கிறிஸ்து பிறப்பு பெருவிழா நல்வாழ்த்துக்கள்!
முதல் கிறிஸ்துமஸ் குடில்
அசிசி மேரி ஆன்- அசிசியின் குரல்
புனித பிரான்சிஸ் அசிசியார் மற்றும் முதல் கிறிஸ்துமஸ் குடில் உலகத்தை மீட்டுச் சென்ற தெய்வக் குழந்தையின் பிறப்பு, அன்பும், தாழ்மையும் பற்றிய ஒரு கதை
கிறிஸ்துவின் வாழ்க்கையில் அனைத்து இரகசியங்களுக்கிடையில், புனித பிரான்சிஸ் அசிசியார், குறிப்பாகக் கிறிஸ்துவின் திருஅவதாரத்தால் ஈர்க்கப்பட்டார். "பசியிலும் பஞ்சத்திலும், மனிதக் கைகளின் உதவியை நாடும் சிறு குழந்தையாக வெளிப்படத் தேர்ந்தெடுத்த இறைவன்!" என்று பிரான்சிஸ் எப்போதும் ஆச்சரியப்பட்டார்.
1223 ஆம் ஆண்டின் குளிர்காலம் : கிறிஸ்துமஸை அர்த்தமுள்ளதாகக் கொண்டாட வேண்டிய பிரான்சிஸின் விருப்பம்
இத்தாலி மலைகளின் நடுவே அமைந்த அமைதியான கிராமம் கிரேசியோ. அந்த இரவில் நட்சத்திரங்கள் கூர்மையாய் ஒளி விட்டன; கல் பாதைகளில் மெதுவாகப் பனி பிரகாசித்தது.
கிராம மக்கள் தங்கள் வீடுகளில் நெருப்புக்கு அருகில் கூடி அமர்ந்தனர். அவர்கள் மிகவும் நேசித்த சகோதரர் பிரான்சிஸ் அசிசி வைத்திருந்த ஒரு புதுமையான- ஆனால் அழகான-விருப்பத்தைப் பற்றி மெதுவாகப் பேசிக் கொண்டிருந்தனர். பிரான்சிஸ் அவர்களிடம் கூறினார்: "இந்த ஆண்டில், நான் கிறிஸ்துமஸை வேறுபட்ட முறையில் கொண்டாட விரும்புகிறேன் காட்டின் நடுவே, மக்களுடன் சேர்ந்து... அங்கேதான் கிறிஸ்து தாமே வீட்டில் இருப்பது போல் உணருவார்”.
முதலில் மக்கள் குழப்பமடைந்தனர். ஆனால் அவர்கள் பிரான்சிஸை நம்பினர்: பறவைகளிடம் பேசியவர், தொழுநோயாளிகளை அரவணைத்த, ஒவ்வொரு உயிரினத்தையும் "சகோதரன்”, "சகோதரி” என அழைத்தவர்... படைப்பின் அனைத்தையும் சாந்தமாக நேசித்தவர்.
வாழும் பெத்லகேமின் கருத்து
புனித பிரான்சிஸ் தனது நண்பர், கிரேசியோவின் குடிமை அரசர் ஜியோவன்னி வெலிட்டாவை அழைத்தார். "சகோதரர் ஜியோவன்னி." என்று பிரான்சிஸ் கண்கள் ஒளிர சொன்னார். "பெத்லெகேமைக் கொண்டுவந்து இக்குன்றுகளில் உயிரோட்டமாய் காண வேண்டும். நாமொரு குடிலை தயார் செய்யலாம்- வைக்கோலும், மிருகங்களும், அன்றைய இரவில் இருந்தபடி இதயத்தின் கண்களால் பிறந்த குழந்தையைக் காண விரும்புகிறேன்.”
ஜியோவன்னி ஆழமாக நெகிழ்ந்தார். “அது செய்யப்படும், சகோதரர் பிரான்சிஸ்,” என்றார்.
அதிசய இரவு - நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு
எனவே, 1223 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் முன்னிரவில், கிரேசியோவின் மக்கள் தீப்பந்தங்களை ஏந்தி மலையில் ஏறினார்கள். குளிரில் அவர்கள் மூச்சு புகைபோல எழுந்தது; அவர்களின் பாடல்கள் காட்டின் நடுவே எதிரொலித்தன. அவர்கள் அந்தச் சிறிய குகையை அடைந்தபோது, அதைக் கண்டார்கள் -புல்லால் நிரப்பப்பட்ட ஒரு தொட்டி அமைதியாக நின்ற ஒரு எருமை, ஒரு கழுதை... மற்றும் கற்சுவர் முழுவதும் ஒளிர்ந்த மெழுகுவர்த்திகள்.
