ஒரு தேவஇரகசிய ரோஜாச் செடி

திருமதி அருள்சீலி அந்தோணி -ஆலந்தூர்- சென்னை.

அக்டோபர் மாதம் செபமாலை அன்னையின் மாதம். எனவே செபமாலை ஒரு தேவஇரகசிய ரோஜாச் செடி என்பதை பற்றி இங்கே அறிவோம்.

விண்ணகத்திலிருந்த நேராக வந்துதிக்கும் இந்த தேவஇரகசிய ரோஜாச் செடியை உங்களுக்கு இங்கே அர்ப்பணிக்கின்றார் புனித லூயி மாண்போர்ட்.
இந்த செடியை உங்கள் ஆன்மாவாகிய பூத்தோட்டத்தில் நடுவீர்களாக. தேவஅன்பின் தியானம் எனும் நறுமணமலர்க்குள் இணைத்திடுங்கள். ஏனென்றால் இது ஒரு விண்ணக செடி. அதன் வாசனை இனியது. உங்கள் ஆன்மாவாகிய மலர்பாத்திக்குள் இதனையும் இணையுங்கள். இந்த செடியானது மிகவும் தூய்மையானது. உங்களின் பண்பட்ட ஆன்மாவாகிய நிலத்தில் நட்டு பராமரித்த வரும்போது வியத்தகு உயரமாக வளர்ந்து பல கிளைகள் விட்டு தழைத்து வளரும். மற்ற பக்திமுயற்சியையும் தடைசெய்யாமல் அனைத்தையும் பாதுகாத்து பரமனின் பாதம் சேர்க்கும். இதுவே வாடாத மலர் -செபமாலையாகும்.

நீங்கள் ஞானத்துடன் இருப்பதால் இதனை நான் என்ன நோக்கத்துடன் கூறுகிறேன் என்ற அறிந்து கொள்வீர்கள். அந்த தேவ இரகசிய ரோஜாச் செடியின் பொருள் என்னவென்று தெரியுமா? இயேசுவும், மரியின் வாழ்வில் இறப்பிலும், நித்தியத்திலும் அவர்கள் இந்த ரோஜா செடியாக திகழ்கின்றார்.
இச்செடியின் பசுமையான இலைகள் - சந்தோஷ தேவஇரகசியம்
இங்கே இயேசு மாமரியின் வாழ்வின் சந்தோஷ நிகழ்வுகளை தியானிக்கின்றோம்.
முட்கள் - துக்கதேவஇரகசியம்.
இங்கே முட்கள் குத்தி ஊடுருவிய கூர்மையான முட்களாக உள்ளன. இங்கே இயேசு, மாமரியின் துன்பதுயரங்களை காண்கின்றோம்.
மொட்டுகள் - மகிமைதேவஇரகசியம்.
மொட்டுக்கள் மலர்ந்து மணம் பரப்பும் என்று ஆவலோடு எதிர்பார்க்கும் நமது ஆவலை மேலும் அதிகரித்து தூய ஆவி.இயேசு,மரியின் மாட்சிமையை விளக்குகின்றது.
மலர்கள் - ஒளியின் தேவஇரகசியம்
மலர்கின்ற மொட்டுகள் மலர்ந்து அனைவருக்கும் மணம் வீசுவதைப்போல் இயேசு மரியாவின் வாழ்வில் மலர்ந்த புதுமைகள், இறையரசு, உருமாற்றம், என்றும் நம்மோடு வாழ்கின்ற இயேசு திரு பிரசன்னம் ' திவ்விய நற்கருணை " ஏற்படுத்தி அவர்களது உடனிருப்பை வெளிப்படுத்துவதாகும்.

அன்பர்களே! இந்த விண்ணக செடியை உங்கள் ஆன்மாவில் நட்டு வையுங்கள். திருச்சபை வழங்கிய மூவொரு இறைவனின் வெளிப்பாடாகிய விசுவாசப்பிரமாணத்தை முதன்மை செபமாக கொண்டு இயேசுவின் செபம் பரலேகமந்திரத்தையும் இறைவன் கபிரியேல் வானத்தூதர் வழியாக கூறிய மங்களவார்த்தையை பத்துமணிகளிலும் தமத்துவபுகழ் மாலையை இணைத்து ஒவ்வொரு பத்துமணியாக செபிக்கும்போது ஒவ்வொரு ரோஜாஇலைகள், முட்கள்,மொட்டுகள், மலர்கள் என்று இணைத்து ஒரு தேவ இரகசிய ரோஜாச்செடியாக நாம் அர்ப்பணிக்கின்றோம்.
இந்த தேவஇரகசிய ரோஜாச் செடியை கண்காணித்து விசுவாசம் என்னும் நீர் பாய்ச்சி,எங்கும் சிதறிக்கிடக்கும் ஆன்மாக்களை ஒன்றிணைத்து, அருள் நிறைந்த மரியென்னும் விதையை ஊன்றி, தமத்திருத்துவ புகழென்றும் நீர் ஊற்றி, பராமரித்து வரும்போது எதிர்காலத்தில் சிதறும் ஆன்மாக்கள் வந்து இந்த இரகசிய ரோஜா செடியில் அமர்ந்து அருளென்னும் மலர் மணத்தை முகர்ந்து பல ஆன்மாக்களை காத்திடும் அருள் சுனையே இந்த அழகிய இரகசிய ரோஜாச் செடி என்பதை உணர்ந்திடுவோம்.

என்றும் செபமாலை செபித்திடுவோம். அன்னை மடியினில் தவழ்ந்திடுவோம்.


 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு மரியாளின் பக்கங்கள்