நம்பிக்கை என்பது கொடுத்தலே!

அருட்சகோ. அமல் போஸ்கோ சே.ச., அருள்கடல், சென்னை.

திருவருகைக் காலமும் கிறிஸ்து பிறப்புக் காலமும் நம்பிக்கையில் நிலைத்து நிற்பதற்கும் வளர்வதற்கும் ஏற்ற காலங்களாகும். ஆனால் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இவ்வுலகில் இந்த நம்பிக்கையின் ஒளியை மறைக்கும் வண்ணம் நிகழ்வுகள் நடக்கின்றன. கொரோனா என்னும் உயிர்க்கொல்லி நோய் உலகம் முழுவதும் பரவி, பல மக்களைக் கொன்று, சமுதாயத்தின் பல்வேறு படிநிலைகளில் உள்ள மக்களின் வாழ்க்கையைச் சீர்குலைத்து, அனைவரையும் நிம்மதியற்ற நிலைக்குக் கொண்டு சென்றிருக்கிறது. அரசுக்கும் அரசின் திட்டங்களுக்கும் எதிராகப் பல மாதங்களாக நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டமானது, சுயநலத்தையும் பணம் சேர்ப்பதையும் மட்டுமே கருத்தில் கொள்ளும் அரசியல்வாதிகளின் முகத்திரையைத் தோலுரித்துக்காட்டுகிறது. சாதி சமய இன மொழி அடிப்படையில் மக்களைப் பிரித்தாள முயலும் பல அடிப்படைவாதக் கொள்கைகளும் அடிப்படைவாதச் சக்திகளும் சமூகத்தின் பல்வேறு நிலைகளில் ஊடுருவி பாமர மக்களின் வாழ்வைக் கெடுத்தும் அவர்களின் மன அமைதியைக் குலைத்தும் வருகின்றன. கற்க வேண்டிய வயதில் காமுகர்களின் வன்கொடுமைக்கு இறையாகும் குழந்தைகளின் மரணங்கள் மனதில் வலியை நிரப்பி நிற்கின்றன. நிம்மதியான நிறைவான வாழ்வை வாழ விரும்பும் பெரும்பான்மையான மக்களுக்கு மேற்கூறிய அனைத்தும்; நல்லதொரு எதிர்காலம் அமையும் என்ற நம்பிக்கையை உடைக்கும் சக்திகளாக உருவெடுத்துள்ளன. இத்தகையச் சுழலில் நம்பிக்கையைப் பற்றி நாம் பேசுவது நலம் பயக்குமா? இக்கட்டான இச்சூழலில் நம்பிக்கையை மீட்டெடுப்பதும், வளர்த்தெடுப்பதும் எப்படி சாத்தியமாகும்?

'நாம் வாழும் தற்கால உலகம் தான் இப்படிபட்ட பிரச்சனைகளோடு உள்ளது; நாம் முன்னோர் பலர் வளமான நலமான வாழ்வு வாழ்ந்தனர். எனவே நாம் மீண்டும் நம் முன்னோர் வாழ்ந்த பொற்கால வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும்' என்கின்ற எண்ணம் பல முறை என்னில் எழுந்ததுண்டு. ஆனால் உண்மையில் அப்படி ஒரு பொற்காலம் என்றுமே இருந்ததில்லை. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் மக்களுக்கு எழும் பிரச்சினைகள் ஒன்றுதான். ஆனால் அவை வெளிப்படும் விதமும் வடிவமும்தான் மாறி இருக்கின்றன. இதைத்தான் பெரியவர்கள் 'வரலாறு மீண்டும் மீண்டும் தொடர்கிறது' என்கிறார்கள எனக் கருதுகின்றேன். நம்பிக்கையும் கொடுத்தலும் கரையில் ஒதுங்கிய நட்சத்திர மீன்களை மீண்டும் கடலுக்குள் வீசி எறிந்த சிறுவனின் கதையை நாம் கேள்விப்பட்டிருப்போம். அந்தச் சிறுவனைப் போல, கடலில் உள்ள அனைத்து நட்சத்திர மீன்களின் வாழ்க்கையை நம்மால் மாற்ற முடியாவிட்டாலும், நம் கண்ணில்பட்டு நம்மால் மீண்டும் கடலுக்குள் தூக்கி எறியப்படுகின்ற அந்த ஒருசில மீன்களின் வாழ்க்கையில் நம்மால் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அவ்வகையில், இத்தகைய நம்பிக்கையற்ற சூழ்நிலையில் உலகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முயல்வது எளிதான செயல் அன்று. எனினும் தனி மனிதனாக நம் ஒவ்வொருவராலும் நிச்சயமாக ஒருசிலரது வாழ்க்கையிலாவது மாற்றத்தை ஏற்படுத்தி நம்பிக்கையை விதைக்க முடியும். அத்தகைய நம்பிக்கை, 'கொடுப்பதில்' ( ஈகையில்) மறைந்திருப்பதாக நான் கருதுகின்றேன்.

