கிறிஸ்மஸ் என்றதுமே அன்பு, மகிழ்ச்சி, பகிர்வு
கிறிஸ்மஸ் என்றதுமே அன்பு, மகிழ்ச்சி, பகிர்வு இவைகள்தான் நம் மனதில் எழுகின்றன. இன்னும் சிலருக்கு 4-C என்று அதாவது c - for cat, c-for carol, c-for crih, c-for christmas cahs என்று மனதில் எழும். இன்னும் சிலருக்கு விளம்பரம், வியாபாரம், விற்பனை, விருந்து, விழாக்கோலம்.
கிறித்தவர்களாகிய நமக்கு நள்ளிரவு பூசை, மின்விளக்கு. ஆடை அலங்காரம். வெடிகள், விருந்து இவற்றோடு கிறிஸ்மஸ் நிறைவடைகின்றதா?
கிறிஸ்மஸ் பற்றி ஒரு சில புனிதர்களின் கருத்து:
- புனித ஜான் கிறிஸ்தோஸ்தம்: "மனித புத்திக்கு எட்டாததை கடவுள் நமக்கு அளித்துள்ளார்".
- புனித அகுஸ்தினார்: "விவரிக்க முடியாத ஞானமுள்ளவர், ஞானத்தோடு ஒரு குழந்தையாக பிறந்துள்ளார்."
- புனித பெனடிக்ட்: "வாருங்கள், நாமும் பெத்லகேமுக்குச் செல்வோம். அங்கே போற்ற. அன்பு செய்ய, கற்றுக்கொள்ள சில உள்ளன. அன்று இரவுதான் பல ஆண்டுகளுக்கு முன் கூறப்பட்ட இறைவாக்குகள் நிறைவேறிய நாள்."
- "கன்னி கருத்தாங்கி ஒரு மகவைப் பெற்றெடுப்பார்" (எசா 7:14).
- "அரசுரிமை உடையார் வரும் வரையில் மக்களினங்கள் அவருக்குப் பணிந்திடும் வரையில் யூதாவை விட்டு செங்கோல் நீங்காது" (தொநூ 49:10, எசே 34::23).
- "என் ஊழியன் தாவீதை ஒரே ஆயனாய் அமர்த்துவேன்."
- "அரசராக திருப்பொழிவு செய்யப்பட்டவர் வருவதற்கும் இடையே உள்ள காலம் ஏழு வாரங்கள் ஆகும்" (தானி 9:25).
- "நீயோ எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே, இஸ்ரயேலே என் சார்பாக ஆளப் போகிறவர் உன்னிடமிருந்தே தோன்றுவார் (மீக்கா 5:2).
கீழைத் திருச்சபையிலும், உரோமையிலும் கி.பி. 300 ஆம் ஆண்டிலேயே கிறிஸ்து பிறப்பு விழா கொண்டாடப்பட்டது. டிசம்பர் 25 ஏற்கெனவே உரோமானியர் சூரியக் கடவுளை கொண்டாடியதால் அதே நாளை நீதியின் சூரியனான இயேசு கிறிஸ்துவின் பிறப்பு நாளாக கொண்டாடினர். கி.பி. 1223 இல் புனித பிரான்சிஸ் அசிசி தான் குடில் ஒன்றை முதன் முதலாக அமைத்து இறைவனின் அன்பையும், இரக்கத்தையும் பற்றி பிரசங்கித்து திருப்பலியின் போது இயேசு குழந்தையே அவரது கரங்களில் சிறிது நேரம் தவிழ்ந்ததாக கூறப்படுகின்றது. கி.பி. 11,12 நூற்றாண்டுகளில் கேரல் பாடல்கள் உருவாக்கப்பட்டன. கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்மஸ் மரம் உருவானது. ஜெர்மானியர்கள் இதை உருவாக்கினார்கள். ஏதேன் தோட்டத்து மரத்தையும், சிலுவை மரத்தையும் இது குறிக்கின்றது.
