கிறிஸ்துமஸ் தாத்தா அல்லது சாந்தா க்ளாஸ் அல்லது புனித நிகோலாஸ் என்றால் சிறு பிள்ளைகளுக்கு மிக விருப்பமான நபர்கள். கிறிஸ்து பிறந்த நிகழ்வோடு பின்னிப் பிணைந்துள்ள ஒரு நிகழ்வு என்பது நமக்குத் தெரிந்த ஒரு காரியம். கிறிஸ்துமஸ் தாத்தா என்ற கதை உருவாக்கு முன்னரே மூவரசர்கள் மூன்று ராஜாக்கள் என்ற நிகழ்வுத் திருச்சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு காரியம். இவர்கள் இயேசுவுக்குப் பரிசுகளைக் கொடுத்தது போலக் கிறிஸ்தும்ஸ் விழாச் சமயத்தல் இவர்கள் குழந்தைகளுக்குப் பரிசுகளைக் கொண்டு வருவார்கள் என்ற நம்பிக்கை ஆதிகாலம் தொட்டே இருந்து வந்துள்ளது.
கிரேக்க மொழியிலே "மாகோஸ்" (magos) என்றால்"ஞானி" என்று பொருள். இது பன்மையில் (mag) என்பது பொருளாகும். இவர்களைப் பல கூறுகளாகப் பிரித்துக் காணலாம்.
1. பெர்சிய நாட்டுக் குருக்களின் கூட்டத்தைச் சார்ந்தவர்கள்.
2. இரகசிய மறைபொருளை உணர்ந்து கொள்ளும் சக்தியைக் கொண்டவர்கள்.
3. மந்திரவாதிகள்.
4. நாடோடிப் போலி மருத்துவர்கள் அல்லது அறிஞர்கள்.
5. தத்துவ அறிவில் கைதேர்ந்தவர்கள்.
6. குறிச் சொல்லும் முன்னறிவிப்பாளர்கள்.
7. இயற்கை மருத்துவத்தில் கைதேர்ந்தவர்கள்.
8. கனவுகளுக்கு விளக்கும் அளிப்பவர்கள்.
9. வானசாஸ்திரிகள்.
இவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற ஆராய்ச்சியில் முரண்பாடான கருத்துக்கள் நிலவுகின்றன.
பெர்சிய நட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்.
மீதியா நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்.
மெசபெத்தோமிய நாட்டிலிருந்து வந்திருக்கலாம்.
அரேபியா நாட்டிலிருந்து பயணித்திருக்கலாம்.
இந்தியாவிலிருந்து கூட யூதேயா நாட்டிற்குச் சென்றிருக்கலாம் என்று கூறுபவர்களும் உளர்
நற்செய்தியில் இயேசு குழந்தையைக் காண வந்த ஞானிகள் எத்தனை பேர் என்று குறிப்பிடவில்லை. மூன்று பேர் வந்தார்கள் என்ற மரபு எப்படி வந்ததென்றல், நற்செய்தியில் மூன்று வகையான பரிசுகளைக் கொண்டு வந்தார்கள். என்று குறிப்பிடுள்ளதால்.
இவர்கள் பெயர்கள் கஸ்பார், மெல்கியோர், பல்தசார் என்பது மரபாகும்.
கஸ்பார் என்பவர் தாடி இல்லாமல் இளைஞராக ஓவியத்தில் சித்தரிப்பட்டுள்ளார். இவர் சாம்பரணி கொண்டு வந்தவர். சாம்பரணி குருத்துவதைக் குறிக்கின்றது. குருக்களைப் பெர்சிய நாட்டில் "போன்தி/பெக்ஸ்" அதாவது பாலமாக இருப்பவர்கள் -இறைவனுக்கும் மனிதருக்குமிடையே பரிந்துப் பேசிப் பாலமாக இருந்தவர்கள் மன்னர்கள் என்ற கருத்து நிலவியது. இறைத்தந்தைக்கும் நமக்குமிடையே உறவை வளர்க்கும் பாலமாக இருக்கும் இயேசுவுக்கு இஃது எவ்வளவு பொருத்தமாக இருக்கின்றது என்பது சொல்லவும் வேண்டுமோ?
