ஆஸ்த்திரியா நாட்டில் ஒபர்ண்டாவ் என்றொரு கிராமம். அங்குள்ள ஆலயம் புனித நிக்கோலாசுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அதன் பங்குத்தந்தை ஜோசப் மோஹர். குருவாக 1815ம் ஆண்டுத் திருநிலைப் படுத்தப்பட்டார். ஒபர்ண்டாவின் பங்குத்தந்தை 1817-ம் ஆண்டு அந்தக் கிராமத்திற்கு வந்து சேர்ந்தார்.
அன்று கிறிஸ்துமசுக்கு முந்தின நாள்.மாலை நேரம். வண்ண விளக்குகளால் கிராமமே ஒளி வெள்ளத்தில் மிதக்கிறது. தோரணங்களால் இல்லங்கள் அழகு செய்யப்பட்டுள்ளன. ஊரெங்கும் மகிழ்ச்சி. இன்னும் சில மணிநேரத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழா வழிபாடுகள் ஆரம்பமாகும். ஆனால் தந்தை மோஹர் மனம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. ஆலயத்தின் இசைக் கருவியாகிய ஆர்கன் பழுதடைந்துள்ளது. இசை இல்லாத கிறிஸ்துமஸ் விழாவா? தனிமையில் அமர்ந்து சிந்திக்கலானார். மாறுதலுக்காகப் புதுப்பாடலொன்றை எழுதிப் பாடினால் என்ன என்று தோன்றியது.
தனது தாய் மொழியான ஜெர்மன் மொழியில் பாட்டை எழுதினார்.அதற்கு இசை சேர்க்க வேண்டும். முறையாக இசைப்பயிற்சி பெற்ற தன் நண்பர் பிரான்சிஸ் சேவியர் க்ரூபேயை நாடி சென்றார் இசை சேர்க்க.தன் சூழ்நிலையை எடுத்துச் சொன்னார். கவிதையைப் படித்த க்ரூபே அதன் கருத்தாழத்தாலும் தெய்விகத்தன்மையாலும் மிகவும் கவரப்பட்டார். உடனே பியோனாவில் அமர்ந்தார். இசை அமைத்த பாடலை எடுத்துக்கொண்டு க்ரூபே நடுநிசியில் தந்தை மோஹரிடம் சென்றார். ஆலயமணி ஒலிக்கிறது. மக்கள் மூட்டம் ஆலயத்தை நிரப்பியுள்ளது. ஆலயத்தின் ஆர்கன் பழுதடைந்து போனது என்ற செய்தி மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. எங்கும் நிசப்தம்.
எதிர்பாராத நேரத்தில் தந்தை மோஹர் கிட்டாருடன் அவர்கள் முன் தோன்ற, அவரைத் தொடர்கிறார் க்ரூபே. கிட்டார் இசையில் இரு குரல்கள் அந்தத் தேவகானத்தை இசைக்கின்றன. "Stille Nacht, Beilige Nacht"தேவதூதர்களே என வியக்கும்படி, பாடல்குழு ஒன்றிணைந்து பல்லவியை இசைக்கிறது. பாடலைக் கேட்ட பங்கு மக்கள் மெய்மறந்தனர். ஆர்கன் இசைக்கவில்லை என்ற குறை மறந்தனர். கிறிஸ்துமஸ் திருப்பலியும் சிறப்பாக நடந்தேறியது.
1839ம் ஆண்டு ”ரெய்னர்ஸ்” என்ற இசைக்குழு அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து சென்று அமெரிக்க நகரங்களில் இந்தப் பாடலைப் பாடினர். கேட்டவர்கள் இது சாதாரணப் பாடல் அல்ல. விண்ணவரின் கீதம் எனப் போற்றிப் புகழ்ந்தனர். ஆனால் தனது படைப்பு அடைந்து வரும் பெருமைகளை அறியாதவராய் தந்தை மோஹர் 1848ம் ஆண்டு நிமோனியாவால் பீடிக்கப்பட்டுத் தனது சொந்த கிராமத்தில் இறந்து போனார். க்ரூபே 1863ம் ஆண்டு இறந்து போனார். அதை ஆண்டு அமெரிக்கவில் எபிஸ்கோப்பல் சபையைச் சேர்ந்த ஜாண் ப்மோன் யங் என்ற போதகர் அந்தப் பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலகுக்கு அர்ப்பணித்தார். அந்த ஆங்கில ஆக்கம் தான் இன்றைக்கும் உலகெங்கும் எதிரொலிக்கிறது.
இன்றைக்கு இந்தப்பாடல் இசைக்கப்படாத ஆலயங்கள் இல்லை எனலாம். பலமொழிகளிலும் இந்தப்பாடல் பாடப்படுகிறது. பிங்க்ராஸ்பி முதல் ஜிம்ரிவ்ஸ், எல்விஸ் பிரஸ்லி வரை பல பாடகர்களும் இந்தப் பாடலைப் பாடி புகழ் தேடிக்கொண்டனர். ஏறத்தாழ 190 ஆண்டுகளுக்கு முன், ஒரு சாதாரணக் கிராமத்தில் இரு சாமானியர்களால் இயற்றப்பட்ட இந்தப் பாடல் தேவகானமாக உலகெங்கும் பரவி ஒரு குடிலிலே, தீவனத்தொட்டியிலே, கந்தைத் துணியால் பொதியப்பட்டுக் கிடத்தப்பட்டிருக்கும் அந்த இயேசு குழந்தைக்கு ஆண்டாண்டு தோறும் தாலாட்டாக அமைந்து ஆனந்தம் தருவது ”அமைதியான இரவு”("Silent Night, Holy Night ") என்ற இந்த அற்புதமான பாடலே...
கவிதைசிறப்புச் செய்திகாணிக்கைஅமைதிமுகப்பு பக்கம்
A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com