prayer

கிறிஸ்து பிறப்பு பெருவிழா நல்வாழ்த்துக்கள்!

காலம் வந்தது, அவர் உரைத்தது நிறைவேறிற்று!

வனஜா அமல்ராஜ்-சென்னை

இயேசு கிறிஸ்துவில் மிகவும் பிரியமான சகோதர சகோதரிகளே! டிசம்பர் மாதம் நமக்கெல்லாம் கிறிஸ்மஸ் மாதம். நம் தந்தையாம் கடவுள் தமது ஒரே அன்பு மகனை இவ்வுலக மீட்புக்காய் கன்னித்தாயின் வழியாய் ஈந்தளித்த நாளை நினைவுகூர்ந்து நன்றி செலுத்தி மகிழும் மாதம். இரக்கத்தின் ஜீபிலி ஆண்டினை கொண்டாடி மகிழ்ந்த நம்மை நினைவுகூர்ந்து அவரது பேரன்பையும் இரக்கத்தையும் நமக்கு மணிமுடியாகச் சூட்டி மகிழ்விக்கும் மாதம் இந்த டிசம்பர் மாதம். ஆண்டு முழுவதும் நம்மைக் கண்மணிப்போலப் பாதுகாத்து பராமரித்து வழிநடத்திய கடவுளை மகிமைப்படுத்தி வருகின்ற புத்தாண்டிலே அவர் நமக்குச் செய்ய இருக்கும் நன்மைகளை நினைத்துக் கிறிஸ்மஸ் தினத்தைக் கொண்டாடி மகிழ்வோம்.

‘இதோ புதுச்செயல் ஒன்றை நான் செய்கிறேன். இப்பொழுதே அது தோன்றிவிட்டது’ (எசாயா 43:19) என்று கூறிய நம் ஆண்டவர், இப்புத்தாண்டிலே நாம் புதுமையான காரியங்களைக் காணும்படிச் செய்வார். நாம் எதிர்பார்த்துக் காத்திருக்கின்ற காரியங்கள் நிறைவேறும்படிச் செய்வார். அன்று மெசியாவைக் காண நம்பிக்கையோடு காத்திருந்தவர்களை ஆண்டவர் நினைவுகூர்ந்தார். ஆண்டவருடைய வாக்குத்தத்தங்கள் நம்முடைய வாழ்க்கையிலும் நிறைவேறும்படி அவர் நம்மையும் நினைவுகூர்வார். அன்று குழந்தை இயேசு பிறந்த நற்செய்தியை இடையர்களுக்கு அறிவித்து அவர்களை வழிநடத்தினதுபோல, விண்மீனை எழச்செய்து ஞானிகளை வழிநடத்தினதுபோல நம்முடன் இருந்து நம்மையும் வழிநடத்துவார்.