நாம் கொடுக்கும் விதைகளை நிலம் நமக்கு விளைவித்து நல்ல விளைச்சலைக் கொடுக்கும் என்ற நம்பிக்கையிலேயே நாம் விதைகளை விதைக்கின்றோம் (கொடுக்கின்றோம்). நாம் ஒவ்வொருவருமே தினமும் உணவு உண்டு, நீர் அருந்துவதுதன் (உடலுக்குக் கொடுப்பது) நோக்கம் இவை நமது அன்றாட வாழ்வுக்குத் தேவையான சக்தியையும்;, வரும் காலத்தில் நாம் செய்யவிருக்கும் செயல்களுக்கும் எடுக்கவிருக்கும் முயற்சிகளுக்கும் நமக்கு பலத்தையும் தரும் என்ற ஒரு நம்பிக்கையிலேயே. நாம் உறங்கி உடலுக்கு ஓய்வு கொடுப்பதும் நாளை எழும்போது உற்சாகமாக இருக்கும் என்ற ஒரு நம்பிக்கையிலேயே. பிற்காலத்தில் தங்கள் குழந்தை நல்ல நிலைக்கு வரும்; என்ற நம்பிக்கையிலேயே பெற்றோர் அவர்களுக்குக் கல்வியைக் கொடுக்கின்றனர். செடிக்கு நீர் ஊற்றாமல் (கொடுக்காமல்) அது வளரும் என்று நம்புவது மடத்தனம். இவைகளின் பின்னணியில் பார்க்கும் போது "ஈதல்"தான் நம்பிக்கை; கொடுப்பதில் தான் நம்பிக்கை மறைந்து இருக்கின்றது.

கிறிஸ்துமஸ் – கொடையின் விழா
'தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்' (யோவா 3:16) என்று விவிலியத்தில் வாசிக்கின்றோம். இவ்வாறு, அனைத்தையும் நமக்காகக் கொடுத்த கடவுள்; இறுதியாக நாம் வாழ்வு பெறும் பொருட்டு தன் மகனையும் கொடுத்ததையே கிறிஸ்துமஸ் விழா நமக்கு நினைவுபடுத்துகின்றது. தன் மகனை அவர் கொடுத்ததின் முக்கிய நோக்கம், தன்னை பிரசன்னப்படுத்தும் தன் மகனைப் பின்பற்றி நாம் அனைவரும் இறைவனை வந்தடைவோம் என்ற நம்பிக்கையிலேயே. இயேசுவும் தன் உயிரைக் கல்வாரியில் பலியாகக் கொடுத்தது மக்களும் தன்னைப் போலவே அன்பிற்காக எதையும் இழந்து இறையரசை இம்மண்ணில் வளர்த்தெடுப்பார்கள் என்ற நம்பிக்கையிலேயே. திருஅவை இயேசுவைப் போதிப்பது அவரின் போதனைகளை வலியுறுத்துவதும் மக்கள் அனைவரும் துன்பங்களிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியான வாழ்வு வாழ்வார்கள் என்ற நம்பிக்கையிலுமே ஆகும்.

