இறைமக்களின் பொங்கல் திருநாள்

அருள்சீலி அந்தோணி
தமிழா!
பொங்கும் மங்களம் எங்கும் தங்குக!
என்று வாங்கி எழுவோம்!
புத்துணர்வோடு புதுப்பொலிவோடும்
நிறைவாழ்வை, வசந்தத்தை
சுவைத்திடக், கண்டிட எழுவோம்.

உழவர் திருநாளாம் பொங்கல் பெருநாளில்
அகத்தூய்மை - புறத்தூய்மை. இல்லத்தூய்மை
என ஊரெல்லாம் பெருக்கெடுத்தோடும் நாள்!
உழைப்பின் - உழவின் உயர்வை உலகுக்கு
எடுத்தியம்பும் உன்னதமான நாள்!
உப்பிட்டவரை உள்ளவும் நினை
என்ற பழமொழிக்கேற்ப
நன்றி மறுமைக்கு முத்தாய்ப்பாக
நமது நாட்டில் நடைபெறும்
மலரும் விழாவே பொங்கல் திருநாள்!

தமிழனுக்கு எத்தனை விழாக்கள் வந்தாலும்
இந்த முத்தான மூன்று நாட்களே
சிறப்புச் சேர்க்கும் நாட்களாகும்!
பழுதிடா உருவம் இருந்தும்
உழுதிடா உள்ளம் உவர்நிலம் அன்றோ !
உதவுகின்ற ஆற்றலுடன் வாய்ப்பு வந்தால்
ஒப்பற்ற பேரின்பம் எய்துகின்றோம்!
தூய்மையுடன் இரு - தன்னலம் மாற்றிடு.

இதுவே மையம்.
பொங்குப் பல சமயங்களென்னும் நதிகள் கடந்து
புதுப் பொலிவோடு வைகறைத் துயிலெழுந்து
இறைவனை வணங்கவும்,
வழிபடவும் வேண்டிய நன்னாளாகும்.
ஒவ்வொரு ஆண்டும் நம்மை ஒளியின்கீற்றில்
வழிநடத்தி வரும் ஆதவனைப் போற்றிக்
கொண்டாடும் நாளாகும்!

மார்கழி திங்களின் இறுதிநாளை
போகி நாளாகப் 'பழையன கழிதலும்
புதியன புகுதலும்' என்ற முறையில்
"தைபிறந்தால் வழிபிறக்கும்"
எனச் சிறார் முதல் சீமாட்டிகள் வரை
குதுகலம் காணும் நாளே பொங்கல் திருநாள்!

பசுமை நிறைந்த நிலையில் தை மகளை வரவேற்க
தரணியே தலைநிமிர்ந்து மகிழும் நாள்!
மேகக்கூட்டம் சூடிக் கொள்ள
புது மழைப் பெய்யத் துடிக்கும் அந்தச் சூழலில்
கதிரவன் தன் செவ்விதழ்களை மெதுவாக விரிக்க
கொஞ்சும் வெளிச்சத்தில் கொஞ்சி மகிழும்
நாளே பொங்கல் திருநாள்!

பொழுது புலர்ந்தது! புத்தொளி புலர்ந்தது!
பூவும் மலர்ந்தது!
எத்தனை கோடி இன்பம் வைத்தாய்?
இறைவா!
காலைக் கதிரவனின் ஒளி மழையில்
நாம் நனையவே. புள்ளினங்கள்
இன்னிசைபாடி
பூங்காற்றுப் பூபாளம் மீட்டிட
மெல்ல விடிந்தது காலைப் பொழுதில்.

தமிழன் என்று சொல்லடா
தலைநிமிர்ந்து நில்லடா! என்ற நினைவில்
புதுப்பானையில் புத்தரிசி, வெல்லம், பால், நெய்
முதலியன இட்டுப் பொங்கி மகிழும் வேளை
பொங்கலோ பொங்கல் என்று குலவையிட்டு
பிறை நிலவுகள் முழுநிலவாய்ப் பிரதிபலிக்க
பொங்கலோ பொங்கல் என்று குரலெழுப்பி
கொஞ்சம் தானம் செய்! தருமம் செய்! என்று
இந்தபூமித் தாய் கொஞ்சி வாழ்த்தும் வேளை

"நானே உலகின் ஒளி" என்று இயம்பிய
இறைமைந்தன் தோன்றும் கதிரவனே!
என்பதை நாமும் உணர்ந்தவர்களாய்
பொங்கல் நெய்மணக்கப் பொங்கி எழும்
வேளையில் எம்குலமாந்தர்

"பொங்கலோ, பொங்கல் என்று குரலெழுப்பி
இன்முகத்தோடு கூடி இன்சுவை
பொங்கலைச் சுவைத்திடுவோம் வாரீர்"

நாளை உனதே! இந்த நாளும் உனதே
என்ற உணர்வில் ஊன்றி நாளும்
வளர்ந்திட இந்நன்னாளில் பிறர் வாழ
நாம் மனித மாண்புடன், சகோதரத்துவத்துடன்
"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு"
என்ற உணர்வில் ஒற்றுமையாய் வாழ்வோம்!
வலம் வருவோம்!

நிலையற்ற உலகில் நிலைத்திட பாசமிகு
உணர்வைப் பாலமாக்கி நல்ல நிலையில்
நின்றிடுவோம் - நிலைத்திடுவோம்!
இணைந்திடுவோம் - இகமதை வென்றிடுவோம்!

வாழ்க பொங்கல் தமிழர் திருநாள்
வளர்க தமிழர் இறைத் தொண்டு!
பொங்கலோ, பொங்கல்!!
	
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பொங்கல்