மெல்கியேர் வயதானவராக, நீண்டத் தாடியோடு சித்தரிக்கப்பட்டுள்ளார். இவர் பொன்னைக் கொண்டு வந்தர். பொன் அல்லது தங்கம் இயேசு அரசர் என்பதைக் குறிக்கின்றது. பெர்சியா நாட்டில் அந்நாட்டு அரசரையாராவது சந்திக்கச் சென்றால் கட்டாயம் தங்கத்தைக் கொண்டு செல்ல வேண்டுமென்பது ஒரு கட்டாயமான மரபு. ஆகவே இயேசுவை ஓர் அரசராகக் கருதிப் பொன்னைப் பரிசாகக் கொண்டு வருகிறார் இந்த ஞானி.
பல்தசார் ஓர் இளைஞன். குறுந்தாடியுடையவர். இவர் வெள்ளைப்போளம் கொண்டு வந்தாதகக் கூறப்படுகிறது. வெள்ளைப்போளம் பொதுவாக இறந்தவர்களின் உடலைப் பதபடுத்திப் பாதுகாப்பாக இருக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு பொருள். இஃது இயேசு இறைவன் மட்டுமல்ல, அவர் ஒரு மனிதனாகவும் இருக்கின்றார் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றது. ஆம் இயேசு பிறந்ததே நாம் மீட்புப் பெறுவதற்காகவே. இயேசு தமது உயிரைப் பயணமாக வைத்துத் தமது இறப்பினால் நம்மை மீட்டார் என்பது வெள்ளிடை மலை.
விண்மீன் -கிறிஸ்து பிறப்பதற்குமன் 11ஆம் ஆண்டில் ஹோலிஸ் நட்சத்திரம் தோன்றியது. கி.மு. 7ஆம் ஆண்டில் மூன்று கோள்கள்-சாட்டர்ன், ஜுபிட்டர், மார்ஸ் ஒன்றாகக் கூடிவந்து வானத்தில் விந்தை நடந்தது வரலாறு. கி.மு. 5லிருந்து 2ஆம் ஆண்டுக்கு இடையிலான காலத்தில் மெசோரி, சூரியன், டாக்ஸ்டார் என்பவைப் பிரகாசமாகத் தோன்றின என்பதும் வரலாறு.
இவ்வெளிப்பாட்டின் வழியாக ஒரு புதிய அரசர் தோன்றுவார் என்று மக்கள் நம்பினர். இயேசு பிறப்பதற்கு முன் இஸ்ரயேல் நாட்டில் ஓர் அரசர் தோன்றுவார். அவர் மெசியா- அரசராக இருப்பார். அவர் மக்களை மீட்டு விடுதலை அளிப்பார் என்று மக்கள் நம்பிக்கை வைத்திருந்தனர். அவரது வருகைக்காக ஆவலோடு காத்திருந்தனர். மன்னர் பிறந்துவிட்டார் என்று வானசாஸ்திரிகள் தங்கள் ஞானத்தைப் பயன்படுத்தி இயேசு குழந்தையைக் காணவந்தனர். உண்மையாகவே இயேசு இவ்வுலகை மீட்க வந்த மீட்பர் அன்றோ!
