எபிரேயருக்கு எழுதிய திருமுகம் - 8

அதிகாரங்கள்



1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

அதிகாரம் 8

1 இத்தகைய தலைமைக் குரு நமக்கு வாய்த்துள்ளார் என்பதே இதுகாறும் நாம் கூறியவற்றின் தலையாய கருத்து. இவர் விண்ணகத்தில் பெருமைமிகு கடவுளுடைய அரியணையின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்.

2 அங்கே மனிதரால் அல்ல, ஆண்டவராலே அமைக்கப்பட்ட உண்மையான கூடாரமாகிய தூயகத்தில் ஊழியம் செய்கிறார்.

3 ஒவ்வொரு தலைமைக் குருவும் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்தவே ஏற்படுத்தப்பட்டிருக்கிறார். எனவே பலி செலுத்துவதற்கு இவரிடமும் ஏதேனும் ஒரு பொருள் கட்டாயம் இருக்க வேண்டும்.

4 உலகிலேயே இருந்திருப்பாரென்றால் இவர் குருவாக இருந்திருக்கமாட்டார். ஏனெனில், திருச்சட்டத்தின்படி காணிக்கைகளைச் செலுத்த ஏற்கெனவே இங்குக் குருமார்கள் இருக்கிறார்கள்.

5 இவர்கள் வழிபடும் இடம் விண்ணகக் கூடாரத்தின் சாயலும் நிழலுமே. மோசே கூடாரத்தை அமைத்தபோது, “மலையில் உனக்குக் காண்பிக்கப்பட்ட முறைப்படி நீ இவற்றையெல்லாம் செய்யுமாறு கவனித்துக்கொள்” என்று கடவுள் பணித்தது இதைச் சுட்டிக்காட்டுகிறது.

6 ஆனால், இவரோ அவர்களுடைய குருத்துவப்பணியை விட மிக மேன்மையான குருத்துவப் பணியைப் பெற்றிருக்கிறார். ஏனெனில் சீரிய வாக்குறுதிகளின் அடிப்படையில் செய்யப்பட்டு, இவரை இணைப்பாளராகக் கொண்டிருக்கும் உடன்படிக்கை முந்திய உடன்படிக்கையைவிட சிறப்புமிக்கது.

7 முதல் உடன்படிக்கை குறையற்றதாய் இருந்திருப்பின், இரண்டாம் உடன்படிக்கைக்கு இடமே இருந்திருக்காது.

8 ஆனால், கடவுள் அவர்களது குற்றத்தை எடுத்துக் கூறிக் சொன்னது இதுவே: “இதோ, நாள்கள் வருகின்றன. அப்போது இஸ்ரயேல் வீட்டாரோடும் யூதாவின் வீட்டாரோடும் புதிய உன்படிக்கை ஒன்றைச் செய்து கொள்வேன்” என்கிறார் ஆண்டவர்.

9 எகிப்து நாட்டிலிருந்து அவர்களுடைய மூதாதையரைக் கைப்பிடித்து நடத்தி வந்தபொழுது நான் அவர்களோடு செய்துகொண்ட உடன்படிக்கையைப் போன்று இது இராது. ஏனெனில், நான் அவர்ளோடு செய்துகொண்ட உடன்படிக்கையைப் போன்று இது இராது. ஏனெனில், நான் அவர்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையை அவர்கள் மீறிவிட்டார்கள்: நானும் அவர்கள் மீது அக்கறை கொள்ளவில்லை" என்கிறார் ஆண்டவர். "

10 அந்நாள்களுக்குப் பின் இஸ்ரயேல் வீட்டாரோடு நான் செய்யவிருக்கும் உடன்படிக்கை இதுவே: என் சட்டத்தை உள்ளத்தில் பதிப்பேன்: அதை அவர்களது இதயத்தில் எழுதி வைப்பேன். நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன்: அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள்" என்கிறார் ஆண்டவர். "

11 இனிமேல் எவரும் “ஆண்டவரை அறிந்து கொள்ளும்” எனத் தம் அடுத்தவருக்கோ, சகோதரர் சகோதரிகளுக்கோ கற்றுத் தர மாட்டார். ஏனெனில், அவர்களுள் பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரும் என்னை அறிந்துகொள்வர்.

12 அவர்களது தீச்செயலை நான் இரக்கத்தோடு மன்னித்துவிடுவேன். அவர்களுடைய பாவங்களை இனிமேல் நினைவுகூர மாட்டேன். ”

13 “புதியதோர் உடன்படிக்கை” என்பதால், முன்னையதை அவர் பழையதாக்கிவிட்டார். பழமையானதும் நாள்பட்டதும் விரையில் மறையவேண்டியதே.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture hebrews 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com