இறையாசீர் என்றும் உங்களோடு!

தந்தை தம்புராஜ் சே.ச.

இயேசுவின் இனிய நாமத்தில் என் நெஞ்சுக்கினிய உள்ளங்களே வணக்கம்!

முதற்கண் உங்களுக்கு என் மன்றாட்டு கலந்த கிறிஸ்து பிறப்பு விழா வாழ்த்துக்கள். இயேசு ஒவ்வொரு நாளும் நம் இதயத்தில், வாழ்வில் வந்து கொண்டுதான் இருக்கின்றார். இந்நிகழ்வை நாம் அறிந்துகொள்ள, புரிந்து கொள்ள, கண்டுணர்ந்து கொள்ளும் பக்குவத்தை ஓர் அருளாக இறைவனிடம் மன்றாடுவோம்.

கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் இறைவனின் வருகையைப் பற்றிக் கீழ்வரும் கவிதையின் வழியாக நமக்கு உணர்த்துகின்றார்:

'அவரது சப்தமற்ற காலடிகளின் ஒளியை 
நீ கேட்கவில்லையா? 
அவர் வருகின்றார். வருகின்றார்! 
என்றும் வந்து கொண்டே இருக்கின்றார். 
ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு யுகமும் 
ஒவ்வொரு பகலிலும், ஒவ்வொரு இரவிலும் 
அவர் வருகின்றார், 
வந்து கொண்டே இருக்கின்றார். 
வெவ்வேறு மனநிலையில் 
பல பாடல்களை இயற்றியுள்ளேன் 
அவற்றின் மையப் பொருளெல்லாம் 
நான் அறிக்கையிட்டுள்ளது. 
அவரது வருகையைப் பற்றிதான். 
அவர் வருகின்றார். வருகின்றார்! 
வந்து கொண்டே இருக்கின்றார். 
ஏப்ரல் மாத சூரிய ஒளியில் நறுமணமான 
நாள்களில் வருகின்றார்! 
காட்டுப் பாதையின் வழியே வருகின்றார். 
வருகின்றார். வருகின்றார், 
என்றும் வந்து கொண்டே இருக்கின்றார். 
சூலை மாத மழைக்கால மேகமூட்டத்தின் 
வழியாக, இடி முழக்கத்தோடு கூடிய மேகம் 
என்ற சாரட் வண்டியில் அவர் வருகின்றார். 
வருகின்றார். வந்து கொண்டே இருக்கின்றார்! 
துக்க துயரங்களின் காலத்தில் 
அவருடைய காலடிகள் 
என் இதயத்தை அழுத்தி வருகின்றன! 
அவரது காலடிகளின் பொன்னான தொடுதல் 
எனது மகிழ்ச்சியைப் பிரகாசிக்கச் செய்கின்றது!" 

இயேசுவை அன்பு செய்பவர்களுக்குத் தமது வருகை நேரத்தைக்கூட மாற்றி அமைக்கின்றார். எப்படி? இதோ ஒரு கதை:

ஜெர்மனி நாட்டில் ஒரு கிராமத்தில் கிறிஸ்துமஸ் அன்று இரவு பன்னிரெண்டு மணிக்குப் பிறக்க மாட்டார். அரை மணி நேரம் தாமதமாகத்தான் பிறப்பார். அந்த ஊர்க் குழந்தைகள் 'ஏன் இயேசு நம் ஊரில் மட்டும் தாமதமாகப் பிறக்கின்றார்?" என்று கேட்டால், அந்த ஊர்ப் பெரியவர்கள் இந்தக் கதையைச் சொல்வார்கள். அந்த ஊரில் முன்னொரு காலத்தில் கிழவி ஒருத்தி வாழ்ந்து வந்தாள். அவள்தான் ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும் குழந்தை இயேசுவுக்கு சட்டை தைத்துத் தருவாள்.

அந்தக் குறிப்பிட்ட கிறிஸ்துமஸ் நாள் இரவு மரணதேவன் கிழவி வீட்டிற்கு வந்து அவளது ஆயுள் காலம் முடிந்துவிட்டது என்று சொல்லி அவளை இரவு 11.30 மணிக்கு விண்ணகம் அழைத்துச் சென்றான். அந்த நேரத்தில் மண்ணகத்தில் பிறக்க விண்ணிலிருந்து இயேசு ரதமொன்றில் வந்து கொண்டிருந்தார். இயேசுவைப் பார்த்ததும் கிழவி அபயக் குரல் எழுப்பினாள். இயேசு நடந்ததை அறிந்து, தமக்குச் சட்டை தைத்துக் கொடுக்கும் கிழவியை அழைத்துவரச் சொல்லி விட்டோமே என்பதை நினைத்து வருத்தப்பட்டார். "சரி, சரி, வருத்தப்படாதே பாட்டி, உனக்குச் சின்ன தண்டனை கூட இல்லாம நேரே மோட்சத்திற்குள் கூட்டிச் செல்லச் சொல்கிறேன்" என்றார்.

மரணத் தேவனோ, “ஆண்டவரே, நீங்களே நேராக வந்தால்தானே இராயப்பர் இந்த அம்மாவை மோட்சத்திற்குள் அனுமதிப்பார்” என்று சொல்லிவிட்டான். ஆகவே ரதம் திரும்பியது. இயேசு மோட்சத்திற்குச் சென்று பிறகு பிறப்பதற்கு ஊருக்குள் நுழைந்தபோது மணி 12.30. இயேசுவோ அங்கே கூடியிருந்த மக்களிடம் நடந்ததைக் கூறிவிட்டு, "என்னை அன்பு செய்கிறவர்களுக்காக நான் பிறக்கும் நேரத்தைக்கூட தள்ளி வைப்பேன்" என்றார்.

ஆம், அன்பார்ந்தவர்களே, இந்த ஆண்டில் கிறிஸ்துமஸ் விழாவன்று தாமதமின்றி நம் உள்ளத்தில் அவர் பிறக்க வேண்டுமென்று மன்றாடி ஆவலோடு காத்திருப்போம்.

இறையாசீர் என்றும் உங்களோடு!

தந்தை தம்புராஜ் சே.ச.

home
முகப்பு பக்கம்

அன்பின்மடல் 20ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் சிறப்புமடல் 2021 | anbinmadal.org-2002-2021