இதயத்திலிருந்து...
தந்தை தம்புராஜ் சே.ச.
ஆகஸ்டு மாதம் அன்னை மரியா விண்ணேற்றம் அடைந்த பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். நமது நாடு அடைந்த சுதந்திரத்தையும் நினைத்து ஒரு விழா எடுக்கின்றோம். மேற்கூறிய இரண்டு விழாக்களும் சாத்தியமானதன் காரணம் நம்பிக்கை! அன்னை மரியாவுக்கு இறைவனது பராமரிப்பின் மீது நம்பிக்கை இருந்ததனால் தான் அவர் இறைவனின் தாயாகும் பேற்றினைப் பெற்றார். மங்கள வார்த்தை அவருக்குச் சொல்லப்பட்டபோது இறைவனின் வாக்கில் நம்பிக்கை வைத்து 'ஆம்' என்று சொன்னார். இறைவனின் தாயானதால் அவரை இறைவன் ஆன்மாவோடும், உடலோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொண்டார் என்று திரு அவை நம்புகிறது.
ஒரு நாள் நாம் சுதந்திரம் பெறுவோம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருந்ததால்தான் நம் முன்னோர்கள் தங்கள் உயிரையே தியாகம் வைத்து, சுதந்திரத்திற்காகப் போராடினார்கள்.
எபிரேயருக்கு எழுதிய நாலில் இது விளக்கிக் கூறப்படுகின்றது: "நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி. கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை. இந்த நம்பிக்கையால்தான் நம் மூதாதையர் நற்சான்று பெற்றனர்" (எபிரேயர் 11:1-2).
இதை விளக்க ஒரு சிறுகதை :
காட்டுக்குள்ளே முனிவர் ஒருவர் தவம் செய்துகொண்டிருந்தார். காட்டுக்கு வேட்டையாடச் சென்ற அரசனின் அம்பு ஒன்று தவறி முனிவரின் மீது பட்டுவிட்டது. முனிவர் மயங்கிக் கீழே விழுந்தார். செய்யக்கூடாத செயல் ஒன்றை செய்துவிட்டதாக எண்ணி அரசன் குதிரையில் தப்பி ஓடினான்.யாரோ அவனைத் துரத்துவது போன்ற பிரமை.
அவன் தப்பித்துச் சென்ற வழியிலே ஒரு குடிசை. அதற்குள் எட்டு வயது சிறுவன் ஒருவன். தாய் விறகு பொறுக்க வெளியில் சென்றிருந்தாள். அரசன் அந்த வீட்டுக்குள் புகுந்து அங்கே இருந்த சிறுவன் காலில் விழுந்து தன்னைக் காப்பாற்றும்படி கெஞ்சினான்.சிறுவனோ "கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை " என்ற பாடத்தைத் தாயிடமிருந்து நன்றாகக் கற்றுத் தேர்ந்தவன். ஆகவே, அரசனைப் பார்த்து “அரசே, மண்டியிட்டு மூன்று முறை 'இறைவா, என்னை மன்னித்து விடு' என்று சொல். உன் மனதிலே அமைதி பிறக்கும்” என்றான். அரசனும் அப்படியே செய்தான். அமைதி பிறந்தது. திரும்பிச் சென்று முனிவரிடம் மன்னிப்புக் கேட்டு, அவருக்கு வேண்டிய உதவியைச் செய்தான்.
தாய் வீடு திரும்பியதும் சிறுவன் நடந்ததைச் சொல்ல, தாய் அழுதாள். "ஏனம்மா அழுகிறாய்? நான் நற்செயலைத்தானே புரிந்திருக்கிறேன்?" என்றான் மகன். அதற்குத் தாய், "மூன்று முறை ஏன் கடவுளைப் பார்த்து மன்றாடச் சொன்னாய்? ஒருமுறை செபித்தால் போதும், கடவுளின் கருணை கிடைக்கும் என்று சொல்லும் அளவுக்கு உன் விசுவாசம் வளரவில்லையே என்பதை நினைத்து அழுகிறேன்" என்றாள்.
ஆம் அன்பார்ந்தவர்களே, நூற்றுவர் தலைவன்கூட தனது பணியாளருக்குக் குணம் தேடி வந்தவன், இயேசுவிடம், 'ஒரு வார்த்தை சொல்லும், என் ஊழியர் நலமடைவார்' என்று நம்பிக்கையோடு வேண்டினான். அதேபோல், நாமும் நமது செபத்திலே அதிக வார்த்தைகளைச் சொல்லிப் பிதற்றாமல், நம்பிக்கையோடு சிறு வார்த்தைகளின் வழியாக இறைவனிடம் செபிக்கும் வரத்தை மன்றாடுவோம். இறையாசீர் என்றும் உங்களோடு!.