"இவர்தான் உலக மீட்பர்" என்று வானதூதர் அணி எக்காளம் ஒலித்து பெத்லேகேமில் அறிவித்திருந்தால், மீட்பின் வரலாறு வித்தியாசமாக இருந்திருக்கும். ஆனால், எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், விளம்பரமும் இல்லாமல் இறைவன் நம்மில் ஒருவராக, எம்மானுவேலாக வந்து, நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதுதான் கிறிஸ்து பிறப்பின் அழகு.
முதல் கிறிஸ்மஸ் அன்று இயேசு தந்தது இந்த ஆச்சரியம் மட்டுமல்ல. "இவர்தான் உலக மீட்பர்" என்று வானதூதர் அறிவித்திருக்கலாமே என்று எண்ணுகிறோமே அந்த எண்ணமும் நிறைவேறியது. "இவர்தான் உலக மீட்பர்" என்று வானதூதர் அறிவித்தனர். ஆனால், நாம் எதிர்ப்பார்த்தது போல் ஊருக்கு நடுவே எக்காளம் ஒலித்து இந்தச் செய்தி சொல்லப்படவில்லை. மாறாக, ஊருக்கு வெளியே மந்தைகளோடு குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த இடையர்களுக்கு வானதூதர் இந்தச் செய்தியைச் சொன்னார். இதுவும் கிறிஸ்மஸ் தரும் ஓர் ஆச்சரியம்தான்.
இந்த இடையர்களைப் பற்றியும், அவர்களுக்குத் தரப்பட்ட நற்செய்தியைப் பற்றியும் கொஞ்சம் சிந்திப்போம். ஊருக்குள் மக்கள் கணக்கெடுப்பு நடந்து கொண்டிருந்தது. அவரவர் தங்கள் பூர்வீக ஊரை, உறவைத் தேடிச் சென்று பெயர்களைப் பதிய வேண்டும். எனவேதான் “தாவீதின் வழிமரபினரான யோசேப்பும், தமக்கு மண ஒப்பந்தமான மரியாவோடு, பெயரைப் பதிவு செய்ய, கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார்.” (லூக்கா 2: 5) என்று நற்செய்தியில் இன்று வாசிக்கிறோம். இப்படி ஊர் விட்டு ஊர் சென்று தங்கள் பெயர்களை மக்கள் பதிவு செய்துகொண்டிருந்தபோது, இடையர்கள் ஏன் எங்கும் செல்லவில்லை? மக்கள் கணக்கெடுப்பு என்கிறோம். அப்படியானால், இவர்கள் மக்கள் இல்லையா? இவர்கள் மனித சமுதாயத்தில் இருக்க தகுதியற்றவர்கள் என்று அன்றைய சமுதாயம் ஒதுக்கி வைத்துவிட்டதால், இவர்கள் ஆடுகளோடு தங்களை ஒருங்கிணைத்து, சமுதாயத்தின் விளிம்பில் கிடந்தனர். அவர்களைத் தேடி வானதூதர் வந்து உலகிற்கெல்லாம் மகிழ்வைத் தரக்கூடிய நற்செய்தியை முதல் முறையாகப் பகிர்ந்து கொள்கிறார். மனிதர்கள் என்ற தகுதி கூட இல்லாமல், சமுதாயத்தின் கடைசி இடத்தில், விளிம்பில் வாழ்ந்தவர்களுக்கு கடவுள் முதலிடம் கொடுத்து ஒரு முக்கியமான செய்தியைப் பகிர்ந்து கொள்கிறார்.
அவர்களுக்கு வானதூதர் சொல்லும் வார்த்தைகளும் நம் சிந்தனையைத் தூண்டுகின்றன. “அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார். குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்” (லூக்கா 2: 10-11) வானதூதர் இந்தச் செய்தியில் ‘எல்லா மக்கள்’ என்று ஓரிடத்திலும், இடையர்களுக்குச் சிறப்பிடம் அளித்து ‘உங்களுக்கு, உங்களுக்காக’ என்று சில இடங்களிலும் பேசுகிறார்.
