திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் - 4

அதிகாரங்கள்



1 2 3 4

அதிகாரம் 4

1 கடவுள் முன்னிலையிலும் வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு அளிக்கப் போகிற கிறிஸ்து இயேசு முன்னிலையிலும் அவர் தோன்றப்போவதை முன்னிட்டும் அவரது ஆளுகையை முன்னிட்டும் நான் ஆணையிட்டுக் கூறுவது:

2 இறைவார்த்தையை அறிவி. வாய்ப்புக் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இதைச் செய்வதில் நீ கருத்தாயிரு. கண்டித்துப் பேசு: கடிந்துகொள்: அறிவுரை கூறு: மிகுந்த பொறுமையோடு கற்றுக்கொடு.

3 ஒரு காலம் வரும். அப்போது மக்கள் நலந்தரும் போதனையைத் தாங்கமாட்டார்கள். மாறாக, செவித்தினவு கொண்டவர்களாய்த் தங்கள் தீய நாட்டங்களுக்கேற்பத் தங்களுக்கெனப் போதகர்களைத் திரட்டிக்கொள்வார்கள்.

4 உண்மைக்குச் செவிசாய்க்க மறுத்துப் புனைகதைகளை நாடிச் செல்வார்கள்.

5 நீயோ அனைத்திலும் அறிவுத் தெளிவோடிரு: துன்பத்தை ஏற்றுக்கொள்: நற்செய்தியாளனின் பணியை ஆற்று: உன் திருத்தொண்டை முழுமையாய்ச் செய்.

6 ஏனெனில், நான் இப்போதே என்னைப் பலியாகப் படைக்கிறேன். நான் பிரிந்து செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது.

7 நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன். என் ஓட்டத்தை முடித்து விட்டேன். விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன்.

8 இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே. அதை இறுதி நாளில் ஆண்டவர் எனக்குத் தருவார்: நீதியான அந்த நடுவர் எனக்கு மட்டுமல்ல, அவர் தோன்றுவார் என விரும்பிக் காத்திருக்கும் அனைவருக்குமே தருவார்.

9 விரைவில் என்னிடம் வர முழு முயற்சி செய்.

10 தேமா இன்றைய உலகப்போக்கை விரும்பி என்னைவிட்டு அகன்று, தெசலோனிக்கா சென்று விட்டார். கிரேஸ்கு கலாத்தியாவுக்கும் தீத்து தல்மாத்தியாவுக்கும் சென்று விட்டனர்.

11 என்னுடன் லூக்கா மட்டுமே இருக்கிறார். மாற்கை உன்னுடன் கூட்டி வா. அவர் திருத்தொண்டில் எனக்கு மிகவும் பயனுள்ளவர்.

12 திக்கிக்குவை நான் எபேசுக்கு அனுப்பிவிட்டேன்.

13 நீ வரும்போது நான் துரோவாவில் கார்ப்புவிடம் விட்டு வந்த போர்வையையும் நூல்களையும், குறிப்பாகத் தோற்சுருளையும் எடுத்துவா.

14 கன்னானாகிய அலக்சாந்தர் எனக்குப் பல தீமைகளைச் செய்தான். அவன் செயலுக்குத் தக்கவாறு ஆண்டவர் அவனுக்குப் பதிலளிப்பார்.

15 அவனிடமிருந்து உன்னைக் காத்துக்கொள். அவன் நம்முடைய போதனையை அதிகம் எதிர்த்தவன்.

16 நான் முதன்முறை வழக்காடிய போது எவரும் என் பக்கமிருக்கவில்லை: எல்லாரும் என்னை விட்டு அகன்றனர். அக் குற்றம் அவர்களைச் சாராதிருப்பதாக.

17 நான் அறிவித்த செய்தி நிறைவுற்று, அனைத்து நாட்டவரும் அதனைக் கேட்க வேண்டுமென்று ஆண்டவர் என் பக்கம் நின்று எனக்கு வலுவூட்டினார்: சிங்கத்தின் வாயிலிருந்தும் என்னை விடுவித்தார்.

18 தீங்கு அனைத்திலிருந்தும் அவர் என்னை விடுவித்துத் தம் விண்ணரசில் சேர்த்து எனக்கு மீட்பளிப்பார். அவருக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.

19 பிரிஸ்கா, அக்கிலா, ஒனேசிப்போர் ஆகியோரின் வீட்டாருக்கு வாழ்த்துக் கூறு.

20 எரஸ்து கொரிந்துவில் இருந்து விட்டார். துரோப்பிம் நோயுற்றிருந்ததால் அவரை மிலேத்துவில் விட்டு வந்தேன்.

21 குளிர் காலத்திற்குமுன் வர முழு முயற்சி செய். ஆபூல், பூதன்சு, லீனு, கிளாதியா மற்ற எல்லாச் சகோதரர்களும் சகோதரிகளும் உனக்கு வாழ்த்துக் கூறுகிறார்கள்.

22 ஆண்டவர் உன்னோடு இருப்பாராக! இறை அருள் உங்களோடு இருப்பதாக!

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture 1timothy 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com