prayer

கிறிஸ்து பிறப்பு பெருவிழா நல்வாழ்த்துக்கள்!

தல கிறிஸ்மஸ்

பி.மரிய அமலி

"நான்சி நான்சி" என வேகமா அழைத்தபடி வீட்டிற்குள் நுழைந்தான் ரயன்.
"என்ன ரயன்"
"லியா யு.கேலிருந்து வீடீயோ காலில் கூப்பிடுகிறாள், நான் ஐந்து நிமிடத்தில் குளித்து விட்டு வருகிறேன். ஒரே வியர்வையாக உள்ளது. நீ பேசிக்கிட்டு இரு. இதோ வந்துர்றேன்" என்று கூறி போனை அவள் கையில் கொடுத்து விட்டுக் குளியலறை சென்று விட்டான்.
"ஹாய் ரியா, சாம் எப்படி இருக்கிங்க" என்றாள் நான்சி.
"ஹாய் அண்ணி, நாங்க நல்லா இருக்கோம். எங்க அண்ணா?" என்றாள் ரயனின் தங்கை ரியா
ஜிம் போய்விட்டு இப்பத்தான் வந்தான். குளித்துவிட்டு வர்றேனு போயிருக்கான். அங்க யு.கேயில பனி விழ ஆரம்பித்து விட்டதா?"
"ஆமாம் நான்சி குளிர் ஆரம்பிச்சுருச்சு. ஸ்நோ ஆரம்பிக்கல" என்றான் ரியாவின் கணவன் சாம்.
"அண்ணி, உங்க அம்மா அப்பா யு.எஸ் போறிருக்காங்கனு கேள்விப்பட்டேன். அப்ப முதல் கிறிஸ்துமஸ் எங்களோடுதானே" என்றாள் ரியா.
"ஆமாம் ரியா நம்ம இரண்டு பேருக்குமே இது முதல் கிறிஸ்துமஸ் சேர்ந்து கொண்டாடுவோம். நீங்க எப்ப வர்றீங்க கிறிஸ்துமஸ்க்கு?" என்று கேட்டாள்.
"அதப்பத்தி பேசத்தான் அழைத்தோம்" என்றான் சாம்.
"ஹாய் ரியா", "ஹாய் மாப்பிளை எப்படிடா இருக்க?" என்றான் ரயன்.
"மச்சான் என்ன ரொம்ப வெய்ட் போட்ட மாதிரி இருக்கு அதுதான் ஜிம் போறியா?" என்றான் சாம்.

"அம்மா சொல்லுவாங்க, அண்ணி நல்லா சமைக்கிறாங்கன்னு அண்ணன் சாப்பிட்டு சாப்பிட்டு குண்டாய்ட்டாங்க போல" என்றான் ரியா.
"உண்மை தான் உங்க அண்ணி சமையல்ல கலக்குற" என்றான் ரயன்.
"ஹச் ஹச்" என்றாள் நான்சி.
"என்னாச்சு அண்ணி? சளி புடிச்சிருக்கா?" என்றாள் ரியா.
"தலைநிறைய ஐஸ் கொட்டிடீங்க அண்ணனும் தங்கையும் சேர்ந்து இப்பத்தான் சளி பிடிச்சுது" என்று கூறியவுடன் எல்லோரும் சிரித்தனர்.
"ரியா எப்ப கிறிஸ்மஸ்க்கு இங்க வர்றீங்க?” என்று ரயன் கேட்க, "அண்ணா அதபத்தி பேசத்தான் கூப்பிட்டேன். நாங்க முதல்ல சாம் வீட்டிற்கு போயிட்டு மதுரை வர்றோம். நீங்க எப்ப மதுரை வருவீங்க?
எல்லோரும் சேர்ந்து கொஞ்ச நாள் இருக்கலாம்" என்றாள் ரியா.
உடனே நான்சி "இருபதாம் தேதிபோல நாங்க மதுரை கிளம்புவோம் ஏன்னா அத்தை நமக்கு முதல் கிறிஸ்துனு ஏகப்பட்ட பிளான் செல்றாங்க.
குடில் வீடு எல்லாம் பிரமாதமா ஜோடிக்கனுமாம். பலகாரம் நிறைய செய்யனுமாம்.
அதுனால நாங்க அவர்களுக்கு உதவி செய்யப் போகலாம்னு முடிவு செய்தோம்" என்றாள்.
"இப்பவே அம்மா பிளான் போட்டுட்டாங்களா? அண்ணா முக்கியமா அம்மா பத்தி உன்கிட்ட பேசதான் கூப்பிட்டோம். ஒவ்வொரு கிறிஸ்மஸ்க்கும் அப்பா அவங்க நண்பர்களைக் கூப்பிடுவாங்க.
நானும் நீயும் நம்ம நண்பர்களை கூப்பிட்டு வருவோம். அம்மா கிறிஸ்மஸ் அன்று முழுவதும் அடுப்படி வேலையிலதான் இருப்பாங்க.
யு.கே வந்த பிறகுதான் தெரியுது பெண்கள் எவ்வளவு சுதந்திரமா தங்கள் வாழ்கையை அமைச்சுக்கிறாங்கன்னு.
பெண்களின் வாழ்கையில வேலை சுமையே இல்லை அண்ணா. அவர்களும் சந்தோசமாக விழாவைக் கொண்டாடுறாங்க, குடும்பமாக வெளியில போறாங்க.

