ஜீடவுன்-ஒளியின் அன்னை மரியா, எகிப்து
ஜீடவுன்-ஒளியின் அன்னை மரியா, எகிப்து
இது, 1968ம் ஆண்டு முதல் 1971ம் ஆண்டுவரை இடம்பெற்ற அன்னை மரியா காட்சிகளுக்குப் புகழ்பெற்ற இடமாக உள்ளது. 1924ம் ஆண்டில் zeitounல் புனித அன்னை மரியாவுக்கென ஆலயம் கட்டப்பட்டு 1925ம் ஆண்டில் Beni Suef ஆயர் அத்தனாசியுஸ் அவர்களால் திருப்பொழிவு செய்யப்பட்டது. இவ்வாலயத்தின் மிகச் சிறப்பான கட்ட்டக்கலை அமைப்பு மற்றும் இதன் கலை வேலைப்பாடுகளால் இது எகிப்தின் சட்டத்தால் நூறு ஆண்டுகளுக்கு மேலாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இவ்வாலயத்தின் புகழ் அன்னைமரியாவின் காட்சிகளால் மேலும் பரவியது.
குழந்தை இயேசுவை பெத்லகேமிலிருந்து தூக்கிக் கொண்டுவந்த புனித வளனும்மரியும் கொண்ட திருக்குடும்பம் தங்கியிருந்த இடத்தில் இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளதாக, பாரம்பரியமாகச் சொல்லப்படுகிறது. இவ்வாலயமும் திருக்குடும்பத்துக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. காப்டிக் கிறிஸ்தவ சபைக்குரிய இவ்வாலயம் ஐந்து குவிமாடங்களைக் கொண்டுள்ளது. மத்தியிலுள்ள குவிமாடம், தரையிலிருந்து ஏறக்குறைய 12 மீட்டர் உயரத்திலுள்ளது. இதைச் சுற்றியுள்ள 4 சிறிய குவிமாடங்களும் மீட்டர் உயரத்தில் உள்ளன.
1968ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி மாலை தொடங்கி ஓராண்டுக்கு மேலாக இலட்சக்கணக்கான மக்களுக்கு இந்த மாடங்களில் பல்வேறு வடிவங்களில் காட்சியளித்திருக்கிறார் அன்னைமரியா. இக்காட்சிகள் ஒளியால் நிறைந்திருந்ததால் இவ்வன்னை , ஒளியின் அன்னைமரியா எனவும் அழைக்கப்படுகிறார். இந்தக் காட்சிகள் சில நிமிடங்கள் தொடங்கி பல மணிநேரங்கள் வரை நடந்துள்ளன. இந்தக் காட்சிகளில் சில நேரங்களில் அன்னை மரியாவை, புறாக்கள் போன்ற வடிவங்களில் வானதூதர்கள் ஒளியால் சூழ்ந்திருந்ததையும், அவை வெகு வேகமாக நகர்வதையும் மக்கள் பார்த்திருக்கின்றனர். இவை விரைவாக அங்குமிங்கும் பறக்கும்போது இறக்கைகளை விரித்துப் பறக்கவில்லை. அப்படியே வேகமாகப் பறந்து அவை மறைந்துள்ளன. முதலில் பறந்தவந்த இந்த விண்ணகத் தூதர்களில் 7 பேர் சிலுவை வடிவில் பறந்துள்ளனர். இக்காட்சிகளை எகிப்து மற்றும் வெளிநாடுகளின் பயணிகள் என இலட்சக்கணக்கானவர்கள் பார்த்துள்ளனர். ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள், கத்தோலிக்கர், முஸ்லீம்கள், யூதர்கள், மத நம்பிக்கையற்றவர்கள் என பல்வேறு மக்கள் இக்காட்சிகளுக்குச் சாட்சி சொல்லியிருக்கின்றனர்.
