வழிசொல்லுமா கிறிஸ்து பிறப்பு?
இடையர்களுக்கு வழி சொன்னது போல,
இந்திய விவசாயிகளுக்கு வழிசொல்லுமா
கிறிஸ்து பிறப்பு?
இந்த 2020ஆம் ஆண்டு நம் அனைவருக்கும் ஒரு மாறுபாடான, வித்தியாசமான ஆண்டாக அமைந்துள்ளது. இவ்வாண்டில் நாம் நன்மைகளை அனுபவித்தமோ இல்லையோ நிச்சயமாக பல்வேறு துன்பங்கள் நம்மை கடந்து சென்றுள்ளோம். அவை கொராணா பெருந்தொற்று, அரசு சார்பான திட்டங்களான குடியுரிமை திருத்தச் சட்டம், வேளான் மசோதா, அண்மையில் உத்திர பிரதேச அரசால் கொணணரப்பட்ட லவ் ஜிகாத்க்கு எதிரான சட்டம் போன்றவைகள் நம் இயல்பான மகிழ்ச்சியான வாழ்வை சீர்குலைத்து விட்டன. அதில் அண்மையில் விவசாயம் சார்பாக நிறைவேற்றப்பட்ட வேளான் மசோதா நமது இந்திய முதுகெலும்பை சிதைத்து விட்டது எனவும் சொல்லலாம். 96,000க்கும் அதிகமான டிராக்டர்கள், 1.2 கோடிக்கும் மேலான விவசாயிகள் 86 கிலோ மீட்டர் தூரத்திற்கு டெல்லி சலோ டெல்லி சலோ என டெல்லியின் நுழைவாயிலை முற்றுகையிட்டு கொண்டிருப்பது நமது இதயத்தை தட்டிக் கொண்டிருக்க வேண்டும். ஏன் இவர்கள் போராடுகிறார்கள்? இவர்களின் தேவை என்ன? இதன் சாதக பாதகம் என்ன?
இந்தியாவின் முதுகெலும்பு:
இந்தியாவின் முதுகெலும்பு என்பது கிராமங்களே என நமது தேசத் தந்தை மகாத்மா காந்தி கூறுவார். அந்த கிராமங்களில் செய்யப்படும் வேளான்மையே நமது நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கிறது. பொருளாதார ஏற்றம் நிலையாக இருக்க வேண்டுமென்றால் விவசாயின் கரமும் உயர்த்தப்பட்டதாக இருக்க வேண்டும். இதனை அறிந்த நம் முன்னோர்கள் விவசாயிகளின் நிலை உயர அவர்களுக்காக பல்வேறு திட்டங்களை வகுத்தனர். இன்று அவை வளர்ச்சி எனும் போர்வையில் இன்று பிடுங்கப்படுகிறது. வேளாண்மைக்கு அடிப்படையாக தேவையான மின்சாரம் இலவசமாக வழங்கப்படட்டது. ஆனால் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள திட்டங்களின்படி அது நிறுத்தப்பட உள்ளது. தட்கல் முறையில் மின்சாரம் பெறலாம் என்றாலும் பல இலட்சங்கள் செலவளிக்க வேண்டியுள்ளது. அதுவும் பெரிய சுமையே. இன்று நாம் மகிழ்ச்சியாக உணவு அருந்த விவசாயி நிலத்தில் வியர்வை சிந்த வேண்டியுள்ளது. விவசாயினால் மகிழ்ச்சியாக உணவு அருந்தும் நாம் என்றாவது விவசாயி மகிழ்ச்சியாக உணவு அருந்துகிறார்களா என்று சிந்தித்து உண்டா? அவர்களுக்காக குரல் கொடுத்தது உண்டா? விவசாயின் நலன் உயர்ந்தால்தான் நாடு உயரும், நாட்டின் பொருளாதாரமும் உயரும்.
விவசாயத்தின் மீது அரசின் தாக்குதல்:
ஏற்கெனவே இயற்கை சீற்றங்கள், சந்தைப்படுத்துதல், பருவ நிலைமாற்றங்கள் போன்றவற்றால் நிலைகுலைந்துள்ள விவசாயிகள் இன்று தொழிலாளர்களின் கூலி உயர்வு, சந்தைபடுத்துதல் போன்றவற்றால் பல்வேறு சிக்கல்களை உருவாக்கிக் கொண்டு இருக்கிறது. கடந்த 2005ஆம் ஆண்டு நடுவனரசால் கொண்டு வரப்பட்ட மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தால் இன்று கூலியாட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களை தனியார் விவசாயப்பணிகளுக்கு பயன்படுத்த அரசு அனுமதித்திருந்தாலும் முழுமையாய் பயன்படுத்தப்படுகிறார்களா என்பதுதான் கேள்விக் குறி.
