கீழ்த்திசை ஞான எழுச்சி, வியன்ஞாலத்து இருளின்‌ வீழ்ச்சி !

அருள்முனைவர் பால் பிரகாஷ் சே.ச.

இளம்‌ பருவத்தில்‌, தாய்‌ மண்‌ விடுத்து, தந்தையோடு அமெரிக்க மண்ணில்‌ குடியேறிய லாய்ஷ்யூநன்‌, தொழில்நுட்பத்தில்‌ முன்னணி நிறுவனமான எம்‌ஐடி-யில்‌ வேதியியலில்‌ முனைவர்‌ பட்டம்‌ பெற்று, அமெரிக்கர்களை பெருவாரியாகப்‌ பாதித்துக்கொண்டிருந்த புற்றுநோய்‌ குறித்த தீவிர ஆய்வில்‌ தன்னை ஈடுபடுத்திக்‌ கொண்டார்‌. அவர்‌ கண்டுபிடித்ததெல்லாம்‌, அந்நோயைக்‌ கட்டுப்படுத்துவதிலும்‌, குணப்படுத்துவதிலும்‌, ஆங்கில மருத்துவ அணுகுமுறையிலிருந்த எண்ணற்ற குறைபாடுகளைத்தான்‌. பணம்‌ கொழித்த தன்‌ வேலையை உதறிவிட்டு, உண்மையான நலம்தரும்‌ மருத்துவம்‌ நாடி தன்‌ தாய்‌ மண்‌ தாய்வானுக்குத்‌ திரும்பினார்‌. உடல்‌-பொருள்‌-ஆவி அனைத்தையும்‌ ஒருங்கிணைத்துப்‌ பார்த்து, முழு மனித நலனைக்‌ கருத்திலிருத்திச்‌ செயல்படும்‌ கீழை நாட்டுப்‌ பண்பாட்டுத்‌ தளத்தில்‌ ஊறிப்‌ போயிருக்கும்‌ வாழ்க்கை முறையே எந்நோயையும்‌ குணப்படுத்தும்‌ உள்ளாற்றல்‌ கொண்டது என்பதைத்‌ தீர்க்கமாய்‌ உணர்ந்தார்‌. உள்ளூர உணர்ந்தறிந்த கிழக்கத்திய ஞானத்தை உலகறியச்‌ செய்வதே தனது சீரிய பணியெனச்‌ செய்தார்‌, எண்ணற்ற மக்களுக்கு வாழ்வளித்தார்‌, “பூமித்தாயின்‌ முழுமை காப்போம்‌, மனித இனத்தின்‌ அமைதி மீட்போம்‌, அனைத்து உயிரையும்‌ அன்பால்‌ நிரப்புவோம்‌” என்ற அனுதின வேண்டுதலோடு.

கீழை மண்ணில்‌ ஊறிக்கிடக்கிறது வாழ்வு தரும்‌ ஞானம்‌. அறிவுசார்‌ பண்பாட்டின்‌ அடையாளமாய்‌ மேலைநாடுகள்‌ மேலோங்கி நிற்கின்றன என்பது உண்மையென்றால்‌, ஆழ்ந்த அறிவில்‌ ஊறித்‌ திளைத்த ஞானத்தின்‌ வெளிப்பாடாய்க்‌ கீழை நாட்டுப்‌ பண்பாடுகள்‌ விளங்குகின்றன என்பதில்‌ ஐயமில்லை, உயிர்களும்‌ மாந்தரும்‌ தோன்றிப்‌ பரிணமித்திருக்க ஏதுவான தட்பவெப்ப சாத்தியம்‌ கொண்ட இக்கீழை மண்ணிலேதான்‌, இம்மண்ணோடும்‌ மரபுகளோடும்‌ கலந்து ஞானம்‌ வளர்ந்திருக்க வேண்டும்‌ என்று கணிப்பது பிழையன்று. கிழக்கு ஞானத்தின்‌ பிறப்பிடம்‌. எண்ணற்ற சூறாவளிகள்‌, இயற்கைச்‌ சீற்றங்கள்‌ ஊடாகப்‌ பரிணமித்த ஞானம்‌ கிழக்கின்‌ ஞானம்‌, அஞ்ஞானத்தில்‌ முகிழ்த்த வாழ்வியல்‌. வானின்‌ தோற்றத்தையும்‌ அதன்‌ மாற்றத்தையும்‌ கருத்தாய்க்‌ கணித்தறியும்‌ பேராற்றல்‌ கொண்டிருந்த தாலேயே, அரிதாய்த்‌ தோன்றிய விண்மீன்‌ எழுதலைக்‌ கண்டுகொண்டனர்‌, அன்றைய கீழ்த்திசை ஞானிகள்‌.

