பூமிக்கு வந்த புதுமலரே

பூமிக்கு வந்த புதுமலரே
வாசக நெஞ்சங்களே! 
காரிருள் சூழ்ந்த இரவு அது 
நிலவு அரசாளும் வேளை 
தொட்டில் கட்டாமலேயே 
தொங்கிக் கொண்டிருக்கும் விண்மீன்கள் 
வானம் முழுவதும் வசந்த விழா! 
மீட்டும் நள்ளிரவு வேளையில்....

பூம்பொழில் கூடி பொதிகை தூது சென்றிட 
வசந்தம் வீசி வான் முகில் பனி தூவ 
இளந்தென்றல் தழுவிடும் இரவு அது
விடியலை விரும்பாமல் இருளை தவழு விட்டு 

மடிந்து போன இஸ்ராயேல் மண்ணிலே 
மாட்டு தொழுவமதில் யூதகுலத்தின் விடியலாய் 
பூமிக்கு பூபாளம் பாட வரும் புனித நிலவோ 
பூவுலகின் மாந்தர் கண்ணீர் துடைக்க

ஆவியின் ஆற்றலால் நிழலிட்டு மரியின் 
புனித மகன் மனித வடிவமானார்! 
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
பறைசாற்றப்பட்ட யாக்கோபின் கனவு இது! 

பெத்லேகேமில் பிறந்திடுவார் என்றும் 
7ஆம் நூற்றாண்டில் தோன்றிடுவார் என்றும் 
எழுதி வைத்த மிக்கேயாவின் இறைவாக்கு இது! 
அவரது பிறப்பு மாட்சிமை மிக்கதாய் இருக்கும் என்று 
கி.மு ஆறாம் நூற்றாண்டிலே கூறிய 
சக்கரியாவின் சாட்சியம் இது! 

"வாடிய மலர் வான் மழையை எதிர் நோக்குவது போல
எல்லாரும் அவரை எதிர் நோக்கினர்" 
சீக்கிஸ் எனும் சீன நூலின் சிறுகுறிப்பு இது!
பாலகா! 
தாயின் கருவில் உருவாகு முன்பே 
வரலாற்று கருவில் உருவானவரே! 
புவியில் ஓர் புதிய ஏற்பாடு பூத்து குலுங்கி சிரிக்கின்றது! 
இறைமுடிப்பாக - மறை வடிவமாக மலர்ந்து 
பாலகனின் பிறப்பு உலகை பேருவகையால் ஆழ்த்தியதே! 

அருள்சீலி அந்தோணி