அன்புடை நெஞ்சங்களே!
அனைவருக்கும் விழாக்கால வாழ்த்துகள். பல விழாக்களை இந்நாட்களில் கொண்டாடுவதால், ஒட்டு மொத்தமாக விழாக்கால வாழ்த்துகள் என்கின்றேன்.
போகி, தைப் பொங்கல், மிலாடி நபி, திருவள்ளுவர் தினம், உழவர் திருநாள் போன்ற விழாக்களை இந்நாட்களில் கொண்டாடுகின்றோம்.
நிலம், நீர், வளி, வெளி, தீ. ஆகிய ஐம்பெரும் ஆற்றல்களுக்கும் நன்றி கூறும் நாட்களே இவ்விழா நாட்கள்.
ஆண்டவரின் அருளால் இந்த ஐம்பெரும் ஆற்றல்களும் தான் நம்மை வாழ்வித்துக் கொண்டிருக்கின்றன. இவையெல்லாம் இறைவனின் கொடை. இவை இறைவனால், விலையின்றி கொடையாக நமக்குக் கொடுக்கப்பட்டவை. இன்று அவை மனிதால் பங்கு போடப்பட்டு விற்கப்படுகின்றன.
நிலத்திற்கு கோடு போடப்பட்டு விட்டது. நீருக்கு அணை கட்டப்பட்டுவிட்டது. ஆகாயத்திற்கும் எல்லைப் போடப்பட்டுவிட்டது. எரிபொருள் விற்பனைப் பொருளாகிவிட்டது. காற்றை மட்டும் தான் மனிதன் இன்னும் கட்டுப்படுத்தாமல் இருக்கின்றான். அதற்கும் விரைவில் விலை பேசப்படலாம்.
அன்பர்களே, இயற்கையின் ஐந்து ஆற்றல்களின் விழைவால் நமக்குக் கிடைக்கும் உணவிற்கு நன்றி கூறும் விழாதான் பொங்கல் விழா என நான் பார்க்கின்றேன்.
விவிலியத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வரும் ஒரு சொல் அறுவடை.
தொடக்கநூல் 8:22 இல் இறைவன் இவ்வாறு கூறுகின்றார், "மண்ணுலகு இருக்கும் நாளளவும் விதைக்கும் காலமும் அறுவடைக் காலமும் குளிரும் வெப்பமும், கோடைக்காலமும் குளிர்க்காலமும் பகலும் இரவும் என்றும் ஓய்வதில்லை"
அறுவடை தொடர்ந்து நடப்பதால், அதற்கு விழா எடுக்க ஆண்டவர் கூறியுள்ளார்.
விடுதலைப் பயண நூல் 23:16இல் இவ்வாறு கூறுகின்றார், "வயலில் நீ விதைத்து, உன் உழைப்பின் முதற்பலன் கிட்டும்போது, "அறுவடை விழா"வும், ஆண்டுத் தொடக்கத்தில் வயலிலிருந்து உனது உழைப்பின் பயனை ஒன்று சேர்க்கையில், "சேகரிப்பு விழா"வும் எடுக்க வேண்டும்"
ஆண்டு தொடக்கத்தையும், அறுவடையையும் விழாவாகக் கொண்டாட ஆண்டவரே பழைய ஏற்பாட்டிலேயே கூறியுள்ளார்.
தை முதல் நாள் என்பது, சூரியன் தன் வான்வழிப் பயணத்தில் மகர ராசிக்கு மாறும் நாளாகும். இன்றிலிருந்து பகல் நேரம் கூடுதலாவது கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் பல பகுதிகளில் இது தானிய அறுவடையோடு ஒன்றுவதால் அறுவடை திருவிழாவாகவும் சூரியனுக்கு வரவேற்பும் நன்றியும் தெரிவிக்கும் திருவிழாவாகவும் கொண்டாடப்படுகிறது.
தமிழகத்தில் மட்டுமன்றி, இந்தியாவில், உத்திரபிரதேசம், பீகார், மேற்கு வங்கம், ஒரிசா, மணிப்பூர், மகாராட்டிரம், மத்தியப்பிரதேசம், ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, கோவா போன்ற மாநிலங்களிலும் இந்தியாவிற்கு அண்டை நாடுகளான தைவான் போன்ற நாடுகளிலும் இவ்விழா கொண்டாடப்படுகின்றது.
தை மாதத்தில் அறுவடை முடிந்து, அதன் முதற்கனியை இறைவனுக்குப் படைக்கும் நாள் தைப் பொங்கல் நாள்.
கடந்த மாதங்களில் வயலில் உழவு செய்து வேலை செய்த மாடுகளுக்கு ஓய்வு கொடுத்து நன்றி கூறும் நாள் மாட்டுப் பொங்கல் நாள்.
உழவின் மகிமையைப் போற்றும் நாள் உழவர் தினம்.
இந்த நாளிலேதான் உழவினைப் போற்றிய வள்ளுவரின் நாளும் நினைவு கூறப்படுகின்றது.
மொத்தத்தில் இந்நாட்கள் நன்றியின் நாட்கள்.
