அன்னை மரியாள் ஆறுதல் அளிப்பவர்!


திருமதி அருள்சீலி அந்தோனி - சென்னை
mary-oct

செபமாலை அன்னையின் பெருவிழாவை கொண்டாடும் மாதம் அக்டோபர். அவரது இரக்கம் எத்தகையோரிடம் உள்ளது என்பதை இந்த கட்டுரையின் வழியாய் அறிந்து அதனை வாழ்வாக்கவே, இந்த சிறு உண்மை நிகழ்வு சமர்ப்பணம்.
ஆஸ்திரேலியாவில் ஓர் ஏழைப் பெண் வாழ்ந்து வந்தாள். தாயை இழந்தவள். தந்தையின் விருப்பபடி தங்களுடைய ஆடுகளைமேய்த்து வந்தாள். வசதி இல்லையென்றாலும் கடவுளின் திருவுளத்தை ஏற்று தன் வாழ்வில் கடைப்பிடித்து வந்தாள். என்றும் கையில் செபமாலை, வாயில் செபங்கள் சொல்லிக் கொண்டே காடு மேடெல்லாம் ஆடுகளை மேய்த்துக் கொண்டே செபித்து வந்தாள்.

ஒரு நாள் காட்டிற்குள் ஆடுகள் வெகு தொலைவில் மேயச் சென்றுவிட்டன. அவைகளை தொடர்ந்து சென்றபோது, அங்கே ஒரு காட்சியை கண்டாள். ஓர் பாழடைந்த ஆலயம் இருப்பதைக் கண்டாள். அங்கே ஓடோடிச் சென்று பார்த்தாள். அங்கே சிதைந்து போன பீடம். அதன் மீது அழுக்கு படிந்த மரியாவின் அழகிய சுரூபம் கிடப்பதைக் கண்டு ஆனந்தம் கொண்டாள். ஓடோடிச் சென்று சுரூபத்தை தன் துணியால் துடைத்து அந்த பீடத்தையும் சுத்தம் செய்தாள்.

அன்று முதல் அன்னைமரிக்கு தினசரி ஜெபமாலை, காட்டு மலர்கள் பறித்து, அலங்கரித்து மகிழ்ந்து வந்தாள். காலம் உருண்டோடியது. ஆண்டுகள் பல கடந்தன. ஒரு நாள் அவள் தந்தை இறந்து விட்டார். அவள் யாருமில்லா அனாதையானாள். ஆனால் மாதா பக்தியை மட்டும் கைவிடவில்லை. தினசரி பலமுறை செபித்தாள். அவரது மகிழ்வு அன்னையை அலங்கரிப்பதிலேயே இருந்தது.

ஒரு நாள் உடல் சுகமில்லாமல் படுத்த படுக்கையாகி விட்டாள். ஆடுகளை மேய்க்கவும் செல்ல முடியவில்லை. அன்னைக்கு மலர் அலங்காரம் செய்ய முடியவில்லையே என கண்ணீர் கலங்கினாள். அவளது நோயும் அதிகரித்தது. படுத்த படுக்கையானாள். மரணம் நெருங்கியது. வைக்கோல் படுக்கை தான் அவளது மெத்தையானது. அன்று பிரான்சிஸ்கன் துறவியர் இருவர் அவ்வழியே பயணம் போய்க் கொண்டிருந்தார்கள். பயணக் களைப்பால் அந்த காட்டில் ஒர் மர நிழலில் இளைப்பாற தங்கினார்கள். ஒருவர் உறங்கிவிட்டார். அடுத்தவர் அமர்ந்திருந்தார். திடீரென ஒளி வெள்ளத்தை கண்டு உறங்கியவர் விழித்தெழுந்தார்.

