கிறிஸ்து பிறப்பு பெருவிழா நல்வாழ்த்துக்கள்!
நம் எதிர்நோக்கின் அடிநாதம் ‘கடவுள் நம்மோடு’ என்கிற மறையுண்மையே !
கிருபாவளன் -சென்னை
யூபிலி ஆண்டாகிய இந்த ஆண்டு கொண்டாடப்படும் கிறிஸ்து பிறப்பு விழா, நம்மில் மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தும் அதே வேளையில், நாம் அனைவரும் 'எதிர்நோக்கின் திருப்பயணிகள்' என்பதை மேலும் அழுத்தமாக அடிக்கோடிட்து உணர்த்துகிறது. காரணம், இவ்வுலகில் பயணிகளாய் இருக்கும் நமக்கு எதிர்நோக்கின் ஆதாரமாய் இருப்பதுவே கிறிஸ்துவும் அவரது மனிதப் பிறப்பும் தான்.
தூய பவுலடியாரின் வார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால், “…ஊழிஊழியாக, தலைமுறை தலைமுறையாக மறைந்திருந்த இறைத்திட்டம் … இப்பொழுது இறைமக்களுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது … உங்களுக்குள் இருக்கும் கிறிஸ்துவைப் பற்றியதே அத்திட்டம். மாட்சி பெறுவோம் என்னும் எதிர்நோக்கை அவரே அளிக்கிறார்” (கொலோ.1:26-27). அந்த வெளிப்படுத்துதலைத் தான் கிறிஸ்து பிறப்பு விழாவாக, தாயாம் திருஅவையோடு சேர்ந்து நாம் அனைவரும் கொண்டாடுகின்றோம்.
“ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவள் 'இம்மானுவேல்' என்று பெயரிடுவார்” (எசா.7:14) என எசாயா இறைவாக்கினரால் முன்னறிவிக்கப்பட்டு, "யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர்” (மத்.1:20-21) என யோசேப்புக்குத் தோன்றி, வானதூதர் உறுதிசெய்த நற்செய்தியில் காணக்கிடைப்பது உலகை மீட்கப் பிறந்தவரின் திருப்பெயர். அதற்கான பொருளும் நற்செய்தியிலேயே தரப்பட்டுள்ளது. “இம்மானுவேல் என்றால் கடவுள் நம்முடன் இருக்கிறார் என்பது பொருள்” (மத்.1:23). "கடவுள் நம்மோடு" என்கிற இந்த மறையுண்மையே, நம் எதிர்நோக்கிற்கு ஆதாரமும், அடிநாதமும் ஆகும்.
கிறிஸ்து பிறப்பு விழாவிற்கு நம்மைத் தயாரிக்கும் திருவருகைக் காலத்திற்கான வளையத்தில் கூட, நாம் முதலாவதாக ஏற்றக்கூடிய மெழுகுதிரி 'எதிர்நோக்கின் மெழுகுதிரி' என்றே அழைக்கப்படுகிறது. அதே நேரம், நாம் இன்னொன்றையும் நினைவில் கொள்ள வேண்டும். தாயாம் திருஅவை, திருவருகைக்காலத்தை, இயேசு கிறிஸ்துவின் முதல் வருகையாகிய வரலாற்று பிறப்பின் விழாவிற்கான தயாரிப்பாக மட்டுமல்லாது, அவரது இரண்டாம் வருகைக்கான தயாரிப்பாகவும் நமக்குத் தருகிறது. இயேசுவின் இரண்டாம் வருகைகுறித்து பல்வேறு விளக்கங்கள், பலரால் பல நேரம் தவறாகக் கொடுக்கப்பட்டாலும், இறைமகன் இயேசுவின் வார்த்தைகள் தான் உறுதியானவை, இறுதியானவை. அவர் கூறுவது இது தான்: "அந்த நாளையும் வேளையையும்பற்றித் தந்தை ஒருவருக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது. விண்ணகத் தூதருக்கோ மகனுக்கோகூடத் தெரியாது” (மத்.24:36).
