குழந்தை இயேசு பிறப்பு அற்புதங்களின் பிறப்பு!
அருட்தந்தை சேவியர் ராஜன் சே.ச. தூத்துக்குடி
சில சமயங்களில் நாம் அற்புதங்கள் நிகழும் மதமே உண்மையான மதம் என்று முடிவு செய்கிறோம். நோயினின்று குணமாக்குபவரின், அல்லது நடக்காது என்ற சூழ்நிலையிலும் நமக்கு வேலை வாங்கித்தந்தவரின் மதம் உண்மையான மதம் என முடிவு செய்கிறோம். தீராத நோயிலிருந்து நமக்கு விடுதலை வாங்கித்தருவோரின் மதத்துக்கு நாம் மாறுகிறோம், உண்மையான மதம் என்ற நம்பிக்கையில்.
உண்மைக் கடவுள் என்பதற்கு அற்புதங்கள் செய்திருக்க வேண்டுமா? கிறிஸ்து பிறப்பு தொடர்பான அனைத்துமே அற்புதங்கள்தான். அதை உணர நாம் தவறிவிடுகின்றோம்.
தன் சுய விருப்பத்தால் அல்லது தீர்மானத்தால் கடவுளைப் புறக்கணித்துவிட்டுப் பசாசின் சொல்லுக்கு அடிபணிந்தான் முதல் மனிதன். அந்நிலையில் அவனுக்குப் பெரும் தண்டனை கொடுத்துத் தான் சர்வ சக்தியுள்ளவர் என்பதை இறைவன் நிலை நாட்டியிருக்கலாம். ஆனால், பாவத்துக்குத் தூண்டிவிட்ட பசாசை முதலில் சபித்தார் இறைவன். ஆதாமையும் அவன் சந்ததியாகிய நம்மையும் பசாசின் ஆதிக்கத்தினின்று காக்க உறுதி கூறுகிறார் இறைவன். பசாசின் தலையை நசுக்க அப்பெண் ஏவையின் வித்தாகிய ஏசு எனும் தன் மகனே மனிதராய்ப் பிறக்கவேண்டும் என முடிவெடுத்தாரே, இது அற்புதமில்லையா?
அவருக்கு முன்னோடியான திரு முழுக்கு யோவானின் தாய் எலிசபெத்து குழந்தை பெற்றெடுக்க முடியாத முதுநிலை வந்தபிறகும் கருத்தரிப்பாள் என்பது அற்புதமில்லையா? (லூக். 1, 7). ஏன். யோவானுக்குத் தந்தையாக வேண்டிய சக்கரியாகூட நம்ப மறுக்கும் மன நிலையில் இருக்கும்போது (லூக். 1, 18) அவர் மனைவியைத் தாயாக ஆக்கியது அற்புதம்.(லூக். 1, 24). மலடி என்ற அவமானம் தரும் பெயரிலிருந்து அவளைக் காத்தது அற்புதம் (லூக். 1, 24). நம்பமறுத்த சக்கரியா திடீரென பேச்சு வார்த்தை வராத ஊமையானது அற்புதம். (லூக். 1, 20,22). குழந்தை பிறந்தபின் அக்குழந்தைக்கு யோவான் எனப் பெயரிடத் தந்தையும் வலியுறுத்தி ஓர் எழுதுபலகையில் எழுதிக்காட்டுகிறார். அந்நேரமே ஊமையாயிருந்த அவர் நாகட்டவிழ்க்கப்பட்டுப் பேசத்தொடங்குவது (லூக்.1, 64) அற்புதம். அப்போது அவர் தூய ஆவியின் அருளால் நிறைந்து அற்புதத்திலும் மேலான அற்புதத்தைப் பாடுகிறார். “நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும் விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வருகிறது”(லூக். 1, 79). நம்மைத் தேடி வருகிறது விண்ணிலிருந்து விடியல். மஹா அற்புதம். இதோ அவ்விண்விடியலின் அற்புதங்கள் இன்னும் நிகழ்த்திச்செயல்பட்ட முறைகள். இங்கே வரும் இறைத்தூதர் கபிரியேலோ இப்பெண்ணுக்கு வணக்கம் செலுத்தி ‘அருள் நிறைந்தவரே வாழ்க, ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்,’ என்று கூறி மரியாதையின் உச்சத்துக்குப் போகிறார்! வானிருந்து வரும் தூதர் சாதாரண மனிதருக்கு – உலகுக்கு அறிமுகமின்றி வாழும் ஓர் இளம் பெண்ணுக்கு – மிக மிக உயர்ந்த ஒரு வாழ்த்தைக் கூறுகிறார்! ஓர் அற்புதம்தானே!
