“பேரு பெத்த பேரு ! நீலு உச்ச லேது” என்ற தெலுங்குப் பழமொழிக்கு இலக்கணமாய்த் திகழ்ந்தவர் புனித யோசேப்பு. பழைய ஏற்பாட்டில் யோசேப்பு என்பவர் கதிர், நிலா மீன் வணங்கும் கனவு கண்டு அது போன்று எகிப்திய நாட்டில் பெருமதிப்புப் பெற்று யோசேப்பிடம் போங்கள்' என்று பார்வோன் மன்னர் கூறுமளவுக்குச் சிறப்புப் பற்றவர். ஆனால் அதே பெயரைக் கொண்டிருந்த யோசேப்புக்கு அந்தப் பெயரிலிருந்த வளமை அவர் வாழ்க்கையில் கிடைக்கவில்லை.
அவர்தம் வாழ்க்கையிலும் பல கனவுகள் வந்தன. ஆனால் எல்லாமே சோகக் கனவுகள்; சோதனைக்கனவுகள் ; தியாகக் கனவுகள் மேலும் “தாவீதின் குலத்தவரும், குடும்பத்தவருமாய் இருந்தார்'” என்று விவிலியம் கூறினாலும், “பெருங்காயம் இருந்த கலமாகவோ” அவர்தம் வாழ்க்கை அமைந்தது. அவருக்குத் தங்கமான குணம் இருந்தாலும், தங்கமோ வெள்ளியோ அவரிடம் இருக்கவில்லை. ஆனால் அவர் தம் வாழ்வில் புது வசந்தம் வீசுவதாகத் தெரிந்தது. அது கன்னிமரியாளுடன் மண ஒப்பந்தமான அன்று தொடங்கியது. ஆனால், அவரது கனவுகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தது போல் வந்த செய்தி காட்டுத் தீயன நாசரேத்து முழுவதும் பரவியது. யோசேப்புக்குத் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த மரியா திருமணமாவதற்கு முன்பே தாய்மைப் பேறு அடைந்திருந்தாள்; (இதுவும் அவருக்கே தெரியாமல்) ! ஊரில் “ஊமை” என்று இதுவரை கேலி செய்யப்பட்ட யோசேப்பு உண்மையாகவே வாய்மொழி மெளனியானார். யாரையும் சந்திப்பதற்கோ பேசுவதற்கோ, ஏன் வேலைக்குச் செல்வதற்கோ கூட அவரால் இயலவில்லை. ஒரு பக்கம் கன்னிமரியாள் மேல் கொண்ட அன்பு, அச்சம், மரியாதை : மறுபக்கம் தவறு செய்யாத தன்மீது வரக்கூடிய அவப்பெயர்! இரவு பகல் தூங்காது இருதலைக் கொள்ளியாகத் தவித்த வேளையில், வானதூதர் ஒருவர் கனவிலே வந்து அவரது ஐயத்தைப் போக்கினார்.
யோசேப்பின் வாழ்க்கை தொடர்ந்து ஒரு புதிராகவும் போராட்டமாகவும் இருந்தது. குழந்தையை ஆலயத்திற்கு எடுத்துச் சென்றபொழுது மங்களமான அருள்வாக்குகளைக் கேட்டாலும், குழந்தைக்கும் தாய்க்கும் நேரவிருந்த துன்பங்களைப்பற்றிக் கேட்டு அவர் மனம்கலங்கினார். கீழ்த்திசை ஞானியர் வந்து சென்றபின் குழந்தையையும் தாயையும் இரவோடூ இரவாக எகிப்துக்கு கட்டுச் செல்ல வேண்டிய ஆணை பெற்றார். அங்கே, எதிர்பாராத சூழ்நிலையில் எந்தவிதமான உறவும் தொடர்பும் இல்லாத நாட்டில், எப்படி அவர்களைப் பேணிப் பாதுகாத்தார் என்று தெரியவில்லை ! தொடர்ந்து, அவர்கள் சொந்த நாட்டுக்குத் திரும்ப வேண்டும் எனக் கட்டளை வர, முதலில் யூதேயாவுக்கே சென்றனர் ; ஆனால், கழ்நிலை காரணமாக, வடக்கேயிருந்த கலிலேயாவுக்குச் சென்று குடியேறினர்.
இவ்வாறு இயேசு பெருமான்-கன்னிமரியா ஆகிய இருவரின் தியாகத்திலும் யோசேப்பு நிறைபங்கேற்றார். யோசேப்பின் வாழ்க்கையைப் பற்றி இதற்கு மேல் எதையும் நற்செய்திகள் தெரிவிக்கவில்லை. இயேசுவின் அரவணைப்பிலும் கன்னிமரியாளின் பணிவிடையிலும் யோசேப்பு உயிர்நீத்தார் என்று பாரம்பரியம் கூறுகிறது. 'எந்த மரமும் சாய்ந்த பக்கமே விமுகின்றது' என்ற நியதிப்படி, இவரது வாழ்க்கையின் முடிவும் தியாகத்தின் கொடுமுடியாகவே அமைந்தது என்று நாம் நம்பலாம். இதன் பின்னணியில் துறவிலே உறவு கொண்ட இத்திருக்குடும்பத்தை எல்லாக் குடும்பங்களும் பின்பற்ற வேண்டும் எனத் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் நமக்கு அறிவுரை தந்திருப்பது மிகவும் ஏற்புடையதாகும்.
சிறப்புச் சிந்தனை
இம்மூவரின் வாழ்விலும் தொடக்கமுதல் இறுதிவரை- அத்தனையும் எதிர்பாராத சிக்கல்களும் எதிர்ப்புகளும் தோன்றின. இவை அனைத்தையும் சகிப்புத்தன்மையோடும் மாறாத அன்புள்ளத்தோடும் சந்தித்து, வாழ்க்கையின் இறுதியில் வெற்றிவாகை சூடினர். இம்மூவருமே பிள்ளை-தாய்-தந்தை என்னும் நிலையிலுள்ள நம் அனைவருக்கும் சிறந்த எடுத்துக் காட்டுகளாக, வழிகாட்டிகளாக (Role-Models) இருக்கும் தகுதி பெற்றவர்கள் ஒவ்வொருவரும் மற்ற இருவருக்காக (Pasons For Others) வாழ்ந்து, தங்களுக்கும் மானிடர் அனைவருக்கும் உயர்வு தேடித்தந்துள்ளனர், இவர்கள் சிறப்பாக அன்பு என்ற ஒன்றையே வாழ்க்கையின் அடித்தளமாய் அமைத்துக் கொண்டவர்கள், "தான்" என்னும் உணர்வை அழித்து மற்றவர்களுக்கு வாழ்வு தந்தவர்கள். இத்தகைய அன்பை நாமும் வாழ்ந்து காட்டுவோம்.
"அன்பிலார் எல்லாம் தமக்குரியர் ; அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு " (திருக்குறள் : 72)
அன்பின்மடல் 20ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் சிறப்புமடல் 2021 | anbinmadal.org-2002-2021