மரியாவின் வியாகுலங்கள் (செப்டம்பர் 15)

அருள்பணி மரிய அந்தோணிராஜ் - பாளையங்கோட்டை

நிகழ்வு

மைக்கேல் ஆஞ்சலோ என்ற கலைஞன் வடித்த மிகவும் தத்ரூபமான ஒரு சிற்பம்தான் ‘Pieta’ என்பதாகும். இந்த சிற்பத்தில் இயேசுவின் இறந்த உடலை தாய் மரியா தன்னுடைய மடியில் வைத்திருப்பார். இந்த சிற்பத்தை அவர் வடிவமைத்து விட்டு, மக்களுடைய பார்வைக்கு அதனை வைத்தார். அதைப் பார்த்த நிறையப் பேர் பாராட்டிச் சென்றார்கள். ஒரு சிலர் சிற்பத்தில் மரியாவின் முகத்தில் இயேசுவை இழந்த கவலை தெரியவில்லை, அவர் மிகவும் இளமையாக இருப்பது போன்று தெரிகின்றார் என்று விமர்சனம் செய்தார்கள். அவர்களுடைய விமர்சனத்தைக் கேட்டுக்கொண்ட மைக்கேல் ஆஞ்சலோ இவ்வாறு பதில் சொன்னார்: மரியாவின் முகத்தில் துக்கமோ, வேதனையோ தெரியாமல் இருப்பதற்குக் காரணம், அவர் இயேசுவின் இழப்பினால், துக்கப்படவில்லை என்று அர்த்தம் கிடையாது. மாறாக தன்னுடைய மகன் உயிர்த்தெழுவார் என்ற எதிர்நோக்கோடு இருந்தார். அதனால் தான் அவருடைய முகத்தில் துக்கமோ, வேதனையோ தெரியவில்லை. மேலும் மரியா இளமைத் தோற்றத்தோடு இருப்பதற்குக் காரணம் அவருடைய தூய்மையும் மாசற்றதன்மைமே ஆகும். அவையே மரியாவை இளமையோடு இருக்கச் செய்தது.

இவ்வாறு அவர் பதில் சொன்னபிறகு சிற்பத்தை விமர்சனம் செய்தவர்கள் அமைதியாகச் சென்றார்கள்.

வரலாற்றுப் பின்னணி

வியாகுல அன்னையின் விழா பதிமூன்றாம் நூற்றாண்டிலிருந்தே கொண்டாடப்பட்டு வந்ததற்கான வரலாறு இருக்கின்றது. 1221 ஆம் ஆண்டு ஸ்கூனன் (Schonan) என்ற இடத்தில் வியாகுல அன்னைக்கென்று பீடம் ஒன்று எழுப்பப்பட்டது. அதன்பிறகு வியாகுல அன்னையின் பக்தி முயற்சிகளை சர்வைட்ஸ் சபையார் வளர்த்தெடுத்தனர். 1727 ஆம் ஆண்டு அப்போது திருத்தந்தையாக இருந்த பதிமூன்றாம் பெனடிக்ட் வியாகுல அன்னையின் விழாவை உலகம் முழுவதும் கொண்டாடப் பணித்தார். 1913 ஆம் ஆண்டு, திருத்தந்தை பத்தாம் பத்திநாதர் இவ்விழாவை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15 ஆம் நாள், அதாவது திருச்சிலுவை மகிமை விழாவிற்கு அடுத்த நாளில் கொண்டாடப் பணித்தார். இவ்வாறு தோன்றியது தான் வியாகுல அன்னையின் பெருவிழாவாகும்.

மரியாவின் ஏழு வியாகுலங்கள்

மரியா, வானத்தூதர் கபிரியேலின் வார்த்தைகளுக்கு ஆம் எனச் சொல்லி, இறைவனின் திருவுளத்திற்கு பணிந்து நடக்கத் தொடங்கியதிலிருந்து, இறந்த இயேசுவை அடக்கம் செய்தது வரை அனுபவித்த வியாகுலங்கள் – துன்பங்கள் – ஏராளம். ஆனாலும் திருச்சபை மரியாவின் வியாகுலங்கள் ஏழு என்று மட்டும் பட்டியலிட்டிருக்கிறது. எனவே, அவை என்னென்ன என்று சிந்தித்துப் பார்ப்போம்.

