prayer

கிறிஸ்து பிறப்பு பெருவிழா நல்வாழ்த்துக்கள்!

வாக்கு மனிதரானார்; நம்மிடையே குடிகொண்டார்

மேதகு முனைவர் லூர்து ஆனந்தம்

ஒப்புரவு நற்செய்தியாளர்கள் இயேசுவே கிறிஸ்து, நாசரேத்து இயேசுவே தந்தை இறைவனால் அருள்பொழிவு செய்யப்பட்டவர் என்று சொல்லும் மையச் செய்தியை யோவான் நற்செய்தியாளர் 'வாக்கு' என்ற சொல்லாட்சியால் வெளிப்படுத்துகிறார். 'தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது' (யோவா 1:1). அனைத்தும் அவரால் உண்டாயின. உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை (யோவா 1:3). 'வாக்கு மனிதர் ஆனார்;; நம்மிடையே குடிக்கொண்டார்' (யோவா 1:14). 'கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை; தந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும் கடவுள் தன்மை கொண்டவருமான ஒரே மகனே அவரை வெளிப்படுத்தியுள்ளார் (யோவா 1:18) என்று யோவான் தனது தொடக்கவுரையில் மானிட உடலேற்பு மறைபொருளை 'வாக்கு' என்ற சொல்லைக்கொண்டு வெளிப்படுத்துகிறார்.
கிறிஸ்தவம் யூத சமயப் பின்னணியில் தோன்றியது.யூதக் கிறிஸ்தவர்கள் யூத மதச் சொற்களில் வெளிப்படுத்தப்பட்ட கிறிஸ்தவ மறையுண்மைகளைப் புரிந்துகொண்டனர். கிறிஸ்தவத்தின் தொடக்கத்திலேயே யூதக் கிறிஸ்தவர்கள் அல்லாத கிரேக்க கிறிஸ்தவர்கள் பெரிய எண்ணிக்கையில் இருந்தார்கள். கி.பி 60 ஆம் ஆண்டிலேயே நூறாயிரம் கிரேக்கக் கிறிஸ்தவர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு யூதச் சமய மொழிநடை புரியவில்லை. குறிப்பாக, 'மெசியா' (மீட்பர்) என்ற சொல்லுக்கான அர்த்தம் தெரியவில்லை. எனவே, அந்தப் பொருளைச் சொல்லும் கிரேக்கச் சொல் ஒன்றை எபேசு நகரில் வாழ்ந்த யோவான் காண முயல்கிறார். அவருடைய தேடலில் அவர் கண்ட முத்துதான் 'வாக்கு.''வாக்கு' என்ற சொல்லுக்குக் கிரேக்க மெய்யியலில் பெரிய பின்புலம் இருந்தது. எனவே, கிரேக்க கிறிஸ்தவர்களுக்கு அதன் அர்த்தம் எளிதில் புரியும். ஆனால், யூதக் கிறிஸ்தவர்களுக்கு அச்சொல் உணர்த்தும் பொருள் புரியுமா என்பது முதலில் விளக்கம் பெற வேண்டும்.

யூதப் பின்னணியில் 'வாக்கு'

எபிரேயரைப் பொருத்தவரை பேசப்பட்ட வாக்கு. உச்சரிக்கப்பட்ட சொல் உயிருள்ளது, சக்தி வாய்ந்தது. ஏசாவுக்குக் கிடைக்க வேண்டிய ஆசிரை யாக்கோப்பு ஈசாக்கிடமிருந்து ஏமாற்றிப் பெற்றுவிடுகிறார். இருப்பினும், யாக்கோப்பு பெற்ற ஆசிமொழி திரும்பப் பெறப்பட இயலாது என்று யாக்கோப்பு உறுதியாக நம்பினார் (தொநூ 27). படைப்புப் பற்றிய வருணனையில் 'ஒளி தோன்றுக' (தொநூ 1:3), 'வானம் தோன்றுக' (தொநூ 1:6), 'உலர்ந்த தரை உண்டாகுக' (தொநூ 1:9) என்று கடவுள் சொல்லும் வார்த்தைகளைத் தொடக்கநூல் பதிவு செய்கிறது. 'ஆண்டவரது வாக்கினால் வானங்கள் உண்டாயின் அவரது சொல்லின் ஆற்றலால் வான்கோள்கள் எல்லாம் உருவாயின' (திபா 33:6) என்று திருப்பாடல் ஆசிரியர் வார்த்தையின் உருவாக்கும், படைக்கும் திறன்பற்றி அழுத்தமாகக் கூறுகிறார்.
பழைய ஏற்பாட்டை எபிரேயத்திலிருந்து இஸ்ரயேல் மக்கள் பேசிய அரமேய மொழிக்கு மொழி பெயர்த்த எழுபதின்மர் (Septuagint) மொழிபெயர்ப்பு தார்கும்ஸ் (Targums) என்று அழைக்கப்படுகிறது. இம்மொழி பெயர்ப்பு 'கடவுள்' என்று சொல்ல வேண்டிய இடத்திலெல்லாம் 'கடவுளின் வாக்கு' என்று பயன்படுத்துகிறது. கடவுள் பெயரை நேரடியாக அழைப்பது அச்சத்திற்கு உரியது என்று கருதியதால், அம்மொழிபெயர்ப்பு 'கடவுளின் வாக்கு' என்றே அழைக்கப்பட்டது. தார்கும்ஸ் 320 இடங்களுக்குக் குறையாமல் 'கடவுளின் வாக்கு' என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது.

