மரியின் மகனுக்கு வாழ்த்துப்பா

Madonna

அன்னை மடியில் அமைதியாகத்
தூங்கும் இக்குழந்தை யாரோ?
காவல் காத்த இடையர்கள் மத்தியில்
வானவர்கள் புகழ்ந்து பாடியதும்
இந்த அன்னை மரியாளின் மகனைத் தானோ?

விரைவாய் வந்த இடையர்கள் கண்டனர்
குழந்தையைத் தீவனத் தொட்டியில்
தொழுது நின்றனர் மட்டியிலா மகிழ்ச்சியில்
வாழ்த்திடுவோம் வார்த்தை மனுவுருவானது
அன்னை மரியாளின் மகனாய்...

பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும்
கொண்டு வாருங்கள் நமை ஆளும் அரசருக்கு..
மீட்பைக் கொணர்ந்த இராஜாதிராஜனை
மகிழ்ந்து பாடுவோம் புகழ்ந்து பாடுவோம்

மரியின் மகனை ஆராதிப்போம்..வாருங்கள்...


அன்புடன் வாழ்த்து மடல்

இறை இயேசுவின் நாமத்தில் அன்பு வாழ்த்துக்கள்!

இறைஇரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு தொடங்கிய இவ்வேளையில் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவைக் கொண்டாடும் நாம், இவ்விரு பெருவிழாக்களின் உள்ளார்ந்த பொருளை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டிய நிலையில் உள்ளோம்.

"உங்கள் விண்ணகத் தந்தை இரக்கம் உள்ளவராய் இருப்பது போல் நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்" லூக்கா 6:36
இதுவே திருத்தந்தையின் யூபிலி ஆண்டின் விருதுவாக்காகும்.

"இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்.
தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்.
அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்." மத்தேயு 5: 7-9

மலைப்பொழிவில் இயேசு கூறிய அருள்வாக்கு இவைகள்.

கடவுளின் இரக்கமும், அன்பும் தன் ஒரே மகனையே இந்த உலகத்திற்கு அனுப்பும் அளவிற்கு இருந்தது. தந்தை தன் மக்களின் மீது அன்பும், இரக்கமும் கொண்டவராய் அவர்களை நல்வழிப்படுத்தவே விரும்புகிறார். தண்டனைக் கொடுப்பதற்கு அல்ல...
தேடிவந்த இடையர்களுக்கு நம்பிக்கைக் கீதமாக அமைந்த, துணிகளில் சுற்றப் பெற்றுத் தீவனத் தொட்டியில் கிடந்த நம்பிக்கையின் நாயகன் பாலன் இயேசு நமக்கும் நம்பிக்கை ஊட்டுவாராக! வாழ்வின் ஒளி அமையும் அவரின் பிறப்பால் அவனிக்கு வழங்கிய அன்பும் அருளும் நிறைவாழ்வும் எல்லோருடைய உள்ளத்திலும் இல்லத்திலும் இன்றும் என்றும் நிறைந்திட அன்புடன் வாழ்த்துகிறோம்.

நம் தந்தையின் அன்பும் இரக்கமும் என்றென்றும் நம்மோடு!
அன்பின் மடல் பார்வையாளரான உங்களுக்கு எம் இதயங்கனிந்த கிறிஸ்து பிறப்பு நல்வாழ்த்துக்கள்!!
ஒன்றிணைவோம் இறையரசை அறிவிக்க....

தங்கள் அன்புள்ள
ச. நவராஜன்