அந்த நாள்‌

திருமதி அமலி எட்வர்டு, நாகமலை, மதுரை

காவல்‌ ஆய்வாளர்‌ தர்மராஜ்‌ காவல்‌ நிலையத்தில்‌ நுழைந்தவுடன்‌ "என்ன அங்க ஒரு அம்மா படுத்துருக்காங்க என்ன விசயம்‌" என்றார்‌. ஏட்டையா உடனே "ஐயா அவங்க கடைத்‌ தெருவுல விழுந்துட்டாங்களாம்‌, விபரம்‌ கேட்டால் எதுவும்‌ சொல்லலையாம்‌. அதனால நம்ம கபிலன்‌ ஐயா தான்‌ இங்க கொண்டு வந்து விட்டுட்டு போயிட்டாங்க. நானும்‌ விபரம்‌ கேட்டேன்‌, அந்த அம்மா ஒன்றும் பேச மாட்டேங்குறாங்க". என்றார்‌ "பசியா கூட இருக்கலாம்‌ போய்‌ நாலு இட்லி வாங்கிக்கொடு" என்று கூறி ஏட்டையா கையில் காசை கொடுத்தார்‌ தர்மராஜ்.

அரைமணிக்குப் பிறகு "ஐயா அந்த அம்மா பசியில இருந்திருக்காங்க சாப்பிட்டாங்க ஆனா எதுவும்‌ பதில்‌ சொல்ல மாட்டேன்‌கிறார்கள்‌. மனநிலை சரியில்லாதவுங்க போல இருக்காங்க" என்றார்‌. தர்மராஜ்‌ உடனே எழுந்து வந்து அந்த அம்மா அருகில்‌ வந்தவர் பதட்டமாக "மேம்‌ மெர்சி மேம்‌ நல்லா இருக்கீங்களா நான்‌ யாருனு தெரியலையா மேம்‌ ” என்றார்‌. ”ஏட்டையா அந்த நாற்காலிய காத்தோட்டமா இருக்குற இடத்துல போடுங்க” என்றார்‌. தர்மராஜ்‌ "மேம்‌ வாங்க அங்க போய்‌ பேசலாம்‌ என அவர்களின்‌ கையை பிடித்து நாற்காலியில்‌ அமர்த்தியவர்‌, அந்த அம்மாவின்‌ காலடியில்‌ உட்காந்து விட்டார்.

"நீ யாருப்பா"என்றார்‌ அந்த அம்மா. தர்மராஜ்‌ பதட்டமாக மேம்‌ கீதாஞ்சலி பள்ளியில்‌ உங்ககிட்ட படிச்சேன்‌ மேம்‌. நீங்க அங்க வேலை பார்த்தீங்க மேம்‌”. அப்படியா எனக்கு நினைவுக்கு வரலையேப்பா" "மேம்‌ உங்க வீடு எங்க இருக்கு" அதுவும்‌ தெரியலையேப்பா. நான்‌ யாருன்னே தெரியல. நீங்க சொல்றதப்‌ பார்த்தா உங்களுக்கு நான்‌ நல்லா அறிமுகமாஇயிருக்கேனு தெரியுது. என்‌ பெயர்‌ என்னப்பா” என்றார். "மேம்‌ உங்க பேர்‌ மெர்சி. மதுரை வாடிபட்டியிலுள்ள கீதாஞ்சலி பள்ளியில் தான்‌ உயிரியியல் ஆசிரியராக வேலைபார்த்தீங்க மேம்‌" என்றார்.

"அப்ப நான்‌ எப்படி இங்க வந்தேன்‌" என்றார்.‌ இனி ஆசிரியரிடம்‌ பேசி விபரம்‌ அறிய முடியாது என புரிந்து கொண்ட தர்மராஜ்‌ அரை நாள்‌ விடுமுறை போட்டுவிட்டு ஆசிரியரைக்‌ கூட்டிக்‌ கொண்டு ஒரு மருத்துவமனைக்கு விரைந்தார்‌. முதலில்‌ கீழே விழுந்ததற்கான காயங்களுக்கு முதலுதவி செய்த பிறகு மனநல மருத்துவரிடம்‌ அழைத்துச்‌ சென்றார்‌. அந்த மருத்துவர்‌ தர்மராஜுக்கு அறிமுகமானவர்.அவரிடம்‌ "இவங்க என்னுடைய பள்ளி ஆசிரியர்.‌ ஆனா இப்ப அவுங்களுக்கு அவுங்க யாருனே தெரியல டாக்டர்‌". முதலில்‌ பரிசோதித்த மருத்துவர்‌ "சார்‌ இவுங்களுக்கு Alzimer நோய்‌ மாதிரி உள்ளது. இந்நோயாளிகளுக்கு இவங்க யாருன்னே மறந்து போயிடும்‌. அதனால இன்னைக்கு என்னுடைய பார்வையில வைத்து பார்க்கிறேன்‌. ஏதாவது விசயம்‌ தெரிய வருதான்னு பார்ப்போம்‌. நாளை அடுத்த கட்டம்‌ என்ன செய்யலாம்னு யோசிக்கலாம்‌." என்றார்‌. தர்மராஜ்‌ "சரி டாக்டர்‌ நாளை நான்‌ வர்றேன்‌. அவங்களுக்கு துணையாக யாரவது ஆள்‌ ஏற்பாடு பண்ணலாமா? என்றார்.

"சார் நீங்க கவலைப்படாம போங்க. நான்‌பத்திரமா அவங்கள பார்க்க ஏற்பாடு பண்றேன்‌" என்றார்.

தர்மராஜ்‌ மிகுந்த கவலையோடு வீடு திரும்பினார்‌. தனது பள்ளி நண்பன்‌ சண்முகத்தை கைபேசியில்‌ அழைத்தார்‌ "என்ன தர்மா எப்படி இருக்க?" என்றார்‌ சண்முகம்‌. தர்மராஜ்‌ "டேய்‌ மெர்சி மேம்மையை பார்த்தேன்‌” என்றார்.

"டேய்‌ என்ன சொல்ற? மேம்‌ கிட்ட பேசினியா? பல வருடங்களாக அவங்கள தேடுனியே? எப்படி கண்டுபிடிச்ச? "என மடமட வென கேள்விகள்‌ கேட்க தர்மராஜ்‌ “டேய்‌ நான்‌ அவுங்கள பார்த்த நிலைமையே வேறடா? எப்படி சொல்றதுன்னே தெரியல" என தொண்டை விம்ம கூறியவர்‌ மெளனமானார்.

சண்முகம்‌ "டேய்‌ என்னாச்சு ஏண்டா அழுறியா? தர்மா பேசுடா” என்றார்‌. தர்மராஜ்‌ காலையில்‌ காவல்‌ நிலையத்தில்‌ பார்த்த நிலைமையை கூறி இப்ப மருத்துவமனையில்‌ சேர்த்தது வரை விசயங்களை கூறினார்‌. "சண்முகம்‌ ஒரு நாலுநாள்‌ விடுமுறை எடுத்துக்‌ இட்டு இங்க வரமுடியுமா? நான்‌ மனதளவில்‌ நொறுங்கிப்போன மாதிரி இருக்குடா" என்றார்‌ மிகுந்த வருத்தத்துடன்.

"டேய்‌ தர்மா கவலைப்படாத இரவு பேருந்து பிடிச்சு காலைல உன்‌ வீட்டுல இருப்பேன்டா. மனசை போட்டு குழப்பாம தூங்கு. நாளை பேசுவோம்‌” என்றார்‌ சண்முகம்.

