புனித மரியா கொரற்றி | அன்பின்மடல் | Tamil Catholic website

புனித மரியா கொரற்றி (ஜூலை 06)

அருள்பணி. மரிய அந்தோனிராஜ்

நிகழ்வு

1950 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22 ஆம் நாள் மரியா கொரற்றிக்கு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்ட நாள். அன்றைக்கு அவருக்கு புனிதர் பட்டம் கொடுக்கப்படுகிறது என செய்தியைக் கேள்விப்பட்டு, உரோமையில் உள்ள தூய பேதுரு சதுக்கத்துக்கு ஒரே நேரத்தில் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் பேர் கூடிவந்தார்கள். இவ்வளவு மக்களும் அங்கே இருப்பது இயலாத காரணத்தினால், புனிதர் பட்ட நிகழ்வுகள் பேதுரு சதுக்கத்திற்கு வெளியே வைத்து நடத்தப்பட்டது. திருச்சபையின் வரலாற்றில் தூய பேதுரு சதுக்கத்தில் எந்தப் புனிதருக்கும் இவ்வளவு கூட்டம் கூடியதில்லை. மரியா கொரற்றிக்கே முதல்முறையாக இவ்வளவு மக்கள் கூடி வந்தார்கள். காரணம் அவருடைய மாசற்ற, தூய வாழ்க்கை

வாழ்க்கை வரலாறு

மரிய கொரற்றி இத்தாலியில் உள்ள கோரினால்டோ என்னும் இடத்தில் 1890 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய குடும்பம் மிகவும் ஏழ்மையான விவசாயக் குடும்பம். அன்றாடம் உழைத்து, அதிலிருந்து வரக்கூடிய வருமானத்தை வைத்து பிழைக்கக்கூடிய குடும்பம்.

ஒருசமயம் மரிய கொரற்றியின் தந்தை, தன்னுடைய குடும்பம் பிழைப்பதற்கு கொரினால்டோவில் எந்தவித வசதியும் இல்லை என முடிவெடுத்து, உரோமையில் உள்ள நெட்டுனோ என்ற இடத்திற்கு குடிபெயர்ந்தார். அங்கே சென்ற ஒருசில ஆண்டுகளிலே அவர் மரணமடைந்தார். இதனால் குடும்ப பாரம் மரிய கொரற்றியின் தலையில் விழுந்தது. மரிய கொரற்றியின் தாயார் ஏற்கனவே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் குடும்பத்தில் எல்லாப் பொறுப்புகளையும் அவரே பார்க்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அவர் வீட்டிலிருந்து துணிகளைத் தைத்து அதிலிருந்து வரக்கூடிய வருமானத்தை வைத்து குடும்பத்தை பராமரித்து வந்தாள்.

மரிய கொரற்றி 1902 ஆம் ஆண்டு தன்னுடைய 12 ஆம் வயதில் புதுநன்மை வாங்கினார். அன்றிலிருந்தே அவர் மிகவும் தூய்மையான வாழ்க்கையை வாழத்தொடங்கினார். பாவம் செய்து வாழ்வது கடவுளுக்கு விரோதமான வாழ்க்கை, எனவே பாவத்திலிருந்து எப்போதும் தன்னைப் பாதுகாத்துக்கொண்டே வாழ்ந்துவந்தார். மரிய கொரற்றி இருந்த வீட்டிற்குப் பக்கத்தில் அலெக்ஸ்சாண்டரோ என்ற 19 வயது இளைஞன் வசித்து வந்தான். அவன் எப்போதும் மரிய கொரற்றிக்கு தொல்லை கொடுத்து வந்தான். ஒருசமயம் மரிய கொரற்றி வீட்டில் தனியாக இருந்த சமயம், அலெக்ஸ்சாண்டரோ என்ற அந்த இளைஞன் உள்ளே வந்து, மரிய கொரற்றியை தன்னுடைய காம இச்சைக்கு இணங்குமாறு கேட்டான். ஆனால் அவரோ பாவம் செய்வது கடவுளுக்கு விரோதமானது. என்னை நீ பாவத்திற்கு இணங்கச் செய்தால் நீ நரகத்திற்குத்தான் போவாய்” என மிகக் கண்டிப்பாய் கூறினார். ஆனால் அந்தக் காமுகனோ மரிய கொரற்றியை பலமுறை கத்தியால் குத்திக் கிழித்தான்.