நண்பர்களையும் அழைக்கிறாங்க, சந்தோசமாக எல்லோரும் சேர்ந்து கொண்டாடுறாங்க. அண்ணா இதையெல்லாம் பார்க்கும்போது அம்மாவை நினைத்துக் கஸ்டமா இருந்துச்சு. நாம நம்ம நண்பர்களோடு சந்தோசமாக அன்றைய நாளைக் கொண்டாடும்போது அம்மா வேர்க்க விருவிருக்க அடுப்படியில இருப்பாங்களே, அம்மாவுக்கும் ஏன் நம்ம அந்தச் சந்தோசத்த கொடுக்கக் கூடாதுனு நினைச்சோம். அதனால இந்த முறை அம்மாகிட்ட நோ குக்கிங் என்று சொல்லிறலாம். வெளியில போய்ச் சாப்பிடுவோம். இல்லைன்னா வெளியில ஆர்டர் பண்ணிருலாம்" என்றாள் ரியா.
"இதையே தான் நானும் ரயன் கிட்ட சொன்னேன். அத்தை பாவம் வயசாகுது, அவங்கள் கஷ்டப்படுத்தக் கூடாதுனு. வெளியில ஆர்டர் பண்ணிரலாம்னு சொன்னேன். ஆனா அப்பா சம்மதிக்கவே மாட்டாங்க என்று ரயன் சொல்றான்" என்றாள் நான்சி.
"மாமாகிட்ட நான் பேசிச் சம்மதிக்க வைக்கிறேன். பிள்ளைகள் சொன்னால் ஆர்கியு பண்ணுவாங்க. அதனால நானும் நான்சியும் மாமாவைச் சம்மதிக்க வைச்சுர்றோம். என்ன நான்சி உனக்கு ஓகே தானா ?" என்றாள் சாம். "டபுள் ஓகே சாம் நாம அதைச் செய்றோம்" என்று கையை உயர்த்தி மகிழ்ச்சியோடு கூறினாள்.
"ரியா நான் இந்த மாதிரி யோசிக்கவே இல்லை. நல்ல ஐடியா அம்மாவோட நண்பர்களையும் நாம கூப்புடுவோம்" என்றான் ரயன்.
"குட் ஐடியா அண்ணா அனு ஆன்ட்டி, பாரதி ஆன்ட்டி மதுரையில தான் இருக்காங்க நீ நேரிலேயே போய்ப் பார்த்து அழைத்து விடலாம்" என்றாள் ரியா.
அம்மாவோட இன்னொரு தோழி ஜெயந்தி கோயம்புத்தூர்ல இருக்காங்களா? அவங்க நம்பர், உனக்குத் தெரியுமா ரியா" என்றான் ரயன் என் கிட்ட இருக்கு அண்ணா. அவங்ககிட்ட நான் பேசுறேன்" என்றாள் ரியா.