இரவு தர்மராஜாவுக்கு தூக்கம்‌ வரவில்லை. மெர்சி மேம்‌ இப்படி ஆனதற்கு நான்தான்‌ காரணமோ என நினைப்பு மேலோங்கியது. எட்டு வருடங்களுக்கு முன்‌ பள்ளியில்‌ நடந்ததை மனம்‌ பின்னோக்கிப்‌ பார்க்க தொடங்கியது.

அன்று +2 அரையாண்டுத்‌ தேர்வின்‌ இறுது நாள்‌. உயிரியியல்‌ கடைசித்‌ தேர்வு. தேர்வு அறைக்கு வந்த அலுவலக பணியாள்‌ தாளில்‌ எழுதியுள்ள மாணவர்கள்‌ நால்வரும்‌ தேர்வு முடிந்த பின்‌ மெர்சி மேம்மை பார்க்க வருமாறு கூறினார்கள்‌ என்று கூறிச்சென்றார்‌. அந்த நால்வரில்‌ நானும்‌ ஒருவன்‌. தேர்வு முடித்து நால்வரும்‌ மேம்மை பார்க்கச்‌ சென்றோம்‌. மேம்‌ "என்னப்பா தேர்வு நல்லா எழுதுனீங்களா" என்று கேட்டார்.

"நல்லா எழுதியிருக்கோம்‌ மேம்‌" என்றோம்‌. "சரி செயல்முறை ஏடை(Practical Note) கொண்டு வந்தீங்களா? சாப்பாடுகொண்டு வந்தீங்களா?" என்றார்‌. 'ஆமாம்‌ மேம்"

"சரி சாப்பிட்டு விட்டு உங்கள்‌ வகுப்பறைக்கு வந்து விடுங்கள்‌. நானும்‌ சாப்பிட்டு விட்டு வருகிறேன்‌ என்று கூறிச்‌ சென்றார்.

இரண்டு மணி அளவில்‌ வகுப்பறைக்கு வந்தோம். மெர்சி மேமும்‌ வந்து விட்டார்கள்‌. வரைய வேண்டிய படங்கள்‌, எழுத வேண்டியது என்ன என்பதை மேம்‌ சொல்லச்‌ சொல்ல ஒவ்வொன்றாக முடித்துக்‌ கொண்டிருந்தோம்‌. இரண்டு மாணவர்களுக்கு முடிக்க வேண்டியது குறைவாகவே இருந்ததால்‌ விரைவாக முடித்து விட்டு சென்று விட்டனர்‌. நானும்‌ என்‌ நண்பன்‌ சண்முகமும்‌ மட்டும்‌ முடிக்கவில்லை. மாலை 5 மணி ஆகிவிட்டதால்‌ மேம்‌ "நாளை காலை இருவரும்‌ 9 மணிக்கு பள்ளிக்கு வந்து விடுங்கள்‌. சாப்பாடும்‌ கொண்டு வாருங்கள்‌. முடித்து விட்டால்‌ சீக்கரம்‌ கிளம்பி விடலாம்‌. நாளை மாலை நானும்‌ கிறிஸ்துமஸ்க்காக ஊருக்குச்‌ செல்ல வேண்டும். அதற்குள்‌ முடித்து விட வேண்டும்‌" என்று கூறினார்‌. "சரி மேம்‌" என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டோம்.

பள்ளியில்‌ மெர்சி மேம்‌ என்றாலே அனைவருக்கும்‌ பிடிக்கும்‌. பெயர்க்கு ஏற்றார்‌ போல்‌ மிகுந்த அன்பும்‌ இரக்கமும்‌ உடையவர்கள்‌. மாணவர்களிடம்‌ மிகுந்த அக்கறையுடன்‌ அன்பும்‌ காட்டுபவர்‌. மாணவர்களையும்‌ வாங்க போங்க என்றே மரியாதையுடன்‌ பேசுவார்‌. மற்ற பாடங்களுக்குரிய செயல்‌ முறை ஏடுகள்‌ மற்ற ஆசிரியர்களின்‌ கெடு பிடியால்‌ முடித்து விட்டோம்‌. உயிரியியல்‌ மட்டும்‌ மேம் திட்ட மாட்டாங்க என்ற எண்ணத்தில்‌ தாமதித்து விட்டோம்.

மறுநாள்‌ நானும்‌ சண்முகமும் 9 மணிக்கு வந்து விட மெர்சி மேம்‌ வகுப்பறையில்‌ காத்திருந்தார்‌. அரையாண்டுத்‌ தேர்வு முடிந்ததால்‌ பள்ளி விடுமுறையில்‌ அமைதியாக இருந்தது. பணியாளர்கள்‌ மட்டும்‌ வேலை பார்த்துக்‌ கொண்டிருந்தனர்‌. மதியம்‌ 11 மணியளவில்‌ சண்முகம்‌ முடித்து விட எனக்கு மட்டும்‌ வரையவும்‌ எழுதவும்‌ நிறைய இருந்தது. சண்முகத்திடம்" நீ துணைக்கு இருடா முடித்து விட்டு வருகிறேன்" என்றேன்‌. மதியம்‌ ஆனது முடிக்க முடியவில்லை.

"மேம்‌ நன்‌ சாப்பிட்டுவிட்டு வருகிறேன்" என்றேன். "தர்மராஜ்‌ நான்‌ சாப்பாடு கொண்டு வரச் சொன்னேன்ல ஏன்‌ கொண்டு வரல? நீ போய்‌ சாப்பிட்டு வர நேரமாக விடும்‌. அதுனால சண்முகம்‌ நீங்க கிளம்புங்க. நானும்‌ தர்மராஜும்‌ என்‌ சாப்பாட்டை பகிர்ந்துக்கிறோம்‌" என்றார்.

மேமிடம்‌ எதிர்த்து பேச முடியவில்லை. "நான்‌ முடித்து விட்டு வீட்டுல போய்‌ சாப்பிட்டுக்கிறேன்.நீங்க சாப்பிடுங்க மேம்" என்றேன்‌. மேம்‌ சிரித்துக்‌ கொண்டே "தம்பி உங்க வயிற்றை காயப்போட்டு நான்‌ சாப்பிட முடியுமா? முதல சாப்பிடுவோம்‌ அப்புறம்‌ எழுதலாம்‌ வாங்க” என்று கூறி கொண்டுவந்த உணவில்‌ பாதியை எனக்குத்‌ தந்தார்‌. சாப்பிட்டுவிட்டு மீண்டும்‌ எழுத ஆரம்பித்தேன்.

