மழலையர் விடுதியை நாடுவோம் வாரீர்
திருமதி. அருள்சீலி அந்தோனி
மானிடா!
அன்று இருவயதிற்குட்பட்ட மழலைகளை
கொல்லச் சொன்னான் ஏரோது!
இன்று கருவறையிலேயே -கரு அறுக்கின்றனர்
புதிய ஏரோதுக்கள்! புதிய ஏரோதியாக்கள்!
தொப்புள் கொடி தானே தாய்-சேய்
உறவை காட்டும் முத்திரை!
இயேசுவின் புலம்பல்
ஒவ்வொரு கருவும் -இறை -மனித உறவை புதுப்பிக்கும் கண்ணாடி!
இவர்களை வாழவிடுங்கள்!
"சிறு குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள்.
தடுக்காதீர்கள். விண்ணரசு இத்தகையோரதே!"
என்று இறைமகன் மழலைகளை பார்த்து புலம்புகிறார்.
கவிஞனின் புலம்பல்
"குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று.
குற்றங்களை மறந்து விடும் மனதால் ஒன்று "
நண்பா!
மாற்று திறனாளி குழந்தைகளை சற்று கூர்ந்து கவனிப்பாயா?
அவர்கள் இவ்வுலகத்தில் என்ன நடக்கிறது? நல்லது எது? கெட்டது எது?
எதையும் உணர முடியாத மனநிலை இவர்களை பெற்ற மனமோ
சொல்லொண்ணா துயரை தாங்கித் தான் சுமந்த கருவறை
என்ன கானகமா? அல்லது சொர்க்கபுரியா?
என்று புலம்பும் குரலை கேளாயோ?
குழந்தை மனம் கொள்வீர்!
இல்லையேல் விண்ணரசு உம் வயப்படாது!
வரம் பெற்று மழலையை வைப்பாய்!
சிசுவின் வழியைத் தடுக்க வேண்டாம்!
தோழியே!
இந்நாட்களில் குழந்தை இயேசுவின் வருகை!
நமக்கு விடுக்கும் அழைப்பு!
ஊனமுற்ற குழந்கைளுக்கு தாய்மடி ஆவோம்!
மனவளர்ச்சி குன்றிய மழலைகளுக்கு மடியில் ஏந்துவோம்!
மனிதநேயம் மண்ணில் மலர்ந்திட பணிபுரிவோம்!
வீட்டுக்குள் குடில் அமைத்த
மழலை இயேசுவைத் தேட வேண்டாமே!
உங்கள் இதயமதில் -அடுத்தவர் பசியில்
ஏழை எளியவர் குடிலில் மரியின் மைந்தனைத் தேடுவாய்!
சாலைகளின் -சந்தடியிலே ஏழைகளாய்த் திரியும்
இறைமகனின் வாரிசுகளை - தொழிற்சாலைகளில்
கருகிவிடும் இளம் பயிர்களை நாடிச் செல்வாய் தோழா!
இனம் கண்டு மழலை இயேசுவைப் போலத் தொண்டாற்றிடுவோம்!
மேற்கண்டவரின் மகிழ்வில் மழலை இயேசுவைக் காண்போம்!
தோழா!
வீட்டுக்குளே குடிலமைத்து பரிசினை
கொடுப்பதும் -பெறுவதும் இல்லாமல்
வானமே எல்லையாக வாழும்
ஏழை எளிய பிஞ்சு உள்ளங்களில்
மழலை மன்னவனைக் காண்போம்!
சாதி -சமயம் -இனம் மொழி கடந்து
மழலை இயேசுவின் பிறப்பை
பிறர் பிணியைப் போக்கிடும் போது
நாம் வழங்கும் பிறந்த நாள் பரிசு என்பதனை
நமது குருதியில் பதிவு செய்வோம்!