கிறிஸ்துவும் நாமும்
கிறிஸ்து பிறப்பு விழாவில் கிறிஸ்து
1. அ. அவரைக் காணுதல் -இடையர்கள்
இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார். குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள். இதுவே உங்களுக்கு அடையாளம் (லூக் 2:11-12). இன்றைய கூகுள் மேப் உலகில் நாம் ஒருவர் மற்றவரை அடையாளம் காண பெரிய பெரிய நில குறிப்புகளைத் தேடுகிறோம். கிறிஸ்துவைக் காண்பதற்காகக் கொடுக்கப்பட்ட குறிப்புகள் மூன்று: குழந்தை, துணிகளில் சுற்றப்பட்டிருத்தல், மற்றும் தீவணத் தொட்டியில் கிடத்தப்பட்டிருத்தல்.
குழந்தை முழுமையான சார்புநிலையைக் குறிக்கிறது. தான் வாழ்வதற்கும். தன் பாதுகாப்புக்கும், தன் இயக்கத்துக்கும் குழந்தை முற்றிலும் பிறரைச் சார்ந்துள்ளது. நம் முதல் பெற்றோரின் பாவத்தால் நம் உடலில் ஒட்டிக்கொண்டது துணி. தன் இறுதி இராவுணவில் மேலாடையை அகற்றுகின்ற இயேசு (யோவா 13:40), பாவத்திலிருந்து நாம் பெற வேண்டிய விடுதலையைக் குறித்துக் காட்டினார். தீவணத் தொட்டியில் கிடத்தப்படுதல் குழந்தையின் நொறுங்குநிலை மற்றம் உடைந்தநிலையின் அடையாளமாக இருக்கிறது.
ஆ. அவரோடு தங்குதல் - யோசேப்பு
நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லும். நான் உமக்குச் சொல்லும் வரை அங்கேயே தங்கியிரும் (மத் 2:13).
இடையர்கள் விரைந்து சென்று மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள் (லூக் 2:16)
ரபி நீர் எங்கே தங்கியிருக்கிறீர்? ..... அவர்களும் சென்று அவரோடு தங்கினார்கள் (காண். யோவா 1:38-41).
ஒருவரோடு ஓரிடத்தில் தங்குவது என்பது அறிவையும் நெருக்கத்தையும் குறிக்கிறது. ஏனெனில், நாம் முன் பின் அறியாத ஒருவரோடு அல்லது நம்மோடு நெருக்கத்தில் இல்லாதவரோடு நாம் தங்குவதில்லை. இன்றைய வேகமான உலகத்தில் தங்குதல் பல நேரங்களில் சுமையாகப் பார்க்கப்படுகிறது.
இ . அவரிடமிருந்து புறப்படுதல் அல்லது திரும்புதல் -மூன்று ஞானியர்
ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள் (மத் 2:12).
உமது வீட்டிற்குத் திரும்பிப் போய் ஆண்டவர் உம்மீது இரக்கம் கொண்டு உமக்குச் செய்வததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும் (மாற் 5:19)
என்னை இப்படிப் பற்றிக் கொள்ளாதே...... நீ என் சகோதரர்களிடம் திரும்பிச் சென்று (யோவா 20:17)
இயேசுவைச் சந்தித்தவர்கள் தங்கள் இல்லத்திற்குத் திரும்பிச் செல்ல வேண்டும். அவர்கள் வேறு வழியாகச் செல்ல வேண்டும். இயேசுவைச் சந்திப்பதற்கு முன் அவர்கள் வந்த பாதை, இயேசுவைச் சந்தித்த பின் மாறியாக வேண்டும். திரும்புதல் வலி அல்லது சலிப்பைத் தரலாம். ஆனால், அவரின் இரக்கத்தை அறிவிக்க நாம் புறப்பட்டே ஆக வேண்டும்.
2. கிறிஸ்து பிறப்பு விழாவில் நாம்
காணுதலும், தங்குதலும், திரும்புதலும் - இவை மூன்று வழிகளில் சாத்தியமாகும் :
(அ) நம் பாதுகாப்பு வளையத்திலிருந்து வெளியேறுவது, (ஆ) பிறரின் நலனை நாடுவது. மற்றும் (இ) புள்ளிகளை இணைப்பது. ஆடுகள் என்ற பாதுகாப்பு வளையத்திலிருந்து இடையர்கள் வெளியேறினர். யோசோப்பு தன் மனைவி மற்றும் குழந்தையின் நலனை மட்டுமே நாடினார். ஞானியர் அனைத்துப் புள்ளிகளையும் இணைத்துப் பார்த்தனர்.
விழித்திரு - விலகியிரு - வியாதியின்றி இரு என்று நாம் வாழும் பெருந்தொற்றுக் காலத்தில், நம்மை தழுவிக்கொள்ளவும், நம்மோடு உடனிருக்கவும் தம் கூடாரத்தை நம் நடுவில் அமைக்கக் கடவுள் திருவுளம் கொண்டார் என்பதை நினைத்துக் கொண்டாடுகிறோம்.
நம் நொறுங்குநிலையிலும், கையறுநிலையிலும், வாழ்வின் நிலையற்ற தன்மையிலும் அவர் நம்மோடு இருக்கிறார். ஏனெனில், அவர் பெயர் இம்மானுவேல் - கடவுள் நம்மோடு.