குற்றுயிராய் கிடந்த மரிய கொரற்றியைக் காப்பாற்றுவதற்கு மருத்துவமனைக்கு எடுத்துக்கொண்டு போனார்கள். ஆனால் அவரோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட இருபத்து நான்கு மணி நேரத்திற்கு உள்ளாகவே இறந்துபோனார். அவர் இறப்பதற்கு முன்பாக தன்னைக் கொலை செய்த அந்தக் காமுகனை முற்றிலுமாக மன்னித்துவிட்டதாகக் கூறினார். மரிய கொரற்றியை கொலைசெய்த அலெக்ஸ்சாண்டரோ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். அவனுக்கு முப்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டது. சிறையில் இருந்த நாட்களில் மரிய கொரற்றி அவனுக்குக் காட்சிகொடுத்தார். அந்தக் காட்சியில் அவர் அவனுக்கு, “விண்ணிலிருந்து கைநிறைய மலர்களைத் தூவுவேன்” என்றார். இக்காட்சிக்குப் பிறகு அவன் மனம் மாறினான். இதனால் அவன் விரைவாகவே விடுதலை செய்யப்பட்டான். விடுதலையான பிறகு நேராகச் சென்று, மரிய கொரற்றியின் தாயிடம் மன்னிப்புக் கேட்டான்.

இந்த சமயத்தில்தான் அதாவது 1950, ஜூன் 22 ஆம் நாள் உரோமை நகரில் மரிய கொரற்றிக்கு புனிதர்பட்டம் வழங்கப்பட்டது. அந்தப் புனிதர் பட்ட நிகழ்வில் மரிய கொரற்றயின் தாய் மற்றும் சகோதரியோடு இவனும் கலந்துகொண்டு முற்றிலும் மனம் மாறினான். அதன்பிறகு இவன் கப்புசின் 3 ஆம் சபையில் சேர்ந்து, அங்கே ஒரு சகோதரராக வாழ்ந்து 1970 ஆண்டு இறந்து போனான்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

இருபதாம் நூற்றாண்டின் ஆக்னஸ் என அழைக்கப்படும் தூய மரிய கொரற்றியின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்ப்போம்.

1. தூய மாசற்ற வாழ்க்கை

லேவியர் புத்தகம் 19:2 ல் வாசிக்கின்றோம், “உங்கள் கடவுளும் ஆண்டவருமான நான் தூயவராக இருப்பதுபோல் நீங்களும் தூயவராக இருங்கள்” என்று. மரியா கொரற்றி தூய்மைக்கு, மாசற்ற தன்மைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கினார் என்பதை அவருடைய வாழ்விலிருந்து நாம் கண்டுகொள்கிறோம். பாவம் செய்வதற்கு அலெக்ஸ்சாண்டரோ என்ற அந்த இளைஞர் வற்புறுத்தியபோது, இவரோ பாவம் செய்வது கடவுளுக்கு விரோதமானது என மிக உறுதியாக இருந்தார். அதனாலேயே தன்னுடைய உயிரைத் துறந்தார். கிறிஸ்தவர்களாகிய நாம் கற்புக்கும் தூய்மைக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறோமா என சிந்தித்துப் பாப்போம்.

தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பார்கள் என மலைபொழிவில் இயேசு கூறுகின்றார். நாம் மரிய கொரற்றியைப் போன்று தூய வாழ்க்கை வாழ முற்படுவோம்.

2. தீமை செய்தவனை மன்னித்தல்

குத்திக் கொலை செய்த இளைஞனை மரியா கொரற்றி மனதார மன்னித்தார். அதனாலேயே அவர் புனிதராக விளங்குகின்றார். கிறிஸ்தவர்களாகிய நாம் நமக்கு எதிராகத் தீமை செய்கிறவர்களை நாம் மன்னிக்கிறோமா என சிந்தித்துப் பார்ப்போம்.

மன்னிப்பு என்பது மண்ணகத்திலிருந்து விண்ணகத்திற்கு ஏறிச்செய்யும் ஒரு பாலம். அதில் நாம்தான் முதலில் ஏறிச்சொல்வோம் என்பான் ஒரு அறிஞன்.

ஆகவே தூய மரிய கொரற்றியின் விழா நாளில் நாமும் அவரைப் போன்று தூய்மையிலும், மன்னிப்பதிலும் சிறந்து விளங்குவோம், அதன்வழியாக இறையருள் பெறுவோம்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  இளைஞர் ஆண்டு


sunday homily


முகப்பு பக்கம்
வத்திக்கான் வானொலி
கத்தோலிக்க இதழ்கள்
ஞாயிறு வாசகம்
விருந்தினர் பக்கம்
உம் வாக்கே விளக்கு!
சென்னை பங்குதலங்கள்
நூலகம்
திருத்தலச் சுற்றுலா
தவக்கால சிந்தனைகள்
ஒலியும் ஒளியும்
அன்னை தெரேசா
கிறிஸ்மஸ் மலர்கள்
பொங்கல்
செபமாலை
பாடல்கள்
செபமே ஜெயம்





A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com