பகிர்தல் வளர்க்கும் அன்பு
இவ்வாறு, நம்மைச் சுற்றி நடந்த செயல்களும் நடக்கும் செயல்களும் ஏதோ ஒரு வகையில் கொடுத்தலின் வழியாகவே நம்பிக்கையை வெளிப்படுத்தி வருகின்றன. அதேநேரம் இந்தக் கொடுத்தலானது அன்பினால் மட்டுமே சாத்தியமாகும். அன்பு நம்மில் பெருக்கெடுக்கும் போதுதான அது நம்மைத் தாராளமாகக் கொடுக்கத் தூண்டும். 'தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை' (யோவா 15:13) என்ற இயேசு அந்த அன்பினாலேயே மனுவுருவாகத் தன்னையே கொடுத்தார்; அதே அன்பினாலேயே தன்னைச் சிலுவையிலும் பலியாகத் தந்தார். இதனை முழுமையாய் உணர்ந்தவர்களாய் நாம் ஒவ்வொருவரும் நம்மைச் சுற்றிலும் இருப்பவர்களையும் நாம் சந்திக்கும் மனிதர்களையும் அன்பு செய்து அவர்களுக்கு நம்மால் இயன்ற வகையில் நம்மிடம் இருப்பதைக் கொடுக்கும் போது அவர்களுடைய வாழ்க்கையில் நம்பிக்கை ஒளியை வீசச் செய்ய நம்மால் இயலும்;. வறுமையில் வாடும் இல்லாதவர்களுக்கு நாம் கொடுக்கும் சிறிய பொருளுதவி அவர்களது வாழ்க்கையில் நம்பிக்கை பிறக்க வழிசெய்யும். மன அழுத்தத்தில் உயிரை மாய்த்துக் கொள்ளும் எண்ணத்தில் இருக்கும் ஒருவருக்கு நாம் கொடுக்கும் ஆறுதலான வார்த்தைகள் அவர் வாழ்வுக்கு நம்பிக்கையின் ஊற்றாக அமையும். துன்பங்களாலும் தோல்விகளாலும் துவண்டுபோய் இருப்பவர்களுக்கு நாம் கொடுக்கும் உடனிருப்பு அவர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

நமக்காகத் தன்னைக் கொடுத்த இறைவனின் வருகையைக் கொண்டாடி மகிழும் நாமும் நம்மால் இயன்ற உதவிகளைப் பொருளாகவோ, சொல்லாகவோ, செயலாகவோ பிறருக்குக் கொடுப்போம். கொடுப்பதில்தான் நம்பிக்கை பிறக்கிறது என்பதை உணர்வோம். தனிமனிதர்களாக நம்பிக்கையை மீட்டெடுக்க அன்போடு நாம் ஒவ்வொருவரும் முன்னெடுக்கும் 'ஈதல் செய்கை' தனி மனித வாழ்வில் மட்டுமல்லாது சமூகத்திலும் நம்பிக்கையை ஊற்றெடுக்கச் செய்யும். இதனை நமக்கு நினைவுபடுத்துவதே கிறிஸ்துவின் பிறப்பாகும். எனவே அன்போடு இயன்றதைக் கொடுத்து நம்பிக்கையை வளர்ப்போம்; நாமும் நம்பிக்கையிலும் அன்பிலும் வளர்வோம். பாலன் இயேசுவின் வரவை அர்த்தமுள்ளதாக்குவோம்.

- அருட்சகோ. அமல் போஸ்கோ சே.ச., அருள்கடல், சென்னை.

home
முகப்பு பக்கம்

அன்பின்மடல் 20ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் சிறப்புமடல் 2021 | anbinmadal.org-2002-2021