அதன்பின் அவர்செய்த முதல் செயல் எலிசபெத்தை அவர் இடத்துக்குச் சென்று சந்திப்பது. அங்கே வயது முதிர்ந்தவரும் இப்போது ஆண்டவரின் அன்பின் அற்புதத்தால் ஆறுமாத கர்ப்பம் தாங்குபவருமானவரை வாழ்த்தியபோது ஓர் அற்புதம் நிகழ்கிறது. லூக்கா எழுதுகிறார்: “மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று.” (லூக். 1, 41) தாய் வயிற்றில் இருக்கும் 6மாதக்கரு எதிரில் நின்று வாழ்த்துக் கூறும் மற்றொரு தாயின் வயிற்றிலிருக்கும் 2/3 நாள் கரு தன் ஆண்டவர் என்பதை அறிந்து மகிழ்ச்சியால் துள்ளுகிறது. என்னே அற்புதம்!
அவ்வினாடியே நடக்கிறது ஓர் அற்புதம். எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். (லூக். 1: 41)மரியாவின் ஐயத்தைப் போக்க வானதூதர் கூறினாரே, ‘தூய ஆவி உம் மீது வரும்’ என்று. அதே தூய ஆவி எலிசபெத்தை முற்றிலும் ஆட்கொள்ளுகிறார். என்னே அற்புதம்! இடையே புனித சூசையின் வாழ்க்கையிலும் அற்புதம். தனக்கு மணவொப்பந்தமான மரியா தன் வீட்டுக்குக் கூட்டிச்செல்லுமுன்பே கருவுற்றிருப்பது தெரிந்து குமுறுகிறார். ஆனால், அவர் இறைவன் முன் நீதிமானாயிருந்ததால் அவளின் பிரமாணிக்கமின்மைக்குத் தகுந்த தண்டனை – கல்லெறி- கொடுக்கவேண்டுமென்பதை ஒதுக்கிவிட்டு, அவளுக்கு அதிக பாதிப்பில்லாமலிருக்கும் வகையில், “மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்.” இது விவிலியமே கூறும் வார்த்தை (மத்.1:19). இது ஓர் அற்புதம்! மதிப்புமிக்கவராய் தன்மானம் மிக்கவராய் வாழத்துடிக்கும் எந்த இளைஞரிடமும் காணமுடியாத அற்புதம்.
அப்போது வேறோர் அற்புதம் – இறைத்தூதரே அவருக்குக் கனவில் தோன்றி, மரியின் வயிற்றில் கருவாயிருப்பவர் யார் என்பதை வெளிப்படுத்துகிறார். கோபம்கொள்ளவேண்டிய அவரைப் பெருமையோடும் அன்போடும் மரியை ஏற்க வைக்கிறார்! “யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார். “ (மத். 1:24) இது அற்புதம் தான்.
அற்புதங்கள் இன்னும் தொடர்கின்றன. சூசையும் மரியாவும் பெத்லகேமை அடைகின்றனர் அகுஸ்துஸ் சீசர் கட்டளைக்கு இணங்கி, மக்கட் தொகை கணக்கெடுப்புக்குப் பெயரைப்பதிவு செய்ய. பேறு காலம் நெருங்கி வரும் நேரத்தில், அவ்விருவருக்கும் தங்குவதற்கு ஓர் இடம் இல்லை. குழந்தையைப் பெற்றெடுக்க மரியாவுக்குக் கிடைத்ததெல்லாம் மாடடைக் குடில் மட்டுமே; குழந்தையைக் கிடத்தக் கிடைத்தது ஒரு தீவனத்தொட்டி மட்டுமே.
எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சிதரும் பொருட்டு, மீட்பர் , ஆண்டவரின் மெசியா, பிறந்துள்ளார் என்றுமட்டும் கூறாமல், அம்மீட்பர் ‘உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்;’ மீட்பின் செயலால் எல்லோருக்கும் மகிழ்ச்சிதரும் ஆண்டவராம் மெசியா தாவீதின் ஊரில் அவர்களுக்கு, இவ்வேழை இடையர்களுக்காகப் பிறந்திருப்பதாகச் சொல்லுகிறார்களே! அது நம்பமுடியாத அற்புதமில்லையா! அவர்கள் வாழ்வில் நடக்கும் ஈடு இணையில்லாத அற்புதம் இல்லையா! இம்மானுவேல் என்றால், கடவுள் கூற்றுப்படி அவர்கள் சொல்லலாம்: கடவுள் நம்மோடு, இடையர்களான நம்மோடு! என்னே அற்புதம்!