மாலை 5 மணி ஆகிவிட்டது. "மேம்"என்றேன்." தர்மராஜ்‌ இன்று முடிக்கவில்லை எனில்‌ அடுத்து முடிக்க நேரமே கிடையாது. 27 ஆம்‌ தேதி மாதிரி செயல்முறைத்‌ தேர்வு தொடங்கி விடும்‌. நான்‌ ஊருக்குப்‌ போய்‌ விட்டு 26ஆம்‌ தேதி தான்‌ வருவேன்‌. அதனால்‌ இன்றே முடித்து விடுங்கள்‌. எனக்கு இரவு 9 மணிக்குத்தான்‌ பேருந்து" என்றார்‌. எனக்கு லேசாக எரிச்சல்‌ கோபம்‌ வர ஆரம்பிக்க வேகவேகமாக எழுத ஆரம்பித்தேன்‌. அதை கவனித்த மேம்‌ "தர்மராஜ்‌ முடிக்காமல்‌ விட்டது உங்கள்‌ தப்பு. இப்படி கோபத்துல எழுதினால்‌ மீண்டும்‌ எழுதுற மாதிரி ஆகிடும்‌. இன்னும்‌ இரண்டு தான்‌ உள்ளது அரைமணியில்‌ முடித்து விடலாம்‌" என்றார்‌. நான்‌ மட்டும்‌ அமர்ந்து முடிப்பது எனக்கு மன உளைச்சலை தந்தது. மேம்‌ மேல்‌ கோபம்‌ ஒருபக்கம்‌. அரைவயிற்று சாப்பாட்டால்‌ பசி ஒருபக்கம்‌. மேம்‌ கழிப்பறை சென்ற நேரத்தில்‌ நான்‌ சொல்லாமல்‌ கொள்ளாமல்‌ கிளப்பி சென்று விட்டேன்.

வீட்டிற்கு போய்‌ வேக வேகமாக சாப்பாட்டை சாப்பிட்டேன்‌. அம்மா "ஏன்டா எல்லா பிள்ளைகளும்‌ ஒழுங்கா பாடத்தை முடிச்சாங்கள்ள. நீ மட்டும்‌ என்‌ இப்படி முடிக்காமல்‌ விட்ட என திட்டினார்கள்‌ "உனக்கு யாரு சொன்னது?" யாரு சொன்னா என்ன? இப்பயாவது பாடத்தை முடிச்சியா முடிக்கலையை" என்று கேட்க எனக்கு மெர்சி மேம்‌ மேல்‌ கோபம்‌ வந்தது.நான்‌ முடிக்காமல்‌ சொல்லாமக்‌ கொள்ளாமல்‌ வந்த விஷயம்‌ மேம்‌ மூலமா தெரிந்தால்‌ அம்மா அடிப்பார்கள்‌ என பயந்து 'அம்மா அந்த மேம்‌ நான்‌ முடிக்கலைனு நம்ம சாதிப்‌ பேரை சொல்லித்‌ திட்டுனாங்க. நான்‌ பாதியிலேயே சொல்லாம்‌ கொள்ளாம கிளம்பி வந்துட்டேன்‌" என்று கோபமாக பேசினேன்‌. "என்னடா சொல்ற" என்று அம்மா பதட்டமாக கேட்க "ஆமாம் அம்மா.முடிக்க வில்லைன்னா சாதி பேரை சொல்லிதிட்டனுமா?" என்று கூறிவிட்டு நண்பர்களோடு அருகில்‌ உள்ள மலையடி வாரத்தில்‌ விளையாட சென்று விட்டேன்‌. நான்‌ சொன்ன இந்த பொய்யினால்‌ ஏற்படக்‌ கூறிய விளைவுகளை நான்‌ யோசித்தே பார்க்கவில்லை. அப்பா ஏழு மணிக்கு வீட்டிற்கு வந்துள்ளார்‌. நான்‌ எங்கே என அப்பா கேட்டருக்கார்‌. அம்மா உடனே நான்‌ சொன்ன விசயத்தை படபடவென சொல்லியுள்ளார்‌ அப்பாவிற்கு கோபம்‌ தலைக்கேற ஊர்‌ தலைவராக இருந்த என்‌ பெரியப்பாவிடம்‌ போய்‌ கூற நாலைந்து பேர்‌ சேர்ந்து மெர்சி மேம்‌ வீட்டிற்கே சென்று விட்டனர்.

கதவை தட்டி வெளியே கூப்பிட்டு "ஏம்மா பாடம்‌ முடிக்கலைன்னா சாதி பெயரை சொல்லி எப்படி திட்டலாம்‌" என பெரியப்பா கோபமாக பேச மேம்‌ பதறிப்போய்‌ "நான்‌ அப்படியெல்லாம்‌ யாரையும்‌ திட்டவே இல்லையே என்று கூறியுள்ளார்‌. பெரியப்பா "திட்டுறதையும்‌ தட்டிட்டு நல்லவ மாதிரி பேசுற" இரு தலைமையாரியரை பார்த்துவிட்டு என்ன செய்யனுமோ அதை செய்றேன்‌. இவங்கள எல்லாம்‌ சும்மா விடக்கூடாது என்று கத்திவிட்டு சென்றுள்ளார்‌. தலைமையாசிரியர்‌ வீடும்‌ மெர்சி ஆசிரியர்‌ வீடும்‌ அருகில்‌ தான்‌ என்பதால்‌ உடனே அங்கே போய்விட்டனர்.

தலைமையாசிரியர்‌ பதறிப்போய் "மெர்சி மேம் அப்படி பேசுபவர்‌ இல்லை. எதோ தவறு நடந்திருக்கு "என்று கூற அவர்கள்‌ கோபத்தின்‌ உச்சிக்கே சென்றுவிட்டனர். "அப்ப எங்க பிள்ளை பொய்‌ சொல்லுதா? நீங்க அந்த ஆசிரியர்‌ மேலே நடவடிக்கை எடுக்கலன்னா பிரச்சனை வேற மாதிரி போயிடும்‌.” என மிரட்டி விட்டு போய்‌ உள்ளனர்‌. தலைமையாசிரியர்‌ பயந்து போய்‌ மெர்சி மேம்‌ வீட்டிற்கு போய்‌ கேட்டுள்ளார்‌. "என்ன நடந்தது மெர்சி” என்று கேட்க மெர்சி மேம்‌ அதிர்ச்சி‌யில்‌ எதுவுமே பேச முடியாமல்‌ இருந்திருக்கிறார்கள்‌. தலைமையாசிரியர்‌ அவர்களை தட்டி தட்டி தண்ணீர்‌ தெளித்து "பேசுங்க மெர்சி இல்லைன்னா விஷயம்‌ விபரீதமா போயிடும்னு" சொல்ல மேம்‌ நடந்ததை சொல்லி உள்ளார்கள்‌. தலைமையாசிரியர்‌ உடனே "மெர்சி கிளம்பு ஊருக்குள்ள போய்‌ என்ன நடக்குதுன்னு பார்ப்போம்‌. பிரச்சனை ரொம்ப பெரிசாயிடக்‌ கூடாது" என்று கூறி ஊருக்குள்‌ வந்து விட்டார்கள்‌. மீண்டும்‌ பெரியப்பாவிடம் "மெர்சி மேம்‌ மேல்‌ ஏதும்‌ தப்பு தெரியவில்லை. தர்மராஜ்‌ வரட்டும்‌ நாம நடந்ததை கேட்போம்‌" என்று கூறியுள்ளார்‌. உடனே பெரியப்பா "மனசு உடைந்து போய்‌ வெளியில போனவன்‌ இன்னும்‌ வீடு திரும்பல .நாலாபக்கமும்‌ தேடிகிட்டு இருக்கோம்" என்று சொல்ல இருவரும்‌ பதறிப்போனார்கள்‌. "பையன்‌ மட்டும் கிடைவில்லை என்றால் கேஸ் பைல் பண்ண வேண்டியது தான்‌ என்று கூற இருவரும்‌ அரண்டு போனார்கள்.

