மகிழ்ச்சிவிழா நாயகன்

திரு டிசெல்வா, வெலிங்டன்

கிறிஸ்துமஸ் விழாவிற்காக வீடு செல்ல நீண்ட பயணத்தை எதிர்நோக்கி பேருந்துக்காக நின்றுகொண்டிருந்த பொழுது, மனம் கடந்த ஆண்டு இதே விழாவில் யாரோடு இணைந்தோம், யாரை தவிர்த்தோம், என்னென்ன பரிசுகள் கொடுத்தோம், எவையெல்லாம் பெற்றுக்கொண்டோம் என்று அசை போட ஆரம்பித்தது. அப்போது, பக்கத்து வீட்டுப் பையன் விரைவாக கையில் ஒரு பரிசுடன் என்னைக் கடந்து செல்வதை கவனித்த நான், அவனை அன்போடு அழைத்து, “எங்கு செல்கிறாய்?” என்று விசாரித்தபோது, மகிழ்வோடும் துடிப்போடும், “என் நண்பனின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காகச் சென்று கொண்டு இருக்கின்றேன்” என்று பதிலளித்தான். கையில் என்ன என்று கேட்க, “இது நான் தேடி வாங்கிய அன்பளிப்பு! நண்பனுக்கு கொடுப்பதற்காக” என்றுரைத்தான். “ஏன் உனக்கென ஒன்றும் வாங்கவில்லையா?” என்று கேட்டபோது, அவன் சிரித்துக்கொண்டே “என்ன மாமா? பிறந்தநாள் விழாவுக்குச் செல்லும் நான், எனக்காக என்ன வாங்குவது? விழாநாயகனான நண்பனுக்காகத் தானே வாங்க வேண்டும்? என்னைத்தான் அவனும் அவன் வீட்டாரும் நிறைவாக வரவேற்று, அவர்களுடைய மகிழ்ச்சியிலும் விருந்திலும் என்னையும் இணைத்துக் கொள்வார்களே! அதுபோதாதா?” என்றுக் கேட்டான். நானும் மகிழ்ச்சியோடு “நல்லது, சென்று உன் நண்பனோடு மகிழ்ந்து கொண்டாடு” என விடைகொடுத்தேன்.

எனது பயணம் தொடர்ந்தது… இந்தச் சிறுவனின் பதில் என் பயணத்தின் மையமாகவும், மாபெரும் கேள்வியாகவும் நின்றது. ஒரு பிறந்தநாள் விழா கொண்டாட விழாநாயகன் அங்கு வேண்டும். அவரோடு அவன் வீட்டாரும், உறவினர்களும், இன்னும் ஏனைய சுற்றமும் நட்பும் இணைந்திருக்க வேண்டும். அந்த இடத்தில் மையமாகவும் மூலமாகவும் இருக்கும் விழாநாயகனுக்கு, வருவோரும், இருப்போரும் அன்பளிப்பு - பரிசுகள் கொடுப்பதில் மிகவும் முனைப்பாக இருப்பார்கள். அன்பையும் வாழ்த்துக்களையும் பெற்றுக் கொண்ட விழாநாயகன் கைமாறாக, அனைவரின் மனம் மகிழும்வண்ணம் நல் விருந்தோம்பலினால் தனது நன்றியை உரித்தாக்க விழா இனிது நிறைவுறும். இப்படி விழாநாயகனின் பிரசன்னத்தில் அவனை மையப்படுத்தி அவனுக்காக கொண்டாடுவது சிறப்பான உண்மையான ஒரு பிறந்தநாள் விழாவாக இருக்கும். இது உலக வழக்கு.

வாருங்கள்! நாம் கடந்து வந்த பாதையையும், கடக்கவிருக்கும் பாதையும் கவனமுடன் பார்ப்போம். இன்று என்னுடைய வயதை நான் குறிப்பிட வேண்டுமென்றால் சரித்திர நாயகனான இயேசுவின் பிறந்தநாளை நினைவுகூராமல் நான் பிறந்த ஆண்டையும் வயதையும் கூற முடியாது. உலக சரித்திரத்தின் மையமாகவும், சரித்திர நாயகனாகவும் பிறந்த இயேசுவின் அந்த பிறந்தநாள், இன்று உலகில் மூச்சுவிடும் ஒவ்வொரு நபருக்கும் அவர்கள் அறியாமல் அவர்களுடைய வாழ்வோடு இணைந்திருக்கிறது.

