யாக்கோபு எழுதிய திருமுகம் - 3

அதிகாரங்கள்



1 2 3 4 5

அதிகாரம் 3

1 என் சகோதர சகோதரிகளே, உங்களுள் பலர் போதகர் ஆக விரும்பவேண்டாம். போதகர்களாகிய நாங்கள் மிகக் கண்டிப்பான தீர்ப்புக்கு உள்ளாக வேண்டுமென உங்களுக்குத் தெரியும்.

2 நாம் எல்லாருமே அடிக்கடி தவறுகிறோம். பேச்சில் தவறாதோர் நிறைவு பெற்றவராவர். அவர்களே தம் முழு உடலையும் கட்டுப்படுத்தவல்லவர்கள்.

3 குதிரைகளை அடக்க அவற்றின் வாயில் கடிவாளத்தைப் போடுகிறோம். இவ்வாறு குதிரைகளை முழுவதுமாகக் கட்டுப்படுத்துகிறோம்.

4 கப்பல்களைப் பாருங்கள். அவை எத்துணை பெரியனவாக இருந்தாலும்ட, கடுங்காற்றால் அடித்துச் செல்லப்பட்டாலும், கப்பலோட்டுவோர் சிறியதொரு சுக்கானைக் கொண்டு தாம் விரும்பும் திசையை நோக்கி அவற்றைச் செலுத்துகின்றனர்.

5 மனித நாவும் அதைப்போல ஒரு சிறிய உறுப்புதான். ஆனால் பெரிய காரியங்களைச் சாதிப்பதாக அது பெருமையடிக்கிறது. பாருங்கள், சிறியதொரு தீப்பொறி எத்துணை பெரிய காட்டைக் கொளுத்தி விடுகிறது.

6 நாவும் தீயைப் போன்றதுதான். நெறிகெட்ட உலகின் உருவே அது. நம்முடைய உறுப்புகளுள் ஒன்றாக அமைந்திருக்கும் இந்த நா நம் உடல் முழுவதையும் கறைப்படுத்துகிறது. அது நம் வாழ்க்கைச் சக்கரம் முழுவதையும் எரித்துவிடுகிறது: எரிப்பதற்கான நெருப்பை நரகத்திலிருந்தே பெறுகிறது.

7 காட்டில் வாழ்வன, பறப்பன, ஊர்வன, கடலில் வாழ்வன ஆகிய எல்லா உயிரினங்களையும் மனிதர் அடக்கிவிடலாம்: அடக்கியும் உள்ளனர்.

8 ஆனால் நாவை அடக்க யாராலும் முடிவதில்லை. கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அது கொடியது: சாவை விளைவிக்கும் நஞ்சு நிறைந்தது.

9 தந்தையாம் ஆண்டவரைப் போற்றுவது அந்நாவே: கடவுளின் சாயலாக உண்டாக்கப்பட்ட மனிதரைத் தூற்றுவதும் அந்நாவே.

10 போற்றலும் தூற்றலும் ஒரே வாயிலிருந்து வருகின்றன. என் சகோதர சகோதரிகளே, இவ்வாறு இருத்தலாகாது.

11 ஒரே ஊற்றிலிருந்து நன்னீரும் உவர் நீரும் சுரக்குமா?

12 என் அன்பர்களே, அத்திமரம் ஒலிவப்பழங்களையும் திராட்சைச் செடி அத்திப் பழங்களையும் கொடுக்குமா? அவ்வாறே, உப்பு நீர்ச் சுனையிலிருந்து நன்னீர் கிடைக்காது.

13 உங்களிடையே ஞானமும் அறிவாற்றலும் உடையவர் யாராவது இருந்தால், ஞானம் தரும் பணிவாலும் நன்னடத்தையாலும் அவற்றைக் காட்டட்டும்.

14 உங்கள் உள்ளத்தில் பொறாமையும் மனக்கசப்பும் கட்சி மனப்பான்மையும் இருக்குமானால் அதைப்பற்றிப் பெருமை பாராட்ட வேண்டாம். உண்மையை எதிர்த்துப் பொய் பேசவேண்டாம்.

15 இத்தகைய ஞானம் விண்ணிலிருந்து வருவது அல்ல: மாறாக, மண்ணுலகைச் சார்ந்தது. அது மனித இயல்பு சார்ந்தது:

16 பேய்த் தன்மை வாய்ந்தது. பொறாமையும் கட்சி மனப்பான்மையும் உள்ள இடத்தில் குழப்பமும் எல்லாக் கொடுஞ் செயல்களும் நடக்கும்.

17 விண்ணிலிருந்து வரும் ஞானத்தின் தலையாய பண்பு அதன் தூய்மையாகும். மேலும் அது அமைதியை நாடும்: பொறுமை கொள்ளும்: இணங்கிப் போகும் தன்மையுடையது: இரக்கமும் நற்செயல்களும் நிறைந்தது: நடுநிலை தவறாதது: வெளிவேடமற்றது.

18 அமைதி ஏற்படுத்துவோர் விதைத்த அமைதி என்னும் விதையிலிருந்து நீதியென்னும் கனி விளைகிறது.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com