கிறிஸ்து பிறப்பு பெருவிழா நல்வாழ்த்துக்கள்!
ஆடையின் அசைவு - இரட்சிப்பின் மொழி”
அல்போன்ஸ் - திருச்சி
இயேசு பிறந்த செய்தியை மேய்ப்பர்களுக்குத் தூதர்கள் அறிவித்தபோது, ஒரு சிறப்பு அடையாளத்தைச் சொன்னார்கள்: “துணிகளால் சுற்றப்பட்டு, தொட்டிலில் கிடக்கிற குழந்தையை நீங்கள் காண்பீர்கள்” (லூக்கா 2:12). ஒவ்வொரு குழந்தையும் துணியில் மூடப்படும்; ஆனால் இங்குத் தனி அடையாளமாகச் சொல்வதன் பின்னால் மறைந்திருக்கும் ஒரு ஆழ்ந்த தெய்வீக தத்துவம் உள்ளது. இந்தத் துணிகள் - பிறப்பு முதல் உயிர்த்தெழுதல் வரை கிறிஸ்துவின் முழு இரட்சிப்பு திட்டத்தை வெளிப்படுத்துகிறது. இயேசுவின் பிறப்பு, மரணம் மற்றும் உயிர்ப்பில் உடை ஒரு முக்கியமான சின்னமாக வெளிப்பட்டுள்ளது. மூன்று முக்கிய “துணிகளின்” காட்சிகள் வேதாகமத்தில் பார்ப்போம்.
பிறப்பு- “துணிகளால் சுற்றப்பட்டிருந்த குழந்தை” (லூக்கா 2:12).
எளிமை, வறுமை, தாழ்மை.
ராஜாதி ராஜா, ராஜபீடத்தில் அல்ல; மாட்டுத் தொட்டிலில்.
“துணிகளால் சுற்றப்பட்டு, தொட்டிலில் கிடக்கிற குழந்தை.” என்பது
தேவன் முழுமையாக மனிதரானார். குழந்தையைச் சுற்றும் துணி, மனிதரின் பலவீனத்தை எடுத்துக்கொண்டு உலகில் வந்த அவதாரத்தின் நிச்சய அடையாளம். மனித உடலின் எல்லைகளை ஏற்றுக்கொண்டார் -
இறப்பு / அடக்கம் - “யோசேப்பு மற்றும் நிக்கோதேமு துணிகளில் நறுமணப் பொருட்களுடன், துணிகளில் சுற்றினார்கள்” (யோவான் 19:40). உடலுடன் துணிகள். பிறப்பும் இறப்பும் ஒரே அடையாளத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
உயிர்த்தெழுதல் - “துணிகள் அங்கே கிடந்தன” துணிகளை விட்டு வெளியே வந்த கிறிஸ்து. மரணத்தை வென்ற அடையாளம்.
உயிர்த்தெழுந்த மகிமையின் மௌன சாட்சி.
உயிர்த்தெழுதலை நாம் காணவில்லை.
ஆனால் உயிர்த்தெழுதல் எழுந்தருளும் கிறிஸ்துவின் செயலால் மட்டும் அல்ல—
அவர் விட்டுச் சென்ற துணிகளாலும் வெளிப்படுத்தப்பட்டது.
கல்லறையின் மௌனத்தில் படுத்திருந்த துணிகள்
உலகின் முதல் “தூதர்கள்” போல
அவர் உயிர்த்தெழுந்த செய்தியைச் சொன்னது.
கீழே கிடந்த சிறப்பாக மடித்து வைக்கப்பட்ட தலையணித் துணி
உயிர்த்தெழுதல் தத்துவத்தின் ஆழம்
கைவிடப்பட்ட ஆடை பாவ மரணத்தின் சங்கிலியை உடைத்த குறியீடு
மரணம் கட்டியிருந்த ஆடை உயிர்த்தெழுதலில் தேவையற்றது
இனி அவர் மரணத்திற்கு உட்பட்டவர் அல்ல
ஆதாம் பாவத்திற்குப் பிறகு ஆடை தேவையானது;
ஆனால் கிறிஸ்து உயிர்த்தெழுதலில் ஆடையையே வென்றார்.
இந்தத் துணி அறிவிப்பது: “உன் மரணமே தோற்கடிக்கப்பட்டது!”
மரியா, பேதுரு, யோவான்—
முதலில் அவரைக் காணவில்லை.
ஆனால் அவரின் துணியைப் பார்த்தார்கள்.
உயிர்த்தெழுதலின் நிஜத்தை
ஒரு காலி கல்லறை மட்டும் அல்ல,
அந்தத் துணி மேலும் வெளிப்படுத்தியது.
கடவுள் வெளிப்பாடு சில நேரம் ஒலி இல்லாமல் வரும். காற்றில் அசையும் துணிபோல— அவரது எழுச்சியின் மௌன அறிவிப்பு. இயேசுவின் வாழ்க்கை முழுவதும் துணி வருகிறது: துணிகளால் சுற்றப்பட்டு பிறந்தார். சிவப்பு ஆடை அணிவிக்கப்பட்டு இழிவு தாங்கினார். சிலுவையில் அவரின் ஆடைகள் பகிரப்பட்டன. கல்லறையில் துணி வைக்கப்பட்டன. இந்த வரிசை ஒன்று மட்டும் சொல்கிறது: அவர் தாழ்மையால் மனிதனின் ஆடை அணிந்தார், மகிமையில் அதைக் கிழித்தெறிந்து உயிர்த்தெழுந்தார். ஆடை பேசுகிறபோது கல்லறை அமைதியாகிறது” இந்த மூன்று இடங்களின் தெய்வீகப் பொருள் துணிகள் தான் பிறப்பு தாழ்மை : வறுமையில் வந்த தேவன். இறப்பு பலி : பாவங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட உடல். உயிர்த்தெழுதல் வெற்றி : மரணம், பாவம், சாத்தானின் அதிகாரம் அனைத்தையும் வென்ற சாட்சி. ஆக, “துணிகளில் சுற்றப்பட்டிருப்பது” என்பது சாதாரண குழந்தையின் அடையாளமல்ல; கிறிஸ்துவின் முழு இரட்சிப்பு நிகழ்வின் அடையாளம்.