உலகம் முழுவதும் நிறைவோடும், மகிழ்வோடும், ஆர்ப்பரிப்போடும், மிகுந்த எச்சரிக்கையோடும், பலநாட்களுக்கு முன்பு இருந்தே, இந்த கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாட முயற்சிகள் தொடர்கின்றன. தனிமனிதன் தொடங்கி, வீடு-நகரம்-நாடு என விழா களைகட்டுகிறது. அவரவர் தகுதிக்கு ஏற்ப விழாவை சிறப்பிக்கவும், அதில் பங்குபெறவும் தங்கள் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்து, தங்களைத் தாங்களே தயார் செய்கின்றனர். நல்லது… திருமணப் பந்தியில் உரிய திருமணஆடை இல்லை எனில் அவர் அங்கிருந்து வெளியேற்றப்படலாம். எனவே சொந்த தகுதிக்கான தயாரிப்பு நல்லது என்றால், இந்த தயாரிப்பின் மையமாக, உச்சமாக அதை அங்கீகரிக்கும் விழாநாயகன் அங்கு இருக்கவேண்டும் என்பதும், அவரோடு பந்தியில் நாம் இணைய வேண்டும் என்ற கூற்றும் நியாயமானது அல்லவா? யோசிப்போம்....

திருஅவை திருமணஆடை என “நம்பிக்கை, அமைதி, மகிழ்ச்சி, அன்பு” என்று நான்கு மதிப்பீடுகளை திருமணஆடைகளாக நம் முன்வைக்கின்றது. இவற்றை நாம் எவ்வாறு அணிந்து கொள்கின்றோம்?.

நம்பிக்கை - இந்த ஆடையை ‘எனக்காக கிறிஸ்து’ என்ற உரிமையாக அணிந்து கொள்கிறோமா அல்லது ‘நான் கிறிஸ்துவுக்காக’ என்ற உயிரோட்டமாக அணிந்து கொள்கிறோமா?. உயிரோட்டமாக அணிந்து கொள்ளும்போது, அது அயலானுக்கும் உயிர் தரும்.

அமைதி - உயிரோட்டமுள்ள நம்பிக்கை, காத்திருத்தலின் தாயகம். அனைத்திற்கும் ஒரு காலமுண்டு. எனவே, காலம் கனிந்து வரும்வரை, ஐம்புலனும் ஒன்றானால் அமைதி நம் ஆளுமையாகும்; அந்த ஆளுமையே இறைசித்தமாகும்…. புரிந்துகொள்வோம்.

மகிழ்ச்சி - இஃது தனி ஒருவனின் மனிதத்தில் மலரும் முதிர்ச்சி. ஆம், உயிரோட்டமுள்ள நம்பிக்கையோடு இறைசித்தத்தில் இணைந்து செயல்படுவதால் மனதில் பெருகி வரும் மகிழ்ச்சி என்றும் பொங்கி வழியட்டும்….

முடிவாக…. அன்பு எனும் அற்புத ஆடை! இறைசித்தம் மீட்பு எனில் அன்பு மீட்பின் கனி. எனவே, “யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற கூற்றுக்கு இணங்க, வாருங்கள், இதை பாரில் பாமரனுக்கும் பகிர்வோம்…

பயணம் திடீரென தடைபட எட்டிப்பார்த்தால் தேனீர் பருக ஒரு கடையின் முன் பேருந்து நிறுத்தப்பட்டிருந்தது. மீண்டும் பயணம் தொடர்ந்தது. தேனீர் கடையில் கூட்டத்தால் அமர்ந்திட இடம் கிடைக்காதது என்னை பெத்லகேமிற்கு அழைத்துச் சென்றது.

இரவு சூழுந்துவரும் மாலைவேளை... விடுதியின் வாசலில் இறைவார்த்தை தந்த நம்பிக்கையின் வாழ்வாதாரமாக சூசையும், இறைசித்தத்தின் முழு அடிமை என்ற அன்னை மரியாவும் தங்க இடம் தேடி நின்றுகொண்டிருப்பதைக் காண முடிந்தது. முயற்சித்தும் பலனில்லை... தங்குவதற்கு இடம் இல்லை.... இப்படிப்பட்ட சூழலில் ஒரு சிறு அழைப்பு.... “விருப்பப்பட்டால் அருகிலுள்ள தொழுவத்தில் சிறிது இடம் உள்ளது. அங்கு தங்கி இளைப்பாறலாம்” என்று… கடலில் தத்தளிக்கும் மனிதனுக்கு மரக்கட்டைக் கிடைத்தது போல, நிறைமாத கர்ப்பிணியாக வேதனையில் நின்ற அன்னைக்கு மாட்டுத்தொழுவம் தங்கும் இடமாக - இல்லமாக மாறியது. கிடைத்த அழைப்பை முழுமையாக ஏற்ற மரியா, “நானே வாழ்வு” என்றவரை வையகத்தில் வரவேற்க உள்ளே சென்றார். முதலில் தானும், தன் கணவரும் அந்த தொழுவத்தில் தங்கும் சூழலை உருவாக்கி, தம் தலைச்சன் மகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தொழுவத்தில் இருந்த தீவனத்தொட்டியில் கிடத்தினார்.

