இளைஞர் ஆண்டு - 2020
  (இளைஞரே, ஆற்றலோடு மாற்றம் நோக்கி...)

தமிழக ஆயர் பேரவையின் சுற்று மடல்

2020


தமிழக ஆயர் பேரவையின் சுற்றுமடல் (15-12-2019)
இறை இயேசுவில் அன்பிற்கினியவர்களே, என்றும் உயிராற்றலுடன் வாழும் இளைஞர் இயேசுவின் அன்பும் அமைதியும் உங்களோடு இருப்பதாக!
இரண்டாம் வத்திக்கான் சங்கம் ஏற்படுத்திய மறுமலர்ச்சியின் ஒரு வெளிப்பாடாக , 1971ஆம் ஆண்டு தமிழகத்தில் இளைஞர் பணிக்குழு தூத்துக்குடி மறைமாவட்டத்தின் பணி நிறைவு பெற்ற ஆயர், மேதகு யுவான் அம்புரோஸ் அவர்களால் முன்னெடுக்கப்பட்டது. 1985ஆம் ஆண்டினை ஐக்கிய நாடுகள் அவையோடு இணைந்து அகில உலகத் திருஅவையும் இளைஞர் ஆண்டாகச் சிறப்பித்தது. அவ்வேளையில், தமிழகத் திருஅவையிலும் பங்கேற்பு, வளர்ச்சி, அமைதி' என்ற கருப்பொருளில் இளைஞர் ஆண்டு கொண்டாடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இளைஞர்களை ஒருங்கிணைத்து, இயக்கப்படுத்தும் முயற்சிகள் தொடங்கப்பட்டன. 1985ஆம் ஆண்டு ஆகத்து 24ஆம் நாள் அன்று தமிழக ஆயர் பேரவையால் தமிழகக் கத்தோலிக்க இளைஞர் இயக்கம், (ஆண், பெண்) இளைஞர்களை ஒரே குடையின் கீழ் ஒருங்கிணைப்பதற்காகத் தொடங்கப்பட்டது. 1994ஆம் ஆண்டு மே 14ஆம் நாள் இயக்கத்திற்கான இலக்கு, இலட்சினை, கொடி, பாடல் ஆகியன உருவாக்கப்பட்டன. இளைஞர் இயக்கம் தொடங்கப்பட்டதன் 25ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு தமிழகத் திரு அவையில், இளைஞரே, விழித்தெழு , ஒளி வீசு' என்ற கருப்பொருளில் 2010 சூன் முதல் 2011 சூன் முடிய இளைஞர் ஆண்டு சிறப்பிக்கப்பட்டது. இவ்வரலாற்றுச் சிறப்புகளை அசைபோடும் வேளையில், இளைஞர் பணியானது புத்துருவாக்கம் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை தமிழகத் திரு அவையின் ஆயர்கள் நாங்கள் உணர்கின்றோம்.

இக்காலச் சூழலில் பெரும்பாலான இளைஞர்கள் எண்மின் (Digital) உலகின் பூர்வீகக் குடிகளாக மாறியுள்ளனர். கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றிற்காகவும், சாதி, சமய கலவரங்கள், வறட்சி, வறுமை ஆகிய காரணிகளுக்காகவும் புலம் பெயர்கின்றனர். மது போன்ற போதைப் பொருட்களுக்கு அடிமையாதல், திரைப்பட மயக்கமுறுதலால் தனிநபர் வழிபாடு முதலியனவும் அவர்களது உள்ளங்களைச் சிதைக்கின்றன. வேலையில்லாத் திண்டாட்டம் அவர்களைக் குடும்பம், சமூகம் ஆகியவற்றிலிருந்து அந்நியமாக்குகின்றது. இப்போக்குகளினால் இன்றைய இளைஞர்கள் தங்களது இளமைத் துடிப்பை இழந்தும் திருஅவையை விட்டு விலகியும் உள்ளனர்.

