ஹேப்பி கிறிஸ்மஸ் - சிறுகதை
இப்பத்தான் வந்தது மாதிரி இருந்துச்சு... இந்தக் கிறிஸ்மஸ்ஸோட பன்னிரெண்டு வருசமாகப்போகுது இந்த ஊருக்கு உபதேசியாரா வந்து .... அலுத்துக்கொண்டே வந்த செபத்தியான். ஆலயவாசல் பக்கவாட்டுத் திண்ணையில் அமர்ந்தான்.
சிவகங்கை மாவட்டத்திலேயே சின்ன பங்கு இதுதான். இந்த புனித சகாய மாதா ஆலயம் இவன் உபதேசியராய் வந்த பிறகு மிகவும் கஷ்டப்பட்டு கட்டப்பட்ட ஆலயம். பெரும்பாலும் இந்த பங்கிற்கு புதிதாக இளம் பங்குத்தந்தையர் அல்லது ஓய்வு பெறும் நிலையில் உள்ள பங்குத்தந்தையரையே பங்குக்குருவாக நியமனம் செய்வர்.
மிகவும் பின்தங்கிய, வறுமை நிலையில் வாழும் மக்கள் அதிகம் வாழும் பங்கு இது. வரும் வருவாய் பங்குத்தந்தையர்கள் வரவுக்கும் செலவுக்குமே சரியாக இருக்க உபதேசியாரின் நிலை இன்னும் மோசம்.
என்னங்க... கொரனா வந்ததும் வந்தது நம்ம வாழ்க்கையையே புரட்டிப் போட்டுருச்சுல்ல... கிறிஸ்துமஸ் வேற வருதில்லயா.. நமக்கு எதுவும் வேணாங்க... ஆனா நம்மப் பையனுக்கு மட்டுமாவது ஒரு டிரஸ் எடுத்திட்டுவாங்க... என்ற செபத்தியம்மாளை, ஏற இறங்கப் பார்த்த செபத்தியான், எனக்குமட்டும் ஆசையில்லையா? அன்றாட செலவுக்கே இங்கு நாக்குத்தள்ளுது இதுல புது டிரஸ் இல்லையின்னு யாரு அடிச்சா..? சற்றுக் கோபமாகக் கத்தினான்.
மௌனமான செபத்தியம்மாள் விறுவிறுவென அடுக்கலைக்குள் புகுந்து எதையோ தேடினாள்.
அங்கே தேடி எதுவும் பிரயோஜனம் இல்ல... உங்களப்பத்தி எனக்குத் தெரியாதா.. இந்தாங்க... என்றவாறு மூன்று நூறு ரூபாய் தாள்களை நீட்டிய மனைவியை ஆச்சரியமாகப் பார்த்தான் செபத்தியான்.
அப்ப... சரி, வேகமா கிளம்பு... கடவீதிக்கு போயிட்டு வந்துருவோம்... அப்புறம் கலர் சரியில்ல அளவு சரியில்லன்னு பொழம்பக்கூடாது.. உற்சாகமானான் செபத்தியான்.
மகனையும் சேர்த்து மூவருடன் கடைவீதியில் பயணம் செய்தது செபத்தியான் மிதிவண்டி. எதிரே நடந்துகொண்டிருந்த ஒரு பெரியவர் ரோட்டிலே தடுமாறி விழுந்தார். பதட்டத்துடன் வண்டியிலிருந்து இறங்கிய மூவரும் பெரியவரை அருகில் சென்று பார்த்தனர்.
அட நம்ம சந்தியாகு ஐயா, உரிமையாய் அவரை செபத்தியான் தூக்க, கூடிய கூட்டம் பொறுப்பிற்கு ஆள் வந்துவிட்டதென்ற மனநிலையில் கலைந்துபோனது. செபத்தியம்மாளும் மகனும் அவனையும் பெரியவரையும் மாறிமாறிப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
செபத்தியான் எதிரேயிருந்த ஜோசப் கிளினிக்கிற்குத் தூக்கிச் சென்றான். பரிசோதித்த மருத்துவர். பாவம் மனுஷன் பட்டினியிலே மயங்கிருக்காரு... இரண்டு பாட்டில் குளுக்கோஸ் ஏத்துனா சரியாப்போகும்... ம்ம்ம்.. வேகமாக குளுக்கோஸ் வாங்கிட்டுவாங்க.... பல்ஸ் வேற இறங்கிட்டுயிருக்க... என்றபடி தன் வேலையைத் தொடர்ந்தார்.
சீட்டைக் கையில் பிடித்தபடி மனைவி என்னசொல்வாளோ என்ற பயத்துடன் அவள் அருகில் வந்தான். என்ன ஆச்சுங்க பதட்டத்துடன் கேட்டவளிடம் தயங்கித் தயங்கி விவரத்தைக் கூறினான். சிறிதும் யோசிக்காமல் போங்க விறுட்டுன்னு வாங்கிட்டுவாங்க.. மத்ததெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்... என்றவளை ஒரு நிமிடம் தயக்கத்துடன் அவன் பார்க்க அப்பா எனக்கு புதுத்துணி வேணாம்பா தாத்தாவ காப்பத்துங்க. சொன்ன மகனை பார்த்தபடியே கடைக்கு ஓடினான்.
கிறிஸ்மஸ் விழாவிற்காக ஆலயம் அலங்காரத்துடன் ஜொலித்தது. உபதேசியர் என்பதால் செபத்தியான் குடும்பம் முதல் குடும்பமாக ஆலயத்திற்கு வந்துவிட்டனர். கணவனும் மனைவியும் திருப்பலிக்கான முன்னேற்பாடுகளை தீவிரமாய் செய்துகொண்டிருக்க மகன் மட்டும் ஆலயத்திற்கு வருபவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான். புதுப்புது ஆடைகளுடன் வந்த பலரின் முகங்கள் மகிழ்ச்சியாகத் தெரியவில்லை .
அதோ சந்தியாகு தாத்தா.. கம்பீரமாய் ஆலயத்திற்குள் பிரவேசிக்கும் அவரைப் பார்த்தான். அவர் நளமாகி உயிரோடு இருப்பது மகிழ்ச்சியாக இருந்தது.
நேராக இவன் இருந்த இடத்திற்கு வந்து, அவன் கரங்களைப் பிடித்து "ஹேப்பி கிறிஸ்மஸ்..." என்ற போது மகனின் உள்ளத்தில் மகிழ்ச்சி கூத்தாடியது. ஆண்டவர் தனக்குள் பிறந்ததை உணர்ந்தான் செபத்தியான்.