கடுங்குளிர் இரவில் சமுதாயத்தின் கடைநிலை ஊழியர்களான இடையர்கள் வானவர் செய்தியோடு குழந்தையைக் காண ஓடிவர, கன்னியின் மைந்தனாம் இம்மானுவேலனை அவர்கள் கனிவோடு கண்டு உளம் குளிர, அன்னையும் இணைந்தார் மகிழ்வோடு…. “உன்னதங்களில் தேவனுக்கு மகிமையும், பூவுலகில் நல்மனதோர்க்கு அமைதியும் உண்டாகுக” என்ற வானவர்களின் கீதத்தை இடையர்கள் இசைக்க, இயேசு பாலனை பார்த்து அன்னை மரியா பூரிப்பும் பெருமிதமும் கொண்டார்.

நாள்கள் நகர்ந்தன... யூதர்களின் அரசரைக் காண, விண்மீன் காட்டிய வழியைப் பின்தொடர்ந்து விரைந்து வந்த கீழ்த்திசை ஞானிகள், அன்னையையும், குழந்தையையும் கண்டு தெண்டனிட்டு ஆராதித்த போதும், பொன், வெள்ளி, வெள்ளைப் போளம் என காணிக்கைகளை சமர்ப்பித்தபோதும் அன்னை மரியா அமைதியில் இறைசித்தத்தை தியானித்தார்.

ஆக, கிடைத்த வாய்ப்பை (மாட்டுத் தொழுவத்தில் தங்குவதை) அற்பம் என எண்ணாமல், முழுமையாக ஏற்று நம் தேவைக்கு ஏற்ப மாற்றியமைத்துப் பயன்படுத்தவும், நாடி வருவோரை (இடையர் - ஞானிகள்) ஏற்றத் தாழ்வு இன்றி சமநிலையில் வரவேற்று மகிழவும், இன்னும் சிறப்பாக, இருப்பதில் நிறைவு காணவும் (தீவனத்தொட்டி) குடிலில் மரியா வாழ்ந்து காட்டினார். அனைத்திற்கும் மேலாக, என்னுடைய பயணம் துவங்கும் முன் அந்த பக்கத்து வீட்டுச் சிறுவன் கூறியது போல இந்த பிறப்பு நிகழ்வில் விழாநாயகனான மரியாவின் பாலகன், இம்மானுவேலன், உடன்இருப்போருக்கும், வந்து வாழ்த்துவோருக்கும் முழுமனதோடு ஆசி அருளிய வண்ணம் இருந்தார்.

நடத்துனர் பயணம் முடிந்ததை அறிவிக்க, மண்ணில் இறங்கி கால் பதித்த நான், மூன்று ஞானிகளை போன்று “எங்கே யூதர்களின் அரசன் பிறந்திருக்கிறார்?” என்றக் கேள்விக்கு விடை தேடும் விதமாக வீடு-நகரம்-நாடு என என் பயணத்தை மீண்டும் தொடர முடிவெடுத்தேன். அதே வேளையில் திருஅவை தந்த உன்னத ஆடைகளை முழுமையாக அணிந்துகொண்டு, குடிலில் மரியா கற்றுத்தரும் வாய்ப்பை பயன்படுத்தும் - உழைக்கும் மனிதனாக ஏற்றத்தாழ்வற்ற சமநிலை வாழ்வை வாழ்ந்திட, இம்மானுவேலனை என் அயலானிடத்தில் தேடிப்போகின்றேன்... ஏனெனில் கிறிஸ்து பிறப்பு விழாவை கொண்டாட விழாநாயகன் வேண்டும். நீங்களும் துணைக்கு வருவீர்களா?....

நன்றி… சென்று வருகிறேன்.

home
முகப்பு பக்கம்

அன்பின்மடல் 20ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் சிறப்புமடல் 2021 | anbinmadal.org-2002-2021