"அப்ப ஒன்னு செய்வோம். அப்பா நண்பர்கள் அம்மா நண்பர்கள் நம்ம நண்பர்கள்னு நிறைய பேர் வருவாங்க. அதனால ஹோட்டல்ல ஒரு சின்ன ஹால் எடுத்து விருந்து ஏற்பாடு பண்ணலாம்" என்றான் ரயன்.
"சின்னப் பிள்ளைகளுக்கும் பெரியவர்களுக்கும் விளையாட்டுக்கள் வைத்து பரிசுகள் கெடுக்கலாம்" என்றான் சாம்.
"கண்டிப்பா அப்பத்தான் விழா மகிழ்ச்சியாக இருக்கும்" என்றாள் நான்சி. "சாம் நீயும் ரியாவும் வந்த பிறகுதான் அப்பாகிட்ட இந்தப் பேச்சை ஆரம்பிக்கணும்" என்று ரயன் சொல்ல.
"ஆமாம் ரயன் நாங்க வந்தபிறகு இதைத் தெரிவிச்சுக்கலாம். இன்னொரு விசயம் அத்தையின் தோழிகள் வருவதை அத்தையிடம் இப்ப சொல்ல வேண்டாம்" என்றான் சாம்.
"யெஸ். சாம் சொன்ன மாதிரி அத்தைக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம்" என்றாள் நான்சி.
"சாம் அண்ணனும் அண்ணியும் இருபதாம் தேதி போறாங்க. நாமும் அந்த டைம்ல அங்க இருந்து குடில், கிறிஸ்மஸ் மரம், வீடு அலங்காரம் என்று எல்லாம் சேர்ந்து செய்யலாமே?" என்றாள் ரியா.
"ஒகே. ஓகே. எனக்கு இப்பவே விழா சந்தோசம் வந்திருச்சு மச்சான். இரண்டு பேரும் சேர்ந்து கலக்குவோம். யு.கே விலிருந்து நாங்களும் கிறிஸ்மஸ் அலங்காரப் பொருட்கள் வாங்கிட்டு வாறோம். சிறப்பாகக் கொண்டாடுவோம்" என்றான் சாம்.
"சின்னப் பிள்ளைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஏத்த மாதிரிப் பரிசு பொருட்களும் இங்கிருந்து வாங்கிட்டு வர்றோம். எத்தனை வாங்கனுமனு நம்பர் மட்டும் அனுப்புங்க, இந்தக் கிறிஸ்மஸ் அம்மாவுக்கு ஸ்பெஷல் கிறிஸ்மஸ்சாக இருக்கனும்" என்றாள் ரியா.

"கண்டிப்பா ரியா கணக்கெடுத்து அனுப்புறேன்" என்றான் ரயன்.
"சாம் நமக்கு ஸ்பெஷல் பார்ட்டி வைப்போமா" என்று ரயன் கேட்க.
"கண்டிப்பா மச்சான் நான் யுகேலிருந்து அத வாங்கிட்டு வந்துறேன் அது இல்லாம விழாவா?" என்று கண்ணைச் சிமிட்டினான் சாம்.
"ஒகே அண்ணா அண்ணி அப்பப்ப அப்டேட் பண்ணுங்க. நாங்க தூங்கப் போறோம் பைப்பை" என்று முடித்தாள் ரியா.
இருபதாம் தேதி காலையிலேயே ரயனும் நான்சியும் மதுரை வந்துவிட்டனர். ரியாவும் சாமும் மறுநாள் வருவதாகத் தெரிவித்தார்கள். நான்சியும் ரயனும் கிறிஸ்மஸ் மரம் அலங்காரத்தை ஆரம்பித்தனர்.
அப்பா எலக்ட்ரிசியன் ஒருவரை கூட்டிவந்து ஸ்டார், சீரியல் பல்பு போட்டுக்கொண்டிருந்தார். அம்மா மிகுந்த உற்சாகத்தோடு பலகாரம் செய்ய தயார் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.
மறுநாள் ரியா சாம் வந்து விட்டானர். நான்சி அம்மாவிற்கு சமையலில் உதவி செய்ய மற்ற எல்லோருமாகச் சேர்ந்து குடில் செய்தனர்.
இரவு எல்லோரும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது ரியா கண்ணைக்காட்ட சாம் ஆரம்பித்தான்.
"என்ன நான்சியும் அத்தையும் சேர்ந்து பலகாரம் செய்ய ஆரம்பித்து விட்டர்களா?" என்றான் சாம்.
"ஆமாம் சாம் அத்தையிடம் கேளுங்க. என்ன என்ன பலகாரம் செய்யப் போறாங்கனு" என்றாள் நான்சி.
"அதிரசம் இன்னைக்கு முடிச்சுட்டோம் நாளை மிச்சரும், முறுக்கும் செய்யனும். மறுநாள் கேக்கும் குலோப் ஜாமுன், பார்பி செய்யனும் அவ்வளவுதான்" என்றார் அம்மா.

