்கெடுத்து ஆன்மா உடல் இவற்றால் உருவாக்கப்பட்ட மனிதர்களையும் படைத்தார்” என்று அறுதியிட்டுக் கூறுகிறது. (கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி - க.தி.ம. 327) திருவிவிலியம் வழக்கமாக “வானதூதர்கள்” என்றழைக்கும் ஆவிக்குரிய மற்றும் பருப்பொருள்சாரா உயிர்களின் இருத்தல் ஒரு நம்பிக்கை உண்மையாகும். திருவிவிலியம் சாட்சியம் திருமரபின் ஒருமித்த கருத்தைப் போலத் தெளிவாக இருக்கிறது. (க.தி.ம. 328) யார் இவர்கள்?

வானதூதர் என்ற பெயர் அவரது இயல்பிலிருந்து வரவில்லை மாறாக அவரது பணியிலிருந்து வருகிறது. அவர்களுடைய இயல்பைப்பற்றிய பெயரைத் தேடினால் அது ஆவி. அவர்களுடைய பணியைப் பற்றிய பெயரைத் தேடினால் அது வானதூதர். அவர்கள் யார் என்றால் ஆவி, அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் வானதூதர் என்று புனித அகுஸ்தீன் கூறுகின்றார். அவர்கள் தங்களது முழுமையான இருப்பால் இறைவனின் பணியாளர்களாகவும் தூதுவர்களாகவும் இருக்கின்றனர். ஏனெனில் அவர்கள் “விண்ணுலகத் தந்தையின் திருமுன் எப்பொழுதும் இருக்கின்றார்கள்”, மேலும் அவர்கள் “இறைவனின் சொற்கேட்டு நடக்கும் வலிமைமிக்கவராய் இருக்கின்றனர்.” (மத் 18:10, திரு 103:20) (க.தி.ம. 329)

முழுமையான ஆவிக்குரிய படைப்புகளான வானதூதர்களுக்கு அறிவும் விருப்பமும் உண்டு: அவர்கள் ஆள் தன்மையுடைய அழிவில்லாப் படைப்புகள், காணக்கூடிய படைப்புகளைவிட அதிக நிறைவைக் கொண்டவர்கள். அவர்களது மகிமையின் ஒளி இதற்குச் சான்று பகர்கின்றது. (க.தி.ம. 330)

இறை திட்டத்தில் வானதூதர்கள்

படைப்பின் தொடக்கத்திலும் மீட்பின் வரலாறு முழுவதிலும் வானதூதர்கள் உடனிருந்து, அருகிலும் தூரத்திலும் இந்த மீட்பை அறிவித்து இறைத்திட்டத்தை நிறைவேற்றத் துணைபுரிந்தவர்கள்: சில எடுத்துக்காட்டுகள்: அவர்கள் மண்ணுலக மோட்சத்தை மூடினார்கள். லோத்தைப் பாதுகாத்தார்கள். ஆகாரையும் அவரது குழந்தையையும் பாதுகாத்தார்கள். ஆபிரகாமின் கரத்தை நிறுத்தியவர்கள். தங்களது பணியால் சட்டத்தை அறிவித்தவர்கள். இறைமக்களை வழி நடத்தியவர்கள். பிறப்பையும் அழைப்பையும் அறிவித்தவர்கள். இறை வாக்கினர்களுக்குத் துணை புரிந்தவர்கள். இறுதியாக, கபியியேல் வானதூதர் இயேசுவின் மற்றும் அவருடைய முன்னோடியின் பிறப்புகளையும் அறிவித்தார். (க.தி.ம. 332)

தம் அனைத்து வானதூதர்களுடன் கிறிஸ்து

Angels with Jesusவானதூதர்களது உலகத்தின் மையம் கிறிஸ்து. அவர்கள் அவருடைய வானதூதர்கள்: “வானதூதர் அனைவரும் புடைசூழ மானிடமகன் மாட்சியுடன் வரும்போது ...” (மத் 25:31) அவர்கள் அவருக்கு உரியவர்கள்; ஏனெனில் அவர் வழியாக அவருக்காகவே படைக்கப்பட்டவர்கள்: “ஏனெனில் விண்ணிலுள்ளவை மண்ணிலுள்ளவை கட்புலனாகுபவை கட்புலனாகாதவை அரியணையில் அமர்வோர் தலைமை தாங்குவோர் ஆட்சியாளர் அதிகாரம் கொண்டோர் ஆகிய அனைவரும் அவரால் படைக்கப்பட்டனர். அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன.” (கொலோ 1:16) அவர்கள் இன்னும் அதிகமாக அவருக்குரியவர்கள்; ஏனெனில் தமது மீட்புத்திட்டத்தில் அவர்களைத் தமது தூதுவர்களாக்கினார்: “அவர்கள் அனைவரும் ஊழியம் புரியும் ஆவிகள் அல்லவா? மீட்பை உரிமைப் பேறாகப் பெறவிரும்புவோருக்குத் தொண்டாற்ற அனுப்பப்பட்டவர்கள் அல்லவா?” (எபி 1:14) (க.தி.ம. 331)

