கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் - 11

அதிகாரங்கள்



1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

அதிகாரம் 11

1 நான் கிறிஸ்துவைப்போல் நடப்பதுபோன்று நீங்களும் என்னைப்போல் நடங்கள்.

2 நீங்கள் எப்போதும் என்னை நினைவுகூர்கிறீர்கள்: நான் உங்களிடம் ஒப்படைத்த மரபுகளை நான் ஒப்படைத்தவாறே கடைப்பிடிக்கிறீர்கள்: எனவே உங்களைப் பாராட்டுகிறேன்.

3 ஆனால் நீங்கள் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் என் விரும்புகிறேன்: ஒவ்வொரு பெண்ணுக்கும் தலைவர் ஆண்: ஆணுக்குத் தலைவர் கிறிஸ்து: கிறிஸ்துவுக்கோ தலைவர் கடவுள்.

4 இறைவேண்டல் செய்யும்போது அல்லது இறைவாக்குரைக்கும்போது தம் தலையை மூடிக்கொள்ளும் ஒவ்வொரு ஆணும் தலைவரை இகழ்ச்கிக்குள்ளாக்குகிறார். இது அவர் தலையை மழித்துவிட்டதற்கு ஒப்பாகும்.

5 இறைவேண்டல் செய்யும்போது அல்லது இறைவாக்குரைக்கும்போது தம் தலையை மூடிக்கொள்ளாத ஒவ்வொரு பெண்ணும் தம் தலைவரை இகழ்ச்சிகுள்ளாக்குகிறார். இது அவர் தலையை மழித்துவிட்டதற்கு ஒப்பாகும்.

6 தம் தலையை மூடிக்கொள்ளாக எந்தப் பெண்ணும் தம் கூந்தலை வெட்டிக் கொள்ளட்டும். கூந்தலை வெட்டிக்கொள்வதையும் தலையை மழித்து விடுவதையும் இகழ்ச்சியாகக் கருதினால் அவர் தம் தலையை மூடிக்கொள்ளட்டும்.

7 ஆண் தம் தலையை மூடிக்கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில், அவரே கடவுளின் சாயலும் பெருமையும் ஆவார். ஆனால் பெண் ஆணின் பெருமையாய் இருக்கிறார்.

8 பெண்ணிலிருந்து ஆண் தோன்றவில்லை: மாறாக ஆணிலிருந்தே பெண் தோன்றினார்.

9 மேலும் பெண்ணுக்காக ஆண் படைக்கப்படவில்லை: மாறாக ஆணுக்காகவே பெண் படைக்கப்பட்டார்.

10 வான தூதர்களை முன்னிட்டுப் பெண், அதிகாரத்தின் அடையாளமாக, தம் தலையை மூடிக் கொள்ளவேண்டும்.

11 எது எப்படி இருந்தாலும் ஆண்டவரோடு இணைக்கப்பட்ட நிலையில் ஆணின்றிப் பெண்ணில்லை: பெண்ணின்றி ஆணில்லை.

12 ஏனெனில் ஆணிலிருந்து பெண் தோன்றியதுபோலவே, பெண் வழியாகவே ஆண் தோன்றுகிறார். ஆனால் அனைத்தும் கடவுளிடமிருந்தே தோன்றுகின்றன.

13 பெண்கள் தலையை மூடிக்கொள்ளாமல் கடவுளிடம் வேண்டுவது முறையா? நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

14 நீண்ட முடி வளர்ப்பது ஆண்களுக்கு மதிப்பு ஆகாது. ஆனால் அது பெண்களுக்குப் பெருமை தருவதாகும்.

15 இதை இயற்கையே உங்களுக்குக் கற்பிக்கிறது அன்றோ! ஏனெனில் பெண்களின் கூந்தலே அவர்களுக்குப் போர்வையாக அமைகிறது.

16 இதைப்பற்றி விவாதிக்க நினைப்போருக்கு நான் கூறுவது: “இதைப் பொறுத்தவரை வேறு எந்த வழக்கமும் எங்களிடையே இல்லை: கடவுளின் திருச்சபைகளிலும் இல்லை. “

17 இவ்வறிவுரைகளைக் கொடுக்கும் நான் உங்களைப் பாராட்ட மாட்டேன். ஏனெனில் நீங்கள் ஒன்றுகூடி வரும் போது நன்மையைவிடத் தீமையே மிகுதியாக விளைகிறது.