தளர்ந்து, துவண்டு , சோர்ந்து போயுள்ள இளைஞர்களைத் தட்டிக்கொடுத்து, நம்பிக்கையூட்டி, இறைவன் அவர்களுக்கு விடுக்கும் அழைப்பினைத் தெளிந்து தேர்ந்து, துணிவுடன் பதில் மொழி நல்குவதற்காக, அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியது இன்றியமையாதது என்பதனை நமது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இறைவாக்குத் தன்மையுடன் உணர்த்திக் கொண்டேயிருக்கிறார். இந்நோக்கிற்காகவே ஆயர்கள் மாமன்றத்திற்கான அழைப்பினை விடுத்து, 2016 முதல் 2018 முடிய பல நிலைகளில் திருஅவையினை அணியப்படுத்தினார். இம்முன்னெடுப்புகளின் உச்சமாக இளைஞர்கள் பற்றிய 15வது ஆயர் மாமன்றத்தினை 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் கூட்டினார். மாமன்றத்தின் நிறைவில் வெளியிடப்பட்ட முடிவுகளுக்குச் செயல்வடிவம் கொடுப்பதற்காக மேய்ப்பர்களுக்காகவும் இறைநம்பிக்கையாளர்களுக்காகவும் கிறிஸ்து வாழ்கிறார்' என்ற திருத்தூது ஊக்கவுரையினை 2019 ஏப்ரல் 2ஆம் நாள் அன்று வெளியிட்டுள்ளார். என்றும் உயிராற்றலுடன் வாழும் இளைஞர் இயேசுவிடமிருந்து தங்களது இளமையைப் புதுப்பித்துக் கொள்ளும் இளைஞர்கள், உலகை மாற்றுவதற்கான தங்களது ஆற்றலையும் துணிச்சலையும் படைப்புத்திறனையும் இன்றே, இக்காலத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்ற சிந்தனையை கிறிஸ்து வாழ்கிறார்' என்ற திருத்தூது ஊக்கவுரை வலியுறுத்துகிறது.

திருத்தூது ஊக்கவுரையின் சிந்தனைகளுக்குச் செயல் வடிவம் கொடுக்கும் விதமாக, எதிர்வரும் 2020ஆம் ஆண்டினை தமிழகத் திரு அவையில், இளைஞரே, ஆற்றலோடு மாற்றம் நோக்கி....' என்ற இலக்கின் அடிப்படையில், இளைஞர் ஆண்டாகக் கொண்டாட உள்ளோம் என்பதனைப் பெருமகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்றோம். இந்த இலக்கினை நோக்கிப் பயணிக்க, திருத்தந்தையின் திருத்தூது ஊக்கவுரையின் சாரங்களை முறைப்படுத்தி, ஒவ்வொரு மாதமும் ஒரு நோக்கத்தை மையப்படுத்தி, ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கான செயல்பாடுகளோடு கொண்டாடலாம் என தீர்மானித்துள்ளோம்.

 

 1. சனவரி - மூத்தோருடன் உறவாடும் இளைஞர்கள்
 2. பிப்ரவரி - முழு ஆளுமையுடைய இளைஞர்கள்
 3. மார்ச் - பாலின சமத்துவ உறவுச் சமூகம் படைக்கும் இளைஞர்கள்
 4. ஏப்ரல் - சுற்றுச் சூழலைப் பாதுகாத்து, சமூக நலன் பேணும் இளைஞர்கள்
 5. மே- அழைத்தலில் தேர்ந்து தெளியும் இளைஞர்கள்
 6. சூன்- போதையில்லாப் பாதையினை உருவாக்கும் இளைஞர்கள்
 7. சூலை - எண்மின் (Digital) ஊடகங்களைப் பொறுப்புடன் பயன்படுத்தும் இளைஞர்கள்
 8. ஆகத்து - மண்சார் பண்பாட்டில் படைப்பாற்றலை வெளிப்படுத்தி, சமூகமாற்றத்திற்குப் பங்களிக்கும் இளைஞர்கள்
 9. செப்டம்பர் - அரசியலில் பங்கேற்கும் இளைஞர்கள்
 10. அக்டோபர் - தற்சார்புப் பொருளாதாரத்தை உருவாக்கும் இளைஞர்கள்
 11. நவம்பர் - சாதி ஒழித்த, சமய எல்லைகள் கடந்த உறவில் சமத்துவச் சமூகம் படைக்கும் இளைஞர்கள்
 12. டிசம்பர் - இறை - மனித உறவில் ஒன்றிணையும் இளைஞர்கள்

