யோவான் நற்செய்தி அதிகாரம் - 19

அதிகாரங்கள்



1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21

அதிகாரம் 19

1 பின்னர் பிலாத்து இயேசுவைச் சாட்டையால் அடிக்கச் செய்தான்.

2 வீரர்கள் ஒரு முள்முடி பின்னி அவர் தலையின்மேல் வைத்து, செந்நிற மேலுடையை அவருக்கு அணிவித்தார்கள்.

3 அவரிடம் வந்து, “யூதரின் அரசே வாழ்க!” என்று சொல்லி அவருடைய கன்னத்தில் அறைந்தார்கள்.

4 பிலாத்து மீண்டும் வெளியே வந்து அவர்களிடம், “அவனை நான் உங்கள்முன் வெளியே கூட்டிவருகிறேன், பாருங்கள். அவனிடம் நான் குற்றம் ஒன்றும் காணவில்லை என்பதை அறிந்துகொள்ளுங்கள்” என்றான்.

5 இயேசு முள் முடியும் செந்நிற மேலுடையும் அணிந்தவராய் வெளியே வந்தார். பிலாத்து அவர்களிடம், “இதோ! மனிதன்” என்றான்.

6 அவரைக் கண்டதும் தலைமைக் குருக்களும் காவலர்களும், “சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்” என்று கத்தினார்கள். பிலாத்து அவர்களிடம், “நீங்களே இவனைக் கொண்டு போய்ச் சிலுவையில் அறையுங்கள். இவனிடம் குற்றம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை” என்றான்.

7 யூதர்கள் அவரைப் பார்த்து, “எங்களுக்கு ஒரு சட்டம் உண்டு. அச்சட்டத்தின்படி இவன் சாகவேண்டும். ஏனெனில் இவன் தன்னையே இறைமகன் என உரிமைகொண்டாடுகிறான்” என்றனர்.

8 பிலாத்து இதைக் கேட்டதும் இன்னும் மிகுதியாக அஞ்சினான்.

9 அவன் மீண்டும் ஆளுநர் மாளிகைக்குச் சென்று இயேசுவிடம், “நீ எங்கிருந்து வந்தவன்?” என்று கேட்டான். ஆனால் இயேசு அவனுக்குப் பதில் கூறவில்லை.

10 அப்போது பிலாத்து, “என்னோடு பேசமாட்டாயா? உன்னை விடுதலை செய்யவும் எனக்கு அதிகாரம் உண்டு, உன்னைச் சிலுவையில் அறையவும் எனக்கு அதிகாரம் உண்டு என்பது உனக்குத் தெரியாதா?” என்றான்.

11 இயேசு மறுமொழியாக, “மேலிருந்து அருளப்படாவிடில் உமக்கு என் மேல் எந்த அதிகாரமும் இராது. ஆகவே என்னை உம்மிடம் ஒப்புவித்தவன்தான் பெரும் பாவம் செய்தவன்” என்றார்.

12 அதுமுதல் பிலாத்து அவரை விடுவிக்க வழிதேடினான். ஆனால் யூதர்கள், “நீர் இவனை விடுவித்தால் சீசருடைய நண்பராய் இருக்க முடியாது. தம்மையே அரசராக்கிக் கொள்ளும் எவரும் சீசருக்கு எதிரி” என்றார்கள்.

13 இவ்வார்த்தைகளைக் கேட்டதும் பிலாத்து இயேசுவை வெளியே கூட்டி வந்தான். “கல்தளம்” என்னும் இடத்தில் இருந்த நடுவர் இருக்கை மீது அமர்ந்தான். அந்த இடத்திற்கு எபிரேய மொழியில் “கபதா” என்பது பெயர்.

14 அன்று பாஸ்கா விழாவுக்கு ஏற்பாடு செய்யும் நாள். ஏறக்குறைய நண்பகல் வேளை. பிலாத்து யூதர்களிடம், “இதோ, உங்கள் அரசன்!” என்றான்.

15 அவர்கள், “ஒழிக! ஒழிக! அவனைச் சிலுவையில் அறையும்” என்று கத்தினார்கள். பிலாத்து அவர்களிடம், “உங்கள் அரசனை நான் சிலுவையில் அறையவேண்டும் என்கிறீர்களா? என்று கேட்டான். அதற்குக் தலைமைக் குருக்கள், “எங்களுக்குச் சீசரைத் தவிர வேறுஅரசர் இல்லை” என்றார்கள்.

16 அப்போது பிலாத்து அவரைச் சிலுவையில் அறையுமாறு அவர்களிடம் ஒப்புவித்தான். அவர்கள் இயேசுவைத் தம் பொறுப்பில் ஏற்றுக்கொண்டார்கள்.

17 இயேசு சிலுவையைத் தாமே சுமந்துகொண்டு “மண்டை ஓட்டு இடம்” என்னுமிடத்திற்குச் சென்றார். அதற்கு எபிரேய மொழியில் கொல்கொதா என்பது பெயர்.

18 அங்கே அவர்கள் இயேசுவையும் அவரோடு வேறு இருவரையும் சிலுவைகளில் அறைந்தார்கள்: அவ்விருவரையும் இரு பக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாக அறைந்தார்கள்.

19 பிலாத்து குற்ற அறிக்கை ஒன்று எழுதி அதைச் சிலுவையின் மீது வைத்தான். அதில் “நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன்” என்று எழுதியிருந்தது.

20 இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்துக்கு அருகில் இருந்ததால் யூதருள் பலர் இந்தக் குற்ற அறிக்கையை வாசித்தனர். அது எபிரேயம், இலத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டிருந்தது.