மனுவுருவானதிலிருந்து விண்ணேற்றம் வரை மனுவுருவான வார்த்தையானவரின் வாழ்வு வானதூதர்களின் பணிவிடையாலும் ஆராதனையாலும் சூழப்பட்டிருந்தது. இறைவன் “தம் முதற்பேறானவரை உலகிற்கு அனுப்பிய போது, கடவுளின் தூதர் அனைவரும் அவரை வழிபடுவார்களாக" என்றார். (எபி 1:6) “உன்னதங்களிலே கடவுளுக்கு மகிமை உண்டாகுக” என்ற வானதூதர்களின் புகழ்ச்சிப்பாடல் கிறிஸ்துவின் பிறப்பின்போது பாடப்பட்டு இன்றும் திருச்சபையில் தொடர்ந்து பாடப்படுகிறது. அவர்கள் இயேசுவை அவரது குழந்தைப் பருவத்தில் பாதுகாத்தார்கள், பாலைநிலத்தில் அவருக்குப் பணிபுரிந்தார்கள், தோட்டத்தில் அவர் வேதனையுற்றபோது அவரைத் தேற்றினார்கள், இஸ்ரயேல் மக்கள் தங்கள் பகைவரிடமிருந்து காப்பாற்றப்பட்டதுபோல் இவரும் காப்பாற்றப்பட்டிருக்கலாம், மேலும் கிறிஸ்துவின் மனுவுருவாதலையும் அவரது உயிர்ப்பின் "நற்செய்தியையும் அறிவித்தவர்களும்" இந்த வானதூதர்களே. கிறிஸ்து மீண்டும் வரும்போது அவரோடு உடனிருந்து அவ்வருகையை அறிவித்து அவரது நீதித்தீர்ப்பில் பணிபுரிவார்கள். (க.தி.ம. 333)

திருச்சபை வாழ்வில் மற்றும் திருவழிபாட்டில் வானதூதர்கள்

வானதூதர்களின் இனம்புரியாத வல்லமையான உதவியால் திருச்சபை தன் வாழ்வு முழுவதும் அதிக நன்மை அடைந்துள்ளது. (க.தி.ம. 334)
திருச்சபை தனது திருவழிபாட்டில், தூய மூவொரு இறைவனை, வானதூதர்களோடு சேர்ந்து ஆராதிக்கின்றது. திருச்சபை அவர்களது உதவியை வேண்டுகிறது. திருப்பலி திருவழிபாட்டின் முதல் நற்கருணை மன்றாட்டில்... “எல்லாம் வல்ல இறைவா! உமது வானதூதர்கள்... என வேண்டுகிறோம்”. மேலும் மரித்தோர் திருவழிபாட்டில்... “வானதூதர்கள் உம்மை விண்ணக வீட்டிற்கு அழைத்துச் செல்வார்களாக...” இன்னும், பைசாண்டின் திருவழிபாட்டில் வரும் “வானவர் பாடல்” சில வானதூதர்களைக் குறிப்பாக (புனித மிக்கேல், புனித கபிரியேல், புனித இரபேல் மற்றும் காவல் தூதர்கள்) நினைவு கூர்ந்து கொண்டாடுகிறது. (க.தி.ம. 335)

காவல் தூதர்கள்

Angelsபிறப்பு முதல் இறப்பு வரை மனித வாழ்வு முழுவதும் வானதூதர்களின் கவனமான கண்காணிப்பாலும் மன்றாட்டாலும் சூழப்பட்டுள்ளது. நம்பிக்கைக் கொண்டோர் ஒவ்வொருவர் அருகிலும் ஒரு வானதூதர் பாதுகாப்பவராகவும் ஆயராகவும் இருந்து அவரை வாழ்வுக்கு அழைத்துச் செல்கின்றார். கிறிஸ்துவ வாழ்வு எற்கெனவே நம்பிக்கையினால் இவ்வுலகில் வானதூதர்களின் திருக்கூட்டத்தோடும் இறைவனில் இணைக்கப்பட்ட மனிதர்களோடும் பங்கேற்கிறது. (க.தி.ம. 336)