அந்த நாளையும் வேளையையும்பற்றி எவருக்கும் தெரியாது என்றாலும் ஒன்று நம் எல்லோருக்கும் நிச்சயமாய்த் தெரியும். இவ்வுலகில் பயணிகளாய் இருக்கும் நாம் அனைவரும் நீதியின் இருக்கையில் அமர்ந்திருக்கும் இறைவனை ஒரு நாள் சந்தித்தே தீர வேண்டும். அதுவே, நம் ஒவொருவருக்கும், தனிப்பட்ட விதத்தில், இயேசுவின் இரண்டாம் வருகையாக அமையும். அதைத்தான் தூய பவுலடியார் அழகாகக் கூறுவார்: “நமக்கோ விண்ணகமே தாய்நாடு; அங்கிருந்துதான் மீட்பராம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வருவாரெனக் காத்திருக்கிறோம்” (பிலி.3:20). இயேசுவின் இரண்டாம் வருகை எப்போது வந்தாலும் நாம் அதனை எதிர்நோக்குடன் சந்திக்க, நமக்கு ஆற்றல் தருவது இயேசுவின் வரலாற்று வருகை, அதாவது, கிறிஸ்துமஸ் - கிறிஸ்து பிறப்பு.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பு நமக்குத் தருகிற உத்வேகம் என்னவென்றால், நாம் நடுவராய் சந்திக்க உள்ளவரை மீட்பராக ஏற்கனவே சந்தித்துவிட்டோம் என்பது தான். அதனால் தான் “இவை நிகழத் தொடங்கும்போது, நீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது” (லூக்.21:27,28) என்கிற நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இயேசுவின் வரலாற்று வருகை, அவரது இரண்டாம் வருகைகுறித்த நம் அச்சத்தை நீக்குகிற அதே வேளையில், இவ்விரண்டு வருகைகளுக்கும் இடைப்பட்ட காலத்தில் நிகழ்கிற ஆண்டவரின் அன்றாட வருகைகள்குறித்த விழிப்புணர்வையும் நமக்குள் ஏற்படுத்துகின்றது. மறைபொருளாக வருகிற இறைவனை திருவருட்சாதனங்களிலும், மறையுடலில் வெளிப்படும் இறைவனை பிறரில், குறிப்பாக எளியோரில் கண்டு சேவிக்க நாம் அழைக்கப்படுகிறோம்.
கன்னி மரியா, தூய ஆவியின் நிழலிடுதலால் கருவுற்றுத் தாயான நிகழ்வு, திருமுழுக்கு, உறுதிபூசுதல் ஆகிய திருவருட்சாதனங்கள் நமக்குள் ஏற்படுத்தும் மாற்றத்தை நமக்கு முன்னிறுத்துகிறது. கடவுளின் மகன், மரியின் மகனாக, அதாவது, மனுமகனாக அவதரித்ததன் வழியாக, பிறவிப்பாவம் (ஜென்மப்பாவம்) நீங்கி இறைவனின் மக்களாக நாம் மாற வழிவகுக்கிறார். இதில் திருமுழுக்கிற்கான அடித்தளம் இடப்படுகின்றது. “விண்ணகத்தில் கடவுளுக்கு மாட்சி, மண்ண்ணகத்தில் மாந்தருக்கு அமைதி” எனத் தூதர்கள் பாட, விண்ணையும் மண்ணையும் ஒப்புரவாக்கும் வகையில் வார்த்தையானவர் மனுவுருவானது ஒப்புரவு அருட்சாதனத்துக்கான முன்னோட்டமாய் அமைகிறது.