21 யூதரின் தலைமைக் குருக்கள் பிலாத்திடம்,”'யூதரின் அரசன் ' என்று எழுத வேண்டாம்: மாறாக, “யூதரின் அரசன் நான்” என்று அவனே சொல்லிக் கொண்டதாக எழுதும்” என்று கேட்டுக்கொண்டார்கள்.

22 பிலாத்து அவர்களைப் பார்த்து, “நான் எழுதியது எழுதியதே” என்றான்.

23 இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின் படைவீரர் அவருடைய மேலுடைகளை நான்கு பாகமாகப் பிரித்து ஆளுக்கு ஒரு பாகம் எடுத்துக் கொண்டார்கள். அங்கியையும் அவர்களே எடுத்துக்கொண்டனர். அந்த அங்கி மேலிருந்து கீழ்வரை தையலே இல்லாமல் நெய்யப்பட்டிருந்தது.

24 எனவே அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி, “அதைக் கிழிக்க வேண்டாம். அது யாருக்குக் கிடைக்கும் என்று பார்க்கச் சீட்டுக் குலுக்கிப் போடுவோம்” என்றார்கள். “என் ஆடைகளைத் தங்களுக்குள் பகிர்ந்து என் உடைமீது சீட்டுப் போட்டார்கள்” என்னும் மறைநூல் வாக்கு இவ்வாறு நிறைவேறியது.

25 சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்று கொண்டிருந்தனர்.

26 இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன்” என்றார்.

27 பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய்” என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார்.

28 இதன்பின், அனைத்தும் நிறைவேறிவிட்டது என்பதை அறிந்த இயேசு, “தாகமாய் இருக்கிறது” என்றார். மறைநூலில் எழுதியுள்ளது நிறைவேறவே இவ்வாறு சொன்னார்.

29 அங்கே ஒரு பாத்திரம் நிறையப்புளித்த திராட்சை இரசம் இருந்தது. அதில் கடற்பஞ்சை நன்கு தோய்த்து ஈசோப்புத் தண்டில் பொருத்தி அதை அவர்கள் அவரது வாயில் வைத்தார்கள்.

30 அந்த இரசத்தைக் குடித்ததும் இயேசு, “எல்லாம் நிறைவேறிற்று” என்று கூறித் தலை சாய்த்து ஆவியை ஒப்படைத்தார்.

31 அன்று பாஸ்கா விழாவுக்கு ஏற்பாடு செய்யும் நாள். அடுத்த நாள் ஓய்வு நாளாகவும் பெருநாளாகவும் இருந்தது. எனவே அன்று சிலுவையில் உடல்கள் தொங்கலாகா என்பதற்காகக் கால்களை முறித்துச் சடலங்களை எடுத்துவிடுமாறு யூதர்கள் பிலாத்திடம் கேட்டுக்கொண்டார்கள்.

32 ஆகவே படைவீரர் வந்து இயேசுவோடு சிலுவையில் அறையப் பட்டிருந்தவருள் ஒருவனுடைய கால்களை முதலில் முறித்தார்கள்: பின்னர் மற்றவனுடைய கால்களையும் முறித்தார்கள்.

33 பின்பு அவர்கள் இயேசுவிடம் வந்தார்கள். அவர் ஏற்கெனவே இறந்து போயிருந்ததைக் கண்டு அவருடைய கால்களை முறிக்கவில்லை.

34 ஆனால் படைவீரருள் ஒருவர் இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தினார். உடனே இரத்தமும் தண்ணீரும் வடிந்தன.

35 இதை நேரில் கண்டவரே இதற்குச் சாட்சி. அவரது சான்று உண்மையானதே. அவர் உண்மையையே கூறுகிறார் என்பது அவருக்குத் தெரியும். நீங்களும் நம்ப வேண்டும் என்பதற்காகவே அவர் இதைக் கூறுகிறார்.

36 ”எந்த எலும்பும் முறிபடாது” என்னும் மறைநூல் வாக்கு இவ்வாறு நிறைவேறியது.

37 மேலும் “தாங்கள் ஊடுருவக் குத்தியவரை உற்றுநோக்குவார்கள்” என்றும் மறைநூல் கூறுகிறது.

38 அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர் இயேசவின் சீடர்களுள் ஒருவர்: யூதருக்கு அஞ்சியதால் தம்மைச் சீடர் என்று வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளாதவர். அவர் இயேசுவின் உடலை எடுத்துக் கொண்டுபோகக் பிலாத்திடம் அனுமதி கேட்டார். பிலாத்தும் அனுமதி கொடுத்தான். யோசேப்பு வந்து இயேசுவின் சடலத்தை எடுத்துக்கொண்டு போனார்.

39 முன்பு ஒருமுறை இரவில் இயேசுவிடம் வந்த நிக்கதேம் என்பவரும் அங்கு வந்து சேர்ந்தார். அவர் வெள்ளைப்போளமும் சந்தனத் தூளும் கலந்து ஏறக்குறைய முப்பது கிலோ கிராம் கொண்டுவந்தார்.

40 அவர்கள் இயேசுவின் உடலை எடுத்து யூத அடக்க முறைப்படி நறுமணப் பொருள்களுடன் துணிகளால் சுற்றிக் கட்டினார்கள்.

41 அவர் சிலுவையில் அறையப்படடிருந்த இடத்தில் ஒருதோட்டம் இருந்தது. அங்கே புதிய கல்லறை ஒன்று இருந்தது. அதில் அதுவரை யாரும் அடக்கம் செய்யப்படவில்லை.

42 அன்று பாஸ்கா விழாவுக்கு ஆயத்த நாளாய் இருந்ததாலும் அக்கல்லறை அருகில் இருந்ததாலும் அவர்கள் இயேசுவை அதில் அடக்கம் செய்தார்கள்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com