மாட்டுக் கொட்டிலில் தீவினத் தொட்டியில்!
அன்று யூதேயாவில் உள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊரில் உள்ள ஒரு மாட்டுக் கொட்டிலில் தீவினத் தொட்டியில் குழந்தை இயேசு கிடத்தப்பட்டிருந்தார். அந்நேரத்தில் அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் இடையர்கள் தங்கி இரவெல்லாம் தங்கள் கிடையைக் காவல் காத்துக்கொண்டிருந்தார்கள். மார்கழிமாத பனியின் குளிரில் நடுங்கிக்கொண்டே தங்கள் கடமையைக் கண்ணும் கருத்துமாய் செய்துகொண்டிருந்தார்கள். தீடீரென்று ஒளிர்ந்தது ஆண்டவரின் மாட்சி! பேரச்சத்தினால் ஆட்கொள்ளப்பட்டு பேச்சற்றவர்களாய் இருந்தவர்களுக்கு, பெரும் மகிழ்ச்சயூட்டும் நற்செய்தி ஒன்று காத்திருந்தது. “இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்” என்பதே அச்செய்தி. நாம் நினைக்கின்ற நேரத்திலோ குறிக்கின்ற காலத்திலோ அல்ல. ஆண்டவர் குறித்த நாளிலே நாம் நினையாத நேரத்திலே நற்செய்தி நம்மை வந்தடையும். இறைமகன் இயேசுவை கண்டுகளிக்க அவர் பிறந்த அன்றிறவே இடையர்களுக்கு அழைப்பு வந்தது. திடீரென்று வந்த நற்செய்தி இடையர்களைத் திக்குமுக்காடச் செய்தது. தூங்கிக்கொண்டிருந்த தங்கள் சொந்தங்களை, ஆட்டு கிடைகளை தட்டி எழுப்பிக்கொண்டு அறிவிக்கப்பட்ட காட்சியைக் காண தங்களை ஆயத்தம் செய்துக்கொண்டனர். ஏனெனில், ஆண்டவர் உங்களுக்காகப் பிறந்திருக்கிறார். மெசியா உங்களுக்காகப் பிறந்திருக்கிறார். மீட்பர் உங்களுக்காகப் பிறந்திருக்கிறார் என்ற நற்செய்தியானது இடையர்களின் செவிக்கு இன்ப கானமாய், ரீங்காரித்துக்கொண்டிருந்தது. உள்ளத்திற்கு உவகையூட்டும் உன்னத வேதமாய் அது இதயத்திற்குப் பரவசமூட்டியது.

இதயத்தில் இறைவன் குடிகொள்ள இடமிருந்தது.
“உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!" (லூக்கா 2:14) என்ற விண்ணகத்தூதர் பேரணியின் உன்னதகீதம் காதில் தொனித்துக்கொண்டிருக்க, விண்ணகத்தை மண்ணகத்தில் காண பாக்கியம்பெற்ற இடையர்கள் அனைவரும் உலக மீட்பைக் கண்ணாரக் கண்டு களிக்க மாட்டு கொட்டிலை நோக்கி விரைந்தோடினர். தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தை இயேசுவைக் கண்டுகளித்தனர், குழந்தையின் அருகினிலே அதன் தாய் கன்னி மரியாளையும் தந்தை யோசேப்பையும் கண்டு வியந்தனர், ஆண்டவரைப் புகழ்ந்தனர். குழந்தைக்கு அன்பளிப்பாகக் கொடுக்க அவர்களது கையிலே காணிக்கைப் பொருட்கள் இல்லை. ஆனால் இதயத்தில் இறைவன் குடிகொள்ள இடமிருந்தது. ‘ஞானத்தினின்று இறைப்புகழ்ச்சி வெளிப்படவேண்டும், ஆண்டவரே அதை வளமுறச் செய்வார்.’ (சீராக் 15:10) என்ற வார்த்கைக்கேற்ப இடையர்கள் தாங்கள் கேட்டவை, கண்டவை அனைத்தையும் குறித்துக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடிக்கொண்டே திரும்பிச் சென்றார்கள். கண்ட காட்சியைக் குறித்த சாட்சியை நற்செய்தியாக அறிவித்தார்கள்.

“மனித உள்ளத்திற்காகக் கடவுள் பேராவலோடு ஏங்குகிறார். அதற்கு அவர் அளிக்கும் அருளோ மேலானது என மறைநூல் சொல்வது வீணென நினைக்கிறீர்களா? (யாக்கோபு 4:5). ‘உலகின் பார்வையில் ஏழைகளாய் இருப்பவர்களை, நம்பிக்கையில் செல்வர்களாகவும் தம்மீது அன்பு செலுத்துபவருக்கு வாக்களிக்கப்பட்ட அரசை உரிமைப் பேறாகப் பெறுபவர்களாகவும் கடவுள் தேர்ந்து கொள்ளவில்லையா? (யாக்கோபு 2:5).

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு கிறிஸ்மஸ்மலர்