அது எளிமையாகவும், மோசமாகவும், அழகாகவும் இருந்தது—அன்றைய பெத்லெகேமைப் போலவே.
புனித திருப்பலி தொடங்கியது. குகை. பயபக்தியாலும் அமைதியாலும் நிறைந்திருந்தது. இயேசுவின் பிறப்பு நற்செய்தி வாசிக்கப்பட்டபோது "அவள் தன் தலைச்சன் மகனைப் பெற்றாள்; அவரை ஒரு தொட்டிலில் கிடத்தினாள்..."- புனித பிரான்சிஸ் அந்தத் தொட்டிலின் அருகே மண்டியிட்டார். அவரது கண்களில் கண்ணீர் வழிந்தது.
“எங்கள் இறைவன் எவ்வளவு தாழ்மையானவர்!" என்று கடவுளின் அன்பைப் பற்றிப் பேசும்போது அவரது குரல் மகிழ்ச்சியால் நடுங்கியது. "மகிமையின் ஆண்டவர் வைக்கோலில் படுத்திருக்கிறார்... அன்பே மாம்சமாகி வந்திருக்கிறது - நம்மக்காக!"
அன்று இரவு அங்கு இருந்தவர்கள்- பிரான்சிஸ் கண்களுக்கு முன் குழந்தை இயேசு உயிரோடும் தோன்றியது போல் இருப்பதாகக் கூறினர். அவர் இரண்டு கைகளையும் நீட்டி அந்தத் தெய்வக் குழந்தையைத் தழுவ விரும்பும் போல் இருந்தார். அவரது முகம், எந்த மெழுகுவர்த்தியும் அளிக்க முடியாத ஒளியால் பிரகாசித்தது. குழந்தை சிரித்ததாகக் கூறப்பட்டது - ஒரு கணத்திற்கு... கிரேசியோ பெத்லெகேமாக மாறியது.
உலகை மாற்றிய குடில்
அந்த இரவின் நினைவு மக்கள் மனதில் என்றும் பதிந்தது. செய்தி விரைவில் இத்தாலி முழுக்கப் பரவியது - பின்னர் உலகம் முழுவதும். இதுவே பெரும்பாலான குடும்பங்களும் ஆலயங்களும் ஒவ்வொரு கிறிஸ்துமஸிலும் குடில் அமைக்கும் மரபின் தொடக்கம். மரியாள், யோசேப்பு, மேய்ப்பர்கள், மற்றும் தொட்டிலில் இருக்கும் குழந்தை ஆகியோரின் உருவங்களை வைத்து, அன்பு பிறந்த இரவை நினைவுபதிக்கத் தொடங்கினர். இன்றுவரையும், அந்தக் குளிர்ந்த இரவில் ஏற்பட்ட அதிசயக் கதை எண்ணற்ற இதயங்களை அரவணைக்கிறது. நாம் அமைக்கும் ஒவ்வொரு தொட்டிலும், நாம் ஏற்றும் ஒவ்வொரு மெழுகுவர்த்தியிலும், புனித பிரான்சிஸின் இதயத்தில் எரிந்த அன்பின் ஒரு சிறிய எதிரொலியாய் ஒலிக்கிறது - இறைவனை குழந்தையாகவும், குழந்தையை இறைவனாகவும் கண்ட அந்த அன்பு.
முடிவுரை
ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் நெருங்கும்போது, இத்தாலியின் மலைகளில் பெத்லெகேமை கற்பனை செய்யத் துணிந்த அந்த ஏழைத் துறவியை நினைவு கூர்வோம் அவரது செயலின் மூலம், உருவெடுத்த அன்பின் முகத்தை உலகம் காண முடிந்தது.
“நாம் பெத்லெகேமுக்குப் போவோம்," என்று பிரான்சிஸ் அன்றிரவு மெதுவாய் சொன்னார். அந்த நொடிமுதல் உலகமே தொடர்ந்து பயணித்துக் கொண்டே செல்கிறது.