நோயாளிகள் குணமடைந்தனர், பார்வையிழந்தோர் பார்வையை மீண்டும் பெற்றனர், மத நம்பிக்கையற்ற பலர் மனமாறினர். இக்காட்சிகள் உண்மைதானா என தீர ஆய்வுசெய்வதற்கு, எகிப்தின் காப்டிக் கிறிஸ்தவ சபையின் திருத்தந்தை 6ம்சிரில் அவர்கள், ஆயர்கள் மற்றும் குருக்களைக் கொண்ட குழுவை, 1968ம் ஆண்டு மே 4ம் தேதி நியமித்தார். அக்குழுவும் தீர ஆய்வு செய்து இக்காட்சிகள் உண்மை என அறிவித்துள்ளது. இக்காட்சிகளை உள்ளூர் கத்தோலிக்க முதுபெரும் தந்தை கர்தினால் முதலாம் ஸ்டீபன் அவர்களும் அங்கீகரித்துள்ளார்.
இக்காட்சிகள் நடைபெற்ற போது எகிப்திலிருந்த இவாஞ்சலிக்கல் பிரிந்த கிறிஸ்தவ சபையின் தலைவர் இப்ராஹிம் அவர்களும் அங்கீகரித்துள்ளார். 1968ம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி ஞாயிறு மாலையில் வத்திக்கானிலிருந்து எகிப்து சென்ற பிரதிநிதிகள் குழுவும், இக்காட்சிகளைப் பார்த்த பின்னர் அப்போதைய திருத்தந்தை 6ஆம்பவுல் அவர்களுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது.
பேருந்து பழுதுபார்க்கும் Farouk Mohammed Atwa என்ற முஸ்லீம் மனிதருக்கு, 1968ம் ஆண்டு ஏப்ரல் 2ம்தேதியன்று Zeitounல் அன்னைமரியா முதன்முறையாக காட்சி கொடுத்தார். இவர் இந்த Zeitoun ஆலயத்துக்கு எதிர்ப்புறம் உள்ள தெருவில் வேலை செய்து வந்தார். அன்று மாலையில் அந்த ஆலய குவிமாடத்திலிருந்து ஒரு பெண்ணைப் பார்த்தபோது, அப்பெண் அங்கிருந்து தற்கொலை செய்ய முயற்சிப்பதாக இவர் நினைத்தார். அவரோடு இருந்த வேறு இரண்டு ஆட்களும் அந்த ஆலயகுவிமாடத்தில் ஒரு வெண்மையான உருவத்தைப் பார்த்தனர். இது காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டது. அதற்குள் அவ்விடத்தில் கூட்டம் கூடிவிட்டது. தெரு விளக்குகளின் பிரதிபலிப்பு என்று காவல்துறை கூறியது. ஆனால் அங்கு கூடியிருந்த மக்கள் கூட்டம், இது புனித கன்னிமரியா என்று தெளிவாகச் சொன்னார்கள். காவல்துறை கூட்டத்தைக் கலைக்க முயற்சித்தும் முடியவில்லை . இக்காட்சி சில நிமிடங்களுக்கு நீடித்தது.
பின்னர் ஒரு வாரம் கழித்து ஏப்ரல் 9ம்தேதியன்று மீண்டும் அன்னை மரியா காட்சியளித்ததை மக்கள் பார்த்தனர். இதன்பின்னர் அடிக்கடி இக்காட்சிஇடம்பெற்றது. சில சமயங்களில் ஒரு வாரத்தில் 2, 3தடவைகள்கூட இடம்பெற்றது. இக்காட்சி 1971ம் ஆண்டுவரை நீடித்தது. ஏறக்குறைய 2,50,000 பேர் இக்காட்சிகளைப் பார்த்ததாகச் சொல்லப்படுகின்றது.
தொடர் போராட்டங்கள் மற்றும் கலவரங்களால் நிறைந்திருக்கும் எகிப்து நாட்டுக்காக, குறிப்பாக, அந்நாட்டில் இசுலாம் தீவிரவாதிகளின் தாக்குதல்களுக்கு அடிக்கடி இலக்காகும் கிறிஸ்தவர்களுக்காக அன்னை மரியிடம் மன்றாடுவோம். திருக்குடும்பம் வாழ்ந்த எகிப்து நாடு ஆசீர்வதிக்கப்பட்டது. இந்நாட்டில் அமைதியும் மகிழ்ச்சியும் எப்பொழுதும் நிலவ அமைதியின் அரசராம் இயேசு அருள் பொழிவாராக.