"இவ்வளவுதானா? இன்னும் லிஸ்ட்ல நிறைய மிஸ் ஆகுதே அத்தை?" என்று சாம் சிரித்துக் கொண்டே கேட்க".
"நிறைய செய்ய ஆசையாத்தான் இருக்குது ஆனா டைம் இல்ல" என்றாள் அம்மா.
"அத்தை எங்க வீட்டுல எங்க அம்மா கேக் முறுக்கு இரண்டு மட்டும் தான் செய்வாங்க. மத்தது எல்லாம் கடையில வாங்கிக்குவாங்க. அம்மாவுக்கும் வாயசாகுதுல், அதனால பலகாரம் செய்வதை குறைச்சுட்டாங்க. அது மாதிரி நீங்களும் ரொம்ப போட்டுச் செய்யாதிங்க" என்றான் சாம்.
"கிறிஸ்மஸ்னா பலகாரம் ரொம்ப முக்கியம் கடையில வாங்குவதைவிட வீட்டுல செய்றது தான் ஹைஜீனிக்கா இருக்கும்" என்றார் அப்பா.
"மாமா அத்தைக்கு வயாசாகுதுல. பாவம் கிறிஸ்மஸ்ன்னாலே அவர்களுக்கு வேலை அதிகமாக ஆகிவிடுகிறது. இனிமேல் அவங்கிட்ட இதையெல்லாம் நாம் எதிர் பார்க்கக் கூடாது" என்றான் சாம்.
"ஆமாம் எங்கம்மாவும் ரொம்ப செய்யமாட்டாங்க. வயசாக வயசாக கடினமாக வேலைசெய்றதை குறைச்சுக்கனும் அத்தை, எங்க வீட்டிலும் என் நண்பர்கள் என் அக்கா நண்பர்கள் அப்பா நண்பர்களும் நிறைய பேர் வருவாங்க. ஆனால் அப்பா சொல்லிருவாரு. வீட்டுல எதுவும் செய்ய வேண்டாம். கடையில ஆர்டர் பண்ணிறலாம்னு. இப்ப நாலஞ்சு வருசமா வெளியில் ஆர்டர் பண்ணி எல்லோரும் சேர்ந்து சாப்பிடுவோம்" என்றாள் நான்சி.
"விருந்துக்கு எல்லோரையும் கூப்பிட்டுட்டு வீட்டு சாப்பாடு கொடுக்காம கடையில் வாங்குனா நல்லா இருக்குமாம்மா? இங்க ஒவ்வொரு வருசமும் உங்க அத்தைதான் சமைப்பாள் பிரியாணி மட்டன் சிக்கன் என வகைவகையா வைத்து அசத்திருவா” என்று அப்பா பெருமையாகச் சொல்ல

"கிறிஸ்மஸ் என்பது எல்லாரும் சேர்ந்து சந்தோசமா கொண்டாடுறது. இதுல அத்தை மட்டும் காலை டிபன், மதியம் சாப்பாடுனு கிச்சன்லேயே வெந்துக்கிட்டு இருக்க, நாம் மட்டும் சந்தோசமா நண்பர்களோடு மகிழ்ந்திருந்தால் அது எப்படி நியாயம் ஆகும்? அத்தைக்கும் வயசாகுது. நாம அவர்களுக்கு உடல் ரீதியான கஷ்டத்தைக் கொடுக்கக் கூடாது மாமா" என்று சாம் உறுதியாகச் சொல்ல, அப்பா முகம் வாடுவதை பார்த்த,
அம்மா "சாம் நான் சந்தேசமாகத் தான் செய்யுறேன் எப்பவும் செய்றதுதானே” என்றாள் அம்மா.
"அத்தை அது உங்கள் பெருந்தன்மை எங்க சந்தோசத்துக்காக இழுத்துப் போட்டுச் செய்றீங்க. அதனால இந்த முறை நீங்கச் சமைக்க வேண்டாம். நண்பர்கள் எல்லாரும் ஒரு இடத்திற்கு வரச் சொல்லிக் கொண்டாடுவோம். என்ன மாமா சொல்றீங்க? அத்தையும் கிறிஸ்மஸ் அன்று சந்தோசமா கொண்டாடட்டுமே?" என்றாள் நான்சி.
"மாமா எங்களுக்காக ஒத்துக்கோங்க. உங்கள் நண்பர்களையும் அழையுங்கள் ரியா, ரயன் நண்பர்களும் வரட்டும்" என்றான் சாம்.
"எங்க வச்சு கொண்டாட பிளான் பண்ணியிருக்கிங்க? அதையும் சொல்லிருங்க" என்றார் சிரீயஸாக.
"அப்பா ராயல் கோட்ல ஒரு சின்னக் கான்பிரன்ஸ் ஹால் புக் பண்ணலாம். அங்கேயே சாப்பாடு கொடுத்துரலாம். இந்தக் கிறிஸ்மஸ்ஸை வித்தியாசமா கொண்டாலாம் அப்பா. அம்மாவும் சந்தோசமா பங்கெடுக்கலாம்" என்று ரயன் ரொம்ப பவ்யமாகச் சொல்ல.
"சரி சரி கூடி சேர்ந்து பிளான் பண்ணிட்டீங்க, செய்ங்க உங்க விருப்பம் போல" என்று கூறிவிட்டு எழுந்து போய் விட்டார்.

