கடவுள் தன் சாயலாகப் படைக்கப்பட்ட மக்களின் மீது கொண்டிருந்த அளவற்ற அன்பின் காரணமாக, அவர்களை மீட்பதற்காகத் தன் ஓரே மகனை இம்மண்ணில் மனிதனாகப் பிறக்கச் செய்தது மாட்சிமை நிறைந்த அற்புதமே.
விண்ணுலகம் இறங்கி மண்ணுலகத்தை முத்தமிட்ட தருணத்தைத்தான் கிறிஸ்துமஸ் என்று அழைக்கிறோம். உலகம் முழுவதும் ஒளிரச் செய்யும் பெருமைக்குரிய விழாத் தான் கிறிஸ்மஸ். துன்பத் துயரங்களில் வாழ்பவர்களுக்க இறைமாட்சிமை ஒளிரும் என்ற வாக்குறுதியின் பெருவிழாத் தான் கிறிஸ்மஸ். இப்படிப்பட்ட புனிதமான கிறிஸ்மஸ் விழாவிற்குக் காரணமாக இருக்கும் அன்னை மரியாளை நன்றிடன் நிறைவுகூர்வோம்.
வானதூதரின் குரல் கேட்ட மரியாள் தடுமாறினாலும் இறுதியில் கடவுளின் வார்த்தையில் நம்பிக்கை கொள்கிறார். உண்மையான கடவுளின் நம்பிக்கை நிறையாசீரைப் பெற்றுத்தரும். இந்த நிறையாசீர் இயேசுவைத் அவரது உதிரத்தில் உருப்பெறச் செய்தது. கடவுளின் மகனது பிரசன்னத்தால் நிரப்பப்படுகிறார். நிரப்பட்ட மரியாள் வானதூதருக்கு இவ்வாறாகப் பதில் அளிக்கிறார்.
வேலையாட்களுக்கும், ஊழியர்களுக்கும் சில உரிமைகள் உண்டு. ஆனால் அடிமைகளுக்கு உரிமைகள் என்று எதுவும் கிடையாது. ஆயினும் அன்னை மரியா தன்னை ஆண்டவரின் அடிமையென்றதோடு, உமது வார்த்தையின்படியே உனக்கு ஆகட்டும் என்று தாழ்ச்சியாலும், அசையாத நம்பிக்கையாலும் ஆண்டவரின் அருள் பெற்று இறைத்திட்டத்ததை ஏற்றுக் கொள்கிறார். மேலும் ஆண்டவரின் அடிமை என்ற வார்த்தைகள் மூலம் கடவுளின் விருப்பத்தைத் தவிர வேறு ஒன்றையும் வாழ்க்கையில் தேடப்போவதில்லை என்ற உறுதியையும் மனதில் வைத்துக் கடவுளின் நீட்சியாக இவ்வுலகில் செயல்பட்டார்.
அன்னை மரியாள் வானதூதரிடம் சொன்ன வார்த்தைகள் மரியாவின் வீரத்தையும், கடவுளின் மீது கொண்டுள்ள நம்பிக்கையையும் விளக்குகின்றன. அன்னை மரியாள் ஏதோ அறியாமையினாலோ, மகிழ்ச்சி மயக்கத்திலோ சொல்லவில்லை. எலிசபெத்தை சந்தித்தபோது அவர் பாடியப் பாடலில் உள்ள கருத்தினை நாம் புரிந்துக் கொள்ளலாம். இதில் அவரது அறிவையும், ஆன்மீக அனுபவத்தின் ஆழத்தையும் காணலாம். இஃது எப்படி நிகழும்? என்ற கேள்வி அவர் நிதானமாய்ச் சிந்தித்த்தையும் கடவுள் மீதான அன்பிலிருந்த விளைந்த பண்புள்ள, பக்தியான பெண்ணாக இருந்ததையும் சொல்லுகிறது. மரியா இயேசுவை பிறருக்கு வாழ்க்கையினால் அடையாளம் காட்டி, தன்னையே கடவுள் விரும்பிக் குடியிருக்கும் ஆலயமாக்கிக் கொள்கிறார், உயிருள்ள உடன்படிக்கைப் பெட்டகமாக, பெட்டகத்தைத் தாங்கியிருக்கும் ஆலயமாக, நற்கருணைப் பேழையாக உருவாகி விடுகின்றார்.