சிமியோனின் இறைவாக்கு (லூக் 2:25-35)

மரியாவும் இயேசுவின் வளர்ப்புத் தந்தையுமான யோசேப்பும் குழந்தை இயேசுவை எருசலேம் திருக்கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கச் சென்றபோது அங்கிருந்த சிமியோன் குழந்தை இயேசுவைக் கையில் ஏந்தி, “இதோ இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாக இருக்கும். இவ்வாறு பலருடைய எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்” (லூக் 2:34-35) என்று மரியாவிடம் சொல்லுகிறார். சிமியோனின் இவ்வார்த்தைகள் மரியாவின் உள்ளத்தில் மிகப்பெரிய வேதனையை ஏற்படுத்தியிருக்கும். ஏனென்றால், இயேசுவின் தாயாக இருப்பதால் துன்பங்கள் வரலாம் என மரியாவுக்கு தெரிந்திருக்கும். ஆனால் அது இவ்வளவு சீக்கிரமாக வரும் என்று அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார்.

குழந்தையைத் தூக்கிக்கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடுதல் (மத் 2:13-14)

ஞானிகள் தன்னை ஏமாற்றிவிட்டதை அறிந்த கொடுங்கோலன் ஏரோது குழந்தை இயேசுவைக் கொல்வதற்குக் கட்டளையிடுகின்றான். இதனை கனவின் மூலமாகத் தெரிந்துகொண்ட யோசேப்பு மரியாவையும் குழந்தை இயேசுவையும் தூக்கிக்கொண்டு எகிப்துக்கு ஓடுகிறார். பெத்லகேமிலிருந்து எகிப்து 600 கிலோ மீட்டர் தூரம் இருக்கும். அவ்வளவு தூரத்தையும் பயத்தோடும், வேதனையோடும் கழித்த மரியாவிற்கு இது ஒரு வியாகுலம்தான்.

சிறுவன் இயேசு கோவிலில் காணாமல் போதல் (லூக் 2:43- 47)

தூய அல்போன்ஸ் லிகோரி கூறுவார், “மரியா அடைந்த வியாகுலங்களில் மிகவும் கொடியது இயேசு எருசலேம் திருக்கோவிலில் காணாமல் போனதுதான். ஏனென்றால் மற்ற வியாகுலங்களில் இயேசு மரியாவோடு உடன் இருப்பார். இதில் இயேசு மரியாவோடு இல்லை. தான் ஏதாவது தவறு செய்துவிட்டோமோ, அதனால்தான் இயேசு தன்னைவிட்டுப் பிரிந்துபோய்விட்டாரோ என மரியா நினைத்திருக்கக் கூடும். அது அவருக்கு மிகப்பெரிய வியாகுலமாக இருந்திருக்கும்”. தூய லிகோரி சொன்னது முற்றிலும் உண்மை. இயேசு கோவிலில் காணாமல் போனது மரியாவிற்கு மிகப்பெரிய வியாகுலம்தான்.

இயேசு சிலுவை சுமந்து செல்லுதல் (லூக் 23:27)

கள்வர்களுக்கும் நாட்டைக் காட்டிக்கொடுத்தவர்களுக்கும் கொடுக்கப்படும் சிலுவைச் சாவு, ஒரு பாவமும் அறியாத தன்னுடைய மகனுக்குக் கொடுக்கப்பட்டதை நினைத்து மரியா மிகுந்த வேதனை அடைந்திருக்கலாம். அது அவருக்கு மிகப்பெரிய வியாகுலமாக அமைந்திருக்கும்.