சுருக்கமாக கூறினால்
ஆவிக்குரிய படைப்புகளாகிய வானதூதர்கள் இடைவிடாது கடவுளை மகிமைப்படுத்தி மற்றப் படைப்புகளுக்கான இறைவனின் மீட்புத் திட்டத்தில் பணிபுரிகின்றனர்: “வானதூதர்கள் நம் அனைவரின் நலனுக்காக ஒன்றுசேர்ந்து உழைக்கின்றனர்” (புனித அக்குவின் தோமா). வானதூதர்கள் தங்கள் ஆண்டவராகிய கிறிஸ்துவைச் சூழ்ந்திருக்கின்றனர். மனிதருக்கான அவரது மீட்புப் பணியை நிறைவு செய்வதில் சிறப்பாக அவருக்கு அவர்கள் பணிபுரிகின்றனர். தனது மண்ணகப் பயணத்தில் துணைநின்று, ஒவ்வொரு மனிதரையும் பாதுகாக்கும் வானதூதர்களுக்குத் திருச்சபை வணக்கம் செலுத்துகிறது.

வானதூதர்களின் வீழ்ச்சி

நம் முதல் பெற்றோர் கீழ்ப்படியாமையின் பின்னணியில், பொறாமையினால் இறைவனுக்கு எதிராக அவர்களைச் சாவில் வீழ்த்திய, ஒரு கெடுகுரல் ஒளிந்திருக்கிறது. இந்தக் கெடுகுரலைக் கொடுத்த வீழ்ச்சியுற்ற வானதூதர்களைத் திருவிவிலியமும், திருச்சபை மரபும் “சாத்தான்” அல்லது “அலகை” என்று காண்கிறது. இந்தச் சாத்தான் இறைவனால் முதலில் உண்டாக்கப்பட்ட நல்ல வானதூதர் என்று திருச்சபை கற்பிக்கிறது: “அலகை மற்றும் சாத்தான்களும் இயல்பிலேயே நல்லவர்களாக இறைவனால் உண்டாக்கப்பட்டவர்கள். ஆனால் அவர்களுடைய சொந்த செயல்களினாலேயே அவர்கள் தீயவர்கள் ஆனார்கள்.” (நான்காம் லாத்தரன் திருச்சங்கம்) (க.தி.ம. 391) திருவிவிலியம் இத்தகைய வானதூதர்களின் பாவத்தைப் பற்றிப் பேசுகிறது. முற்றிலுமாகத் திரும்பப்பெற முடியாத வகையில் இறைவனையும் அவரது ஆட்சியையும், மறுத்த, இந்த படைக்கப்பட்ட ஆவிகளின் சுதந்திரமான முடிவில் இந்த “வீழ்ச்சி” அடங்கியிருக்கிறது. “நீங்கள் கடவுளைப்போல் ஆவீர்கள்" (தொ. நூ. 3:5) தீயவன் “தொடக்கத்திலிருந்தே பாவம் செய்தான்”அவன் “பொய்யன், பொய்மையின் பிறப்பிடம்.” (1 யோவா 3:8, யோவா 8:44) முதல் பெற்றோரைச் சோதித்தவனின் வார்த்தைகளில் இத்தகைய எதிர்ப்பின் பிரதிபலிப்பை நாம் காணலாம். (க.தி.ம. 392)

அலகையின் மிகவும் மோசமான வேலைகள்

MichaelDefeatsSatanவீழ்ச்சியுற்ற வானதூதர்களின் பாவம் மன்னிக்க முடியாததாக இருப்பதற்குக் காரணம் எல்லையற்ற இறை இரக்கத்தின் குறைபாடன்று, மாறாக திரும்பப் பெறமுடியாத பண்புடைய அவர்களது சுதந்திரமான முடிவாகும். “மனிதருக்கு சாவுக்குப்பின் மனமாற்றத்திற்கு வழியில்லாதது போலவே, வானதூதர்களுக்கும் அவர்களின் வீழ்ச்சிக்குப்பின் மனமாற்றம் இல்லை.” (புனித யோவான் தாமசின்) (க.தி.ம. 393)
இயேசுவை, அவருடைய தந்தையிடமிருந்து பெற்ற பணியிலிருந்து திசைதிருப்ப முயற்சி செய்தவனை, “தொடக்க முதல் அவன் ஒரு கொலையாளி” என்று இயேசுவால் அழைக்கப்பட்டவனின் பேரழிவு தரும் தாக்கத்திற்கு திருவிவிலியம் சான்று பகர்கிறது. (யோவா 8:4) “ஆகவே அலகையின் செயல்களைத் தொலைக்கவே இறைமகன் தோன்றினார்.” (1 யோவா 3:8) பொய்யான மயக்கத்தால் மனிதனை இறைவனுக்குக் கிழ்ப்படியாமலிருக்கும் நிலைக்கு அழைத்துச் சென்றதே, அதனுடைய விளைவுகளில் மிகவும் மோசமான வேலை ஆகும். (க.தி.ம. 394)