வானதூதர் சொன்ன வார்த்தைகளை நான் இவ்விதம் கற்பனை செய்து பார்க்கிறேன். "அன்பு இடையர்களே, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியைத் தரும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இந்த செய்தி எல்லா மக்களுக்கும் உரியதுதான். ஆனால், இதைக் கேட்கும் நிலையில் மக்கள் இல்லை. அவர்கள் தங்கள் உறவினர்களை வரவேற்பதில், விருந்துண்பதில் எல்லா கவனத்தையும் செலுத்திவிட்டார்கள். இந்தச் செய்தியைப் பெறுவதற்கு அவர்கள் மனதில் இடம் இல்லை. எனவேதான் இந்தச் செய்தியை உங்களுக்குச் சொல்கிறேன். இந்த மீட்பர் உங்களுக்காகப் பிறந்துள்ளார். அவரை அடையாளம் கண்டு கொள்வதும் உங்களுக்கு எளிது. ஏனெனில் அவரும் உங்களைப் போல் சமுதாயத்தின் விளிம்பில் பிறந்துள்ளார். தீவனத் தொட்டியில் துணிகளில் பொதிந்து கிடக்கும் அந்தக் குழந்தையில் இறைவனை உங்களால் எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடியும். செல்லுங்கள்" வானதூதர் சொன்னச் செய்தியில் இந்த அர்த்தங்கள் பொதிந்திருப்பதாக நான் உணர்கிறேன்.
தங்களை மீட்பவர் வருவார் வருவார் என்று பல்லாயிரம் ஆண்டுகள் காத்திருந்த இந்த மக்கள் அவர் வந்தபோது அடையாளம் கண்டு கொள்ள முடியாமல் அவர்கள் கவனத்தை வேறு எண்ணங்கள் நிறைத்திருந்தன. நாமும் கிறிஸ்மஸ் விழாவைக் கொண்டாடும்போது கிறிஸ்துவை இழந்துவிட வாய்ப்புண்டு. இதோ ஒரு கற்பனைக் காட்சி.
ஐந்தாண்டுகள் கழித்து, அயல்நாட்டிலிருந்து அப்பா கிறிஸ்மஸுக்கு வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டில் அனைவருக்கும் ஏகப்பட்ட மகிழ்ச்சி. எல்லாருக்கும் பல்வேறு பரிசுப்பொருட்கள் வாங்கி வந்துள்ளார் அப்பா. கிறிஸ்மஸ் அலங்காரங்களும் விதவிதமாக வாங்கி வந்துள்ளார். கிறிஸ்மஸ் குடில் ஒன்று செய்து, பல்வேறு அழகான பொம்மைகள், பூக்கள் என்று அப்பா வாங்கி வந்திருந்த அலங்காரப் பொருட்களால் அந்தக் குடில் முழுவதையும் நிறைத்தனர் அவரது குழந்தைகள். இறுதியில் அந்தக் குடிலில் குழந்தை இயேசுவை வைக்க வேண்டும் அவ்வளவுதான். குழந்தை இயேசுவை அங்கு கொண்டுவந்தபோதுதான் அவர்களுக்குத் தெரிந்தது, அவரை வைக்க அங்கு இடமில்லை என்று... அவ்வளவு தூரம் அவர்கள் அந்த குடிலை பல்வேறு பொருட்களால் நிறைத்திருந்தனர்.
சமுதாயத்தின் நடுவில் சகல மரியாதைகளுடன், பெரும் ஆரவாரத்துடன் நம் இறைவன் பிறக்காமல், சமுதாயத்தின் விளிம்பில் பிறக்கத் தீர்மானித்தார். அவர் பிறப்பதற்கு விடுதியில் இடமில்லை என்பதை விட, விடுதியில் இடம் வேண்டாம் என்று தீர்மானித்து, சமுதாயத்தின் விளிம்பில் பிறந்தார். தான் பிறந்த செய்தியையும் சமுதாயத்தின் விளிம்பில் வாழ்ந்த இடையர்களுடன் முதன் முதலாகப் பகிர்ந்து கொண்டார். இந்தக் கிறிஸ்மஸ் விழாவில் குழந்தை இயேசுவை வழக்கமான கிறிஸ்மஸ் அலங்காரங்கள் மத்தியில் மட்டும் அடையாளம் கண்டு கொள்ளாமல், அவலங்கள் மத்தியிலும், சமுதாயத்தின் ஓரங்களிலும் அடையாளம் கண்டுகொள்ள தேவையான அருளை வேண்டுவோம். தீவனத் தொட்டியில் துணிகளில் பொதிந்து கிடப்பதுதான் உலக மீட்பர். இதை இன்றும் நம்ப முயல்வோம்.
அன்பின்மடல் 20ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் சிறப்புமடல் 2021 | anbinmadal.org-2002-2021