பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகம் 2

அதிகாரங்கள்



1 2 3

அதிகாரம் 2

1 முற்காலத்தில் மக்களிடையே போலி இறைவாக்கினர் தோன்றினர். அவ்வாறே உங்களிடையேயும் போலிப் போதகர்கள் தோன்றுவார்கள். அவர்கள் அழிவை விளைவிக்கும் கொள்கைகளைப் புகுத்திவிடுவார்கள்: தங்களை விலைகொடுத்து மீட்ட ஆண்டவரையும் மறுதலிப்பார்கள்: விரைவில் அழிவைத் தம்மீது வருவித்துக்கொள்வார்கள்.

2 அவர்களுடைய காமவெறியைப் பலர் பின்பற்றுவார்கள். அவர்களால் உண்மை நெறி பழிப்புக்குள்ளாகும்.

3 பேராசை கொண்ட அவர்கள் கட்டுக் கதைகளைச் சொல்லி உங்கள் பணத்தைச் சுரண்டுவர். பழங்காலத்திலிருந்தே அவர்களுக்குத் தண்டனை தயாராய் உள்ளது. அழிவு அவர்களுக்காக விழி வைத்துக் காத்துக் கொண்டிருக்கிறது.

4 பாவம் செய்த வான தூதர்களைக் கடவுள் தண்டிக்காமல் விடவில்லை. விலங்கிட்டுக் காரிருள் நகரில் தள்ளித் தீர்ப்புக்காக அவர்களை அவர் அடைத்து வைத்திருக்கிறார்.

5 பண்டைய உலகத்தையும் அவர் தண்டிக்காமல் விடவில்லை: நீதியைப் பற்றி அறிவித்து வந்த நோவா உள்பட எட்டுப் பேரைக் காப்பாற்றினார்: இறைப்பற்றில்லாத உலகின்மீது அவர் வெள்ளப் பெருக்கை வருவித்தார்:

6 சோதோம், கொமோரா என்னும் நகரங்களையும் தண்டித்தார்: இறைப்பற்றில்லாதோரின் அழிவு எப்படி இருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அவற்றை எரித்துச் சாம்பலாக்கினார்:

7 கட்டுப்பாடற்றுக் காமவெறியில் உழன்றோரைக் கண்டு மனம் வருந்திய நேர்மையான லோத்தை விடுவித்தார்.

8 அந்த நேர்மையான மனிதர் அவர்களிடையே வாழ்ந்தபோது நாள்தோறும் அவர் கண்ட, கேட்ட ஒழுங்குமீறிய செயல்கள் அவருடைய நேர்மையான உள்ளத்தை வேதனையுறச் செய்தன.

9 இறைப்பற்று உள்ளவர்களைச் சோதனையிலிருந்து விடுவிக்கவும் நேர்மையற்றவர்களைத் தண்டனைக்குள்ளாக்கி இறுதித் தீர்ப்பு நாள்வரை வைத்திருக்கவும் ஆண்டவருக்குத் தெரியும்.

10 குறிப்பாக, கெட்ட இச்சைகள் கொண்டு ஊனியல்பின்படி நடப்பவர்களையும் அதிகாரத்தைப் புறக்கணிப்பவர்களையும் அவர் தண்டிப்பார். இவர்கள் துணிச்சலுள்ளவர்கள், அகந்தையுள்ளவர்கள்: மேன்மை பொருந்தியவர்களைப் பழித்துரைக்க அஞ்சாதவர்கள்.

11 இவர்களைவிட மிகுதியான ஆற்றலும் வல்லமையும் கொண்டுள்ள வானதூதர்கள்கூட அவர்களை ஆண்டவர் முன்னிலையில் பழித்துரைத்துக் கண்டனம் செய்வதில்லை.