18 முதலாவது, நீங்கள் சபையாகக் கூடி வரும்போது உங்களிடையே பிளவுகள் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். ஓரளவு அதை நம்புகிறேன்.

19 உங்களிடையே கட்சிகள் இருக்கத்தான் செய்யும். அப்போதுதான் உங்களுள் தகுதியுள்ளவர்கள் யாரென வெளிப்படும்.

20 இந்நிலையில் நீங்கள் ஒன்றாகக் கூடி வந்து உண்பது ஆண்டவரின் திருவிருந்து அல்ல.

21 ஏனெனில் நீங்கள் உண்ணும் நேரத்தில், ஒவ்வொருவரும் தாம் கொண்டுவந்த உணவை மற்றவர்களுக்கு முந்தியே உண்டுவிடுகிறீர்கள். இதனால் சிலர் பசியாய் இருக்க, வேறு சிலர் குடிவெறியில் இருக்கிறார்கள்.

22 உண்பதற்கும் குடிப்பதற்கும் உங்களுக்கு வீடுகள் இல்லையா? அல்லது கடவுளின் திருச்சபையை இழிவுப்படுத்தி, இல்லாதவர்களை வெட்கப்படுத்துகிறீர்களா? என்ன சொல்வது? உங்களைப் பாராட்டுவதா? இதில் உங்களைப் பாராட்டமாட்டேன்.

23 ஆண்டவரிடமிருந்து நான் எதைப் பெற்றுக்கொண்டேனோ அதையே உங்களிடம் ஒப்படைக்கிறேன். அதாவது, ஆண்டவராகிய இயேசு காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இரவில், அப்பத்தை எடுத்து,

24 கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப்பிட்டு, “இது உங்களுக்கான என் உடல். என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள் “ என்றார்.

25 அப்படியே உணவு அருந்தியபின் கிண்ணத்தையும் எடுத்து, “இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை. நீங்கள் இதிலிருந்து பருகும் போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள் “ என்றார்.

26 ஆதலால் நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள்.

27 ஆகவே, எவராவது தகுதியற்ற நிலையில் இந்த அப்பத்தை உண்டால் அல்லது ஆண்டவரின் கிண்ணத்தில் பருகினால், அவர் ஆண்டவரின் உடலுக்கும் இரத்தத்திற்கும் எதிராகக் குற்றம் புரிகிறார்.

28 எனவே ஒவ்வொருவரும் தம்மையே சோதித்தறிந்த பின்பே இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்தில் பருக வேண்டும்.

29 ஏனெனில், ஆண்டவருடைய உடல் என உணராமல் உண்டு பருகுபவர் தம் மீது தண்டனைத் தீர்ப்பையே வருவித்துக் கொள்கிறார்.

30 இதனால்தானே, உங்களில் பலர் வலுவற்றோராயும் உடல்நலமற்றோராயும் இருக்கின்றனர்: மற்றும் பலர் இறந்தும் விட்டனர்.

31 ஆனால் நம்மை நாமே சோதித்தறிந்தோமானால் நாம் தீர்ப்புக்கு ஆளாக மாட்டோம்.

32 இப்போது ஆண்டவர் நம்மைத் தீர்ப்புக்கு ஆளாக்கினால் அது நம்மைத் தண்டித்துத் திருத்துவதற்கே. உலகத்தோடு நாமும் தண்டனைத் தீர்ப்பு அடையாதிருக்கவே இப்படிச் செய்கிறார்.

33 எனவே என் சகோதர சகோதரிகளே, உண்பதற்காக நீங்கள் ஒன்று கூடி வரும்போது ஒருவர் மற்றவருக்காகக் காத்திருங்கள்.

34 ஒருவருக்குப் பசித்தால் அவர் தம் வீட்டிலேயே உணவருந்தட்டும். அப்போது நீங்கள் கூடிவருவது உங்களுக்குத் தண்டனைத் தீர்ப்பை வருவிக்காது. மற்றவை குறித்து நான் வரும்போது அறிவுரைகள் தருவேன்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture 1corinthians 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com