இறைஞானத்தின்‌ உன்னத வெளிப்படாய்ப்‌ பிறந்திருந்த இயேசுவைக்‌ குறித்து “விண்மீன்‌ எழக்‌கண்டோம்‌” என அவர்கள்‌ சான்றுபகர, அவர்களது சாட்சியம்‌, அன்றே, ஏரோது உள்பட்ட ஆளும்‌ வர்க்கத்துக்குக்‌ கலக்கத்தையும்‌, எளியோருக்கும்‌ ஞானிகளுக்கும்‌ மகிழ்ச்சியையும்‌ அளித்திருக்கிறது. கிழக்கில்‌ தோன்றிய விண்மீனின்‌ எழுச்சி, காடு கரை கடந்து, நாடு நகரம்‌ கடந்து, அனைத்துலக மக்களுக்கு மான மானுட விடுதலைக்‌ கனவைச்‌ சுமந்தவாறு “ஒரு மீட்பர்‌ பிறந்துள்ளார்‌, அவரால்‌ வியன்‌ ஞாலத்து இருளனைத்தும்‌ வீழ்ச்சியுறும்‌” என்ற முக்காலத்துக்கும்‌ பொருத்தமான செய்தியை முன்‌ வைத்தது. புற இனங்களைச்‌ சார்ந்த கீழை நாட்டு ஞானிகளே மீட்பரைக்‌ குறித்த விண்மீன்‌ எழுதலைப்‌ புரிந்துகொண்டனர்‌, நம்பிப்‌ புறப்பட்டனர்‌, கண்டு தரிசித்தனர்‌, நிறைவோடு நாடு திரும்பினர்‌. நிச்சயமாய்‌ அவர்கள்‌ கண்டதனைத்தையும்‌ வழியெங்கும்‌ அறிவித்திருப்பர்‌. அவர்களை, கிறிஸ்துவை கீழைநாடுகளுக்கு அறிவித்த முதல்‌ 'நற்செய்தியாளர்கள்‌ என்றழைப்பதும்‌ பொருத்தமாகவே அமையும்‌.

“பிற இனத்தார்‌ உன்‌ ஒளி நோக்கி வருவர்‌” என்றியம்பும்‌ இன்றைய முதல்‌ வாசகம்‌, ஒளியாகிய கிறிஸ்துவைக்‌ காண வந்த ஞானிகளின்‌ வருகையை முன்னுரைப்பதாக அமைவதோடு, இன, மொழி, சாதி, சமயம்‌ கடந்து, அகிலத்து மக்கள்‌ அனைவருக்கும்‌ பொதுவானவர்‌ கிறிஸ்து என்பதை உறுதி செய்கிறது. கிறிஸ்துவை, அவரது வார்த்தைகளை, .அவர்‌ முன்னிறுத்திய வேரோட்டமான விழுமியங்களை, அடித்தளமாகக்கொண்டு கட்டமைக்கப்‌பட்டிருக்கும்‌ திருச்சபையின்‌ “உரிமையாளராகவும்‌, உடன்பங்காளிகளாகவும்‌'' இன்று விளங்கும்‌ கோடான கோடி மக்கள்‌, யூதர்கள்‌ அல்ல, மாறாக, பிற இன, மொழி, பண்பாட்டுக்‌ குழுமங்களைச்‌ சார்ந்தவர்கள்தான்‌ என்ற எதார்த்த நிலை, கிறிஸ்து வழியாக வந்த மீட்பும்‌ முழு மானுட விடுதலையும்‌, ஆன்மிகத்‌ தளத்திலும்‌, அறநெறித்‌ தளத்திலும்‌, சமத்துவ சமூகத்தளத்திலும்‌, கிறிஸ்து “எல்லாருக்கும்‌ எல்லாமாகி” இருக்கிறார்‌ என்ற மீட்பின்‌ பரந்துபட்ட தன்மையை உறுதிசெய்கிறது.

அகிலத்து மக்கள்‌ அனைவருமே, கிறிஸ்து என்னும்‌ ஒரே மறையுடலுடனும்‌, அந்த மறையுடலில்‌ இரண்டறக்‌ கலந்தூறிக்‌ கிடக்கும்‌ விழுமியங்களுடனும்‌ சங்கமித்திருக்‌ கிறார்கள்‌ என்றால்‌, எல்லாவிதப்‌ பிளவும்‌, பாகுபாடும்‌, ஏற்றத்தாழ்வும்‌, கிறிஸ்து எனும்‌ விடியற்கால விண்மீனின்‌ வீரியம்கொண்ட எழுச்சியில்‌ வீழ்ச்சியடையும்‌ இருளின்‌ வெளிப்பாடுகளே என்பது வெட்ட வெளிச்சமாகிறது. கிறிஸ்துவும்‌ ஏற்றத்தாழ்வும்‌ ஒரே இடத்தில்‌ குடிகொண்டிருக்க முடியாது. கிறிஸ்துவும்‌ இனவெறியும்‌ ஒரே தளத்தில்‌ சஞ்சரிக்க முடியாது. கிறிஸ்துவும்‌ பகையுணர்வும்‌ ஒரே. மனத்தில்‌ இடம்பிடித்திருக்க இயலாது. தனி மனிதரைக்‌ கூறுபோட்டுக்‌ குழுமங்களைச்‌ சிதறடித்து மானுட சமூகத்தைப்‌ பிளவுபடுத்தும்‌ வியன்‌ ஞாலத்து இருள்‌ விலக, எழுஞாயிறாய்ப்‌ பிறந்து ஒளிவீசும்‌,

கீழை ஞானத்தில்‌ வேருன்றிய
கிறிஸ்துவின்‌ மதிப்பீடுகள்‌
மனமெங்கும்‌ நிறையட்டும்‌.
மனிதரனைவரும் மகிழ்ச்சியில்‌ திளைக்கட்டும்!‌

நன்றி சேசுநாதருடைய திருஇருதயத் தூதன்

home
முகப்பு பக்கம்

அன்பின்மடல் 20ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் சிறப்புமடல் 2021 | anbinmadal.org-2002-2021