சிலுவையின் அடியில் துணை நின்றது (யோவா 19:41,42)

ஒரு குற்றவாளியைப் போன்று சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கும் தன் மகன் இயேசுவைப் பார்ப்பதற்கு மரியாவிற்கு வேதனையிலும் வேதனையாக இருந்திருக்கும். மூன்று ஆண்டுகள் உடனிருந்து இயேசு செய்த அற்புதங்களையும் அதிசயங்களையும் பார்த்த சீடர்கள் ஓடிப்போனது, இயேசுவிடமிருந்து எவ்வளவோ நன்மைகளையும் நலன்களையும் பெற்றுக்கொண்ட மக்கள் அவரைக் கை நெகிழ்ந்தது இவற்றோடு சேர்த்து, தன் மகன் இப்படி வானத்திற்கும் பூமிக்கும் இடையில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறாரே என்று மரியா மிகுந்த வேதனை அடைந்திருப்பார். அது அவருக்கு பெரிய வியாகுலமாக இருந்திருக்கும்.

இறந்த இயேசுவின் உடலை மடியில் கிடத்திவைத்தல் (யோவா 19: 40)

எருசலேம் திருக்கோவிலில் தன்னுடைய மகனைக் காணிக்கையாக ஒப்புக் கொடுத்தபோது சிமியோன் சொன்ன ‘உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவும்’ என்ற வாக்கு இங்கே நிறைவேறி விட்டதை நினைத்து மரியா பெரிதும் வேதனைப் பட்டிருக்கக்கூடும். இறந்த மகனின் உடலை இப்படியா சுமந்திருப்பது என்று மரியாவிற்கு இந்நிகழ்வு பெரிய வியாகுலமாகவே இருந்திருக்கும்.

இயேசுவை கல்லறையில் அடக்கம் செய்தல் (யோவா 19: 41-42)

இறந்த பெற்றோர்களை பிள்ளை அடக்கம் செய்யும் நிலைமாறி, இங்கே இறந்த தன்னுடைய மகனை தாயாகிய மரியா அடக்கம் செய்கிறார். உலகத்தில் இதைவிட கொடுமை என்ன இருந்திருக்கும்?. மரியா தனக்கு ஏற்பட்ட இப்படிப்பட்ட ஒரு வியாகுலத்தை பொறுமையோடு ஏற்றுக்கொள்கிறார்; எல்லாவற்றையும் இறைத் திருவுளமென தாழ்மையோடு ஏற்றுக்கொள்கிறார். மரியாவைப் பொறுத்தளவில் பாடுகள் தான் பரலோகத்திற்கான நுழைவாயில் என்பது ஆழமான விசுவாசமாக இருந்திருக்கும். அதனால் அவர் எல்லாத் துன்பங்களையும் பொறுமையோடு ஏற்றுக்கொண்டார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

வியாகுல அன்னையின் விழாவைக் கொண்டாடும் இன்று, இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

மரி(அன்னை)யைப் போன்று துன்பங்களை ஏற்போம், அன்னைக்காக துன்பங்களை ஏற்போம்

மரியா, இயேசுவுக்காக, இறைவனின் மீட்புத் திட்டம் நிறைவேறுவதற்காக எவ்வளவோ துன்பங்களை, வியாகுலங்களை அனுபவித்தார். அவரைப் போன்று நாமும் இறைவனின் திருவுளம் இந்த மண்ணில் நிறைவேற வேண்டும் என்பதற்காக துன்பங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுதான் இவ்விழா உணர்த்தும் முக்கியமான செய்தியாக இருக்கின்றது. நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்” என்று (மத் 16:24). இயேசுவின் இவ்வார்த்தைகளுக்கு இணங்க மரியா இயேசுவுக்காக, இறைத் திருவுளம் நிறைவேறுவதற்காக எவ்வளவோ துன்பங்களை அனுபவித்தார். அவரைப் போன்று நாமும் இயேசுவுக்காகத் துன்பங்களை ஏற்கத் தயாராக இருக்கின்றோமா என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

