இந்த வருட கிறிஸ்மஸ்
அட! அதற்குள் டிசம்பர் மாதம் வந்துவிட்டதா என்று நினைக்கும் போதே கிறிஸ்மஸ் நினைப்பும் கூடவே வருகிறது. இந்த வருடம் ரொம்ப வித்தியாசமான கிறிஸ்மஸ். இப்படி ஒரு கிறிஸ்மஸை நாம் நினைத்துக் கூடப் பார்த்திருக்கமாட்டோம் அல்லவா? இந்தக் கிறிஸ்மஸை ‘லாக்டவுன் கிறிஸ்துமஸ்’ "கொரோனா கிறிஸ்மஸ்" என்றும் சிலர் கூறுகிறார்கள். "கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் ஜாலி டைம்" என்பர் சிலர், "இல்லை ஹோலி டைம்" (Holy time)என்பர் வேறு சிலர், "ஹையோ! இது என்ட்டை"ம் (EndTime) என்பவர்களும் உண்டு. எல்லாம் சரிதான் ! ஆனால்... எதற்காகக் கிறிஸ்மஸ் கொண்டாடுகிறோம் என்று தெரியாமலே கொண்டாடுகிறோம். நான் முதலில் கூறியபடிச் சிறுவர்கள் மட்டுமல்ல அநேகப் பெரியவர்களுக்கும்கூட, இது ஜாலி டைம்தான்! புதுத் துணி , பலகாரங்கள், கேக், ஜோடனை... குடில் ... .. பரிசுகள் ... இப்படியே நீண்டக் கோரிக்கைகளோடு இது வெறும் ஜாலி டைம்தான்! அவ்வளவேதான் ! இனி அடுத்தக் கிறிஸ்மஸ் எப்ப வரும் என்று காத்திருப்பார்கள்.
ஆனால் , கிறிஸ்மஸ் என்பது இயேசுவுக்குப் பிறந்தநாள் விழா என்று மட்டும் நினைத்து விடக்கூடாது . அதுவும் இதுசாதாரணப் பிறந்த நாள் அல்ல! இராஜாதி ராஜா விண்ணுலகம் மண்ணகம் அனைத்தையும் படைத்தவர் எல்லாவற்றையும் விட்டுவிட்டு அற்ப பாவிகளான நமக்காக, நம்மைச் சாத்தானின் பிடியிலிருந்து மீட்க, சாதாரண மனிதனாக வந்து பிறந்தார்; அது மட்டுமல்ல கொடிய வேதனைப் பட்டு மரித்து உயிர்த்து, நம்மையும் அவரைப் போலவே பரிசுத்தமாக வாழ அழைக்கிறார்.
இயேசு பாலனைக் குடிலில் போட்டு அழகுப் பார்த்து விட்டு அவரை மறந்து விடுவது எவ்வளவு அநியாயம்! அவரது பிறந்த நாளில் இயேசுவைத் தவிர மற்ற எல்லாவற்றிலும் நம் கவனம் இருக்கிறது. இயேசுவைத் தவற விட்டுவிடுகிறோம். நாம் விவிலியத்தில் ஒரு நிகழ்ச்சியைப் பார்க்கலாம்
லூக்கா 2:42-46
இயேசுக்கு பன்னிரண்டு வயதானப் போது அவர்கள் பாஸ்கா விழாக் கொண்டாட எருசலேம் தேவாலத்திற்குச் சென்றார்கள். உண்மையான பாஸ்கா ஆட்டுக் குட்டி யார்? இயேசு தானே! விழா நாயகன் இயேசு எப்படிக் காணாமல் போனார்? அவர் எங்கும் போகவில்லை ; அவர் அவருக்குரிய இடமாகிய தேவாலத்திலேயே தங்கி விடுகிறார். தேவதாயும் புனித யோசப்பும் அவரைக் கண்டு பிடித்தது மூன்றாம் நாளில் தான்! எனெனில் அவர் பயணியர் கூட்டத்தில் இருப்பார் என்று எண்ணிக்கொண்டார்கள்.
அது போல நாமும் நம்மோடுதான் இருக்கிறார் என்று எண்ணிக் கொள்கிறோம். நம்மில் அநேகருக்கு மாட்டுக் கொட்டிலில் இருக்கும் பாலகனாகத் தான் இயேசுவைப் பார்க்கபிடிக்கும். அவரோ சிலுவை நாதராக விடுதலைக் கொடுப்பவராகக் காட்சித் தருகிறார். அந்தத் தியாக அன்பைப் புரிந்துக் கொண்டவர்கள், கிறிஸ்மஸ் வெறும் இயேசுவின் பிறந்த நாள் கொண்டாட்டமாக மட்டும் அல்ல அவர் நம்மோடு தங்கும் நாளாக அவரைக் கண்டு கொள்வார்கள்.
எப்போது இயேசுவை நம் வாழ்வில் கண்டுபிடித்து நம் குடும்பத்திற்குள் கொண்டுவரபோகிறோம்? அவரோடு நம் உறவு எப்படி இருக்கிறது? கிறிஸ்மஸ் பாட்டு, பூசைப் பலி , பார்ட்டி எல்லாம் இருந்தும் , ஆம் !எல்லாம் இருந்தும் இயேசு நம்மோடு இல்லாமல் இருக்க முடியும். எங்கே தொலைத்தோம் அவரை? நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளக் கூடாது. பக்தியாக இருப்பதால் அல்ல, கோயிலிலுக்குப் போவதால் அல்ல ; அவரது கட்டளைகளைக் கடைபிடித்துப் பரிசுத்தமாக வாழ்வதால் மட்டுமே அவர் நம்மோடு இணைந்திருப்பார்.
“என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைபிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம்” யோவான் 14:23
எவ்வளவு பெரிய பாக்கியம் இது! தந்தை, மகன், தூயஆவி நம்மோடு இருந்தால் வேறு என்ன வேண்டும நமக்கு?
தாவீது ஆண்டவரைத் தவற விட்ட நேரம் உண்டு; சிம்சோன் அவரை நழுவ விட்ட நேரம் உண்டு; ஞானம் நிறைந்த சாலமோன் அவரை முழுதாக விட்டு விட்ட நேரமும் உண்டு.
பாஸ்கா விழாவின் நாயகன் இயேசு, பாஸ்காவிழாவில் காணாமல் போனமாதிரிக் கிறிஸ்மஸ் விழா நாயகன் நம்மை விட்டு நழுவிப் போய்விடத் தருணம் உண்டு.
நம்மோடு ஆண்டவர் இருக்கிறாரா? எப்படித் தெரிந்து கொள்வது? நம் பேச்சு, சிந்தனை ஆண்டவருக்கு உகந்ததாக இருக்குறதா?
“உம்மை வருத்தும் வழியில் நான் செல்கின்றேனா என்று பாரும். என்றுமுள வழியில் என்னை நடத்தியருளும்” திபா 139:24
என்று அவரிடமே நாம் கேட்டால் அவரே நம் கூட இருந்து நம்மை வழிநடத்துவார், நம்மை விட்டுவிட்டு போகமாட்டார்.
ஆகவே, இந்த வருடக் கிறிஸ்மஸ் நமக்கு வித்தியாசமானதாக இருக்கட்டும் இயேசு நம் உள்ளத்திலிருந்தும் இல்லத்திலிருந்தும் காணாமல் போகாதவாறுக் காத்துக் கொள்வது நம் கடமை.