வேதாகமத்தில் பிற “ஆடை / துணி” சின்னங்கள்: ஆதாம் - ஏவாள் : பாவத்துக்குப் பின் கடவுள் தோலினால் உடை ஆக்கினார் (ஆதியாகமம் 3:21). - இரட்சிப்பின் ஆரம்ப சாட்சி. “இரட்சிப்பு சின்னம்”. யோசேப்பின் வண்ண ஆடை (ஆதி. 37:3). - தேர்ந்தெடுக்கப்பட்டவரின் அடையாளம். எலியாவின் மேல் ஆடை (2 ராஜாக்கள் 2:13). - அபிஷேகம் / அதிகார பரிமாற்றம் ஆகும். பெரிய ஆசாரியனின் உடை (யாத்திராகமம் 28). - புனித பணிக்கான அழைப்பு. உயர்ந்த வஸ்திரத்தைக் ஊதாரி மகனுக்கு உடுத்திய ஆடை (லூக்கா 15:22). - மீட்பு, மன்னிப்பு, குடும்பத்தில் மீண்டும் சேர்க்கப்படுதல் ஆகும். வெள்ளை ஆடைகள் (வெளிப்பாடு 7:9, 13-14). - பாவம் கழுவப்பட்ட பாக்கியவான்களின் அடையாளம்.
சிவப்பு ஆடை
ஏரோது இயேசுவைப் பரிகாசம்பண்ணி, சிவப்பு ஆடையைப் போட்டான்”.
இயேசுவை “பொய்யான ராஜா” என இழிவுப்படுத்தினான்
உலகம் கிறிஸ்துவை இழிவுபடுத்திய தருணம்.
சிவப்பு ஆடை - இரத்தமும் பலியுமான சின்னம்.
விவிலியத்தில் சிவப்பு பாவத்தைக் குறிக்கிறது
உலகின் பாவத்தைத் தாங்கும் இயேசுவை குறித்துச் போர்த்திய
அந்த ஆடை, விரைவில் சிந்தப்போகும் இரத்தத்தின் தீர்க்கதரிசன சின்னம். என்பதை ஏரோது அறியவில்லை. ஆனால் அது பைபிளின் திருப்புமுனை:
மனிதர்கள் கொடுத்த ஆடை அவமரியாதை;
ஆனால் கடவுள் கொடுத்தது மரணத்தின் வழியே மகிமையின் ஆடை
மேய்ப்பர்கள் பார்த்த “துணிகளில் சுற்றப்பட்ட குழந்தை” என்பது சாதாரண காட்சி அல்ல. அது:
தாழ்மையில் பிறந்த ராஜா
துணிகளில் சுற்றப்பட்ட குழந்தை
துணிகளில் சுற்றி அடக்கம் பெற்ற மீட்பர்
துணிகளில் விட்டு உயிர்த்தெழுந்த இரட்சகர்
என்று முழுமையான இரட்சிப்பின் அடையாளம்.
வேதாகமத்தில் “ஆடை / துணி” என்பது பாவம், மன்னிப்பு, அதிகாரம், தாழ்மை, புனிதம், மீட்பு, வெற்றி ஆகியவற்றின் சின்னமாக வரும்.
ஆடை என்பது வெறும் உடை அல்ல; பைபிளில் அது அடையாளம், அழைப்பு, இரட்சிப்பு, மற்றும் மனித இயல்பு எனும் ஆழமான உண்மைகளை வெளிப்படுத்தும் ஒரு தத்துவச் சின்னம். இயேசு பிறந்த தருணத்திலிருந்து - “துணிகளால் சுற்றப்பட்டு” - அவர் மரித்த தருணத்தில் “சுற்றிவைக்கப்பட்டு, உயிர்த்தெழுந்தபின் “கல்லறைத் துணிகள்” தனியாக வைக்கப்பட்டதாகவும், ஆடை தொடர்ந்து ஒரே கருப்பொருளாக வருகிறது.
பிறப்பில் தாழ்மை,
இறப்பில் பலி,
உயிர்த்தெழுதலில் வெற்றி.
உயிர்த்தெழுந்தவர் மரணத்தின் எல்லைகளையும் கிழித்தெறிந்தார்.
ரோமர் நற்செய்தி - “கிறிஸ்துவை ஆடையாக அணிந்து கொள்ளுங்கள்.”
என்கிறது. இது தத்துவத்தின் உச்சம்.
தொழுவத்தில் “துணிகளால் சுற்றப்பட்ட குழந்தை” முதல் கல்லறையில் துணிகளை விட்டு வெளியே வந்த கிறிஸ்து வரை,
ஆடை பைபிளில் ஒரு மிகப் பெரிய உண்மையைச் சொல்கிறது:
இயேசு மனிதன் ஆனார்.
மனிதனுக்காகத் தாழ்ந்தார்.
மனிதனை உயர்த்த இரத்த ஆடை அணிந்தார்.
மனிதரைப் புதிய ஆடையில் மூடத் திரும்பினார்.
பிறப்பு முதல் மரணம்வரை,
மரணம் முதல் உயிர்த்தெழுதல் வரை—
ஆடை என்பது கிறிஸ்துவின் இரட்சிப்பு வரலாற்றின் கவிதை.