மேற்கூறிய நோக்கங்களை நமது இளைஞர்கள் உள்வாங்கியவர்களாக , "ஆற்றலோடு மாற்றம் நோக்கிப்" பயணிக்க நாம் உடனிருந்து உற்சாகப்படுத்துவோம்.

தமிழகத் திரு அவையில் இளைஞர் ஆண்டு - 2020ஐக் கொண்டாட ஒருசில பரிந்துரைகளை முன் வைக்கிறோம்.

1. பங்குகளில் இளைஞர் ஆண்டினை 2020 சனவரி முதல் நாளான, அன்னை மரியா: இறைவனின் தாய்' பெருவிழா அன்று தொடங்குவோம்.

2. மறைமாவட்ட அளவிலும் தொடக்க விழாவினைக் கொண்டாட வழிமுறைகளைத் திட்டமிடுவோம்.

3. தமிழக அளவில், சனவரி 22 (புதன்) அன்று கோட்டாறு மறைமாவட்டம், குளச்சல் பங்கிலுள்ள புனித மரியன்னை மேனிலைப் பள்ளி வளாகத்தில் தமிழக ஆயர்கள் தலைமையில் இளைஞர் ஆண்டின் தொடக்க விழாவானது நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கு மறைமாவட்ட இளைஞர் இயக்குனர் வழிநடத்துதலில் இளைஞர்களைப் பங்கேற்கச் செய்வோம்.

4. தமிழகத் திரு அவையில் உள்ள அனைத்து பங்குகள், கிளைப்பங்குகள், கல்லூரி விடுதிகள் ஆகியவற்றில் உள்ள 18 வயது தொடங்கி 30 வயதிற்குட்பட்ட ஆண் - பெண் இளைஞர்களை இயக்கமாகச் செயல்பட உற்சாகப்படுத்துவோம். ஏற்கெனவே இயக்கம் இருப்பின், அதனைப் புத்துருவாக்கம் செய்வோம்.

5. பங்குகள், கிளைப் பங்குகள் ஆகியவற்றில் 13 வயது தொடங்கி 17 வயதிற்குட்பட்ட (09 முதல் 12 முடிய பயிலும்) மாணாக்கரை ஒருங்கிணைத்து இளம் கத்தோலிக்க மாணக்கர் இயக்கத்தினை (YCS) தொடங்குவதற்கு முயற்சி செய்வோம்.

6. இளைஞர் ஆண்டினை முன்னிட்டு, ஒவ்வொரு மாதத்தின் முதல் ஞாயிறு அன்று பங்கு அளவில் இளைஞர்களுக்கான தனித்திருப்பலியினை அந்தந்த மாதத்திற்கான நோக்கத்தை மையப்படுத்திச் சிறப்பிப்போம்.

7. இளைஞர்கள், இளைஞர் இயேசுவை தங்களது அன்றாட வாழ்வில் சந்தித்து, அவரோடு உறவில் வளர, நற்கருணை ஆராதனைகள், தியானங்கள், திருப்பயணங்கள் ஆகியனவற்றை ஏற்பாடு செய்து, அருள்வாழ்வில் வளர உதவுவோம்.

8. இளைஞர்கள் தங்களை ஆற்றல் படுத்திக் கொள்ள மறைமாவட்டம், மறைவட்டம், பங்கு , கிளைமையம் என பலநிலைகளில் வழங்கப்படும் பயிற்சிகளிலும் சிறப்பு நிகழ்வுகளிலும் முழுமையாகப் பங்கேற்க இளைஞர்களுக்கு வழிகாட்டுவோம்.

