யாக்கோபு எழுதிய திருமுகம் - 5

அதிகாரங்கள்



1 2 3 4 5

அதிகாரம் 5

1 செல்வர்களே, சற்றுக் கேளுங்கள். உங்களுக்கு வரப்போகும் இழிநிலையை நினைத்து அலறி அழுங்கள்.

2 உங்கள் செல்வம் மக்கிப் போயிற்று. உங்கள் ஆடைகள் பூச்சிகளினால் அரிக்கப்பட்டுவிட்டன.

3 உங்கள் பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்துவிட்டன. அந்தத் துருவே உங்களுக்கு எதிர்ச் சான்றாக இருக்கும்: அது நெருப்புப்போல உங்கள் சதையை அழித்துவிடும். இந்த இறுதி நாள்களில் செல்வத்தைக் குவித்து வைத்திருக்கின்றீர்களே!

4 உங்கள் வயலில் அறுவடை செய்த வேலையாள்களுக்குரிய கூலியைப் பிடித்துக் கொண்டீர்கள்: அது கூக்குரலிடுகிறது. அறுவடை செய்தவர்களின் கூக்குரல் கூக்குரல் படைகளின் ஆண்டவருடைய செவிக்கு எட்டியுள்ளது.

5 இவ்வுலகில் ஆடம்பரமாகவும் இன்பமாகவும் வாழ்ந்தீர்கள். கொல்லப்படும் நாளுக்காக உங்கள் உள்ளங்களைக் கொழுக்க வைத்தீர்கள்.

6 நேர்மையானவரைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்துக் கொலை செய்தீர்கள். ஆனால் அவர் உங்களை எதிர்த்து நிற்கவில்லை.

7 ஆகவே, சகோதர சகோதரிகளே, ஆண்டவரின் வருகை வரை பொறுமையோடிருங்கள். பயிரிடுபவரைப் பாருங்கள். அவர் நிலத்தின் நல்ல விளைச்சலை எதிர்பார்த்து முன்மாரியும் பின்மாரியும் பொழியுமளவும் பொறுமையோடு காத்திருக்கிறார்.

8 நீங்களும் பொறுமையோடிருங்கள். உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துங்கள். ஏனெனில் ஆண்டவரின் வருகை நெருங்கி வந்து விட்டது.

9 சகோதர சகோதரிகளே, நீங்கள் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகாதவாறு, ஒருவர் மற்றவருக்கு எதிராக முறையிடாதீர்கள். இதோ நடுவர் வாயிலில் நின்றுகொண்டிருக்கிறார்.

10 அன்பர்களே, நீங்கள் துன்பத்தைத் தாங்குவதிலும் பொறுமையைக் கடைபிடிப்பதிலும் ஆண்டவரின் பெயரால் பேசிய இறைவாக்கினரை உங்களுக்கு மாதிரிகளாகக் கொள்ளுங்கள்.

11 தளரா மனமுடையோர் பேறுபெற்றோர் என்கிறோம். யோபுவின் தளரா மனத்தைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். இறுதியில் ஆண்டவர் என்ன செய்கிறார் என்பதும் உங்களுக்குத் தெரியும். ஏனெனில், ஆண்டவர் மிகுந்த பரிவுள்ளமும் இரக்கமும் கொண்டவர்.

12 எல்லாவற்றுக்கும் மேலாக, என் சகோதர சகோதரிகளே, நீங்கள் ஆணையிடவே வேண்டாம். விண்ணுலகின்மீதும் மண்ணுலகின்மீதும் வேறு எதன்மீதும் ஆணையிடாதீர்கள். நீங்கள் ஆம் என்றால் ஆம் எனவும் இல்லை என்றால் இல்லை எனவும் சொல்லுங்கள். அவ்வாறு செய்தால் நீங்கள் தண்டனைத் தீர்ப்புக்குள்ளாக மாட்டீர்கள்.

13 உங்களுள் யாரேனும் துன்புற்றால் இறைவேண்டல் செய்யட்டும்: மகிழ்ச்சியாயிருந்தால் திருப்பாடல்களை இசைக்கட்டும்.

14 உங்களுள் யாரேனும் நோயுற்றிருந்தால், திருச்சபையின் மூப்பர்களை அழைத்து வாருங்கள். அவர்கள் ஆண்டவரது பெயரால் அவர்மீது எண்ணெய் பூசி இறைவனிடம் வேண்டுவார்கள்.

15 நம்பிக்கையோடு இறைவனிடம் வேண்டும்போது நோயுற்றவர் குணமாவார். ஆண்டவர் அவரை எழுப்பி விடுவார். அவர் பாவம் செய்திருந்தால் மன்னிப்புப் பெறுவார்.

16 ஆகவே ஒருவருக்கொருவர் பாவங்களை அறிக்கை செய்து கொள்ளுங்கள். ஒருவர் மற்றவருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். அப்பொழுது குணமடைவீர்கள். நேர்மையாளருடைய வல்லமைமிக்க மன்றாட்டு பயன் விளைவிக்கும்.

17 எலியா நம்மைப் போன்ற எளிமையான மனிதர்தாம். அவர் மழை பெய்யக்கூடாது என்று உருக்கமாக இறைவனிடம் வேண்டினார்: மூன்று ஆண்டு ஆறு மாதம் மழையில்லாது போயிற்று.

18 மீண்டும் அவர் இறைவனிடம் வேண்டினார்: வானம் பொழிந்தது, நிலம் விளைந்தது.

19 என் சகோதர சகோதரிகளே, உங்களுள் ஒருவர் உண்மையை விட்டு நெறிதவறி அலையும்போது, வேறொருவர் அவரை மனந்திரும்பச் செய்தால்,

20 தவறான நெறியிலிருந்து மனந்திருப்புகிறவர் அவரை அழிவிலிருந்து மீட்பார் என்பதையும் திரளான பாவங்களைப் போக்குவார் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com