அப்பத்தின் வீடு எனப்படும் பெத்லகேமில், மாடடைக் குடிலில், தீவனத்தொட்டியில் கிடத்தப்பட்ட குழந்தையில், வானின்று இறங்கி வந்த உயிருள்ள உணவாகிய நற்கருணையின் முன் சாயல் வெளிப்படுகிறது. எண்ணற்ற சோதனைகளின் நடுவிலும் கூட, இறைத்திருவுளத்திற்கு அடிபணிந்து, ஒன்றித்திருந்த யோசேப்பு, மரியா, இருவரது பிரமாணிக்கமும் திருமணம் என்கிற அருட்சாதனத்தின் அஸ்திவாரத்தை நமக்கு உணர்த்துகிறது. ஞானியர் மூவரின் வருகையும், அவர்கள் அளித்த பொன், மீரை, தூபம் ஆகியவை கிறிஸ்துவை அரசராக மட்டுமன்றி, தம் மரணத்தால் நம்மை மீட்க வந்த மீட்பராகவும், தந்தையாம் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட குருவாகவும் சித்தரிக்கின்றன. குருத்துவம், நோயில் பூசுதலுக்கான அடையாளங்கள் அங்கே தென்படுகின்றன. இவ்வாறு திருவருட்சாதனங்கள் ஏழின் முன்னடையாளங்களை இயேசுவின் மனிதப்பிறப்பு தன்னகத்தே பொதிந்து வைத்துள்ளது. ‘கடவுள் நம்மோடு’ என்பதை மெய்ப்பிக்க மனித அவதாரம் எடுத்த இயேசு “இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” (மத்.28:20) என்பதனை மெய்ப்படுத்த நிறுவியவை தான் திருவருட்சாதனங்கள்.
திருவருட்சாதனங்கள் ஏழும், நமக்கு விண்ணக வாழ்வின் முன்சுவையாகவும் நிலைவாழ்வின் உத்தரவாதமாகவும் அமைந்து எதிர்நோக்கின் திருப்பயணிகளாக நம்மை மாற்றுகின்றன. இந்தத் திருப்பயணத்தில் நாம் தனித்தில்லை, திருஅவை என்கிற கிறிஸ்துவின் மறையுடலின் உறுப்பினர்களாகவே விளங்குகிறோம். எனவே, ஒருவருக்கொருவர் துணையாய் இருந்து, ஒன்றிப்பு, பங்கேற்பு, பணியேற்பு ஆகியவற்றில் கூடியிருக்க அழைக்கப்படுகிறோம். “இனி உங்களிடையே யூதர் என்றும் கிரேக்கர் என்றும், அடிமைகள் என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை; ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடு இல்லை; கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள்” (கலா.3:28) எனப் பவுலடியார் கூறுவது கிறிஸ்துவின் பிறப்பில் உறுதிப்படுத்தப்படுகிறது. அறிவுடை ஞானியருக்கும், எளிய இடையருக்கும், கன்னி மரியாவுக்கும் அவர் கணவர் சூசைக்கும், முதிர்ந்த சிமியோனுக்கும் மூதாட்டி அன்னாவுக்கும் குழந்தையாய் தம்மை வெளிப்படுத்திய கடவுள், இன்றும் என்றும், தம்மை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார்.
கடவுள் தம்மை தமது திருமகனின் வழியாக வெளிப்படுத்திய விந்தையைக் கொண்டாடுகிற நாம் "கடவுள் நம்மோடு" என்கிற மறையுண்மையை அன்றாடம் கொண்டாடும் திருவருட்சாதனங்களிலும், அனுதினம் சந்திக்கும் மனிதரிலும் கண்டுணரப் பழக வேண்டும். அதே நேரம் "கடவுள் நம்மோடு" என்கிற மெய்யுணர்வை நம் உடனிருப்பாலும், அன்புச்செயல்களாலும் பிறருக்கும் உணர்த்த வேண்டும். காரணம் "கடவுள் நம்மோடு" என்கிற செய்தி மாந்தர் அனைவருக்குமானது. அன்று வானதூதர்கள் சொன்னவை இன்றைக்கும் பொருந்தும், என்றைக்கும் பொருந்தும்.
"அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன் … ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகப் … பிறந்திருக்கிறார்” (லூக்.2:10,11).
கிறிஸ்து பிறப்பின் மகிழ்வைக் கொண்டாடுவோம், "கடவுள் நம்மோடு" என்கிற உணர்வைப் பரிமாறுவோம். அந்த மறையுண்மையின் உந்துதலால் எதிர்நோக்கின் திருப்பயணிகளாகப் பயணிப்போம்.