9. பங்கு அருள்பணிப்பேரவை, திருத்தூதுக் கழகங்கள் (பக்த சபைகள்), அன்பியங்கள், ஊர் நிர்வாகம் ஆகியவற்றில் உள்ள உறுப்பினர்கள் நலமான உரையாடலை இளைஞர் இயக்க உறுப்பினர்களோடு மேற்கொள்வது காலத்தின் கட்டாய தேவை. நிர்வாகப் பொறுப்புகளை இளைஞர்களுடன் பகிர்ந்து, தலைமைத்துவப் பண்புகளில் வளர இளைஞர்களை ஆற்றல் படுத்துவோம். உருவாக்கி, அறிவுசார் பங்காளிகளாக இளைஞர்களை உருவாக்க முயற்சிப்போம்.

10. நற்செய்திக்கான எண்மின் ஊடகங்களைத் தொழில் சார் நேர்த்தியோடு இளைஞர்கள் உருவாக்கிட வாய்ப்புக்களும் வழிகாட்டுதல்களும் வழங்குவோம்.

11. இளைஞர்கள் அரசின் நிர்வாகத்துறையில் பங்கெடுப்பதற்கு ஏதுவாக, தகுந்த விழிப்புணர்வினை ஏற்படுத்தி, போட்டித் தேர்வுகளை எழுதி, வெற்றி பெறுவதற்கு ஏற்றச் சூழல்களை உருவாக்குவோம்.

12. இளைஞர்களிடையே நலிந்தோர் நலப்பணிகளை ஊக்கப்படுத்த ' ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள் போன்றவற்றைச் சந்திக்க வாய்ப்புகளை உருவாக்குவோம்.

13. சூழல் பாதுகாப்பில் கரிசனையையும் அக்கறையையும் வளர்க்க, இயற்கை நடை, சூழல் உலா ஆகியனவற்றை ஏற்பாடு செய்வோம்.

14. நம் தமிழகத்தை அழிக்க ஆதிக்க அமைப்புகள் முழுமுனைப்புடன் செயல்படுத்தக் கூடியத் திட்டங்களை அறச்சினத்துடன் நம் இளைஞர்கள் எதிர்கொள்ள பயிற்சி அளிப்போம். சமயம் கடந்து, பொதுவுடைமைச் சிந்தனையாளர்கள், மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள், நல்லெண்ணம் கொண்டோர் ஆகியோருடைய தோழமையில் முன்னெடுக்கப்படும் அறப்போராட்டங்களில் அவர்கள் பங்கேற்க வழிகாட்டுவோம்.

பன்முகப் பயிற்சிகளால் ஆற்றல் படுத்தப்படும் நமது இளைஞர்கள், இளைஞர் இயேசுவின் இலட்சியக் கனவாம் இறையாட்சிக்கான மாற்றத்தை நோக்கிப் பயணிக்கும் பாதையில் உடன் பயணிக்க இறையருள் நம்மை வழிநடத்தட்டும்.

இறை ஆசியும், அன்னை மரியின் பரிந்துரையும் என்றும் உங்களோடு இருப்பனவாக!

கிறிஸ்துவில் என்றும் அன்புடன்,

மேதகு முனைவர் அந்தோனி பாப்புசாமி தலைவர், தமிழக ஆயர் பேரவை

நன்றி : நிறைவாழ்வு-டிசம்பர் 2019
 மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு இளைஞர் ஆண்டு
sunday homily


முகப்பு பக்கம்
வத்திக்கான் வானொலி
கத்தோலிக்க இதழ்கள்
ஞாயிறு வாசகம்
விருந்தினர் பக்கம்
உம் வாக்கே விளக்கு!
சென்னை பங்குதலங்கள்
நூலகம்
திருத்தலச் சுற்றுலா
தவக்கால சிந்தனைகள்
ஒலியும் ஒளியும்
அன்னை தெரேசா
கிறிஸ்மஸ் மலர்கள்
பொங்கல்
செபமாலை
பாடல்கள்
செபமே ஜெயம்A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2020| Email ID: anbinmadal at gmail.com