நமது அருமை அன்னை விண்ணேற்பு

அருள்தந்தை தம்புராஜ் சே.ச.

இயேசுவின் இனிய நாமத்தில் என் நெஞ்சுக்கினிய உள்ளங்களே வணக்கம்!

ஆகஸ்டு மாதம் என்றாலே நமக்கு நினைவு வருவது இரண்டு முக்கிய நிகழ்வுகள். ஒன்று, இந்தியா சுதந்திரம் பெற்ற மாதம் - 15 ஆம் தேதி. இரண்டாவது, நமது அருமை அன்னை , இயேசுவின் தாய், திருச்சபையின் தாய் விண்ணகம் ஏறிச் சென்ற நிகழ்வு.

அன்னை மரியாவுக்கு இத்துணைப் புகழைக் கடவுள் கொடுத்ததற்குக் காரணம், இறைவன் சொற்படியே நடந்தது. இறைச் சித்தத்திற்கு அடிபணிந்து 'ஆம்' என்று சொன்னதால்தான், ஒருவரை நாம் அன்பு செய்கின்றோம் என்றால், அவர் சொல்வதை எல்லாம் தட்டாமல் செய்வதாகும்.

ஒரு பெற்றோருக்கு ஒரு பிள்ளை இருந்தான். அவன் பெற்றோருக்குக் கீழ்ப்படிவதே இல்லை. ஒரு நாள் அவன் பள்ளிக்குச் செல்வதற்கு முன் கடைக்குப் போய்ச் சில பொருட்களை வாங்கி வரச் சொன்னாள் தாய். அதற்குச் சிறுவன் 'முடியாது" என்றான். அவனது தகப்பன் அலமாரியில் இருக்கும் நூல்களை அடுக்கி வைத்து விட்டுப் பள்ளிக்குப் போகச் சொன்னார். அதற்கும் 'முடியாது” என்றான் சிறுவன்.

சிறுவன் பள்ளிக்குச் சென்று திரும்பி வந்தான். தாய் பத்திரிகை ஒன்றைப்படித்துக் கொண்டிருந்தாள், தந்தையோ தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தார், வழக்கம்போல் சிறுவன் "அம்மா காப்பி" என்றான். "என்னால் உனக்குக் காப்பித் தயாரித்துக் கொடுக்க முடியாது" என்றாள் தாய், தன் தந்தையிடம் சென்று அவன் "என்னை ஹோட்டலுக்குக் கூட்டிப் போங்கள்" என்றான். தந்தையோ "முடியாது" என்றார்,

"இன்றைக்கு உங்க இரண்டு பேருக்கும் என்ன ஆச்சு? உண்மையிலேயே நீங்க என்னை அன்பு செய்றீங்களா?" எனக் கேட்டு அழத் துவங்கினான். தாயும், தந்தையும் "மகனே, உன்னை நாங்கள் அன்பு செய்கிறோம். ஆனால் நீ சொல்கிறபடி மட்டும் நாங்கள் நடக்க மாட்டோம்" என்றனர்,

சிறுவனோ “இது பொய்யான அன்பு" என்றான்.

"எங்களுடைய அன்பு பொய்யான அன்பு என்றால், என்றான், அவனது தகப்பன் உன்னுடைய அன்பும் பொய்யான அன்புதான்” என்றனர். பள்ளிக் சிறுவன் உண்மையை உணர்ந்துத் திருந்தி வாழ்ந்தான்.

ஆம், அன்பார்ந்தவர்களே, நாம் அனைவரும் மரியாவின் மைந்தர்கள் என்றால், நாமும் கடவுளுடைய வார்த்தையைக் கேட்டு அதன்படி நடந்து கீழ்ப்படிய வேண்டும்.

மலைப்பொழிவில் இதைத் தான் இயேசுவும் கற்பித்தார். “என்னை நோக்கி 'ஆண்டவரே, ஆண்டவரே' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகில் உள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்" (மத்தேயு 7:21) என்கிறார்.

assumption

அன்னை மரியா விண்ணரசுக்குள் நுழைந்ததால் ஆர்ப்பரிப்போம்! அக்களிப்போம்! அவருடைய பிள்ளைகளாகிய நாமும் ஒரு நாள் விண்ணரசுக்குள் நுழையும் பாக்கியம் பெறுவோம் என்ற நம்பிக்கையில் வாழ்வோம்.

இறையாசீர் என்றும் உங்களோடு...!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  மரியாளின் பக்கங்கள்