அது மட்டுமல்லாமல், நம்முடைய அன்னையர்களுக்காக நாம் துன்பங்களை ஏற்கவும் தியாகங்களை மேற்கொள்ளவும் துணிந்திருக்கின்றோமா? எனவும் சிந்தித்துப் பார்க்கவேண்டும். ஏனென்றால் பல நேரங்களில் நாம் வளரும்வரை பெற்றோரின், தாயின் உதவிகளை வேண்டிய மட்டும் பெற்றுக்கொள்கிறோம். வளர்ந்த பிறகு பெற்றோர்களை, தாயை முற்றிலுமாக மறந்துபோய் விடுகின்றோம். இந்நிலை மாறவேண்டும். நாமும் அவர்களுக்காக தியாகங்களை, துன்பங்களை மேற்கொள்ளத் துணியவேண்டும்.

கர்நாடகா மாநிலத்தில் சகார தாலுகாவில் உள்ளது செட்டிசாரா கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த பவன்குமார் என்ற 15 வயது சிறுவன், உயர்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றார். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பவன்குமாரை, பாகுபாலி என்று பெருமையுடன் அழைக்கின்றனர். இதற்கு என்ன காரணம்? இவரது தாயார் தினமும் வீட்டு தேவைக்காக அரை கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீர் கொண்டு வந்துள்ளார். தினமும் தண்ணீர் கொண்டு வர, இரண்டு மணி நேரம் அம்மா படும் கஷ்டத்தை பார்த்து வேதனைப்பட்ட பவன்குமார், தன்னுடைய அம்மாவின் கஷ்டத்தை நிரந்தரமாக தீர்க்க முடிவு எடுத்தார். இதற்காக வீட்டின் பின் பகுதியில் கிணறு தோண்ட முடிவு எடுத்தார். அதுவும் தனி ஆளாக கிணறு வெட்ட முடிவு எடுத்தார். பள்ளி விடுமுறை நாட்களில் தினசரி கிணறு வெட்டி அம்மாவின் தண்ணீர் கஷ்டத்தைப் போக்கினார்.

இது பற்றி பவன் குமார் கூறுகையில், “இந்த கிணறு வெட்டத் துவங்கிய போது, பலர் ‘ஏன் இந்த கஷ்டம்?, கிணறு வெட்ட வேண்டாம்’ என்று கூறினார்கள். எனது நண்பர்கள் மட்டுமல்ல, எனது தாயாரும் ‘நீ கஷ்டப்பட வேண்டாம், நான் எப்போதும் போல் கிராம கிணற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வருகின்றேன்’ என்று கூறினார். ஆனால் நான்தான் வீட்டின் பின்புறம் தனி ஆளாக 45 அடி ஆழத்திற்கு கிணறு வெட்டினேன். தொடக்கத்தில் தண்ணீரும் கிடைக்கவில்லை. அந்த சந்தர்ப்பத்தில் என்னுடைய கையில் முறிவு ஏற்ப்பட்டது. எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு அதன்பிறகு கிணறு வெட்டும் இரண்டு தொழிலாளர்களின் உதவியுடன் மேலும் 10 அடி ஆழம் கிணறு தோண்டினேன். இப்போது தண்ணீர் கிடைத்துள்ளது. இதன்மூலம் என்னுடைய அம்மாவின் நீண்ட கால கஷ்டத்தை போக்கியுள்ளேன். அது மட்டுமல்லாமல் எங்கள் கிராமத்தில் இருக்கும் மற்றவர்களும், இந்த கிணற்றில் இருந்து தண்ணீர் சேகரித்து கொள்ளவும் பேருதவியாக இருக்கின்றேன்” என்று கூறுகின்றார்.

ஒரு மகன் தன்னுடைய தாயின் மீது கொண்ட அன்பிற்கு இதைவிட மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இருக்க முடியாது. ஆகவே, நாமும் நமக்காக பலவேறு தியாகங்களை மேற்கொள்ளும் நம் பெற்றோருக்காக – தாய்க்காக – தியாகங்களை மேற்கொள்வோம். அது மட்டுமல்லாமல் மரியன்னையைப் போன்று இறைத் திருவுளம் நிறைவேற துன்பங்களை ஏற்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு மரியாளின் பக்கங்கள்