மரியாளைப்போலத் துன்பத்திலும் இன்பத்திலும் கிறிஸ்துவர்களின் நம்பிக்கைத் தளர்ந்து விடக்கூடாது என்பதில் கருத்தாக இருக்கவேண்டும் என்பதை அவரது வாழ்வே நமக்கு உதாரணமாக அமைகிறது. கிறிஸ்துவ மதத்தின் சிறப்பம்சம் கடவுளே மனிதனாக மாறியது. இதையே கிறிஸ்துமஸ் விழாவாகக் கொண்டாடும் நாம் சிறப்பம்சத்தின் தாக்கம் மனிதனில் கடவுளைக் காண்பது என்பதை உணர்ந்தவர்களாக நிலையில்லாச் செல்வத்தில் நம்பிக்கை வைக்காமல் கடவுளை மட்டுமே எதிர்நோக்கி இருக்கவேண்டும் என்றும் நல்லதைச் செய்து நற்செயல்கள் என்னும் செல்வத்தைச் சேர்க்க வேண்டுமென்றும் மேலும் இவர்கள் தங்களுக்குள்ளதைத் தாராள மனத்தோடு பகிர்ந்தளிக்க வேண்டுமென்றும் நற்செய்திச் சொல்லுகிறது. ஆக இறைவனுடைய உயிருள்ள வார்த்தைகள் கொடுப்பதின் சிறப்பையும், வசதியுள்ளவர்கள் எப்படி உதவும் மனப்பான்மையோடு வாழ வேண்டுமென்பதையும் நமக்குத் தெளிவுபடுத்துகிறது.
நாம் அடுத்தவருக்குக் கொடுக்கின்றபொழுது அது கடவுளுக்கே போய்ச் சேருகிறது. இதைப் பல சமயங்களில் மறந்துப் போய் விடுகிறோம். நீதிமொழிகள் 20வது அதிகாரம் வசனம் 17ல் ஏழைக்கு இரங்கி உதவிச் செய்கிறவர் ஆண்டவர்க்குக் கடன் கொடுக்கிறார். அவர் கொடுத்ததை ஆண்டவர் திருப்பித்தந்து விடுவார் என்று வாசிக்கிறோம். எனவே கொடுத்து உதவி செய்வதற்கு நாம் தயங்க வேண்டாம். அடுத்தவர்களுக்கு நாம் உதவுகின்றபொழுது இறைவனுக்குத் தான் கொடுக்கிறோம். என்ற நம்பிக்கையில் கிறிஸ்து பிறப்பு விழாவைக் கொண்டாடுவோம்.
சாதிமதப் பேதமின்றி உலகினர் கொண்டாடும் கிறிஸ்துமஸ் பெருவிழா அன்று, நாம் அனைவரும் ஒருவருக்கெருவர் அன்பின் வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொள்வது மேன்மைக்குரியச் செயலாகும். பலவிதமான தேவைகளில் தவிக்கும் நம் அயலார் பலருக்கும் நம்மிடம் உள்ளதைக் கொடுக்கும்போது இயேசுவுக்குக் கொடுக்கிறோம். அதனால் நம்மிடமுள்ள நேரம், உழைப்பு, அறிவு, திறமை, பணம், பதவி, அந்தஸ்து, அழகு, இளமை, படிப்பு ஆகியவற்றையும் உடை, உடமை, உணவு முதலியவற்றையும் தயங்காமல் பரிமாறிக் கொள்வோம். பகிர்ந்து வாழ்வதில் நிறைவடைவோம். இப்படி வாழும்போது அந்த விண்ணகப் பேரின்பம் நம்மிலும் நமது குடும்பத்திற்குள்ளும் இறங்கி வரும்வேளையில் நமது மண்ணுலக வாழ்வு தெய்வீகம் நிறைந்ததாகி விடும்.
அன்பின்மடல் 20ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் சிறப்புமடல் 2021 | anbinmadal.org-2002-2021