தர்சீசு அரசர்களும் தீவுகளின் அரசர்களும் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்: சபாவிலும் செபாலவிலுமுள்ள அரசர்கள் நன்கொடைகளைக் கொண்டுவருவார்கள். எல்லா அரசர்களும் அவர்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்குவார்கள்: எல்லா இனத்தவரும் அவருக்கு ஊழியம் செய்வார்கள். தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார். வறியோர்க்கும் ஏழைகளுக்கும் அவர் இரக்கம் காட்டுவார்: ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார். அவர்கள் உயிரைக் கொடுமையினின்றும் வன்முறையினின்றும் விடுவிப்பார்: அவர்கள் இரத்தம் அவர் பார்வையில் விலைமதிப்பற்றது. அவர் நீடுழி வாழ்க! சேபாவின் பொன் அவருக்குக் கொடுக்கப்படும்: அவருக்காக இடையறாது வேண்டுதல் செய்யப்படுவதாக! அவர்மீது ஆசிகள் வழங்கப்பெறுமாறு நாள் முழுதும் மன்றாடப்படுவதாக! திருப்பாடல்கள் 72:10-15
மெசியா - அரசராக இயேசு பிறப்பார் என்று இஸ்ரயேல் வானசாஸ்திரிகள் ஆய்ந்தறிந்து உறுதிப்படுத்தியவுடன் மூன்று வகையான நபர்கள் தங்களது கண்ணேட்டத்தை வெளிப்படுத்தினதை நாம் நற்செய்தியில் பார்க்கிறோம்.
ஏரோதின் பகைமை உணர்வு- ஏரோது முறையான வகையில் அரசனாகப் பதவி ஏற்கவில்லை. ஆகவே வேறு ஓர் அரசன் பிறப்பான் என்று கேள்வியுற்றதும் தனக்குத் தற்காப்பின்மை என்ற உணர்வு ஏற்பட்டதால் இயேசுக் குழந்தை மீது பகையுணர்வு கொண்டான். அவரைக் கொல்லச் சதித்திட்டம் போட்டான்.
பரிசேயர்களின் பாராமுகம்- இஸ்ரயேல் நாட்டின் குருக்களும், சட்டவல்லுநர்களும் புதிய மெசியா அரசர் பிறப்பார் என்று விவிலியம் முன்னறிவித்திருந்தும் அவர்கள் இந்நிகழ்வின்மேல் எந்த அக்கறையும் கொள்ளவில்லை. மாறாக, இயேசு போதிக்கத் தொடங்கியதும் அவரை எதிர்த்துப் போராட ஆரம்பிக்கின்றனர்.
ஞானிகளின் பக்திப் பரவசம்- இயேசு பிறந்த இடத்தை அடைந்ததும் ஞானிகளுக்கு வழிகாட்டி வந்த விண்மீன் நின்றது. அதைக் கண்ட அவர்கள் மட்டில்லாப் பெருமகிழ்ச்சி அடைந்தனர். குழந்தையைக் கண்டார்கள். நெடுசாண் கிடையாய் விழுந்துக் குழந்தையை வணங்கினார்கள். தங்கள் பேழைகளைத் திறந்துப் பொன்னும், சாம்பிராணியும், வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள். பக்திப் பரவசத்தில் மூழ்கினார்கள் .
நாம் இயேசுவை ஆவலோடு தேடிச் சென்றால் அவரைக் கண்டு நாம் மகிழ்ச்சியில் ஆழ்வோம்.
இறைவனின் வழிநடத்துதல் என்றும் நம்மோடு இருக்கும்.
இயேசுவை ஆராதித்து வணங்க நமக்கு வாய்ப்புக் கிடைக்கும்.
இறைவனே நமக்குப் பரிசாக அமைவார்.
இயேசுவைக் கண்ட ஒருவர் மாற்றுப் பாதையில் தான் நடக்க வேண்டும்.
இயேசுவைப் பலர் தேடி வந்தனர். நாமும் அவரைத் தேடினோம் என்றால் அவரைக் கண்டடைவோம். பல ஆயிரக்கணக்கான கல் தூரம் பல வேதனைகளையும், துன்பங்களையும் சகித்துக் கொண்டு ஞானிகள் இயேசுவைத் தேடி வந்தனர்.
இயேசுவைக் கண்டு அனுபவிப்பவர்களின் வாழ்க்கை மாற்றுப் பாதையில் தான் அமையவேண்டும். பழைய மனிதனைக் களைந்துவிட்டுப் புத்தாடை அணிந்துப் புனிதனாக மாறவேண்டும். இதைத்தான் ஞானிகளும் செய்தார்கள்.
கவிதைசிறப்புச் செய்திகாணிக்கைஅமைதிமுகப்பு பக்கம்
A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com