வானக ராணியே! வையக ராணியே!

சகோ. ஜோவிட்டா, தூய சிலுவை மடம், திருச்சி

பரம தந்தையின் அன்பு:

உலகைப் படைத்த இறைவன், மனிதன் மகிழ்ந்து வாழ ஏதோன் தோட்டத்தில் பலவகையான பழ மரங்களைப் படைத்தார். பின்னர் "கடவுள் மானிடரை தம் உருவில் படைத்தார். கடவுளின் உருவிலேயே அவர் களைப் படைத்தார். ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்" (தொநூ 1:27). படைத்த இறைவன் மனுவைப் படைத்தான் தன்னை வணங்க. ஆனால் பாம்பின் சூழ்ச்சி வலையில் சிக்கினாள் ஏவாள். 'தோட்டத்தின் நடுவில் உள்ள மரத்தின் கனியை மட்டும் நீங்கள் உண்ணக்கூடாது என்று கடவுள் சொன்னார்' என்றாள். ஆனால் கடவுள் சொல் கேளாது, பாம்பின் பேச்சில் சிக்கிய அவள், அந்த மரம் பார்ப்பதற்கு அழகாகவும், உண்பதற்கு சுவை தரும் மரம் போலும் இருந்ததைக் கண்டு அதன் பழத்தைப் பறித்து உண்டாள் (தொநூ 3:6).

கடவுள் சொல்லைக் கேளாத அவர்கள் பயத்தால் அஞ்சினர். பாம்பின் மாயப் பேச்சில் மயங்கியதால் அவர்கள் தோட்டத்திலிருந்து வெளியே துரத்தப்பட்ட பின்பு, பாம்பைப் பார்த்து "உன் வித்துக்கும், அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து, உன் தலையைக் காயப்படுத்தும்" என்றார் கடவுள் (தொநூ 3:15). இதனால் கோபம் கொண்ட பாம்பு மனிதனை ஆபத்தில் சிக்க வைத்துவிட பணம், பதவி, பட்டம் என்று ஆசை காட்டி அவனை மயக்கியது. ஆனால் அன்பான கடவுள் மனிதனை மீட்க தம் ஒரே மகனையே பாவத்திற்குக் கழுவாயாகத் தேர்ந்தெடுத்து அவரை உலகிற்கு அனுப்பினார். அவரோ அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார் (பிலிப்பியர் 2:7). இவ்வாறு இறைமகன் இயேசு மனுவுரு எடுத்திட மரியாவை கடவுள் தகுதியுடையவர் ஆக்கினார். ஒரு பெண்ணால் அடிமைத் தன்மையும், அச்சமும் கிடைத்தன. மற்றொரு பெண்ணால் விடுதலையும் உரிமையும் கிடைத்தன.

மரியாவின் பணிவு:

தனிமையில் செபத்தில் இருந்த பெண்ணிடம் வானதூதர் தோன்றிடவே அவள் அஞ்சி னாள். வானதூதர் அவரிடம் "தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும்" என்றார் (லூக் 1:35). கடவுள் செயல் இது என்று அறிந்த மரியா "நான் ஆண்டவரின் அடிமை" (லூக் 1:38) என்றார். அன்று முதல் மரியா தனிமையிலும், செபத்திலும் தன்னை ஒறுத்து வாழ்வதில் அதிகம் ஈடுபட்டார். "உம் உறவினராகிய எலிசபெத்தும் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்து இருக்கின்றார்" (லூக் 1:36) என்ற செய்தி வானதூதரால் மரியாவுக்கு அறிவிக்கப்பட்டது. உடனே அவருக்கு உதவி செய்ய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார் மரியா (லூக் 1:39).

பல்வேறு இன்னல்கள் மரியாவின் உள்ளத்தை அழுத்தினாலும், வானதூதர் அறிவித்த அனைத்தையும் பணிவுடன் ஏற்று, பிறர் நலனில் அக்கறை காட்டினார். "தன்னலமற்ற
மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டதும் அவள் வயிற்றில் இருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று" (லூக் 1:40). இவ்வாறு மரியாவின் வாழ்த்தைக் கேட்டதும் தாயும், சேயும் மகிழ்ந்தனர். அதேபோல் எலிசபெத்து உரத்தக் குரலில் "பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர். உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே" (லூக் 1:41) என்று மரியாவை வாழ்த்தினார். பணிவும், அடக்கமும் ஒன்று சேர்கையில் மனமும் மகிழ்ச்சியடைகிறது. தாயைப் போலவே தன் மகன் இயேசுவும் பிறரின் துயரத்தில் ஆறுதல் கூறினார். இலாசர் இறந்த செய்தி கேட்டு இயேசு மரியா-மார்த்தா வாழ்ந்த வீட்டிற்குச் சென்றார். பின் கல்லறைக்குச் சென்று உரத்தக் குரலில் "லாசரே, வெளியே வா" என்று கூப்பிட்டார். இறந்தவர் உயிரோடு வெளியே வந்தார் (யோவா 11:43-44). தாயிடம் உள்ள அன்பும், அக்கறையும் இயேசுவிடம் காணப்பட்டது. பணிவு உள்ள நெஞ்சில் அன்பும், அக்கறையும் காணப்பட்டன. தன்னைப்போல் தன் மகனும் செயல்பட மரியாவின் தாழ்ச்சியும், செபமும் இயேசுவின் பணி சிறக்க உதவியும், ஊக்கமும் அளித்தன.