கிரேக்கச் சிந்தனையில் வாக்கு

கிரேக்க மெய்யியல் மொத்தத்திற்கும் அடித்தளம் இட்டவர்கள் இரு மெய்யியலாளர்கள். ஒருவர் பார்மெனடஸ் (Parmenedes) பார்மெனடஸ் மாற்றம் (reality) மாறாதது (permanent) என்றார். மற்றவர் ஹெராக்லிட்டஸ் அவர் மாற்றம் (change) ஒன்றே மாறாது. மாறாதது எதுவும் இல்லை. ஒவ்வொரு கணமும் மாறிக்கொண்டே இருக்கிறது. ஒருவர் ஆற்றில் இரு முறை கால் பதிக்க இயலாது. ஏனெனில், ஆற்றில் வெள்ளம் ஓடிக்கொண்டே இருக்கிறது என்றார்.

எல்லாம் மாறிக்கொண்டே இருக்கிறது என்றால் உலகத்தில் பெரும் குழப்பம் அல்லவா நிகழ வேண்டும். காலை மாறி மாலை வருகிறது. பகல் மாறி இரவு வருகிறது. நெருப்பு எப்போதும் சுடுகிறது. பனிக்கட்டி எப்பொழுதும் குளிர்கிறது. இவ்வாறு உலகச் செயல்பாட்டில் ஓர் ஒழுங்கு (order) இருப்பது எப்படி என்று கேட்கப்பட்டது. அதற்குக் காரணம் 'வாக்கு' (Logos) என்றார் ஹெராக்லிட்டஸ். இந்த வாக்கு கடவுளின் அறிவு (reason) அல்லது ஞானம் என்றார் ஹெராக்லிட்டஸ். அவருக்குப் பின் ஸ்டாய்க்ஸ் (Stoics) மெய்யிலார்களும், அலெக்சாந்திரியா நகர பிலோவும் இவ்விளக்கத்தை ஏற்றுக்கொண்டனர். கிரேக்க மெய்யியலின்படி 'வாக்கு' (Logos) கடவுளுக்கும் உலகிற்குமிடையே உள்ள இடைநிலையாளர் (intermediary).

யூதரும் கிரேக்கரும்

கி.பி முதல் நூற்றாண்டளவில் யூதரும் கிரேக்கரும் 'வாக்கு' (Logos) என்பது கடவுளின் ஞானம் (mind of God). அதுவே உலகை உண்டாக்கியது, உலகிற்கு அர்த்தம் கொடுப்பது என்று புரிந்து கொண்டனர். எனவே, நற்செய்தியாளர் யோவான் யூதருக்கும், கிரேக்கருக்கும் இயேசு கிறிஸ்துவில் கடவுளின் உலகைப் படைக்கும், ஒழுங்குபடுத்தும், நிலைப்படுத்தும், ஒளிர்விக்கும் கடவுளின் ஞானம் உலகிற்கு வந்தது என்றார். ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவில் கடவுளின் ஞானத்தைக் காண வேண்டும். 'தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது... அனைத்தும் அவரால் உண்டாயின, உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை' (யோவா 1:1-3).

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு கிறிஸ்மஸ்மலர்