அவர் ஓர் அழகிய அரசி இவ்வழியே செல்வது போல் கனவு கண்டேன் என்றார். அந்த வழியில் இன்னமும் ஒளி வெள்ளம் இருப்பதைக் கண்டு, இருவரும் பின் தொடந்தனர். அந்த ஏழைப் பெண்ணின் குடிசையை அந்த அதிசய ஒளி சூழ்ந்திருந்தது. அங்கே அரசியாக இருந்தவள் ஆண்டவரின் தாய் என்பதைக் கண்டு கொண்டனர். அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சியை தந்தது.

அன்னை மரியா, அந்த ஏழை பெண்ணை தேற்றி, அவள் தலையில் பூ முடியொன்றைச் சூட்டினார். சுற்றிலும் நின்ற பெண்கள் அந்தப் பெண்ணுக்குப் பணிவிடைச் செய்தார்கள். இயேசுவின் திருப் பெயரை மகிழ்வுடன் கூறிய அந்த பெண் தன் ஆன்மாவை இறைவனிடம் ஒப்படைத்தாள். காட்டுமலர்களால் அன்னையை அலங்கரித்த அந்த ஏழைப் பெண் அன்னையின் அருளால் விண்ணக பேறுபெற்றாள்.

அன்பார்ந்தவர்களே!

புனித அன்னையை மகிமைப்படுத்தும் ஒவ்வொருவரையும் அவருடைய திருமகன் மகிமைபடுத்துகின்றார். மாதா இறைத்திட்டத்திற்கேற்ப சிலுவையருகே நின்று தன் மகனோடு துன்புற்று, அவரது பலியுடன் இணைந்தாள். அதனால் மாதாவின் பிள்ளைகளை இயேசு விரைந்து வந்து காக்கின்றார். மீட்கின்றார். இதனால் தான் சாத்தான் தான் அழிக்க விரும்பும் நபர்களை மாதாவின் அடைக்கலத்திலிருந்து விளக்கிட பற்பல முயற்சிகளை கையாள்கின்றது. அவ்வழியில் விழுந்த பலர் மாதாவை புறக்கணிக்க தொடங்கி விரைவில் திருச்சபையை விட்டே விலகி தனி சபைகளைத் தொடங்கி விடுகின்றார்கள்.

செபமாலையை பக்தியோடு செபிக்க தொடங்கினாலே பேய்கள் பறந்து ஓடும். "அம்மா" என்று அழைப்பவர் மனதில் மகிழ்வு குடிக் கொள்ளும். அவர்களது ஆன்மா வளம் பெறும். பிணிகள் நீங்கு. பிரசனைகள் தீரும். துன்ப துயரங்கள் விலகும். அனைத்து ஆசீர்களும் வந்தடையும் என்கிறார் தேம்பாவானி ஆசிரியர். அன்று கபிரியேல் தூதர் பணிவுடன் மங்களச் செய்தியை மகிழ்வுடன் வாழ்த்தினார். நாமும் அனுதினமும் "ஆவே மரியா! மரியே வாழ்க!" என போற்றவும் வாழ்த்தவும் கடமை பட்டுள்ளோம். எல்லா நேரத்திலும், எல்லா வேளையிலும் அன்னையை வாழ்த்தலாம். ஆலய மணியோசை கேட்டதும் மூவேளைச் செபத்தை செபிப்போம். இத்தகைய மாதாவின் பக்தியை இன்று நாம் காணும் பக்தக்கோடிகளின் பாத யாத்திரை நம்மை மண்ணக மாந்தரின் நடுவில் அன்னை மரியா வலம் வந்து கொண்டிருகின்றாள் என்பதை அனைத்து சமயங்களும் வியந்து மகிமைபடுத்துகின்றனர். ஏன் பிரிந்த சபையினரும் வியந்த வண்ணம் அவர்களும் தன்னையே மறந்து அன்னையிடம் வந்து சரணடைகின்றார்கள். இதனை இந்த காட்சியை வேளாங்கண்ணியில் கண்டு களிக்கலாம். வாருங்கள் வாசகக் பெரும்மக்களே!

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு மரியாளின் பக்கங்கள்