எல்லையுற்ற சாத்தானின் சக்தி

இருப்பினும், சாத்தானின் சக்தி எல்லையற்றதன்று. அவன் ஒரு படைப்புப் பொருளே. உண்மையாகவே ஆவியாக இருப்பதால் சக்தி வாய்ந்தவன். எனினும், அவன் ஒரு படைப்புதான். இறைவனின் அரசைக் கட்டி எழுப்புவதை அவனால் தடுக்க முடியாது. இறைவன் மற்றும் கிறிஸ்துவின் அரசுமீதுள்ள வெறுப்பினால், சாத்தான் இந்த உலகில் செயல்படலாம்; அவனுடைய செயல் ஆன்மீக இயல்பிலும் மறைமுகமாக உடல் சார்ந்த இயல்பிலும் சாவுக்குரிய காயங்களை ஒவ்வொரு மனிதரிலும் சமூகத்திலும் ஏற்படுத்தலாம். எனினும் இந்தச் செயல், வல்லமையாகவும், மென்மையாகவும் மனிதர், படைப்பு அனைத்தின் வரலாற்றையும் வழிநடத்தும் இறைப்பராமரிப்பினால் அனுமதிக்கப்பட்டதே. அலகைத்தனமான செயல்களை இறைப்பராமரிப்பு அனுமதிப்பது என்பது ஒரு பெரிய மறைப்பொருள்தான். ஆனாலும் “கடவுளிடம் அன்பு கூர்பவர்களோடு அவர்களின் நன்மைக்காகவே கடவுள் அனைத்திலும் ஒத்துழைக்கிறார் என்பது நமக்குத் தெரியும்” (உரோ 8:28). (க.தி.ம. 395)
சுருக்கமாக கூறினால்
சாத்தான், அல்லது அலகை மேலும் மற்றத் தீய சக்திகள், இறைவனுக்கும் அவரது திட்டத்திற்கும் பணி செய்ய சுதந்திரத்துடன் மறுத்து வீழ்ச்சியுற்ற வானதூதர்கள் ஆவார்கள். இறைவனுக்கு எதிரான அவர்களது நிலை உறுதியானதே. அவர்கள் இறைவனுக்கு எதிரான இந்தக் கிளர்ச்சியில் மனிதனை இணைக்க முயற்சி செய்கின்றனர். “இவ்வுலகுதான் படைத்தவரின் அன்பால் ஆக்கப்பெற்றுக் காப்பாற்றப்பட்டு வருகிறது எனக் கிறிஸ்துவர்கள் நம்புகிறார்கள். இவ்வுலகு பாவத்தின் அடிமைத் தனத்திற்கு உள்ளாயிற்று என்பது உண்மையே, ஆனால் கிறிஸ்து தம்முடைய சிலுவை வழியாகவும் உயிர்த்தெழுதல் வழியாகவும் தீயோரின் வல்லமையை முறியடித்தார். இவ்வுலகம் கடவுளின் திட்டப்படி மாற்றுருப் பெற்று நிறைவை அடையும் பொருட்டுக் கிறிஸ்து அதற்கு விடுதலையளித்தார்”. (இரண்டாம் வத்திக்கான் பொதுசங்கம் - இன்றைய உலகில் திருச்சபை 2:2)

Angels-Blowing-Trumpets

முடிவுரை

வானத்தூதர்களைப் பற்றி திருவிவிலியமும், திரு அவையும் இவ்வளவு கற்பித்தும் கூட, இவர்கள் இன்று கத்தோலிக்கத் திருஅவையின் விற்காத கடைச் சரக்கு போல இருக்கும் நிலை வேதனையளிக்கிறது. இனியாகினும் இந்நிலை களையப்பட வேண்டும். வானதூதர்களிடம் செபிக்கும் பழக்கமும், வானத்தூதர்கள் மட்டிலான பக்தி முயற்சிகளும் நம்மிடையே மலர வேண்டும். இறைத்திட்டத்தை நமக்கு வெளிப்படுத்தும் இத்தகைய வானத்தூதர்களைப் பற்றி அறிவதும், அவர்களின் உடனிருப்பை உணர்வதும், அவர்களிடம் மன்றாடுவதும், அவர்களோடு நெருங்கிய உறவில் இருப்பதும் நமக்கு அவர்கள் வெளிப்படுத்தும் இறைத்திருவுளத்தை வாழ்வாக்குவதும் நம்மை கடவுளின் செல்லப்பிள்ளைகளாக மாற்றும்.

“வழிகாட்டும் வானதூதர்களின் வழி நடப்போம்!”

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு புனிதர்கள்