ஊரில்‌ என்னை தேடுவதை அறிந்து என்‌ ஊர்காரப்‌ பையன்‌ நான்‌ அங்குதான்‌ இருப்பேன்‌ என்று யூகித்து வந்தான்‌. "டேய்‌ தர்மா, மெர்சி மேம்‌ பற்றி என்ன சொன்ன? அங்க நம்ம ஊரே ஒரே கலவரமா இருக்கு" என்று நடந்த அனைத்து விபரங்களையும்‌ கூற நான்‌ பயத்தில்‌ உறைந்து போனேன்‌. சண்முகம்‌ பதறிப்போய்‌ "டேய்‌ தர்மா நீ சொன்ன பொய்யால ஊரே கொதிச்சு கிடக்குது. வாடா போய்‌ உண்மையை சொல்லிரலாம்‌. மெர்சி மேம்‌ நல்ல மேம்டா. பாவம்டா அவங்க. இன்னைக்கு ஊருக்கு வேற போகனும்னு சொன்னாங்கடா வாடா" என்று என்னை இழுக்க, "டேய்‌ அங்க வந்து நான்‌ சொன்னது பொய்னு தெரிஞ்சால்‌ எங்கப்பாவும்‌ பெரியப்பாவும்‌ என்னை கொன்னே போட்டுருவாங்கடா.நான்‌ வரலைடா நீ போடா". என்று கூறிவிட்டு நான்‌ ஒட்டம்‌ பிடித்தேன்‌. சண்முகம்‌ ஊருக்குள்‌ போன போது ஊர்‌ பெரியவர்கள்‌ எல்லாம்‌ கோபத்தில்‌ இருக்க அவன்‌ உண்மையை சொல்ல பயந்து அமைதியாகி விட்டான்.

இரவுநேரம்‌ எங்க போவது என்று தெரியாமல்‌ ஒடினேன்‌. என்னைத்தேடி வந்து விடக்கூடாது என்று நினைத்து மாமா ஊருக்கு ஓடினேன்‌. 11:30 மணிக்கு மாமா வீட்டு கதவை தட்டினேன் கதவைத் திறந்த அத்தை என்னைக்‌ கண்டதும்‌ பதறிப்‌ போனார்‌. "உள்ளுக்கு வா தம்பி இப்பதான்‌ உன்‌ மாமா உன்‌ வீட்டிற்கு கிளம்புனாங்க. இரு போன்‌ போட்டு நீ இங்க இருக்க விபரத்தை அவுங்களுக்கு தெரிவிக்கிறேன்‌" என்று கூறி தகவல்‌ சொல்ல,மாமா 5 நிமிடத்தில்‌ வீட்டிற்கு வந்தார்‌. மாமா வரும்‌ போதே நான்‌ இங்கு இருப்பதை என்‌ அப்பாவிடமும்‌ பெரியப்பாவிடமும்‌ விபரத்தை கூறியுள்ளார்‌. அதற்குள்‌ நினைத்துப்‌ பார்க்கவே முடியாத விசயங்கள்‌ ஊருக்குள்‌ நடந்து விட்டது.

மாமா நான்‌ உருக்குலைந்து இருப்பதைக்‌ கண்டு அத்தையிடம்‌ "முதல்ல தர்மாவுக்கு சாப்பாடு கொடு" என்று சொல்ல "இல்ல மாமா எனக்கு சாப்பாடு வேண்டாம்‌ என உடல்‌ நடுங்க” கூறினேன்‌. மாமா அருகில்‌ வந்தார்‌ "என்ன ஐயா என்ன நடந்தது" என்று என்னை அரவணைத்து பக்கத்தில்‌ அமரச்‌ செய்தார்‌. அவ்வளவு தான்‌ நான்‌ மாமா மடியில்‌ அப்படியே விழுந்தேன்‌ "மாமா செத்துருலாம்‌ போல இருக்கு"என அழ. மாமா பதறிப்போய்‌ என்ன வார்த்தைய சொல்ற ஐயா. முதல்ல நீ சாப்பிடு.நடந்து வந்ததுல நீ களைச்சு போய்‌ இருக்க மெதுவா பேசுவோம்‌” என்று கூற "இல்ல மாமா எனக்கு இப்ப சாப்பிடவே முடியாது.முதல்ல நா சொல்றதை கேளுங்க"என்றேன்‌. "சரி வா மொட்டை மாடில போய்‌ பேசுவோம்‌. தண்ணியாவது குடிப்பா” என்றார்‌. நாக்கெல்லாம்‌ வறண்ட எனக்கு தண்ணியை வாங்கி குடித்து விட்டு மாடிக்கு போனோம்‌. நான்‌ நடந்ததை எல்லாம்‌ மறைக்காமல்‌ அப்படியே உண்மையை சொல்ல மாமா அதிர்ந்து போய்‌ விட்டார்‌. சிறிது நேரம்‌ பேசாமல்‌ இருந்தவர்‌ "என்ன ஐயா இப்படி பண்ணிட்ட. பாடம்‌ சொல்லி கொடுப்பவர்‌ தெய்வம்ப்பா. அவங்க மேலே ஒரு பழிய போட்டுட்டியே.சரி கிளப்பு வா நாம போய்‌ அந்த ஆசிரியர்‌ கிட்ட மன்னிப்பு கேட்போம்‌. நிலைமைய சரியாக்கி வருவோம்‌" என்றார்‌. மாமா காலில்‌ தடாலென விழுந்தேன்‌ "மாமா அவங்க முகத்துல எப்படி முழிப்பேன்‌? ஊருக்குள்ள போனால்‌ அப்பாவும்‌ பெரியப்பாவும்‌ என்னை கொன்னுருவாங்க" என்றேன். "சிறிது நேரம் யோசித்த மாமா "சரி பயப்படாதே நீ செய்தது தப்புனு உணர்ந்தியே பாரு அதுக்காக நான்‌ பெருமைப்படுறேன்‌. பயப்படாத அந்த டீச்சர்‌ நல்லவங்கனு சொல்ற. அவங்கள மட்டுமாவது நாம போயி பார்க்கனும்‌ தர்மா" என்றார்‌. பதிலே பேசாமல்‌ நின்றேன்‌ "சரி உன்‌ பெரியப்பா எதுவும்‌ அவசரப்பட்டு FIR பதிவு பண்ணிவிடக் கூடாது நீ போய்‌ சாப்பிடு. நான்‌ ஊருக்கு போய்‌ பார்த்து நிலைமையை சொல்லிட்டு வர்றேன்‌ பயப்படாதே. மாமா இருக்கேன்‌” என்று முதுகை தட்டிக்‌ கொடுத்து சென்றார்‌. மாமாவின்‌ வார்த்தைகள்‌ மனசை சிறிது லேசாக்க கிழேபோய்‌ சாப்பிட்டு விட்டு நடந்த களைப்பில்‌ தூங்கி விட்டேன்.

