“இருளை வென்று இதயங்களில் இடம் பிடித்த மழலை இயேசு”

புனித அன்னாள் சபை அருட்கோதரிகள்,
குழந்தை இயேசு ஆசிரமம். ஜெகன் மாதா ஆலயம் திருச்சி.

மார்கழி மாதக் குளிரினில், மாட்டுத் தொழுவத்தில், ஏழைகளின் மன்னனாய், எளிமையாய்ப் பிறந்த இயேசு கிறிஸ்துவின் பிறப்பு மகிழ்ச்சியை நம் உள்ளத்தில் தட்டியெழுப்பும் ஓர் அற்புதமான நாள்தான் “டிசம்பர் 25” - கிறிஸ்துமஸ்.

“யூதா நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை. ஏனெனில் என் மக்களாகிய இஸ்ரயேலை ஆயரென ஆள்பவர் உன்னிலிருந்தே தோன்று வார்” என்ற இறைவாக்கி னரின் இறைவாக்கை நிறை வாக்கி, மாசணுகா கன்னி மரியாவின் ஒரே மகனாய், நேர்மையாளரான யோசேப்பின் வளர்ப்பு மகனாய்த் தன்னை இவ்வுல கிற்கு வெளிப்படுத்தி, விண் மீன்களால் வழிகாட்டப்பட்டு, வானதூதர்களால் இடையர் களுக்கு அறிவிக்கப்பட்டு, பொன், வெள்ளைப் போளம் சாம்பிராணி போன்ற அரசருக்குரிய காணிக்கைகளைப் பிறப்பின் பரிசாய் உயர்ந்த ஞானிகளிடமிருந்து பெற்று, கொல்லத் துடித்த ஏரோது அரசனிடம் இருந்து தப்பிப் பிழைத்தத் தங்க இரத்தினமாய், தரணியர் யாவரும் போற்றும் மதிப்புமிக்க சொத்தாய், வழிதவறிப்போன நமது வாழ்வுக்கு வழிகாட்டும் அணையா விளக்காய், உணவின் அடையாளமாய் தீவனத்தொட்டியில் பிறந்து, இன்றும் ஆன்ம உணவாய்த் தன்னையே முழுமையாய்க் கொடுத்து, தினம் தினம் நம் உள்ளத்தில் பிறக்கும் இயேசு பாலகனை நன்றியோடு நினைத்துப் பார்த்து, மகிழ்விக்கும் அற்புதமான தருணம் இந்தக் "கிறிஸ்துமஸ் விழா”.

இந்த உலகில் மனிதராகப் பிறந்த அனைவரும் கடவுளைப்போல் மாறிட விரும்புவர். ஆனால் இறைமகன் இயேசு மட்டும்தான் மனிதனாக மாறிட வேண்டும் என்று துணிந்து ஏற்றுப் பணிந்து வாழ்ந்தார். கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையான அவர், தன்னுடைய அதிகாரம், செல்வாக்கு, இறைமை, மாண்பு, புகழ், கடவுள் தன்மை என அனைத்தையும் விட்டுக்கொடுத்து, தரணிக்கு வர, தாயாம் அன்னை மரியின் உதவி வேண்டினார். ஆனால், நாம் நமது கௌரவம், கோபம், ஆணவம், மதவெறி, புகழ், மதிப்பு, செல்வம், பெயர் போன்ற சுயநலச் சுவரைத் தகர்த்தெறியத் தயங்குகிறோமே! அவருடைய பிறப்பை நாமும் நம் உள்ளத்திலும் இல்லத்திலும் கொண்டாட நம்மையே தயாரிப்போம். சுயநலம் என்னும் தடுப்புச்சுவரையும், நான் என்ற அகங்கார உணர்வையும் உடைத்து எறிவோம். உன்னதராம் இயேசு பாலகனின் மழலைக் குரலை நாமும் கேட்க, மாசு நிறைந்திருக்கும் பாவக்கறைகளை அகற்றி, மாசில்லாக் குழந்தை உள்ளத்தோடு காத்திருப்போம். அன்று இறைக் குழந்தையைக் காப்பற்ற பல குழந்தைகள் தங்கள் உயிரைத் தியாகம் செய்தார்கள். இறுதியில் இந்த உலகமே மீட்கப்பட, பாவ வாழ்வில் இருந்து விடுபட, தன் உயிரை முழுமையாகத் தியாகம் செய்தார் தியாகச் செம்மல் நம் கிறிஸ்து அரசர்.

"கருவறையும் இருட்டு, கல்லறையும் இருட்டு, 
இடையில் எதற்கு கரண்ட் (current)" என்பதற்கிணங்க
	இயேசு பிறந்ததும் பிறருக்காக....  
	வாழ்ந்ததும் பிறருக்காக... 
	இறந்ததும் பிறருக்காக....
		நாம் வாழ்வது யாருக்காக????? 

சிந்திப்போம்! சாதிப்போம்!! வாழ்க்கையை நேசிப்போம்!!!

home
முகப்பு பக்கம்

அன்பின்மடல் 20ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் சிறப்புமடல் 2021 | anbinmadal.org-2002-2021