அற்புதச்செய்தியின் மத்தியில் இன்னும் வானவர் அணியாய் வந்து பாடுகின்றனர். “உன்னதத்தில்கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக. உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!” (லூக். 2: 13,14) ஆண்டவரின் தூதர் கூறியபடியே, தீவனத்தொட்டியில் கிடத்தியுள்ள குழந்தையை மரியாவோடும் யோசேப்போடும் பார்க்கிறார்கள். (லூக். 2: 16) இத்தனை ஏழ்மையில் பிறந்தவரா வானதூதர் கூறிய ஆண்டவராம் மெசியா, மீட்பர்? அவர் உயர்வுக்குத் தகுந்த இடமா, சூழ்நிலையா இது? ஆனால், இத்தகைய கேள்விகள்அவர்கள் உள்ளத்தில் எழவில்லை. மாறாக, “அக்குழந்தையைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார்கள்.”(லூக். 2:17).
அக்குழந்தை பிறந்திருப்பதை ஓர் அற்புதத்தின் மூலமாகக் கீழ்த்திசை ஞானிகள் கண்டிபிடிக்கிறார்கள். “அவரது விண்மீன் எழக்கண்டோம்.” (மத்.2:2) அதன் வழியே அவரே யூதரின் அரசர் என அறிந்துவிட்டார்கள். அற்புதமில்லையா? அற்புதமாக அஞ்ஞானிகளுக்கு முன் எழுந்துவழிகாட்டிய விண்மீன் மீண்டும் வழிகாட்டி நடத்திச் செல்கிறது. மீட்பரும் அரசருமான இயேசு இருந்த வீட்டிற்கே நடத்திச் செல்கிறது. அங்கே “வீட்டிற்குள் போய்க் குழந்தையை அதன் தாய் வைத்திருப்பதைக் கண்டார்கள்.” (லூக். 2:11)
எனினும், அற்புதங்கள் முடிந்துவிடவில்லை. இத்தகைய ஏழ்மைநிலையில் அவர்கள் காணும் இக்குழந்தை யூதர்களின் அரசர்தான் என ஏற்கிறார்கள். அது மட்டுமா? அவர் கடவுள் என்பதையும் அவர்கள் உள்மனம் ஏற்கிறதே, அது அற்புதமில்லையா? எனவேதான், வேதாகமத்தில் வாசிக்கிறோம்: “நெடுஞ்சாங்கிடையாய் விழுந்து வணங்கினார்கள்,” இன்னும், “தங்கள் பேழைகளைத்திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப்போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள்” (லூக். 2:11).
இப்போதும் இயேசுவுக்கு எதிராக நடவடிக்கை, அதிலிருந்து அற்புதவிதமாய்ப் பாதுகாப்பு! “குழந்தையை ஏரோது கொல்வதற்காகத் தேடப் போகிறான்” என (மத். 2:13) முன் கூட்டியே கனவில் கடவுள் தூதரால் எச்சரிக்கப்படுகிறார் யோசேப்பு. அத்தூதரே உரைத்தபடி குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிகொண்டு இரவிலேயே எகிப்துக்குப் புறப்பட்டார். (மத். 2:14) ஓசே இறைவாக்கு இவ்வாறு நிறைவேறும்படி இறைவன் அற்புதம் செய்தாரென மத்தேயு நினைவில் கொள்கிறார் (மத். 2:15). பின்,ஏரோது இறந்ததும், வான தூதர் யோசேப்பின் கனவில் தோன்றிக் ‘குழந்தையின் உயிரைப்பறிக்கத் தேடியவர்கள் இறந்துபோனார்கள்’ என அறிவித்து, இஸ்ரயேல் நாட்டுக்குத் திரும்பிப் போகச்சொல்கிறார். (மத். 2: 19, 2௦, 21)
இவ்வாறு , இயேசுவின் பிறப்பையொட்டிய ஒவ்வொரு கட்டத்திலும் இறைவன் அற்புதங்களை நிகழ்த்துகிறார். அற்புதர் அல்லவா இயேசு!
ஆனால், இன்று இயேசு நம்மிடையே பிறக்கிறார் என்றால் அற்புதங்கள் இல்லாமலா? நம் உள்ளம் மரியாபோல், யோசேப்புபோல், இடையர்கள்போல், கீழ்த்திசை ஞானிகள்போல் , கிறிஸ்து ஒருவரையே வாழ்வின் குறிக்கோளாக்கி, அவர் தரும் அடையாளங்களுக்கும் அவரின் சொல்லுக்கும் நம் அகக்கண்களையும் மனதையும் திறந்து வைத்திருந்தால், தடைக்கற்களையும் தாண்டி ஆயத்தமாயிருந்தால், நம் வாழ்விலும் உறுதியாக அற்புதம் நடக்கும்!