மறுநாள்‌ காலையில்‌ மாமா மிகுந்த வருத்தத்துடன்‌ இருந்தார்கள்‌. "மாமா என்னாச்சு" என்றேன்‌ "தம்பி எப்படி சொல்றதுன்னே தெறியலப்பா. நான்‌ உங்க ஊருக்குள்ள போறதுக்குள்ளாகவே அந்த ஆசிரியரை வேலைவிட்டு போகச்‌ சொல்லி கட்டாயப்படுத்தி இருக்காங்க. அவங்களும்‌ கடிதம்‌ எழுதி கொடுத்துட்டு போயிட்டாங்க. நான்‌ போய்‌ நம்ம பையன்‌ மேலதான் தப்புனு சொன்னவுடன் உங்க அப்பாவுக்கும்‌ பெரியப்பாவுக்கும்‌ கோபம்‌ தலைக்கு மேலே ஏறியிருச்சு. ஊர்மக்கள்‌ எல்லோரும்‌ கோபப்பட ஆரம்பிச்சுட்டாங்க. உடனே அந்த ஆசிரியரை கூட்டு வர ஆள்‌ அனுப்புனாங்க ஆனா அவங்க ஊருக்கு கிளம்பி போயிட்டாங்க. அப்பா பள்ளி தலைமையாசிரியரிடமும்‌ ஊர்‌ மக்களிடமும்‌ கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டு அழுதார்‌. உன்‌ பெரியப்பாவிற்கு ரொம்ப அவமானமா போயிருச்சு. எதுவும்‌ பேசாமல்‌ போயிட்டார்‌" என்றார்‌. கண்களில்‌ கண்ணீர்‌ பெருக்கெடுக்க "மாமா நான்‌ செய்த பாவத்துக்கு மன்னிப்பே கிடையாது மாமா” என ஓவென அழுதேன்‌. மாமா என்‌ நிலைமை புரிந்து கட்டப்பிடித்து "ஐயா உலகத்துல தப்பு செய்யாதவன்னு யாரும் கிடையாது. செய்த தப்பை ஏத்துக்குறது பெரிய விசயம்‌ தம்பி. காலம்‌ தான்‌ மருந்து . நடந்தது நடந்து போயிருச்சு இனி என்ன நடக்கனும்னுதான்‌ நாம யோசிக்கனும்‌. +2 தேர்வு வேறு நெருங்குதுனு" மாமா சொன்னவுடன்‌ "மாமா நான்‌ ஊருக்குப்‌ போகமாட்டேன்‌" என்று அழ "சரி தம்பி என்ன செய்யலாம்னு யோசிப்போம்‌" என்று கூறிவிட்டார்.

அதற்குள்‌ அம்மா மாமாவிடம்‌ கைபேசியில்‌ தர்மாகிட்ட பேசனும்னு சொல்ல அம்மா பேசுனாங்க "என்ன ஐயா இப்படி பண்ணிட்டியே?அந்த டீச்சர்‌ பத்தி எல்லா பசங்களும்‌ ரொம்ப நல்லவங்கனு சொல்றாக. அவங்கள்‌ மேல இப்படி ஒரு பழிய போட்டுட்டீயேப்பா. அப்பாவுக்கு பெரிய அவமானமா போயிருச்சு தம்பி. நீ ஊருக்குள்ள வந்துராதா. அப்பா உன்னை வெட்டி போட்டுருவேனு சொல்றாக தம்பி, நீ ஆசிரியர்‌ கிட்ட கண்டிப்பா மன்னிப்பு கேட்கனும்பா. உன்‌ படிப்பு கெட்டுறக்கூடாதுன்னு நினைச்சு தர்மாவ நல்லா படிக்க சொல்லுங்க, அவனை மன்னிச்சுட்டேனு சொல்லிட்டு போயிருக்காங்க. தர்மா இப்படிபட்ட ஆசிரியர்‌ பார்க்கவே முடியாதுப்பா. எனனைக்காச்சும்‌ ஒருநாள்‌ நீ அவங்க கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கனும்மய்யா" என்று அம்மா அழுது கொண்டே பேச என்‌ மனநிலை மிகுந்த பாதிப்புக்குள்ளானது. மன அழுத்தம்‌ அதிகமாக நான்‌ சரியாக இல்லை என்பதை உணர்ந்த மாமா மனநல மருத்துவரிடம்‌ சிகிச்சைக்காக சென்னை கூட்டி வந்து விட்டார்‌. தொடர்ந்து ஆறுமாத சிகிச்சைக்குப்‌ பிறகு பழைய நிலைமைக்கு சிறிது சிறிதாக மீண்டு வந்தேன்.

ஏப்ரலில்‌ +2 எழுதாததால் ஜூன்‌ மாதம்‌ தனியாக தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றேன்‌. அதன்‌ பிறகு மாமா நீ இங்க இருந்தால்‌ உன்‌ மனசுக்கு அவ்வளவு நல்லதல்ல எனக்‌ கூறி சென்னையில்‌ ஒரு கல்லூரியில்‌ சேர்த்து படிக்க வைத்தார்‌. அம்மா என்னை பார்க்க ஆசைப்பட்டு மாமாவோடு வந்தார்கள்‌. என்னை கட்டிப்பிழுத்து அழுதார்கள்‌ "தம்பி அந்த டீச்சர்‌ தேடபிடித்து அவங்கிட்ட கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டுருப்பா அப்பத்தான்‌ என்‌ மனசு ஆறும்‌"என்று கூறினார்‌. அம்மாவிடம்‌ உறுதி செய்தேன்‌ "கண்டிப்பா மன்னிப்பு கேட்பேன்‌ அம்மா” என்று கூறினேன்‌. அதுதான்‌ அம்மா என்னிடம்‌ கடைசியாக பேசியது. அதன்‌ பிறகு அம்மா ஒரு விபத்தில்‌ இறந்து விட்டார்கள்‌. அப்பா என்‌ முகத்தைக்‌ கூட நிமிர்ந்து பார்க்கவே இல்லை. M.A. முடித்து IPS தேர்வு எழுதி ஆய்வாளராக வேலைக்கு சேர்ந்தேன்‌. சேர்ந்த நாளிலிருந்து மெர்சி மேம்மை கண்டுபடித்து விடவேண்டும்‌ என்ற ஆதங்கம்‌ அதிகமாஇக்‌ கொண்டே இருந்தது. இன்று கடவுளாகஅவுங்கள என்‌ முன்னாடிகொண்டு வந்து நிப்பாட்டின மாதிரி தோணியது. தவறு செய்த அன்றைய நாளின்‌ வேதனை மீண்டுமாய்‌ என்னை ஆக்கிரமித்தது.

அழைப்பு மணி சத்தம்‌ கேட்டு கதவைத்‌ திறந்தேன்‌ "சண்முகம்‌" என வாசலில்லே கட்டிப்‌பிடித்தேன்‌. "டேய்‌ என்னடா இராத்திரி முழுதும் தூங்கலையா? கண்ணு ரெண்டும்‌ இப்படி சிவப்பாய்‌ உள்ளது என்றார்‌ சண்முகம்‌.” “ஆமாண்டா எப்படி தூக்கம்‌ வரும்‌ உள்ளவா "என்று கூறி அவனிடம்‌ காவல்‌ நிலையத்தில்‌ பார்த்ததிலிருந்து மருத்துவமனையில்‌ சேர்த்தது வரை விபரமாக மீண்டும்‌ அவனிடம்‌ கூறினேன்.

"கடைத்தெருவில்‌ இருந்துதான்‌ ஒருவர்‌ உன்‌ காவல்‌ நிலையத்திற்கு கூட்டி வந்துள்ளனர்‌ அதனால்‌ பக்கத்துலதாண்டா அவங்க வீடு இருக்கனும்‌” என்றார்‌ சண்முகம்‌. "அமாம்‌ நீ சொல்றது சரிதான்‌. முதல்ல அவுங்கள ஒரு படம்‌ எடுப்போம்‌. இங்க பக்கத்துல இரண்டு மூன்று கிராமங்கள்‌ இருக்கு. பால்காரன்‌, காய்கறி விற்பவர்களிடம்‌ கேட்போம்‌. வீட்டு வேலை செய்றவங்களும்‌ பக்கத்துல உள்ள காலனி வீடுகளுக்கு போறாங்க. அந்த மாதுரி ஆளுங்கள்‌ படிச்சா விபரம்‌ கண்டு பிடித்து விடலாம். நான்‌ போய்‌ ஒருவாரம்‌ விடுமுறை கொடுத்துவிட்டு வர்றேன்‌. அதற்குள்‌ நீ குளித்து ரெடியாகு என்றார்‌ தர்மராஜ்.

