தீத்துக்கு எழுதிய திருமுகம் 1

அதிகாரங்கள்1 2 3

அதிகாரம் 1

1 அனைவருக்கும் பொதுவான விசுவாச அடிப்படையில் என் உண்மைப் பிள்ளை தீத்துக்கு, கடவுளின் பணியாளனும் இயேசு கிறிஸ்துவின் திருத்தூதனுமாகிய பவுல் எழுதுவது:

2 தந்தையாம் கடவுளிடமிருந்தும் நம் மீட்பராம் கிறிஸ்து இயேசுவிடமிருந்தும் நம்பிக்கை கொள்ளவும் நிலைவாழ்வை எதிர்நோக்கி இறைப்பற்றுக்கு இசைந்த உண்மை அறிவைப் பெறவும் நான் திருத்தூதனாய் இருக்கிறேன்.

3 இந்நிலை வாழ்வை, பொய் கூறாத கடவுள், காலங்கள் தொடங்கு முன்னே வாக்களித்தார்.

4 ஏற்ற காலத்தில் நற்செய்தியைப் பறைசாற்றியதன் வாயிலாகத் தம் செய்தியை வெளிப்படுத்தினார். இந்நற்செய்தியைப் பறைசாற்றும் பணி நம் மீட்பராம் கடவுள் இட்ட கட்டளைப்படி என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

5 நான் உனக்குப் பணித்தபடியே கிரேத்துத் தீவில் நீ மேலும் செய்ய வேண்டியவற்றை ஒழுங்குசெய்து, நகர்தோறும் மூப்பர்களை ஏற்படுத்த உன்னை அங்கே விட்டு வந்தேன்.

6 இம்மூப்பர்கள் குறைச்சொல்லுக்கு ஆளாகாதவராயும் ஒரு மனைவியைக் கொண்டவராயும் நம்பிக்கை கொண்ட பிள்ளைகளை உடையவராயும் இருக்க வேண்டும். தாறுமாறாக வாழ்பவர்கள் எனக் குற்றம் சுமத்தப்பட்டவர்களாகவோ கட்டுக்கடங்காதவர்களாகவோ இருக்கக் கூடாது.

7 ஏனெனில் சபைக் கண்காணிப்பாளர்கள் கடவுள் பணியில் பொறுப்பாளர்களாய் இருப்பதால், அவர்கள் குறைச்சொல்லுக்கு ஆளாகாதிருக்க வேண்டும். அகந்தை, முன் கோபம், குடிவெறி, வன்முறை, இழிவான ஊதியத்தின்மேல் ஆசை ஆகியவை இவர்களிடம் இருக்கக்கூடாது.

8 மாறாக, அவர்கள் விருந்தோம்பல், நன்மையில் நாட்டம், கட்டுப்பாடு, நேர்மை, அர்ப்பணம், தன்னடக்கம் ஆகியவற்றைக் கொண்டிருக்கவேண்டும்.

9 அவர்கள் தங்களுக்குக் கற்பிக்கப்பட்ட உண்மைச் செய்தியைப் பற்றிக் கொண்டிருக்க வேண்டும். அப்பொழுது அவர்கள் நலந்தரும் போதனையை அறிவுறுத்தவும் எதிர்த்துப் பேசுவோரின் தவற்றை எடுத்துக் காட்டவும் வல்லவர்களாய் இருப்பார்கள்.

10 ஏனெனில், பலர், குறிப்பாக விருத்தசேதனத்தில் நம்பிக்கை கொண்டோர் கட்டுகடங்காதவராயும் வீண்வாதம் செய்பவராயும் ஏய்ப்பவராயும் இருக்கின்றனர்.

11 அவர்களது வாயை அடைக்கவேண்டும். அவர்கள் இழிவான ஊதியத்திற்காகத் தகாதவற்றைக் கற்பித்துக் குடும்பம் குடும்பமாகச் சீர்குலையச் செய்கிறார்கள்.

12 அவர்களுடைய இறைவாக்கினர் ஒருவரே, “கிரேத்தர்கள் ஓயாப் பொய்யர்கள், கொடிய காட்டுமிராண்டிகள், பெருந்தீனிச் சோம்பேறிகள்” என்று கூறியுள்ளார்.

13 அவரது சான்று உண்மையே. எனவே உண்மையைப் புறக்கணிக்காமலும்,

14 யூதப் புனைகதைகளிலும் மனிதக் கட்டளைகளிலும் கவனம் செலுத்தாமலும், விசுவாசத்தைப் பழுதின்றிக் காத்துக்கொள்ளும்படி அவர்களைக் கண்டிப்பாய்க் கடிந்துக்கொள்.

15 தூய்மையானவர்களுக்கு எல்லாம் தூய்மையே. மாசுபடிந்த மனத்தோருக்கும் நம்பிக்கை கொண்டிராதோருக்கும் எதுவுமே தூய்மையாயிராது. அவர்கள் மனமும் மனச்சான்றும் கூட மாசுபடிந்தவை.

16 கடவுளை அறிந்திருப்பதாக அவர்கள் அறிக்கை இடுகிறார்கள். ஆனால் அவர்களுடைய செயல்கள் அதை மறுதலிக்கின்றன. அவர்கள் அருவருக்கத் தக்கவர்கள்: கீழ்ப்படியாதவர்கள்: எந்த நற்செயலையும் செய்யத் தகுதியற்றவர்கள்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com