ஐந்து ஆற்றல்களாகிய நிலம், நீர், வளி, வெளி, தீ ஆகியவற்றின் கூட்டு முயற்சியாலும் மனிதன் விலங்கு இவற்றின் ஒத்துழைப்பினாலும் கிடைக்கப்பெற்ற வாழ்வின் ஆதாரமான உணவினை இறைவன் கொடுத்தமைக்கு ஐந்து ஆற்றல்களுக்கும், மனிதன் விலங்கு அனைத்திற்கும் நன்றி கூறும் நன்நாளே பொங்கல் விழா நாட்கள்.
நன்றி தெரிவித்தல் நாள் (Thanksgiving day) ஒரு வட அமெரிக்க பாரம்பாரிய விடுமுறை நாள் ஆகும். இது தைப்பொங்கல் போன்று ஒரு வகை அறுவடைத் திருநாள் ஆகும். இதன் தோற்றம் அமெரிக்க முதற்குடிகளின் பாரம்பரியத்தில் இருக்கிறது. வந்த ஐரோப்பியரும், முதற்குடிகளும் ஒன்றாக கொண்டாடும் ஒரு நாள் நன்றி தெரிவித்தல் நாள் என்பது கனடாவில் வழங்கும் தோற்ற வரலாறு.
இது கனடாவில் அக்டோபர் மாதத்தின் இரண்டாம் திங்களன்றும், ஐக்கிய அமெரிக்காவில் நவம்பர் மாதத்தின் நான்காம் வியாழனன்றும் கொண்டாடப்படுகிறது.
மலாய் மொழியில் நன்றி என்பதை தெரேமகாசெ என்பர். அதன் பொருள் என்னவென்றால், அன்புடன் பெற்றுக் கொண்டோம் என்பதாகும்.
இந்த நாட்களில் நான் இறைவனிடமிருந்து அன்புடன் பெற்றுக் கொண்ட அனைத்திற்கும் நன்றி கூற வேண்டும்.
உணவு, நீர், உறைவிடம், உறவுகள், உடல் நலம், பொருளாதார வளம் இன்னும் எத்தனையோ கொடைகளை நாம் அன்புடன் இறைவனிடமிருந்து பெற்று வந்திருக்கின்றோம்.
விவிலியத்தில் நான் வாசித்த அப்பம் பெருகச் செய்த பகுதியில் இயேசு உணவிற்காக நன்றி கூறுகின்றார். யோவான். 6:11 இல், இயேசு அப்பங்களை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி, அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார். என்று சொல்லப்பட்டுள்ளது. அதேபோல் கடைசி இரவு உணவின்போதும், அப்பத்தை எடுத்து நன்றி செலுத்தி, தன் சீடருக்கு அளித்தார் என்றும் அதேபோல் கிண்ணத்தை எடுத்து நன்றி செலுத்தி பிறகு தன் சீடர்களுக்குக் கொடுத்தார் என்றும் வாசிக்கின்றோம். உணவிற்காக நாம் இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்பதை இயேசு இதன் வழியாக நமக்குக் கற்றுக் கொடுக்கின்றார்.
வள்ளுவரையும் இந்நாட்களில் நினைவு கூறுகின்றோம். இல்லறவியலில் செய்நன்றி அறிதல் என ஓர் அதிகாரமே வைத்துள்ளார். அதற்காகவே நாம் அவரை நன்றியோடு நினைவு கூற வேண்டும்.
104. தினைத்துணை நன்றி செயினும், பனைத்துணையாக்
கொள்வர் பயன் தெரிவார். (அறத்துப்பால் இல்லறவியல். செய்நன்றி அறிதல் 104)
தென்னை மரம் கூட நன்றிகடன் பட்டிருக்கின்றது. தன் தாளால் உண்ட நீரை, தலையாலே மீண்டும் மனிதனுக்குத் திருப்பித் தருகின்றது என்கின்றார் ஔவையார்.
நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி என்று தருங்கோல் என வேண்டா - நின்று தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத் தலையாலே தான்தருத லால்.
ஒரு கட்டெறும்பு தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது.
மரத்திலிருந்து இதைப் பார்த்த புறா ஒன்று மரத்திலிருந்த இலை ஒன்றைப் பறித்து நீரில் வீசியது. எறும்பும் தத்தித் தத்தி வந்து அந்த இலையின் மேல் ஏறிக் கொண்டது. அந்த இலை காற்றில் அசைந்து மெதுவாகக் கரைப்பக்கம் ஒதுங்கக் கரையில் ஏறி தப்பியது அந்த எறும்பு.
மற்றொரு நாள்.
ஒரு வேடன் அந்த புறாவைக் குறி வைப்பதைப் பார்த்தது அந்த எறும்பு. ஆனால் புறாவோ இதை அறியாமல் வேறெங்கோ கவனமாக இருந்தது. அன்று தன்னைக் காப்பாற்றிய புறாவின் உயிரைக் காப்பாற்ற வேண்டியது தனது கடமையாக எண்ணியது எறும்பு. விரைந்து சென்று வேடனின் காலில் நறுக்கென்று கடித்தது. கடியின் வலி தாங்க முடியாமல் கத்திய வேடனின் குறி தப்பியது. சத்தத்தைக் கேட்டுத் திரும்பிய புறா தனக்கேற்படவிருந்த ஆபத்தை அறிந்து அந்த இடத்தை விட்டுப் பறந்தது.