இருவரும் குளித்து விட்டு உணவகத்தில்‌ போய்‌ சாப்பிட்டு விட்டு நேராக மருத்துவமனை போனார்கள்‌. “மேம்‌ எப்படி இருக்காங்க டாக்டர்? ஏதாவது விசயம்‌ தெரிய வந்ததா ” என தர்மராஜ்‌ கேட்க, மருத்துவர்‌ கண்ணன்‌" இல்ல சார்‌ அவுங்க அல்சிமர்‌ நோயினால்‌ அதிகம்‌ பாதிக்கப்பட்டு இருக்காங்க. அவுங்க குடும்பத்துல இந்நோய் யாருக்காவது இருந்திருக்கலாம்‌ அல்லது எதோ ஒரு அதிர்ச்சியும்‌ அல்சிமர்‌ நோயுக்கு காரணமாகவும்‌ இருக்கலாம்‌. எதிர்‌பாராத அதிர்ச்சியோ அல்லது அவர்களது மனநலம்‌ பாதிக்கும்‌ அளவுக்கு ஏதேனும்‌ நிகழ்வோ கூட காரணமாக இருக்கலாம்‌" என்றார் மருத்துவர். தர்மராஜ்‌ அதிர்ச்சியில்‌ உறைந்து போனார்‌. மெர்சி மேமின்‌ இந்த நிலைமைக்கு நான்‌ தான்‌ காரணமாகி விட்டோமோ என நினைத்து மிகுந்த வேதனைப்‌பட்டார்‌. சண்முகம் தர்மராஜின்‌ முகபாவனை கண்டு அவரை திசை திருப்ப "இப்ப ஆகவேண்டியதை கவனிப்போம்‌. மேம்‌ இங்கேயே இருக்கட்டும்‌ டாக்டர்‌. அவருக்கு வேண்டிய சிகிச்சையை செய்யுங்கள்‌. நங்கள்‌ விபரம்‌ கண்டுபிடிக்க முயற்சி செய்‌கிறோம்‌" என்று கூறி தர்மராஜை வெளியே கூட்டி வந்தார்‌. "டேய்‌ சண்முகம்‌ ரொம்ப கஷ்டமா இருக்குடா" என்றார்‌ தர்மராஜ்.

"டேய்‌ இனி என்ன நடக்கனுமோ அத கவனி. கடந்து போனதை பத்தி யோசிக்காத. நடக்க வேண்டியதை கவனிப்போம்‌ வா” என்றார்‌ சண்முகம்‌. கடைத்‌ தெருவில்‌ மேம்‌ படம்‌ காட்டி கேட்டபோது ஒருவருக்கும்‌ தெரியவில்லை.

"டேய் சண்முகம்‌, மேம்‌ கிறிஸ்டியன்‌ தானே? இங்க அருகில்‌ உள்ள ஆலயங்களில்‌ கேட்டால்‌ கண்டிப்பாக விபரம்‌ தெரியும்‌" கூற "சரியான யோசனைடா கண்டு புடிச்சுரலாம்னு தோணுதுடா. உடனே போவோம்‌ வா” என்றார்‌ சண்முகம்‌ இரண்டு ஆலயங்களில்‌ உள்ள அருட்தந்தையர்கள்‌ தெரியவில்லை என்று கூற மூன்றாவதாக ஒரு ஆலயத்தில்‌ உள்ள அருட்தந்தையிடம்‌ மேம் படத்தை காட்டு கேட்க” ஆமாம்‌ இவுங்க எங்க ஆலயத்தை சேர்ந்தவங்கதான்‌ இப்ப ஒருவித மறதி காரணமாக அங்க இங்க போயிருவாங்க. தெரிஞ்சவங்க இவுங்கள வீட்டுல கொண்டு போய்‌ விடுவாங்க” என்றார்.

"பாதர்‌ இவுங்க வீட்டுல வேற யார்‌ இருக்காங்க?"என்று தர்மராஜ்‌ கேட்க "அவுங்க அம்மா அப்பா இறந்து போயிட்டாங்களாம்‌. வேற விபரம் அவுங்கள பத்தி தெரிஞ்சுக்கனும்னா அவுங்க வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கிற டானியல் சார் கிட்ட கேட்டால்தான் தெரியும்.அவர்தான் இழுங்கள் பார்த்துக் கொள்கிறார் என்று கேள்விப்பட்டேன்.அவரைப் போய் தெரிந்து கொள்ளுங்ள் "என்று கூறி முகவரி தந்தார்.

டானியேல் சாரிடம் தன்னைப் பற்றி விபரம் கூறி மெர்சி மேம் பற்றி விசாரிக்க வந்ததாக கூறினார் தர்மராஜ்.டானியல் சார் இருவரையும் உள்ளே அழைத்து அமரச் செய்தார்." இப்ப மெர்சி எங்கு இருக்கிறாள்? " என்று கேட்க,தர்மராஜ் விபரத்தை சொல்லி மருத்துவனையில் பாதுகாப்பாக இருப்பது வரை விபராக கூறினார்.

டானியல்" சார், நானும் மெர்சி அப்பாவும் நல்ல நண்பர்கள்.இராணுவத்தில் ஒன்னா பணி புரிந்தோம்.மெர்சியும் படிப்பை முடித்துவி டில்லி பக்கத்தில் ஒரு பள்ளியில் ட்டுஆசிரியரா வேலை பார்த்தாள்.இராணுவ வேலைக்குப் பிறககு இங்கு குடி வந்து 12 வருடங்கள் ஆகிவிட்டது.மதுரையில கீதாஞ்சலி பள்ளியில் வேலை பார்த்தாள்.கல்யாணமே பண்ணிக்க மாட்டேன் என்று கூறி விட்டாள்.ஏன்னா அவங்க அம்மா அல்சிமர் நோயாளி.அவுங்கள நான் தான் கவனிக்கனும்னு சொல்லி கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் என்று கூறி விட்டாள்.எட்டு வருசத்துக்கு முன்னாடி மதுரையில் வேலை பார்த்ததுக்கிட்டு இருந்தவள் திடீரென வேலையை விட்டு விட்டு வந்து விட்டாள்.அம்மாவையும் அப்பாவையும் கவனிக்கனுமானு கூறி வந்து விட்டாள்.இரண்டு வருசத்துக்கு முன்னாடி அவள் அம்மா இறந்துட்டாங்க.அவள் அப்பா போன வருடம் இறந்துட்டார்.நாங்கதான் அவளுக்கு துணையாக இருக்கிறோம்.நாலுமாசமா அவளும் அவ அம்மா மாதிரியே அல்சிமர் நோயலா பாதிக்கப்பட்டிருக்காள். .இப்ப கொஞ்ச நாளாக எங்களுக்கும் கஷ்டமாக இருக்கு.இடம் தெரியாமல் எங்கேயாவது போயிருவா.எனக்கும் வயசாகுது.அவள தேடிப்பிடித்து கூட்டிட்டு பாதுகாப்பா பார்த்துக்க முடியவில்லை.அதுனால நல்லா கவனிக்கும் ஒரு கருணை இல்லத்துல சேர்த்துவிடலாம்னு முடிவு பண்ணினோம்.நேத்துல இருந்து தேடிக்கிட்டே இருந்தேன்.பயந்து போய் பக்கத்துல உள்ள ஒரு காவல் நிலையத்துல ஒரு புகார் கொடுத்துட்டு வந்தேன்.நீங்க அங்கிருந்துதான் வர்றீங்களா? என்றார்.தர்மராஜ்" இல்லை சார் நான் வேற காவல் நிலைய ஆய்வாளர்" என்றார்.".சரி ஐயா .விபரத்திற்கு நன்றி.நான் மீண்டும் உங்களை சந்திக்க வருவேன்.உங்கள் உதவி எனக்குத் தேவைப்படும்.மேம்மை பத்திரமாக சரியான இடத்துலே சேர்த்துருவோம்.கவலைப்படாதீங்க.அப்ப நாங்கள் கிளம்புகிறோம்." என்று கூறி அங்கிருந்து கிளம்பினர்.