அன்னை மரியின் துணிவு:

இயேசுவின் பிறப்பு முதல் சாவு வரை தன் மகன் எல்லா பாடுகளையும் ஏற்றிட துணிவு கொடுத்தார் அன்னை மரியா. தூய ஆவியால் நிரப்பப்பட்ட அன்னை மரியா சீடர்களுடன் ஒன்றுசேர்ந்து செபிக்கையில் அவர்களின் அச்சம் அகன்றது. சீடர்கள் மேல் நாவு போன்று நெருப்பு மயமான தூயஆவி இறங்கியது. தூய ஆவியால் நிரப்பப்பட்ட ஒவ்வொருவரும் வெவ்வேறு மொழிகளில் பேசினாலும் (தி.பணி 2:4), மக்கள் அவர்கள் பேசியதை தத்தம் மொழிகளில் புரிந்துகொண்டனர். அன்று முதல் சீடர்கள் துணிவு பெற்றனர். அவர்கள் செயலிலும் சொல்லிலும் துணிவு காணப்பட்டது.

இயேசு செய்த செயல்களைப் போல் பல அற்புதங்கள் செய்து இயேசுவின் அன்பிற்குச் சாட்சியாய் வாழ்ந்தார்கள் சீடர்கள். பிறர் நலனில் அக்கறையுடனும், அன்புடனும் பணி செய்து "உன்மீது நீ அன்பு கூர்வதுபோல், உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர் வாயாக" (மத்தேயு 19:19) என்ற இறை வாக்கிற்குச் சாட்சியாய் வாழ்ந்தனர். இவர்கள் சொல், செயல் நல்ல விதையாக, பயன் தரும் மரமாகி, கனி தந்திட அவர்களுக்குத் துணிவு அளித்தவர் அன்னை மரியே.

"இதோ உன் மீட்பு வருகிறது. அவரது வெற்றியன் பரிசு அவருடன் உள்ளது" (எசாயா 62:11) என்ற இறைவாக்கு சீடர்களின் வாழ்வில் உண்மையாயிற்று. ஏனெனில் அவர்களின் போதனையால் தொடப்பட்ட பலர் பாவத்திலிருந்து விடுதலை பெற்று, "கடவுளை அப்பா, தந்தையே" (உரோமையர் 8:15) என்று அழைத்திடும் உரிமை பெற்றனர். ஏனெனில் இயேசு சிலுவையில் இரத்தம் சிந்தி தமது விலையேறப்பெற்ற இரத்தத்தால் நம்மை மீட்டார். இதற்கு ஆணிவேராய் செயல்பட்டவர் அன்னை மரியா.

எனவே, "களிகூரு மகளே, எருசலேமே ஆர்ப்பரி" (செக் 9:9) என்று வானதூதர்கள் மகிழ்ந்து பாடி மரியாவைப் போற்றிட அன்னை மரியா விண்ணுலகு சென்றார்.

ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாளாம் (திருப்பாடல் 118:20) சுதந்திர விழா அன்று அன்னை மரியா விண்ணுலகு சென்றார். எனவே, திருச்சபை ஆகஸ்டு 15 ஆம் நாளை கடன் திருவிழாவாகக் கொண்டாடி, அன்னைக்கு அஞ்சலி செலுத்துகிறது.

பாவத்திலிருந்து விடுதலை பெற்ற நாம் அன்னை மரியைப் போற்றி வணங்கி அவரின் துணிவை நாம் பெற்றிட அன்னை மரியாவிடம் செபிப்போம். ஏனெனில் "உம் திருமுன்
என்னை அகமகிழச் செய்தவரே" (திபா 2:11); "உம்மில் நான் அக்களித்து களிகூர்ந்து இருக்கச் செய்யும்" (இபா 1:4); உன் உன்னத செயலை நினைந்து எமக்கு விடுதலை கிடைத்த இந்த நாளில் அன்னை மரியா விண்ணுலகு சென்றது பெருமையும் மகிழ்ச்சியும் அளிக்கிறது.

பெற்ற விடுதலையைப் பேணிக் காத்திட, நம் நாட்டை ஆளும் தலைவர்கள் தன்னலமற்றவர்களாய், மக்கள் நலனில் அக்கறை காட்டி, எல்லாவிதமான அச்சத்திலிருந்தும் எம்மை
விடுத்தவரை (திருப்பாடல் 34:3), "நீரே என் புகலிடம் என் அரண்" (திருப்பாடல் 94:21)ஆக இருந்து சிறந்த முறையில் நாட்டை வழி நடத்திச் செல்லும் ஞானத்தை அவர்களுக்கு அளித்திட உம் அருள் வேண்டுகிறோம்.

அன்னையின் அருள் பெற்றிட, தாய் மரியாவிடம் நமது நாட்டை அர்ப்பணித்து "அஞ்சாதே, உனக்குத் துணையாய் இருப்பேன்" (எசாயா 41:10) என்ற இறைவாக்கை நம்பி, துணிவு பெற்ற மக்களாய் வாழ்வோம்.

 

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  மரியாளின் பக்கங்கள்