கிறிஸ்து பிறப்பு பெருவிழா நல்வாழ்த்துக்கள்!
அன்னை மரியின் அன்பு கரத்தில்
வனஜா அமல்ராஜ்-சென்னை
‘அஞ்சாதே. ஏனெனில், நான் உன்னோடு இருக்கிறேன், கிழக்கிலிருந்து உன் வழிமரபை அழைத்து வருவேன்’ என்று இறைவாக்கினர் எசாயா வழியாக முன்னுரைத்த ஆண்டவரின் வாக்கிற்கிணங்க (எசாயா 43:5), விண்ணிலே கண்ட நட்சத்திரத்தை அடையாளமாகக்கொண்டு குழந்தை இயேசுவைக் காண கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு புறப்பட்டு வந்தனர். பொன்னையும் வெள்ளைப்போளத்தையும் காணிக்கைப் பொருட்களாகக் கரங்களில் ஏந்தி வந்தனர். ‘யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்’ (மத்தேயு 2:2) என்றனர். எருசலேம் நகரெங்கும் சுற்றி அவரைத் தேடி அலைந்தனர்.
அன்று ஞானிகள் வழியாக ஏரோது மன்னனுக்கும் நற்செய்தி அறிவிக்கப்பட்டது. நற்செய்தியைக் கண்டு மீட்பைப் பெற்று அமைதியில் வாழ, விண்ணில் மகிழ அழைப்பு விடுக்கப்பட்டது. மீட்பர் பிறந்தது ஒரு குலத்திற்காக அல்ல, அது மனுகுலத்திற்காக, உலக மக்களுக்காக. விண்ணில் தோன்றிய விண்மீன் ஏரோதின் அரண்மனை பக்கமாய் வந்து நின்றது. ஞானிகள் ஏரோதைக் காணச்சென்றனர். அதை அறிந்துணராத ஏரோது மன்னன் தற்காலிக தன்னிலையைக் காத்துக்கொள்ள குழந்தையைக் கொன்றுபோடவே வழித்தேடினான், திட்டமிட்டான். ஏனெனில், அவனது உள்ளம் ஆண்டவருக்கு உகந்ததாக இல்லை. “உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!" என்பதே இறைவாக்கு. இறைத்தூதர்களின் துணையோடு விண்மீனின் வழிகாட்டலில் ஞானிகள் திருக்குடும்பம் தங்கியிருந்த வீட்டிற்கு வந்தடைந்தனர்.
வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள், நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள், தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள். ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள் (மத்தேயு 2:11-12). ஆண்டவரைத் தேடுவோருக்கு, அவரை நாடுவோருக்கு காரியம் கைக்கூடாதபடி பல தடைகள் வந்து பாதையில் குறுக்கிடலாம், பலரது ஆலோசனைகள் வந்து பாதையைக் குழப்பிவிடலாம். ஆனால் நம்மைச் சரியான பாதையில் வழிநடத்திச்செல்ல நமக்கு முன்னும் பின்னும் ஆண்டவரின் தூதர்கள் வந்து நம்மை வழிநடத்திச்செல்வார்கள். காரியங்களை வாய்க்கச் செய்வார்கள்.
இறை இயேசுவில் இனியவர்களே! ‘ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ புதிய ஆற்றல் பெறுவர். கழுகுகள்போல் இறக்கை விரித்து உயரே செல்வர், அவர்கள் ஓடுவர், களைப்படையார், நடந்து செல்வர், சோர்வடையார்’ (எசாயா 40:31). காலம் வந்தது, அவர் உரைத்தது நிறைவேறிற்று. ஆண்டவரின் வார்த்தை அவர் உண்மையானவரென மெய்ப்பித்தது” (தி.பா.105:19). ஆண்டவர் உங்களுக்காக வைத்திருக்கும் பரிசை, நீங்கள் விரும்பி எதிர்பார்த்திருக்கும் நன்மைகளை, நம்பிக்கையோடு காத்திருந்து பெற்றுக்கொள்ள வாழ்த்துகிறேன். இறை இயேசுவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் எனது கிறிஸ்மஸ் மகிழ்ச்சியையும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ‘என் நெஞ்சே! நீ மீண்டும் அமைதி கொள், ஏனெனில், ஆண்டவர் உனக்கு நன்மை செய்தார்’ (தி.பா.116:7). ஆமேன்! அல்லேலூயா!!.