நேராக வீட்டுக்கு வந்த தர்மராஜ்" சண்முகம் ஏதோ மனசு லேசானது போல் இருக்குடா.என்னாலதான் மேம் இப்படி ஆயிட்டாங்களோ என்ற குற்ற உணர்வு என்னை பாடாய் படுத்தியது.மேம் அம்மாவின் நோய் அவுங்களுக்கு வந்திருக்குனு டானியல் சார் சொன்னப்ப மனசுல இருந்த பாரம் இறங்கிய மாதிரி இருந்தது"என்று கூறி அப்படியே நாற்காலியில் சாயந்து கண்களை மூடி அமர்ந்தார்.அம்மா கூறிய வார்த்தைகள் நினைவுக்கு வந்ததது..எப்படியாவது அந்த டீச்சரைப்பார்த்து மன்னிப்பு கேட்டுரு ஐயா".என்று அம்மா மீண்டும் சொல்வது போல் இருந்தது.திடீரென" டேய் சண்முகம்"என்றார்." என்னடா சொல்லு " என்றார் சண்முகம்.மேம்மை அம்மாவாக தத்து எடுத்துக்கலாம்னு இருக்கேன்." என்றார்.அதிர்ச்சியான சண்முகம்" டேய் என்ன சொல்ற"என்றார்.ஆமாண்டா அவுங்கள பார்த்து மன்னிப்பு கேட்கனும்னு ஆசைப்பட்டேன்.ஆனால் மன்னிப்பு கொடுக்கிற நிலைமையில் மேம் இல்லை.அவுங்கள கொண்டு போய் கருணை இல்லத்துல விட மனசு வரலையா.அதுனால அவுங்கள சட்டப்படி தத்து எடுக்கலாம்னு தோணுது" என்றார் சண்முகம்." டேய் நாளைக்கு உனக்கு திருமணம் ஆனால் உன் மனைவி எப்படி கவனிப்பாள்? அதெல்லாம் சரிபட்டு வராது.பிரச்சனை வரும் தர்மா.ஒரு கருணை இல்லத்துல சேர்த்துவிடு.அடிக்கடி போய் கவனித்துக் கொள்." என்றார் சண்முகம்‌. "எட்டு வருசமா நான்‌ பட்ட வேதனை அந்த கடவுளுக்குத்‌ தாண்டா தெரியும்‌. அந்த ஐயா சொல்லும்‌ போது கவனிச்சுயா? வேலையைவிட்டு விட்டு மேம்‌ வந்தப்பக்கூட நான்‌ செய்த பிரச்சனையில வந்ததா சொல்லலாமா அம்மா அப்பாவை கவனிக்க வந்ததாக மேம்‌ சொன்னதாக சொன்னாங்க. பள்ளிய விட்டு போகும்‌ போது கூட என்மேல எந்த கோபத்தையும்‌ காட்டாம மன்னிச்சுட்டதா சொல்லிட்டு போயிருக்காங்கன்னா ஒரு தாயாலதான்டா இப்படி செய்ய முடியும்‌. அவுங்க அம்மா நோய்‌ அவுங்களுக்கு வந்துருக்கலாம்‌. ஆனால்‌ மருத்துவர்‌ சொன்னப்ப கவனிச்சியா ஒரு சில அதிர்ச்சிகள்‌ கூட காரணமா இருக்கும்னு சொன்னார்‌. நான்‌ செய்த பாவத்தை கழுவ இதுதான் வழி என்றார்‌ தர்மா. சண்முகம்‌ 'அதெல்லாம்‌ சரிதாண்டா ஆனா உன்‌ திருமண வாழ்வு பத்தி யோசிச்சியா" என்றார்.

தர்மா உடனே "டேய்‌ சண்முகம்‌ உன்கிட்ட ரொம்ப நாளா பகிர்ந்துக்கனும்னு ஆசைப்பட்ட ஒரு விசயத்தை இப்ப சொல்றேன்‌. M.A படிக்கும் போது பாரதினு ஒரு பெண்ணின்‌ நட்பு கிடைத்தது. குற்ற உணர்வால்‌ கூனிகுறுகி போய் ஒதுங்கி ஒதுங்கி இருந்த என்னை கவனிச்சு அவளா வந்து என்‌ கிட்டே அன்பா பேச ஆரம்பிச்சாள்‌. அந்த நட்பு காதலா மலர்ந்தது. என்‌ வாழ்க்கையில்‌ நடந்த எல்லா விசயத்தையும்‌ ஒளிவு மறைவில்லாம சொல்லிட்டேன்‌. மனநலம்‌ சரியில்லாமல்‌ நான்‌ எடுத்த சிகிச்சை பெற்றதையும்‌ சொன்னேன். அவளுக்கு என்னைப்‌ பற்றியும்‌ மெர்சி மேம்‌ பற்றியும்‌ முழுமையா தெரியும்‌. அவளுக்கு பெற்றோர்‌ இறந்துட்டாங்க. ஒரு உறவினர்‌ வீட்டில்‌ தான்‌ இருக்கிறாள். மெர்சி மேம் கிடைத்த விபரம்‌ தெரிஞ்சால்‌ அவளும்‌ ரொம்ப சந்தோசப்படுவாள்‌ என்றார்‌ தர்மராஜ்‌. சண்முகம்‌ "டேய்‌ இந்த காதல்‌ விசயம்‌ எல்லாம்‌ என்கிட்டேயே மறைச்‌சிட்டியே படவா" என்றார்‌. தர்மா ஒருவித வெட்கம்‌ கலந்த சிரிப்புடன்‌ பார்க்க "டேய்‌ பழைய தர்மாவை இப்பதாண்ட பார்க்கிறேன்‌" என்று கட்டிபிடித்துக்‌ கூறினார்‌. "செய்டா உன்‌ மனசு சொல்றதை செய்டா. இனியாவது சந்தோசம் உன்‌ வாழ்க்கை முழுதும்‌ இருக்கட்டும்டா. உன்‌ மாமா, அப்பாவிடமும் சொல்லிட்டு செய்டா" என்றார்‌ " கண்டிப்பா மாமா இதுக்கு தடையே சொல்லமாட்டாரு. இன்னைக்கு நான்‌ நல்ல இருக்கேன்னா அதுக்குக்‌ காரணம்‌ மாமாதான் .என்‌ சந்தோசம்தான்‌ முக்‌கியம்னு நினைப்பாருடா" என்றார். 'ஆனா அப்பாதான்‌ எப்படி எடுத்துக்குவாருன்னு தெரியல." என்றார்‌ தர்மராஜ்.