அண்மைக்கால தாக்குதல்:
மத்தியில் ஆளும் அரசு அண்மைக்காலத்தில் கொண்டு வந்துள்ள 3 சட்டங்கள் விவசாயத்தின் மீது மிகப்பெரியப் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. அவை, 1. அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம் 2020, 2. விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தகச் சட்டம் 2020, 3. விவசாயிகளுக்கு உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 போன்றவைகள் ஆகும். ஒருபக்கம் இது நல்லதே பயக்குமென பலர் முன்மொழிந்தாலும் அதிலுள்ள சாதகங்கள் குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு முன்மொழிபவர்களால் பதில் கூற முடியவில்லை. எனவேதான் விவசாயிகள் தங்கள் கேள்விகளுக்கு பதில் தேடி டெல்லியை முற்றுகையிட்டுள்ளனர். காணும் காட்சிகள் வேதனையாகவே உள்ளது. இச்சட்டங்களின்படி விளைவிக்கப்படும் விளைபொருட்கள் சந்தைகளை கார்ப்ரேட் நிறுவனங்கள் கட்டுப்படுத்தும் சூழல் உருவாகும் நிலையுள்ளது. பெரு வியாபாரிகள் அதிகளவில் உணவுப் பொருட்களை அதிகமாக பதுக்கி உணவுப் பஞ்சமோ அல்லது விலையுயர்வோ ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும் இச்சட்டம் கார்ப்ரேட்களை ஊக்குவிக்குமெனில் விவசாயிகள் அனாதையாக விடப்படுவர். அதுபோல குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டிய பொறுப்பு தட்டிக்கழிக்ப்படும் சூழலும் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் அவர்கள் எவ்வாறு மகிழ்ந்திருப்பார்கள்? தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு ஒதுக்கப்படும் அவர்களுக்கு ஏதாவது உதவ முடியுமா? அவர்கள் நிலை மீண்டுவர இடையர்களுக்கு நல்ல செய்தி சொன்னதுபோல இவர்களுக்கும் சொல்வாரா?
யூத சமூகத்தில் இடையர்கள்:
யூத சமூகத்தைப் பொறுத்தவரையில் இடையர்கள் ஒடுக்கப்பட்டவர்களே. யூத சட்டத்தின்படி அவர்கள் நேர்மையற்றவர்களாகக் கருதப்பட்டதால் ஏதேனும் வழக்குகளில் அவர்கள் சாட்சியாக கூட இருக்க தகுதியற்றவர்கள் எனப்பட்டார்கள். அவர்கள் உண்மையாகயில்லை எனக் கூறப்பட்டார்கள். அவர்கள் பாலை வனத்தில் ஆடு மேய்க்கச் செல்லும் போது அவர்கள் தங்கள் ஆடுகளை வன விலங்குகளிடமிருந்து காக்கவும் அல்லது திருட்டிலிருந்து காக்கவும் அவர்கள் செய்லபடுவதின் அடிப்படையில் அவர்கள் கரடுமுரடானவர்களாகக் கருதப்பட்டர்கள். இவர்கள் யூதர்களாக இருந்தாலும் யூதர்களாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அதாவது அவர்கள் சக மனிதர்களாக இருந்தாலும்; அவர்கள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இவ்வாறு முழுமையாக அவர்கள் ஒதுக்கப்பட்டர்கள். இவர்களைப்போலவே இன்றைய விவசாயிகளும் ஒதுக்கப்படுகிறர்கள் என்பதுதான் உண்மை.
இடையர்களுக்கு போல விவசாயிகளுக்கும் நடக்குமா?:
யூத சமயத்தில் ஒதுக்கப்பட்டாலும் இறைவன் அவர்களை மிகவே அன்பு செய்தார். ஏனெனில் அவர்கள் ஒதுக்கப்படும்போது அவர்களுக்காக அவரே போரிடுவார் என்கிறது திருப்பாடல் 12:5 “எளியோரின் புலம்பலையும், வறியோரின் பெரு மூச்சையும் கேட்டு இப்போதே எழுந்து வருகின்றேன். அவர்கள் ஏங்குகின்ற படி அவர்களைப் பாதுகாப்பில் வைப்பேன் என்கிறார் ஆண்டவர்”. இவ்வாறு ஏழைகளின் சார்பாக இருந்த இறைவன் இடையர்களுக்கும் சார்பாக இருந்ததால்தான் மெசியாவின் பிறப்புச் செய்தி முதலாவதாக இவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. இது ஏழைகளுக்கு கொடுக்கப்படும் முதல் அழைப்பாகப் பார்க்கப்படுகிறது. இதிலிருந்து சொல்லப்படுவது “கடவுள் நம்மோடு” உள்ளார். அப்படியெனில் நாம் சந்திக்கும் எல்லாவிதமான பிரச்சினைகளையும் தனியாளாக நின்று நாம் சந்திப்பதில்லை. நம்மோடு உள்ள கடவுளும் இணைந்தே சந்திக்கிறார். இங்கு வானதூதர்கள் அணியினர் கூறும் “அமைதி” - விண்ணையும் மண்ணையும் ஒன்றாக இணைத்தது. இந்த அமைதி உணர்த்துவது நிறைவாழ்வு, உடல் நலம், முழுமை மற்றும் மகிழ்ச்சி. அதாவது இந்த அமைதி அவர்களுக்கு மட்டுமல்ல உலகிற்கேயான அமைதி.
இந்த அமைதி சுட்டிக்காட்டும் மகிழ்ச்சி மற்றும் அமைதி போன்றவற்றை எதிர்பார்த்தே விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டுள்ளனர். இன்றைய நாளில் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இருப்போர் விவசாயிகளே. இவர்களுக்கு அரசு செவிசாயிக்காவிட்டால் திபா 12:5-ல் சொல்லப்படுவதுபோல நிச்சயம் எழுந்து வருவார். அவர்கள் எதிர்பார்க்கும் மகிழ்ச்சிக்கான அமைதி உட்பட அனைத்தையும் வழங்குவார் எனும் நம்பிக்கை தருகிறது இந்த கிறிஸ்து பிறப்பு.