மரியா திருச்சபையின் முன்னோடி

அருள் முனைவர் இருதயராஜ்

அக்காவின் திருமணத்தைக் காணும் தங்கை தனக்கும் அப்பா மிகவும் சிறப்பாகத் திருமணம் நடத்துவார் என்ற எதிர்நோக்குடன் மகிழ்கின்றார். அவ்வாறே கடவுள் மரியாவை மகிமைப்படுத்தியது போல நம்மையும் மகிமைப்படுத்துவார் என்பது முற்றிலும் உறுதி.

திருத்தூதர் பவுல் கூறுகிறார். "கடவுளால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்களை அவர் முன் குறித்து வைத்தார். அவர் முன் குறித்தவர்களை அழைத்தார். அவர் அழைத்தவர்களை தமக்கு ஏற்புடையவராக்கினார். தமக்கு ஏற்புடையவர்களாய் செய்தவர்களைத் தம் மாட்சியில் பங்குபெறச் செய்தார். (உரோ 8:23-30)

கடவுள் மரியாவை மீட்பின் தாயாக முன் குறித்தார். அவரை அழைத்தார். தமக்கு ஏற்புடையவராக்கினார். தம் மாட்சிமையில் பங்கு பெறச் செய்தார். மரியாவுக்குச் செய்தவற்றைக் கடவுள் நமக்கும் செய்தார். அதே கடவுள் நம்மையும் கிறிஸ்து வழியாகத் தெரிந்து கொண்டார். கிறிஸ்துவின் சாயலுக்கு ஏற்ப உருமாற்றமும் அடையும்படி அழைக்கிறார். நம் பாவங்களை மன்னித்து நம்மை அவருக்கு ஏற்புடையவராக்குகின்றார். நமக்கும் இறைமாட்சிமையில் பங்களிக்கிறார். எனவே மரியா நமது முழுமையான மீட்பின் முழு அடையாளம்.

மரியாவின் அமல உற்பத்தில், இயேசுவின் மணமகளாகிய மாசுமருவற்ற எழில் மிகுந்த, திருச்சபையாகிய புதிய சமுதாயத்தின் பிறப்பு முன்னறிவிக்கப்பட்டது என்று கன்னிமரியின் அமலோற்பவத் திருவிழாத் திருப்பலியின் தொடக்கவுரையில் திருச்சபை அறிக்கையிடுகிறது.

ஆம், மரியாவின் அமல உற்பவத்தில் கறைதிரையோ, வேறு எக்குறையோ இல்லாமல் தூய்மையும், மாசற்றதுமாய் (எபே 5:27) விளங்க வேண்டிய திருச்சபை தொடங்கிவிட்டது. மரியாவின் மகிமை திருச்சபையின் மகிமையே.

மரியன்னையின் அமல உற்பவம் திருச்சபைக்கும், மனதிகுலத்திற்கும் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்கிறது. மரியன்னையின் அமல உற்பவத்தில் கடவுள் மனித குலத்துடன் நட்புறவு கொள்ள ஆரம்பித்துவிட்டார். மனித குலமும் அலகையின் தீமைக்கு எதிரானப் பேராட்டத்தில் கடவுள் பக்கம் சேர்ந்து விட்டது. மாசுமருவற்ற மரியாவின் அமல உற்பவத்தில் திருச்சபையும் மனிதகுலமும் அருளின், மீட்பின் நிறைவை அடைய அழைக்கப்பட்டுள்ளன.

  • பெண்ணின் வித்து அலகையின் மீது வெற்றி கொள்ளும் (தொநூ 3:15)
  • பாவம் பெருகிய இடத்தில் அருள் பொங்கி வழிந்தது (உரோ 5:20)
  • கடவுள் நம் சார்பில் இருக்கும்போது நமக்கு எதிராக இருப்பவர் யார்? (உரோ 5:31)
  • நாம் தூயோராகவும் மாசற்றோராகவும் கடவுள் முன் விளங்கும்படி உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்துள்ளார். (எபே 1:4)
  • திருச்சபையானது மாசுமறுவோ வேறு எக்குறையோ இன்றி உருமாற்றம் அடையும் (எபே 5:27)
  • நாமும் மரியன்னையுடன் இறைமாட்சிமையில் பங்குபெறுவோம் (உரோ 8:26-30)

mother mary
இறுதியாக மரியா அமல உற்பவியாகப் பிறந்ததும் மீட்பின் தாயாக அழைக்கப்பட்டதும், முப்பொழுதும் கன்னியாகத் திகழ்ந்ததும், விண்ணக மகிமைக்கு உயர்த்தப்பட்டதும், நமக்காக இவ்வுண்மைகளைத் திறந்த மனதுடன் ஏற்று, அவற்றை உலகிற்குப் பறைசாற்றி, மரியன்னையுடன் இணைந்து அலகையின் அச்சாணியை முறித்து புனிதம் கமழும் புத்துலகம் படைப்போம்."அழகின் முழுமையே தாயே! அலகையின் தலை மிதித்தாயே"

நன்றி: விசுவாசக் குரல் -செப் 2014

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு மரியாளின் பக்கங்கள்