அன்று புறா நமக்கென்ன என்று அலட்சியமாயிருக்காமல் உதவி செய்ததால்தான் புறாவின் உயிர் தப்பியது. அந்த சிறிய உருவம் கொண்ட எறும்பும் நன்றி மறக்காமல் செயல்பட்டது.
எவருக்கும் எந்த நேரத்திலும் நம்மால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டும். அது போல் நமக்குச் செய்த நன்றியையும் எந்தக் காலத்திலும் மறக்கக் கூடாது.
விவிலியத்தில் திருப்பாடலில் பல இடங்களில் ஆசிரியர் இறைவனுக்கு நன்றி கூறுகின்றார்.
திருப்பாடல் 136:5. வான் வெளியை மதிநுட்பத்தால் உருவாக்கியவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு.
திருப்பாடல் 136:6. கடல் மீது மண்ணகத்தை விரித்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு.
திருப்பாடல் 136:7. பெருஞ்சுடர்களை உருவாக்கியவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு.
திருப்பாடல் 136:8. பகலை ஆள்வதற்கெனக் கதிரவனை உருவாக்கியவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு.
திருப்பாடல் 136:7. இரவை ஆள்வதற்கென நிலாவையும் விண்மீன்களையும் உருவாக்கியவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு.
திருப்பாடல் 136:25 உடல் கொண்ட அனைத்திற்கு உணவூட்டுபர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு.
திருப்பாடல். 28:7 நான் உதவி பெற்றேன்; ஆகையால் என் உள்ளம் களிகூர்கின்றது; நான் இன்னிசை பாடி அவருக்கு நன்றி கூறுவேன்.
திருப்பாடல். 107:1 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில் அவர் நல்லவர்; என்றும் உள்ளது அவரது பேரன்பு.
திருப்பாடல். 107:8 ஆண்டவரின் பேரன்பை முன்னிட்டு, மானிடர்களுக்காக அவர் செய்த வியத்தகு செயல்களை முன்னிட்டு அவர்கள் அவருக்கு நன்றி செலுத்துவார்களாக.
திருப்பாடல்.136:23 தாழ்வுற்றிருந்த நம்மை நினைவு கூர்ந்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு.
திருப்பாடல். 136:24 நம் எதிரிகளினின்று நம்மை விடுவித்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு.
1 தெசெலோனிக்கையர் 5:18 எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள்.
உழவர் ஒருவரிடம் நிறைய குதிரைகள் இருந்தன. மக்கள் அவரிடம் வந்து அவரைப் பாராட்டுவது உண்டு. அப்போது அவர் சொல்வது. "இறைவனுக்கு நன்றி"
ஒருநாள் ஒரு குதிரை காணவில்லை. மக்கள் அவரிடம் வந்து வருத்தம் தெரிவித்தனர். அவர் சொன்னது, "இறைவனுக்கு நன்றி"
பல நாட்களுக்குப் பின் மீண்டும் ஒருநாள் காணாமல் போன குதிரை வேறு பல குதிரைகளைக் கூட்டி வந்தது. அப்போது மக்கள் அவரிடம் வந்து, அவரது அதிஷ்டத்தைப் பாராட்டினர். அப்போதும் அவர் சொன்னது, "இறைவனுக்கு நன்றி"
அந்த குதிரைகளில் ஒரு குதிரையின்மீது அவர் மகன் ஏறி சவாரி செய்தான். அப்போது அவன் கீழே விழுந்து கால் ஒடிந்து விட்டது. மக்கள் வந்து வருத்தம் தெரிவித்தனர். அப்போதும் அவர் சொன்னது, "இறைவனுக்கு நன்றி"
ஒரு நாள் அரசன் தன் படைக்கு ஆட்களைத் தேடிவந்து, வீட்டிலிருந்த எல்லா இளைஞர்களையும் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று விட்டான். இவரின் மகன் ஊனமுற்றிருந்ததால், அவனை விட்டுச் சென்றுவிட்டான். அப்போது மக்கள் வந்து இவரைப் பாராட்டினர். அப்போதும் அவர் சொன்னது, "இறைவனுக்கு நன்றி"
1 தெசெலோனிக்கையர் 5:18 "எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள்."
பொங்கல் விழா நன்றியின் விழா. அனைத்தையும் தரும் இறைவனுக்கு முதலில் நன்றி கூறுவோம். உணவினைத் தரும் உழவருக்கு நன்றி கூறுவோம். வாழ்வை வளமாக்க வழி தந்த வள்ளுவருக்கு நன்றி கூறுவோம்.
யோவான். 6:11 இல், இயேசு அப்பங்களை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி, அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார்.
அனைவருக்கும் இதயம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துகள். நன்றி நண்பர்களே!