12 ஆனால் இவர்கள் பிடிபடவும் கொல்லப்படவுமே தோன்றிய, இயல்புணர்ச்சியினால் உந்தப்படும் பகுத்தறிவற்ற விலங்குகளைப் போன்றவர்கள்: தாங்கள் அறியாதவற்றைப் பழிக்கிறார்கள்: அவ்விலங்குகள் அழிவுறுவதுபோலவே இவர்களும் அழிவார்கள்:

13 தாங்கள் இழைத்த தீவினைக்குக் கைம்மாறாகத் தீவினையே அடைவார்கள்: பட்டப் பகலில் களியாட்டத்தில் ஈடுபடுவதே இன்பம் எனக் கருதுகிறார்கள். உங்களோடு விருந்துண்ணும் இவர்கள் தங்கள் ஏமாற்று வழிகளில் களிப்படைகிறார்கள். உங்களை மாசுபடுத்திக் கறைப்படுத்துகிறார்கள்.

14 இவர்களது கண்கள் கற்புநெறியிழந்த பெண்களையே நாடுகின்றன: பாவத்தை விட்டு ஓய்வதேயில்லை. இவர்கள் மனவுறுதி அற்றவர்களை மயக்கித் தம்வயப்படுத்துகிறார்கள். பேராசையில் ஊறிய உள்ளம் கொண்ட இவர்கள் சாபத்துக்குள்ளானவர்கள்.

15 இவர்கள் நேரிய வழியை விட்டகன்று அலைந்து திரிந்தார்கள்: பெரியோரின் மகன் பிலயாமின் வழியைப் பின்பற்றினார்கள். அந்தப் பிலயாம் கூலிக்காகத் தீவினை செய்ய விரும்பினார்.

16 அவர் தம் ஒழுங்குமீறிய செயலுக்காகக் கடிந்து கொள்ளப்பட்டார். பேச இயலாத கழுதை மனிதமுறையில் பேசி அந்த இறைவாக்கினரின் மதிகெட்ட செயலைத் தடுத்தது.

17 இவர்கள் நீரற்ற ஊற்றுகள்: புயலால் அடித்துச் செல்லப்படும் மேகங்கள். காரிருளே இவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

18 நெறிதவறி நடப்போரிடமிருந்து இப்போதுதான் தப்பியவர்களை, இவர்கள் வரம்புமீறிப் பெருமையடித்து வீண்பேச்சுப் பேசி, ஊனியல்பின் இச்சைகளாலும், காமவெறியாலும் மயக்கி வயப்படுத்துகின்றனர்:

19 அவர்களுக்கு விடுதலை அளிப்பதாக வாக்களிக்கின்றனர்: ஆனால், தாங்களே அழிவுக்கு அடிமைகளாய் இருக்கின்றனர். ஏனெனில் ஒவ்வொருவரும் தம்மை ஆட்கொண்டிருப்பவற்றிற்கு அடிமைகளாய் இருக்கிறார்கள்.

20 நம் ஆண்டவரும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவை அறிந்து, உலகத்தின் அழிவு சக்திகளிலிருந்து தப்பினவர்கள் மீண்டும் அவற்றில் சிக்கி அவற்றால் ஆட்கொள்ளப்பட்டால், அவர்களுடைய பின்னைய நிலை முன்னையை நிலையைவிடக் கேடுள்ளதாயிருக்கும்.

21 அவர்கள் நீதிநெறியை அறிந்தபின் தங்களுக்கு அருளப்பட்ட தூய கட்டளையைக் கடைப்பிடியாமல் விட்டு விலகுவதைவிட, அதை அறியாமலே இருந்திருந்தால், நலமாயிருக்கும்.

22 ;நாய் தான் கக்கினதைத் தின்னத் திரும்பி வரும் ; என்னும் நீதிமொழி இவர்களுக்குப் பொருந்தும். மேலும், ;பன்றியைக் கழுவினாலும் அது மீண்டும் சேற்றிலே புரளும் ; என்பதும் ஒரு நீதிமொழி.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com