விசுவாசத்தின் தாய்

தந்தை தம்புராஜ் சே.ச.
our lady of faith

அன்னை மரியாவை 'விசுவாசத்தின் கருவூலம்' என்று சொல்லலாம். பழைய ஏற்பாட்டில் ஆபிரகாமை 'விசுவாசத்தின் தந்தை' என்று கூறுகின்றோம், புதிய ஏற்பாட்டில் அன்னை மரியாவை ‘விசுவாசத்தின் தாய்' என்கின்றோம், ஆகவேதான் அவருடைய பரிந்துரையை நாம் நாடும்பொழுது 'அருள்மிகப் பெற்றவரே' என்று அழைக்கின்றோம்.

வானதூதர் கபிரியேல் மங்கள்வார்த்தை சொன்ன நேரத்திலிருந்து தூய ஆவியார் அவர் மீதும், திருத்தூதர்கள் மீதும் வரும்வரை தினமும் மரியா அருள் வளங்களைப் பெற்றுக்கொண்டே இருந்தார், நமக்கும் இறைவன் பல அருள் வளங்களை கொடுத்துக் கொண்டு தான் இருக்கின்றார். ஆனால் நாம் அவற்றை மண்ணிலே புதைத்து விட்டு வாளாயிருப்பதால் தான் ஆவியின் வல்லமையைப் பயன்படுத்தாமல் இருக்கின்றோம்,

ஸ்காட்லாந்து நாட்டில் ஒரு வயோதிகப் பெண்மணி வாழ்ந்து வந்தாள். அவள் எவ்வளவு ஏழையாக இருந்தாளென்றால் அந்த வட்டாரத்திலிருந்த கிறிஸ்தவ சமூகத்தினர் அவளுக்கு உதவி செய்ய வேண்டியதாயிருந்தது. இவளுடைய மகன் அமெரிக்காவிற்குச் சென்று பெரிய செல்வந்தனாக மாறியிருந்தும், ஸ்காட்லாந்திலே இவள் வறுமையில் வாடி வந்தாள். ஆமாம், இவளுடைய மகன் தான் அமெரிக்காவில் பெரிய பணக்காரனாக இருக்ககிறானே, அப்படி இருக்க இவளுக்கு ஏன் உதவி செய்யாமல், இருக்கிறான்? என்று அக்கம் பக்கத்தில் வாழ்ந்த மக்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்,

ஒரு நாள் அண்டை வீட்டுப் பெண் ஒருத்தி இவளிடம் வந்து, "ஏன் பாட்டி, நீ இங்கு இவ்வளவு வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறாய் என்பது உன் மகனுக்குத் தெரிந்தால், நிச்சயமாக அவன் உனக்கு உதவி செய்வான்" என்று அக்கறையோடு சொன்னாள். அதற்கு அந்தப் பாட்டி “கண்ணே , பாவம் அவனுக்கு எவ்வளவு செலவோ? 'விரலுக்கேற்ற வீக்கம்' என்பார்கள் அல்லவா? ஒன்று மட்டும் நிச்சயம் - என் மகன் மிகவும் நல்லவன், வாரம் தவறினாலும், அன்போடு கடிதம் மட்டும் எழுதத் தவறுவதே இல்லை. ஒவ்வொரு தடவையும் கடிதம் எழுதும் பொழுதும் ஓர் அழகான படத்தையும், அதில் வைத்து அனுப்புகிறான். அப்படங்கள் எல்லாம் வினோதமாக உள்ளன” என்று தன் மகனைப் பாட்டி கொஞ்சம் கூட விட்டுக் கொடுக்காமல் பேசினாள், அதற்கு அந்தப் பெண்மணி "அவற்றையெல்லாம் பத்திரமாக வைத்திருக்கிறாயா பாட்டி?" என்று கேட்க, அதற்கு அவள் "கண்ணே, எல்லாக் கடிதங்களையும் பத்திரமாக வைத்திருக்கிறேன். அந்த அற்புதமான படங்களை எல்லாம் இந்த நல்ல புத்தகத்திலே வைத்திருக்கிறேன்" என்று சொல்லி, பைபிளை எடுத்துக் காட்டினாள்.

பைபிளின் பக்கங்களில் நூற்றுக்கணக்கான அமெரிக்க டாலர் நோட்டுகள் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டபோது வந்திருந்த அண்டை வீட்டுப் பெண்மணி மலைத்துப் போனாள், தன்னிடம் விலை உயர்ந்த ஒரு கருவூலம் இருந்தும் அவள் அதை அறியாதிருக்கின்றாளே என்று ஆச்சரியப்பட்டாள்,

ஆம், அன்பார்ந்தவர்களே! நாம் அனைவரும் கடவுள் அருள்கின்ற பொக்கிஷங்களை, அருள் வளங்களைப் பெற்றுக்கொண்டு தான் இருக்கின்றோம், ஆனால், அதைப்பற்றி அறியாமல் வாழ்ந்து வருகின்றோம். அவற்றை அறிந்து வாழ்ந்தோமென்றால் நமக்கு வல்லமைகள் பல வந்தடையும். அவற்றைப் பயன் படுத்தி நாம் விண்ணரசைக் கட்டிக் காக்க முடியும். ஏனெனில் நாம் அனைவருமே நடமாடும் விண்ணரசின் கருவூலங்கள்!

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு மரியாளின் பக்கங்கள்