"எதுக்குடா இப்படியொரு பிளான்? எப்பவும் போல நான் செய்துருவேன்ல. உங்க இரண்டு பேருக்கும் இது முதல் கிறிஸ்மஸ். வெளியில போய் சாப்பிடனுமா?" என்றாள் அம்மா அப்பா வருத்தப்படுவது பார்த்துக் கேட்டான்.
"அம்மா இத்தனை வருசமா நாங்க உன் கஷ்டத்தை நினைச்சு பார்க்கவே இல்லை. இனி இந்த மாதிரிக் கஷ்டம் எல்லாம் வேண்டாம்மா" என்றான் ரயன்.
அம்மா யு.கேயில் பெண்கள் எவ்வாவு சுதந்திரமா அவுங்க விரும்புற வாழ்க்கையை வாழ்றாங்க. நம்ம நாட்டுல தான் கணவன் பிள்ளைங்களுக்காகவே அம்மாக்கள் தியாக வாழ்க்கை வாழுறாங்க. அங்குள்ள பெண்கள் முகத்துல் எப்பவும் சோர்வே பார்க்க முடியாதும்மா" என்றாள் ரியா.
"அந்த நாட்டு கலாச்சாரம் வேறம்மா. இங்குள்ள கலாச்சாரம் வேற. தியாகமும் ஒரு சந்தோசம்தான்" என்றாள் அம்மா.
"அம்மா தியாகச் செம்மலே. அப்பா ஒகே சொல்லிட்டாரு நீங்க எதையும் குழப்பமா இருங்க" என்றாள் ரியா.
"கிறிஸ்மஸ் அன்று காலை அம்மா இட்லி வடை கேசரி பணியாரம் சட்னி சாம்பாரென வகைவகையாகச் சமைத்தாள், எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டார்கள் 10.30 மணியளவில் ராயல் கோட்க்கு போனார்கள். ஒவ்வொரு குடும்பமாக வர ஆரபித்தார்கள், முதலில் அப்பாவின் நண்பர்கள் இரண்டு குடும்பத்தினர் வந்தனர். ரியா ரயன் நண்பர்களும் வந்தனர். அம்மா எல்லோரிடமும் சிரித்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அம்மாவின் தோழிகள் மூவரும் ஒன்றாகச் சேர்ந்து அம்மா முன்னாடி போய் நின்றார்கள். அம்மா வியந்து போனாள் சந்தோசத்தில், என்ன பேசுவது என்று தெரியாமல் திக்குமுக்காடி போனாள்.
உங்கள் பிள்ளைகள் வீட்டுக்காரர் வரலையா? என்றாள். அவர்களும் வெளியிலிருந்து ஹாலில் நுழைந்தார்கள். அம்மா பூரித்துப் போனாள். ரயனையும் ரியாவையும் பார்த்து இது உங்க வேலைதானா?" என்றாள்.