ஒரு பட்டணத்தில் ஓர் ஆலயத்தில் கிறிஸ்மஸ் நள்ளிரவு வழிபாட்டுக்கு முன்னே மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பட்டாடைகள், பூக்களின் நறுமணம், வாசனைத் திரவியங்கள், இவைகளோடு மின்விளக்குகளின் வெள்ளத்தில் மக்கள் உற்சாகத்தோடு கூடினர். அந்த ஆலயத்திற்கு சற்று தொலைவிலிருந்த ஒரு கிராமத்தில் உள்ள ஒரு வயதான கிழவர் தனது சாதாரண உடையுடன் கிறிஸ்மஸ் வழிபாட்டில் கலந்து கொள்ள ஆலயத்திற்கு வந்தார். உள்ளே இடமில்லை. அரைகுறையாக உடையணிந்த அவரை கோவிலுக்கு வெளியே அமருமாறு கேட்டுக் கொண்டனர். அக்கிழவரும் அந்த ஆலயத்திற்கு எதிரே இருந்த ஒரு குடிசையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தார். இதைக் கண்ட ஒரு வாலிபன் அவரை நோக்கி "ஐயா, நலமா?" என்று விசாரித்ததும் அவர், "தம்பி, நான் கிறிஸ்மஸ் விழாவில் கலந்துகொள்ள கஷ்டப்பட்டு வந்தேன். உள்ளே போககூட முடிய வில்லை " என்றார். அதற்கு வாலிபன் "ஐயா, கவலைப்படாதீர்கள். நானும் உங்களைப் போலத்தான். அங்கே கோவிலுள் எனக்கே இடம் இல்லை " என்று ஆறுதல் கூறினான். "தம்பி, உன் பெயர் என்ன?" என்று கிழவர் வினவ, "ஐயா, நான்தான் இயேசு" என்று கூறி அவ்வாலிபன் மறைந்தான்.
கிறிஸ்மஸ் விழாவிற்கு தம்மையே தயாரிக்க முதலில் ஆலயமாகிய நம் உடலை புனிதப்படுத்தி உள்ளத்தைத் தயாரித்து அங்கு குழந்தை இயேசு பிறக்க இடமில்லை என்று கூறாமல் திருக்குடும்பத்திற்கு இடம் அளிப்போம். நிச்சயமாக குழந்தை இயேசு நம் உள்ளத்தில் பிறப்பார். "விண்ணகத்தில் மகிமையும், பூவுலகில் நல்மனம் கொண்ட உங்கள் அனைவருக்கும் சமாதானம் கிடைக்கும்" (லூக் 2:14).
பின்குறிப்பு: கிறிஸ்து பிறப்பு விழாவுக்கு நம்மையே தயாரிக்க ஒரு சில கருத்துக்கள்:- ஒப்புரவு அருட்சாதனத்தில் பங்கு பெறுவது.
- இறைவனின் அன்பை சிறப்பாக (யோவா 3:16) படித்து, சிந்திப்பது,
- கர்ப்பவதியான மரியாவுடன் சில நாட்கள் தங்கி அவளுடன் அவளின் எண்ணங்கள், ஆவல், உடல்நிலை பற்றி - உரையாடுவது.
- புனித சூசையுடன் உறவாடி அவரின் உள் உணர்வுகளுடன் பங்கெடுப்பது,
- குழந்தை இயேசுவுக்கு வெகுமதி ஒன்று தயாரிப்பது.
- சம்மனசுக்களின் இசையில் இன்பம் -காண்பது.
- கிறிஸ்து பிறப்பன்று மரியா, சூசை, வானவர், குடிலிலிருந்த மிருகங்கள் இவற்றுடன் இணைந்து குழந்தை இயேசுவை ஆராதிப்பது. அன்று ஓர் ஏழைக் குழந்தைக்கு ஒரு வெகுமதி அளிப்பது.