பாரதியிடம்‌ மேம்மை சந்திச்சது முதல்‌ தான்‌ எடுத்துள்ள முடிவுவரை கூறி பாரதியின்‌ அபிப்பிராயம்‌ கேட்க, பாரதி மிகுந்த மகிழ்ச்சியுடன்‌ "சரியான முடிவு. கடைசிவரை நாம்‌ அவுங்களை பார்த்துக்கலாம்‌" என்றாள்‌. தர்மராஜ்‌ அடுத்தடுத்த வேலைகளை மும்முரமாக செய்ய ஆரம்பித்தார்‌. மாமாவிடம்‌ கலந்து பேசினார்‌. மாமாவும்‌ கிளம்பி வந்து விட மேம்‌ வீட்டு அருகில்‌ இருந்த ஐயாவிடம்‌ போய்‌ தர்மராஜ்‌ வாழ்வில்‌ நடந்த விசயங்களைக்‌ கூறி மெர்சி மேம்மை நான்‌ தத்து எடுத்துக்க ஆசைப்படும்‌ விசயத்தை கூறினார்‌. அந்த ஐயாவிற்கு மிகுந்த மகிழ்ச்‌சி. அவரிடம் ஆசிர் பெற்று பின்‌ சட்டரீதியாக எடுக்க வேண்டிய விசயங்களுக்கு மாமாவும்‌ உடனிருந்து உதவி செய்தார்.

"தர்மா ஒரு முறை ஊருக்கு வந்து உன்‌ அப்பாவை பாரு. அவர் கிட்டையும் உன்‌ திருமணம் பத்தி பேச வேண்டாமா?" என்றார்‌ மாமா. "அப்பா எப்படி என்னை எதிர்‌ கொள்வார்னு நினைச்சா இப்பவும்‌ அதே பயம்‌ உள்ள வருது மாமா.” என்றார்‌ தர்மராஜ்.

"இல்லைடா உன்‌ அப்பா இப்ப அப்படி இல்ல. உன் அம்மா போனதுக்கப்புறம்‌ மனுசன்‌ நொந்து போய்‌ இருக்காரு. நானும்‌ ஒவ்வொரு முறையும்‌ சொல்றேன்‌. நீ ரொம்ப பயப்படுற. அவர் பாவம்டா உன்னைத்‌ தேடுரார்டா"என்றார்‌ மாமா. "சரி மாமா போய்‌ பார்க்குறேன்‌" என்றார்‌ தர்மராஜ்.

எட்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும்‌ அந்த கிராமத்துக்குள்ள நுழைந்த போது மனம்‌ சங்கடமாக இருந்தது. மாமாவும்‌ உடன்‌ வந்தார்‌. அப்பாவை பார்த்தவுடன்‌ காலில்‌ விழுந்து அழுதார்‌ தர்மராஜ். அப்பாவும்‌ உடனே அழுது விட்டார்‌. தூக்கி கட்டிப்பிடித்துக்‌ கொண்டார்‌. "மாமா எல்லாம்‌ சொன்னான்‌. அவமானப்பட்ட எனக்கு இன்னைக்கு நீ பெருமை சேசர்த்திருக்கிறாய்‌. நல்லாயிருப்பா” என்றார்‌ அப்பா. 'அப்பா என்‌ கூட வந்துருங்கப்பா. நீங்க தனியா இருக்க வேண்டாம்‌" என்றார்‌ தர்மராஜ்.

"இல்லைப்பா உடம்புல தெம்பு இருக்கிறவரை வேலை செய்யணும்‌. அதுவும்‌ இல்லாம நகரத்துல வந்தால்‌ சும்மா என்னால உட்கார முடியாதுல. சரி உன்‌ கல்யாணத்த நம்ம ஊர்லதான்‌ வைக்கனும்னு ஆசைப்படுறேன்‌"என்றார்‌ அப்பா.

அப்பா இப்படி கேட்பார்‌ என்று எதிர்பார்க்க வில்லை தர்மராஜ்‌. உடனே சந்தோசமாக "சரிப்பா "என்று அப்பாவிடமும்‌ மாமாவிடமும்‌ ஆசிர் பெற்று வந்தார்‌. சட்டரீதியான செய்ய வேண்டிய வேலைகள்‌ ஒருபுறம்‌, திருமண வேலைகள்‌ ஒருபுறம் என சுறுசுறுப்பாக இயங்க வேண்டியிருந்தது. மெர்சி அம்மாவை வீட்டுற்கு அழைத்து வரும்‌ முன்‌ அவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்ய பாரதி,சண்முகம்,மாமா பூ மூவரும் பார்த்துக் கொண்டனர்.

"மெர்சி மேம்மை எப்ப வீட்டிற்கு கூட்டிட்டு வரப்‌ போற” என்று சண்முகம்‌ கேட்க தர்மராஜ்‌ யோசிக்காமல்‌ சொன்னார்‌. அதே டிசம்பர்‌ 23ஆம்‌ தேதி என்‌ பாவம்‌ கழுவப்‌ படும்‌ நாளாக நினைக்கிறன்‌" என்றார்‌. "மேலும்‌ மெர்சி அம்மாவின்‌ கிறிஸ்துமஸ்‌ விழா எங்கள்‌ வீட்டில்‌ வைத்து சிறப்பாக கொண்டாட எண்ணியுள்ளேன்‌ என்றார்.

சட்டரீதியான வேலைகள்‌ முடிந்து, தர்மராஜ்‌, பாரதி திருமணமும்‌ சிறப்பாக முடிந்தது. மெர்சி மேம்மும்‌ தர்மராஜ்‌ வீட்டுற்கு வந்து விட்டார்கள்‌. கிறிஸ்துமஸ்‌ அன்று வீடு முழுவதும்‌ வண்ணத்தாள்களாலும்‌ விளக்குகளாலும்‌ அலங்கரித்தனர்‌. குடிலையும்‌ மிக அழகாக அலங்கரித்தனர்‌. மெர்சி மேம்‌ முகத்தில்‌ ஒரு வித மகிழ்ச்சி தெரிந்தது. சிறு குழந்தையாய்‌ அங்கும்‌ இங்கும்‌ போய்‌ ஒவ்வொன்றையும்‌ ரசித்தார்‌. தர்மராஜ்‌ உள்ளம்‌ மகிழ்ச்சியால்‌ நிறைந்தது. மனதில்‌ அம்மா நினைப்பு வந்தது 'அம்மா உன்னிடம்‌ நான்‌ கொடுத்த வாக்கை காப்பாற்றி விட்டேன்‌. என்‌ மன்னிப்பை வேறு விதமாய்‌ கேட்டுவிட்டேன்‌. திருப்தி தானே அம்மா" என்று தனக்குள்‌ பேசிக்‌ கொண்டார்.

We wish you Merry Christmas என்ற பாடல்‌ கேட்டு பாரதியும்‌ தர்மராஜும்‌ ஓடி வர குடில்‌ முன்னாடி நின்று மெர்சி அம்மா கைதட்டி சந்தோசமாய்‌ பாடிக்‌ கொண்டிருந்தார்‌. அவரோடு சேர்ந்து பாரதியும்‌ தர்மராஜும்‌ கைதட்ட பாடினர்.

We wish you Merry Christmas
And
A Happy New Year!

home
முகப்பு பக்கம்

அன்பின்மடல் 20ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் சிறப்புமடல் 2021 | anbinmadal.org-2002-2021