இருவரும் அம்மாவின் தோளைப் பற்றிக் கொண்டார்ள் கிச்சனில் உழண்டு கொண்டிருந்தால் இந்தச் சந்தோசம் கிடைத்திருக்ருமா? என்று அம்மாவின் காதில் கிசுகிசுத்தாள் ரியா. அம்மா கண்களில் ஆனந்த கண்ணீர். அப்பா எழுந்து வந்து அம்மாவின் தோழிகளின் குடும்பத்தை வரவேற்றார்.
சாமும் நான்சியும் விளையாட்டுகளைப் பெரியவர்களுக்கும் சிறியவர்களுக்கும் நடத்திக் கொண்டிருந்தனர். கடைசியாக எல்லோருக்குமான பொதுவான ஒரு விளையட்டை நடத்தும்போது ரியா அம்மாவைத் தனியாக அழைத்துப் போய் "கிறிஸ்மஸ் தாத்தா வேடம் நீ தான் போடுகிறாய், அம்மா" என்றாள் ரியா. அம்மா முகத்தில் அப்புடி ஒரு சந்தோசம்.
"வாவா எங்க இருக்கு போட்டுக்கலாம் வா" என்று ரியாவை இழுத்தாள் அம்மா. போட்டிகள் முடிந்தது. ஜிங்கிள் பெல்ஸ் பாட்டை நான்சி போட கிறிஸ்மஸ் தாத்தா ஆடிக் கொண்டே வந்தார். அப்பா வியந்து போய்ப் பார்த்தார். அம்மாவுக்கு இந்த மாதிரிச் செயல்கள் எல்லாம் பிடிக்கும் என்பதே அப்பாவுக்குத் தெரியாது அப்பா இல்லாத பொழுதுகளில் அம்மா, ரயன்ரியாவுடன் நடனம் ஆடி மகிழ்வதுண்டு, அம்மா முதலில் சிறுவர்களை இழுத்து ஆடினார்.
எல்லோரும் கைதட்டி ஆர்ப்பரிக்க அம்மாவின் தோழிகளும் ஓடிப் போய்ச் சேர்ந்து கொள்ள ரியா நான்சியும் இணைய அங்கே ஒரே மகிழ்ச்சி ஆரவாரம் பெருக்கெடுத்தது. அனைவருக்கும் அம்மா பரிசுகளையும் இனிப்புக்களையும் வழங்கினார், அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி வெள்ளத்தில் இருந்தனர். பின் அனைவரும் சேர்ந்து விருந்துண்டனர். எல்லாம் முடிந்தது வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.
வந்தவுடன் அப்பா அம்மாவின் கரங்களைப் பிடித்துக் கொண்டு "ரெஜி இத்தனை வருசமா உன் வேலைப் பளுவையோ உனக்கான சந்தோசங்களையோ நான் நினைத்தே பார்க்கவில்லை. ஆனால் இன்று நீ மகிழ்ச்சியாக இருந்ததைப் பார்த்து மகிழ்ந்தேன். உனக்குள்ள இந்த சந்தோசங்களை எங்களுக்காக இத்தனை வருடம் தியாகம் செய்ததை நினைத்துப் பார்த்தேன். எனக்குக் குற்ற உணர்வுதான் மேலோங்கியது அதுக்காகச் சாரி சொல்றேம்மா" என்றார் அப்பா.

அம்மா பதறிப்போய் "என்னங்க பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க" என்றாள். "இல்லை ரெஜி உண்மைதான் இத எனக்குப் புரிய வெச்சது நம்ம பிள்ளைகளும் மருமக்கள் தான். அவர்களுக்கும் நன்றி சொல்றேன்" என்றார் அப்பா. மகிழ்ச்சியுடன் ரயன் அப்பாவைத் தோளோடு அணைத்துக் கொண்டான்.
"இனிமேல் நம்ம வீட்ல கிறிஸ்மஸ் இப்படி தான் நடக்கனும்" என்று அப்பா சொன்னவுடன் பிள்ளைகள் ஒவென்று கத்தி ஆர்ப்பரித்தனர்.
அம்மாவுக்கும் ஏக சந்தோசம் ஆகிவிட்டது. அம்மா பிள்ளைகள் நால்வரையும் பார்த்து "உங்களுக்கு மட்டும் இது முதல் கிறிஸ்துமஸ் இல்லை.
எனக்கும் இது மகிழ்ச்சி நிறைந்த முதல் கிறிஸ்துமஸ். உங்கள் எல்லோருக்கும் நன்றி" என்று கைகூப்பப் போனவனை பிள்ளைகள் கட்டி அணைத்துக் கொண்டனர்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு கிறிஸ்மஸ்மலர்